under review

தபசி

From Tamil Wiki
Revision as of 15:53, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
தபசி

தபசி (சங்கர்) (பிறப்பு: ஜனவரி 12, 1968) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், கவிஞர். கவிதைகள், சிறுகதைகள் எழுதிவருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

தபசியின் இயற்பெயர் சங்கர். தபசி திருக்கோவிலூரில் தேவராஜுலு, கலைவாணி இணையருக்கு ஜனவரி 12, 1968-ல் பிறந்தார். தன் ஐந்தாவது வயதில் தாயை இழந்தார். தந்தை மறுமணம் செய்துகொண்டார். சிற்றன்னை பிரேமாவதி. இரு சகோதரிகள். ஆறாம் வகுப்பு வரை சொந்த ஊரில் தந்தை பணிபுரிந்த வாசவி நடுநிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். அமராவதிநகர் சைனிக் பள்ளியில் பள்ளிக்கல்வி முடித்தார். சீர்காழி புத்தூரிலுள்ள சீனிவாசா சுப்புராயா அரசு தொழில்நுட்ப கல்லூரியில் கட்டிடவியலில் பட்டயப்படிப்பு முடித்தார். சென்னை பல்கலைக்கழக அஞ்சல் வழிக் கல்வி மூலம் இளங்கலை, முதுகலை ஆங்கில இலக்கிய பட்டப் படிப்பை நிறைவு செய்தார். வேதாத்ரி மகரிஷியின் மன வளக் கலையில் ஆசிரியர் பயிற்சி முடித்தார்.

தனிவாழ்க்கை

தபசி நவம்பர் 30, 1994-ல் ஹேமலதாவை மணந்தார். மகள்கள் ரம்ய பாரதி, பத்ம பிரியா. 1987 முதல் 1992 வரை மாநில அரசில் ஊரக நல அதிகாரியாகப் பணிபுரிந்தார். 1993-ல் மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரித்துறையில் உதவி ஆணையாராகப் பணிபுரிகிறார்.

இலக்கிய வாழ்க்கை

தபசி எண்பதுகளின் பிற்பகுதிகளில் எழுதத் தொடங்கினார். இதுவரை 13 கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. இவரின் சிறுகதைகள், கவிதைகள் கல்கி, கணையாழி, தினமணி கதிர்,குமுதம் ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. தபசியின் கவிதைகள் தமிழினி வெளியீடான 'கொங்குதேர் வாழ்க்கை' தொகை நூலில் இடம் பெற்றுள்ளன. சில கவிதைகள் ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. ஆதர்ச எழுத்தாளர்களாக ஆதவன், லா.ச. ரா, அசோகமித்திரன், சா.கந்தசாமி, மா.அரங்கநாதன், நாஞ்சில் நாடன், ஜெயகாந்தன் ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.

இலக்கிய இடம்

”இவரின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் அங்கதச்சுவையும், கேலியும். சமூகத்தின் மீதான விமர்சனத்தை இவர் அங்கதச்சுவையோடு கேலி செய்கிறார்.நேரடியான, மறைமுகமான அரசியல் கவிதைகளை நிறைய எழுதியிருக்கிறார். விட்டு விலகிடும் நிலை பற்றி நிறைய கவிதைகள் எழுதியிருக்கிறார். தொன்மத்தையும், நவீன வாழ்வையும் இணைத்துப்பார்க்கிறார்.” என ச. முத்துவேல் குறிப்பிட்டுள்ளார்.

விருதுகள்

  • 2024-ல் களரி- மணல் வீடு வழங்கும் கவிதைக்கான கவிஞர் சி.மணி நினைவு இலக்கிய விருதைப் பெற்றார்.

நூல் பட்டியல்

கவிதை தொகுப்புகள்
  • ஒரு நாளும் ஒவ்வொரு நாளும் (1994)
  • இன்னும் இந்த வாழ்வு (2000)
  • தோழியர் கூட்டம் (2000)
  • ரசிகை (2001)
  • குறுவாளால் எழுதியவன் (2004)
  • மயன் சபை (2006)
  • காதலியர் மேன்மை (2007)
  • எப்படியும் காணாமல் போகும் பொருள் (2020)
  • ஜடாயு வதம் (2023)
  • இரண்டு சிக்ஸர்களின் கதை (2023)
  • எல்லோரும் ஜடேஜாவாக மாறுங்கள் (2023)
  • ஜான் கீட்ஸ் ஆதவனைச் சந்தித்த தில்லை(2023)
  • நானும் டி. எஸ். எலியட்தான் (2024)

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-Mar-2024, 10:55:45 IST