திருவீழிமிழலை சுப்பிரமணிய பிள்ளை

From Tamil Wiki
Revision as of 20:08, 11 March 2022 by Subhasrees (talk | contribs) (திருவீழிமிழலை சுப்பிரமணிய பிள்ளை - முதல் வரைவு)

திருவீழிமிழலை சுப்பிரமணிய பிள்ளை (ஏப்ரல் 16, 1893 - ஜூன் 4, 1984) ஒரு நாதஸ்வரக் கலைஞர். “திருவீழிமிழலை சகோதரர்கள்” என்றறியப்பட்ட இருவரில் ஒருவர்.

இளமை, கல்வி

திருவீழிமிழலை சகோதரர்கள் எனப் புகழ்பெற்ற சுப்பிரமணிய பிள்ளையும்(ஏப்ரல் 16, 1893) நடராஜசுந்தரம் பிள்ளையும் திருவீழிமிழலை என்ற ஊரில் நாதஸ்வரக் கலைஞர் ஸ்வாமிநாத பிள்ளை - சிவபாக்கியம் அம்மாள் இணையருக்குப் பிறந்தனர்.

தந்தையிடம் முதல் இசைப்பயிற்சியைத் துவக்கி பின்னர் தாய்மாமா நாகூர் சுப்பய்யா பிள்ளையிடம் இசைப்பயிற்சியில் தேர்ச்சி பெற்றனர். சுப்பிரமணிய பிள்ளையுடன் பிறந்த மற்றொரு தம்பி கல்யாணசுந்தரம் பிள்ளை காஞ்சீபுரம் நாயனா பிள்ளையிடம் நாதஸ்வரம் பயின்றவர். பல கீர்த்தனைகளும் இயற்றியவர்.

சுப்பிரமணிய பிள்ளை மற்றும் சகோதரர்களுக்கு பல கீர்த்தனைகளைக் கற்றுக் கொடுத்தவர் கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயர்.

தனிவாழ்க்கை

சுப்பிரமணிய பிள்ளை செம்பொன்னார்கோவில் ராமஸ்வாமி பிள்ளையின் மகள் சேது அம்மாள் என்பவரை மணந்தார். இவர்களுக்கு கோவிந்தராஜ பிள்ளை, தக்ஷிணாமூர்த்தி பிள்ளை, ஸ்வாமிநாதன், பாண்டியன் என நான்கு மகன்கள்.

இசைப்பணி

திருவீழிமிழலை சுப்பிரமணிய பிள்ளை சாஹித்யமாகக் கற்று பலமுறை பாடி மெருகேற்றிய பின்னர் நாதஸ்வரத்தில் வாசிக்கும் வழக்கம் கொண்டிருந்ததால், அவரது நாதஸ்வர இசை, கீர்த்தனைகளை வாயால் பாடுவது போல இருக்கும். திருவீழிமிழலை சகோதரர்கள் மரபிலிருந்து வழுவாது வாசிப்பவர்கள் எனப்பெயர் பெற்றவர்கள். வயலின் வித்வான் மலைக்கோட்டை கோவிந்தஸ்வாமி பிள்ளை நடத்திவந்த தியாகராஜ ஆராதனை விழாவை அவருக்குப் பிறகு திருவீழிமிழலை சுப்பிரமணிய பிள்ளை தொடர்ந்து நடத்திவந்தார்.

சுப்பிரமணிய பிள்ளை தருமபுரம் ஆதீனத்தால் கௌரவிக்கப்பட்டிருக்கிறார். தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரம், கேரளம், கர்நாடகம் எனத் தமிழகமெங்கும் திருவீழிமிழலை சகோதரர்கள் புகழ்பெற்றிருந்தனர்.

திருவீழிமிழலை சுப்பிரமணிய பிள்ளையின் நாதஸ்வர இசை கிராமபோன் ஒலித்தட்டுக்களிலும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

மாணவர்கள்

திருவீழிமிழலை சுப்பிரமணிய பிள்ளையின் முக்கியமான மாணவர்கள்:

  • கோவிந்தராஜ பிள்ளை, தக்ஷிணாமூர்த்தி பிள்ளை (மகன்கள்)
  • அய்யம்பேட்டை வேணுகோபால் பிள்ளை
தவில் வாசித்த இசைக்கலைஞர்கள்

திருவீழிமிழலை சகோதரர்களுடன் தவில் வாசித்த கலைஞர்கள்:

  • நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை (நீண்டகாலம் நிரந்தர தவில் கலைஞர்)
  • வழுவூர் முத்துவீர் பிள்ளை
  • கும்பகோணம் தங்கவேல் பிள்ளை
  • திருமுல்லைவாயில் முத்துவீர் பிள்ளை
  • இலங்கை காமாக்ஷிசுந்தரம் பிள்ளை
  • பந்தணைநல்லூர் ரத்தினம் பிள்ளை
  • நாச்சியார்கோவில் ராகவப் பிள்ளை
  • கூறைநாடு கோவிந்தராஜ பிள்ளை
  • கரந்தை ஷண்முகம் பிள்ளை

விருதுகள்

  • சங்கீத கலாநிதி விருது, 1956. வழங்கியது: தி மியூசிக் அகாதெமி, சென்னை.[1]
  • சங்கீத நாடக அகாதமி விருது, 1962[2]

மறைவு

சுப்பிரமணிய பிள்ளை ஜூன் 4, 1984 அன்று திருவீழிமிழலையில் மறைந்தார்.

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013

அடிக்குறிப்புகள்