under review

ஜ.ரா.சுந்தரேசன்

From Tamil Wiki
Revision as of 21:33, 26 September 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added links to Disambiguation page)
XYZ என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: XYZ
ஜ.ரா.சுந்தரேசன்

ஜ.ரா.சுந்தரேசன் (ஜலகண்டபுரம் ராமசுவாமி சுந்தரேசன்) (ஜூன் 1, 1932 - டிசம்பர் 7, 2017) தமிழின் பொதுவாசிப்புக்கான கதைகளை எழுதியவர். குமுதம் வார இதழில் துணை ஆசிரியராக இருந்தார். பாக்கியம் ராமசாமி என்ற பெயரில் இவர் எழுதிய அப்புசாமி- சீதாப்பாட்டி கதைகள் புகழ்பெற்றவை.

பிறப்பு, கல்வி

சேலம் ஜலகண்டபுரத்தில் ராமசாமி-பாக்கியம் இணையருக்கு ஜூன் 1, 1932-ல் பிறந்தார். இவர் பத்மஸ்ரீ விருது பெற்ற மருத்துவர் ஜ.ரா.கிருஷ்ணமூர்த்தியின் தம்பி.

தனிவாழ்க்கை

விஜயலட்சுமி என்ற மனைவியும், ஜெகன், குமார், யோகேஷ் என மூன்று மகன்களும் உள்ளனர்.

இதழியல்

குமுதத்தில் 1953-ல் நடந்த சிறுகதைப் போட்டியில் வென்று அதன் ஆசிரியர் எஸ்.ஏ.பி. அண்ணாமலை அழைப்பின் பேரில் உதவி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். குமுதம் இதழில் ஆசிரியர் எஸ்.ஏ.பி.அண்ணாமலை, ஜ.ரா.சுந்தரேசன் ரா.கி.ரங்கராஜன், புனிதன் ஆகியோர் இணைந்து பணியாற்றினர். அவர்கள் குமுதம் இதழை தமிழில் மிக அதிகமாக விற்கும் வார இதழாக ஆக்கினர். ஜ.ரா.சுந்தரேசன் குமுதத்தில் பல பெயர்களில் கதைகள், நகைச்சுவைக் குறிப்புகள், சினிமாச் செய்திகள் என ஏராளமாக எழுதினார். யோகேஷ், வனமாலி, செல்வமணி, மிருணாளினி, இரா. சிதம்பரம், உதங்கர், சிவதணல், ஜ்வாலாமாலினி என பல பெயர்களில் எழுதினார். 37 ஆண்டுகள் குமுதம் பத்திரிகையில் உதவி ஆசிரியர், துணை ஆசிரியர் ஆகிய பதவிகளை வகித்துவிட்டு 1990-ம் ஆண்டு ஓய்வுபெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

குமுதம் குழு. ரா.கி.ரங்கராஜன், ஜ.ரா.சுந்தரேசன், புனிதன்

ஜ.ரா.சுந்தரேசன் என்ற பெயரிலும் பிற பெயர்களிலும் குமுதம் இதழில் தொடர்கதையாக வெளிவந்த நாவல்களை எழுதினார். பாக்கியம் ராமசாமி என்ற பெயரில் அப்புசாமி-சீதாப்பாட்டி என்னும் நகைச்சுவை கதைமாந்தரை உருவாக்கி பல நாவல்களை எழுதினார். ஆன்மிகக் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். இரு ரிக்ஷாக்காரர்கள் பேசிக் கொள்வது போன்ற பாணியில் பகவத் கீதையில் கூறப்பட்ட கருத்துக்களை 'பாமர கீதை' என்னும் சிறு நூலில் விளக்கியிருக்கிறார். (பார்க்க அப்புசாமி- சீதாப்பாட்டி)

அமைப்புகள்

ஜ.ரா.சுந்தரேசன் இரண்டு அமைப்புக்களை நடத்தினார்.

  • அப்புசாமி - சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளை
  • அக்கறை

இறப்பு

ஜ.ரா. சுந்தரேசன் டிசம்பர் 7, 2017 அன்று காலமானார்.

இலக்கிய இடம்

தமிழில் வணிகக்கேளிக்கை வாசிப்புக்கென மேலோட்டமான வேடிக்கைகளை எழுதுவது ஆனந்தபோதினி, சுதேசமித்திரன், அமிர்தபோதினி இதழ்களில் இருந்தே உருவாகி வந்தது. அவ்வரிசையில் கல்கி, தேவன் ஆகியோரை தொடர்ந்து வந்தவர் ஜ.ரா.சுந்தரேசன். அப்புசாமி -சீதாப்பாட்டி கதைகள் அவ்வகைப்பட்டவை. அவருடைய தொடர்கதைகள் ஆர்வி போன்றவர்கள் எழுதிய மென்பாலியல்- குடும்பக் கதைகளின் வழிவந்தவை. அவர் எழுதிய நாவல்களில் ஒன்றை மட்டும் சொல்லவேண்டும் என்றால் கதம்பாவின் எதிரி சிறந்த உதாரணமாகக் கொள்ளத்தக்கது.

நூல்கள்

  • பூங்காற்று
  • குங்குமம்
  • மனஸ்
  • கதம்பாவின் எதிரி
  • நெருங்கி நெருங்கி வருகிறாள்
  • பாசாங்கு
  • பொன்னியின் புன்னகை
  • ஒரு இரண்டெழுத்து நடிகையின் கதை
  • வேலிதாண்டிய வெள்ளாடுகள்
  • புதிய அப்பா
  • மனஸ்
  • முள்ளின் காதல்
  • தேடினால் தெரியும்
  • பெண்ணென்றால்
  • பாசாங்கு
  • இதயத்தில் எழுதாதே
  • எல்லாம் இன்கம் மயம்
  • பாமரகீதை

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:34:23 IST