சுஜாதா

From Tamil Wiki
Revision as of 10:53, 22 March 2022 by Jeyamohan (talk | contribs)

சுஜாதா ( (மே 1935 – 27 பெப்ருவரி 2008) ) தமிழ் எழுத்தாளர். பொதுவாசிப்புக்குரிய தொடர்கதைகளையும் சிறுகதைகளையும் புகழ்பெற்ற பத்திகளையும் எழுதியவர். தமிழ் உரைநடையில் புதுமைகளை புகுத்தி மாற்றத்தை உருவாக்கியவர். தமிழில் அறிவியல்கதைகளை எழுதிய முன்னோடி. அறிவியலை அறிமுகம் செய்து கட்டுரைகளை எழுதியவர். பழந்தமிழிலக்கியத்தை அறிமுகம் செய்து கட்டுரைகள் எழுதியிருக்கிறார். மின்னணுவியல் பொறியாளர். இந்திய வாக்குஇயந்திரத்தை கண்டுபிடித்த குழுவில் பணியாற்றியவர்.

சுஜாதா தமிழில் பொதுவாசிப்புக்குரிய தளத்தில் செயல்பட்டவர்களில் கல்கிக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய ஆளுமை. கல்கியைப் போலவே எல்லா பக்கங்களையும் படிக்கச்செய்யும் நடை கொண்டிருந்தார். எல்லா தளங்களிலும் தொடர்ச்சியாக எழுதினார். மிகப்பெரிய வாசகர் வட்டத்தையும், அவரைப்போலவே எழுதும் வழித்தோன்றல்களின் வரிசையையும் கொண்டிருந்தார்.

பிறப்பு, கல்வி

சுஜாதாவின் இயற்பெயர் எஸ்.ரங்கராஜன். 3 மே 1935 ல் சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள தெப்பக் குளத்தின் தெற்குத் தெரு வீதியில் உள்ள இல்லத்தில் பிறந்தார். தந்தை ஸ்ரீனிவாச ராகவன் மின்சாரவாரிய ஊழியர். தாய் கண்ணம்மா, ஒரு பணக்காரக் குடும்பத்தில் இருந்து வந்தவர். சுஜாதாவின் அண்ணன் திரு கிருஷ்ணமாச்சாரி மருத்துவரானார். தம்பி ராஜகோபாலன் தொலைபேசி இலாகாவில் தமிழகப்பகுதியின் தலைமை பொது நிர்வாகியாக பணியாற்றி ஓய்வுபெற்றார். ராஜகோபாலன் ஒரு வைணவ அறிஞர், பிரம்மசூத்திரத்திற்கு .உரை எழுதியிருக்கிறார். தங்கை விஜி மூன்றுவயதில், சுஜாதாவுக்கு பதினொரு வயது இருக்கையில் மறைந்தார்

சுஜாதாவின் தந்தைவழி தாத்தா குவளக்குடி சிங்கமையங்கார்,பாட்டி ருக்மிணி அம்மாள். மின்துறையில் பணியாற்றிய சுஜாதாவின் தந்தையின் உள்காடுகளில் பணிபுரியச் சென்றமையால் ஸ்ரீரங்கத்தில் தன் பாட்டியின் வீட்டில் தங்கிப் படித்தார். ஸ்ரீரங்கத்தில் உள்ள ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தபின் 1952- 1954 வரை திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் படித்து பி.எஸ்.சி.(இயற்பியல்) பட்டம்பெற்றார். MITல்(Madras Institue of Technology), சேர்ந்து எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படித்தார். அப்போது அவருடன் படித்தவர் பின்னாளில் இந்திய ஜனாதிபதியான டாக்டர் அப்துல் கலாம். சுஜாதா Infinite Mathematics பற்றியும் கலாம் ஆகாய விமானங்கள் கட்டுவது பற்றியும் தமிழில் விஞ்ஞானக் கட்டுரைகள் எழுதி பரிசு வாங்கினார்கள்.

தனிவாழ்க்கை

பொறியியல் படிப்புக்குப்பின் பொறியாளர்களுக்கான மத்திய அரசின் தேர்வு எழுதி தேசியா அளவில் இரண்டாம் இடம் பெற்றார். முதலில் இந்திய தேசிய வானொலியில் பயிற்சியாளராகச் சேர்ந்தார். பின்னர் சிவில் ஏவியேஷன்ஸ் பிரிவில், Air Traffic Controllerஆக சென்னை மீனம்பாக்கத்தில் பணியாற்றினார். முதல்நிலை தொழில்நுட்ப அலுவலராக உயர்ந்து டெல்லியில் பணியாற்றினார். பதினான்காண்டுகள் டெல்லியில் பணியாற்றினார். 1970 ல் பெங்களூரில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் (BEL) நிறுவனத்தில் துணைமேலாளராக வேலைக்குச் சேர்ந்தார். ரிசர்ச் அண்டு டெவலப்மெண்டு பிரிவில் பொதுமேலாளர் பதவியேற்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வடிவமைப்பில் (Electronic Voting Machine) பங்கு கொண்டார். ஏவுகணைத் தொழில்நுட்ப ஆய்விலும் பங்கெடுத்தார். 1993 ல் ஓய்வுபெற்றார். முன்னரே திரைப்படங்களில் ஈடுபட்டிருந்தாலும் ஓய்வுக்குப்பின் முழுநேர திரைஎழுத்தாளராக ஆனார்.

ரங்கராஜன் தன் 27 ஆவது வயதில் 1962ல் சுஜாதாவை மணந்தார். பின்னாளில் தன் மனைவியின் பெயரான சுஜாதாவை தன் புனைபெயராக ஆக்கிக்கொண்டார்.ரங்கராஜன் தம்பதிகளுக்கு ஒரு வருடத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்து இறந்தது. அதற்குப் பிறகு ரங்க பிரசாத், கேஷவ பிரசாத் என்று இரண்டு மகன்கள்.

இலக்கியவாழ்க்கை

சுஜாதா தன் தாத்தாவிடமிருந்து மரபிலக்கியத்தை அறிந்துகொண்டார். ஆழ்வார் பாசுரங்களை பாட்டியிடமிருந்து பயின்றார். இளமையில் ஸ்ரீரங்கத்தில் பின்னாளில் வாலி என்னும் பெயரில் திரைக்கவிஞராக மாறிய ரங்கராஜனுடன் இணைந்து கையெழுத்து இதழ்கள் நடத்தினார். திருச்சி ஜோசப் கல்லூரியில் படிக்கும்போது ஜோசப் சின்னப்பா என்ற ஆங்கில விரிவுரையாளர் பிரிட்டிஷ் சிறுகதைகளையும் கவிதைகளையும் அறிமுகம் செய்தார். ஐயம்பெருமாள் கோனார் என்னும் தமிழாசிரியர் மரபிலக்கிய அறிமுகம் செய்துவைத்தார். (புகழ்பெற்ற கோனார் உரைகளை எழுதியவர்) எஸ்.ரங்கராஜன் என்ற பெயரில் எழுதிய முதல் கதை 1954ல் திருச்சியில் இருந்து திரிலோக சீதாராம் நடத்திவந்த சிவாஜி என்ற சிற்றிதழில் வெளியாகியது. கு.ப. ராஜகோபாலன் போன்றவர்கள் எழுதிக்கொண்டிருந்த இதழ் அது. பின்னர் டெல்லிக்குச் சென்றபோது அங்கே கணையாழி ஆசிரியராக இருந்த கே.கஸ்தூரிரங்கன், என்.எஸ்.ஜெகன்னாதன், இந்திரா பார்த்தசாரதி ஆகியோருடன் நட்பு உருவானது. கணையாழி இதழின் இறுதிப்பக்கத்தில் ஸ்ரீரங்கம் எஸ்.ஆர் என்னும் பெயரில் பத்தி ஒன்றை எழுதினார்.

தன் நண்பர் ஸ்ரீனிவாசன் என்பவர் எழுதிய ‘சுஷ்மா எங்கே?’ என்ற ஒரு கதையை திருத்திக் கொடுக்க அது குமுதத்தில் வெளியிடப்பட்டதைக்கண்டு தானும் எழுதலாம் என்னும் எண்ணத்தை அடைந்ததாக சுஜாதா சொல்லியிருக்கிறார். தொடக்கத்தில் எஸ்.ரங்கராஜன் என்ற பெயரில் குமுதத்தில் கதைகள் வெளியாயின. நகுலன் தொகுத்த குருக்ஷேத்திரம் என்னும் தொகைநூலில் தனிமைகொண்டு என்னும் சிறுகதையை எழுதினார். தமிழின் நல்ல சிறுகதைகளில் ஒன்றாக அது கருதப்படுகிறது. அதே கதையை விரிவாக்கி நைலான் கயிறு என்ற பெயரில் குமுதத்தில் தொடர்கதையாக எழுதினார். அதற்கு சுஜாதா என புனைபெயர் சூட்டிக்கொண்டார். அப்போது ரா.கி.ரங்கராஜன் குமுதத்தில் எழுதிக்கொண்டிருந்தார். பெயர்குழப்பம் வரக்கூடாது என்பதனால் அப்பெயரைச் சூட்டிக்கொண்டதாக ஓரிடத்திலும், ரங்கராஜன் என்றபெயரில் உள்ள பழமைநெடி பிடிக்காமல் சுஜாதா என்ற நவீன பெயரை சூட்டிக்கொண்டதாக இன்னொரு இடத்திலும் சொல்லியிருக்கிறார். ஆனால் மைய அரசின் பாதுகாப்புத்துறை சார்ந்த தொழில்நுட்பப்பணியில் அப்போது இருந்தமையால் பணிநடத்தைச் சட்டப்படி வெளியே எழுதலாகாது என்பதனால்தான் புனைபெயரைச் சூட்டிக்கொண்டார்.

கணேஷ்-வசந்த்

சுஜாதாவின் நடையும் துப்பறியும் கதைகளில் அவர் உருவாக்கிய யதார்த்தமும் பெரும்புகழ் பெற்றன. அவருடைய புகழ்பெற்ற துப்பறியும் கதாபாத்திரங்கள் வழக்கறிஞர் கணேஷ், அவர் உதவியாளர் வசந்த். கணேஷ் அவருடைய இரண்டாவது நாவலான அனிதா -இளம்மனைவி நாவலில் அறிமுகமானார்.

சிறுகதைகள்

சுஜாதா மத்யமர், ஸ்ரீரங்கத்து தேவதைகள், தூண்டில்கதைகள் என்னும் பொதுத்தலைப்புகளில் சிறுகதைகள் எழுதியிருக்கிறார்.

அறிவியல்

சுஜாதா அறிவியல் சிறுகதைகளை தமிழுக்கு அறிமுகம் செய்த முன்னோடி எழுத்தாளர். அவை தனித்தொகுதியாக வெளியாகியிருக்கின்றன. அறிவியல் கூறுகளைக்கொண்டு திகைப்பூட்டும் மர்மக்கதைகளை எழுதுவதே சுஜாதாவின் பாணி. சுஜாதா எழுதிய அறிவியல்குறிப்புகளும், கேள்விபதில்களும் தமிழில் பொதுவாசகரிடையே அறிவியலைப் பரப்ப பெரும் பங்களிப்பாற்றியவை. சுஜாதாவின் ஏன், எதற்கு ,எப்படி என்னும் தொடர் தமிழில் புகழ்பெற்ற அறிவியல் விளக்க பத்தி. சுஜாதா தொழில்நுட்பத்தின் ஆக்கசக்தி மேல் நம்பிக்கை கொண்ட, நிரூபணவாதப் பார்வை கொண்ட அறிவியலாளராக அவற்றில் வெளிப்படுகிறார்.

நாடகங்கள்

சுஜாதா ஆர்தர் மில்லர், டென்னஸி வில்லியம்ஸ் போன்ற அமெரிக்க யதார்த்தவாத நாடக ஆசிரியர்களால் பாதிக்கப்பட்டவர். சுஜாதா எழுதிய டாக்டர் நரேந்திரனின் வினோதவழக்கு, சிங்கமையங்கார் பேரன் போன்ற நாடகங்கள் மிகையற்ற அன்றாடச்சித்தரிப்பு மற்றும் இயல்பான உரையாடல் வழியாக இலக்கியத்தன்மையை அடைந்தவை.

மரபிலக்கியம்

சுஜாதா திருக்குறள், சங்கப்பாடல்கள் ஆகியவற்றை சமகாலத் தமிழில் எளியமுறையில் விளக்கும் நூல்களை எழுதினார். ஆழ்வார் பாடல்களுக்கு அவர் எழுதிய விளக்கக் குறிப்புகள் குறிப்பிடத்தக்கவை

நடை

சுஜாதாவின் நடை தமிழில் பாரதி, புதுமைப்பித்தன் ஆகியோருக்கு பின் மிகுந்த செல்வாக்கைச் செலுத்திய நடை என மதிப்பிடப்படுகிறது. அவர் பொதுவாசகர்களுக்கான எழுத்தில் அந்நடையை கையாண்டாலும்கூட அது தீவிர இலக்கியத்தளத்தில் எழுதுபவர்களிலும் பலரிடம் செல்வாக்கைச் செலுத்தியது. சுஜாதாவின் நடையின் இயல்புகள் மூன்று. 1. அதன் புறவயத்தன்மை. சுஜாதா புறவுலகை நுணுக்கமாகச் சித்தரிப்பதிலும், கதைநிகழ்வுகளை முழுக்கமுழுக்க புறவயமாகச் சித்தரிப்பதிலும் கவனம் குவித்தவர். 2 சொற்சிக்கனம். சுஜாதா மிகக்குறைவான சொற்களில் ஒரு காட்சியை அல்லது நிகழ்வைச் சொல்லமுயன்றபடி இருந்தவர். 3. விளையாட்டுத்தனம். சுஜாதாவின் நடையில் எப்போதும் ஆசிரியர் விளையாட்டுத்தனத்துடன் வெளிப்பட்டபடியே இருந்தார். பகடி, எள்ளல் என அவருடைய மொழி அமைந்திருந்தது.

சுஜாதாவின் நடையில் செல்வாக்கு செலுத்திய தமிழ் முன்னோடிகள் புதுமைப்பித்தனும் அசோகமித்திரனும். ஆங்கில முன்னோடிகள் என எர்னஸ்ட் ஹெமிங்வே, ஜான் அப்டைக், ஆகிய இலக்கிய எழுத்தாளர்களையும் ஃப்ரெடெரிக் போர்ஸித் போன்ற ஆங்கில பரபரப்பு எழுத்தாளர்களையும் குறிப்பிடலாம். சுஜாதா ஜான் அப்டைக் எழுத்தில் பயன்படுத்திய எழுத்துக்களை கீழ்மேலாக அடுக்கும் உத்தி, அமைதியை குறிக்க ஏராளமான புள்ளிகளை போடும் உத்தி போன்றவற்றை தானும் பயன்படுத்தினார். பெயர்ச்சொற்களை வினைச்சொற்களாக திரித்துக்கொள்வது போன்றவையும் ஜான் அப்டைக் பயன்படுத்திய உத்திகளே. ஹெமிங்வேயின் நடையில் உள்ள சுருக்கமான புறவிவரிப்பு, அதற்கு வழக்கத்துக்கு மாறான உவமைகளை விமானவியல் போன்ற துறைகளில் இருந்து எடுத்துக் கொள்வது (கோபால்ட் நீல வானம்) ஆகியவற்றை தானும் கடைப்பிடித்தார். ஆங்கில பரபரப்பு நாவல்களிலுள்ள விரைவான நிகழ்வு விவரிப்புகளும் சுஜாதாவால் எடுத்தாளப்பட்டன.

சுஜாதாவின் நடை உத்தி என்பதற்கு அப்பால் சென்றது அவருடைய விரிவான வாசிப்பு மற்றும் கூரிய கவனிப்பினால்.

விருதுகள்

  • அறிவியலை பரப்பியதற்காக 'தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கழகம்' வழங்கும் விருது 1993
  • மின்னணு வாக்குப் பதிவுப் பொறியை உருவாக்க பணியாற்றியதற்காக வாஸ்விக் விருது
  • தமிழக அரசின் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டுள்ளது.

சுஜாதாவுக்கு குறிப்பிடத்தக்க இலக்கியவிருதுகள் எவையும் வழங்கப்படவில்லை