அன்னலட்சுமி இராஜதுரை

From Tamil Wiki
Revision as of 14:28, 23 January 2024 by Ramya (talk | contribs)
அன்னலட்சுமி இராஜதுரை (நன்றி: iravie)

அன்னலட்சுமி இராஜதுரை(பிறப்பு: ஜூன் 8, 1939) ஈழத்து எழுத்தாளர், பத்திரிகையாளர், விமர்சகர், பேச்சாளர். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத் துறையில் இயங்கிவரும் ஆளுமை.

அன்னலட்சுமி இராஜதுரை

வாழ்க்கைக் குறிப்பு

அன்னலட்சுமி இராஜதுரை இலங்கை யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் ராசையா, ராசம்மா இணையருக்கு ஜூன் 8, 1939-ல் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் இருவர். கல்வியங்காடு செங்குந்தா இந்துக் கல்லூரியில் ஆரம்பக்கல்வி பயின்றார். திருநெல்வேலி செங்குந்தா ஹிந்து கல்லூரியில் பள்ளிக்கல்வி பயின்றார். சுன்னகம் இராமநாதன் கல்லூரியில் ‘அ பிரிவு’ கல்வி பயின்றார். பத்திரிகைத்துறை, ஆங்கிலம் ஆகியவற்றில் டிப்ளோமா தேர்ச்சிச் சான்றிதழ்கள் பெற்றார். ஓவியத்துறையிலும் ஆசிரியர் தராதரப் பத்திரம் பெற்றார்.

அமைப்புச் செயல்பாடுகள்

  • 1982-ல் எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் (OPEC) பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்து கொண்டார்.
  • 1995-ல் பெய்ஜிங், சீனாவில் நடைபெற்ற உலகப் பெண்கள் மாநாட்டில் இலங்கை அவதானிகளில் ஒருவராகக் கலந்து கொண்டார்.
  • 2010-ல் கோயம்புத்தூர் உலகத்தமிழ் மாநாட்டில் அவதானியாகக் கலந்துகொண்டு அதைக் குறித்து வீரகேசரியில் தொடர்கட்டுரைகள் எழுதினார்.

இதழியல்

வீரகேசரி

அன்னலட்சுமி இராஜதுரை 1962-ல் வீரகேசரியில் உதவி ஆசிரியராக இணைந்து செய்திகளோடு 'மாணவர் கேசரி' பக்கத்துக்கும் பங்களித்தார். 1966-ல் வீரகேசரி நிறுவனம் வெளியிட்ட 'ஜோதி' என்னும் குடும்ப வார இதழின் பொறுப்பாசிரியராக இருந்தார். 1969-ஆம் ஆண்டு முதல் வீரகேசரி நாளிதழின் கட்டுரைப் பகுதிக்குப் பொறுப்பாளராக இருந்தார். மாஸ்டர் சிவலிங்கம், அந்தனி ஜீவா, அன்ரனி இராசையா, அன்ரனி பெர்ணான்டோ மற்றும் க.நீலகண்டன் ஆகியோர் அக்காலத்தில் வீரகேசரியின் ஒரு பகுதியாகவிருந்த மாணவர் கேசரிக்கு அன்னலட்சுமி இராஜதுரை பொறுப்பாகவிருந்த காலத்தில் எழுதத் தொடங்கியவர்கள். 2005-ல் சென்னைப் பயணம் மேற்கொண்டு கவிஞர் மு.மேத்தா, திரைப்படக்கவிஞர் சினேகன், திரைப்பட இயக்குனர் சேரன், எழுத்தாளர் அனுராதா ரமணன், கவிஞர் வைகைச்செல்வி, திரைப்படப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் ஆகியோரையும் இன்னும் பலரையும் பேட்டி கண்டு வீரகேசரியில் எழுதினார்.

அன்னலட்சுமி இராஜதுரை
மித்திரன் வாரமலர்

1973 முதல் 1984 வரை 'மித்திரன் வாரமலர்' பத்திரிகையின் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றினார். இக்காலகட்டத்தில் செங்கை ஆழியான், ச.முருகானந்தன், காவலூர் ஜெகநாதன், ஆனந்தி, கோகிலா மகேந்திரன் உட்பட பல எழுத்தாளர்கள் மித்திரன் வாரமலரில் எழுதினார்கள். பெண் எழுத்தாளர்களின் படைப்புக்கள் இதில் வெளிவரவும் இவர் ஊக்கமளித்தார். 'இலக்கிய உலகு’, ‘பெண்கள் உலகு’ ஆகிய இரு கட்டுரைகளின் ஆக்கத்திற்கும் பொறுப்பாக இருந்து செயல்பட்டார்.

கலைக்கேசரி

2000-ஆம் ஆண்டுக்குப் பிறகு மங்கையர் கேசரி வார இதழுக்கும், கலைகேசரி என்ற துணை இதழுக்கும் பொறுப்பாக இருந்தார். 2010 முதல் 2020 வரை கலைக்கேசரி என்ற சர்வதேச மாத இதழின் ஆசிரியராக இருந்தார். கலை, இலக்கியம், பண்பாடு சார்ந்த இவ்விதழ் இலங்கை, இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் தொடர்ந்து வெளிவருகிறது.

இலக்கிய வாழ்க்கை

அன்னலட்சுமி இராஜதுரை

'யாழ் நங்கை' என்னும் புனைபெயரில் அன்னலட்சுமி இராஜதுரை எழுதத் தொடங்கினார். 1958-ல் இவர் எழுதி அனுப்பிய சிறுகதை தினகரன் ஞாயிறு இதழில் வெளியானது. 1959-ல் 'கலைச்செல்வி' சஞ்சிகையில் இளம் எழுத்தாளராக அறிமுகமானார். அன்னலட்சுமி இராஜதுரை கவிதைகள், சிறுகதைகள், நாவல், குறுநாவல், கட்டுரைகள் என அனைத்து வடிவத்திலும் எழுதினார். மணிலா, பீஜிங் நகரங்களில் நடைபெற்ற மாநாடுகளில் கலந்துகொண்ட அனுபவங்களை வீரகேசரி வார வெளியீட்டில் தொடராகப் பல வாரங்கள் எழுதினார்.

அன்னலட்சுமி இராஜதுரையால் எழுதப்பட்ட ‘உரிமை’ என்ற சிறுகதை எழுத்தாளர் மடுளுகிரிய விஜேரத்னவினால் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு அவர் வெளியிட்ட சிங்களத் தொகுப்பு நூலுக்குரிய ”உருமய” என்ற பெயரே தலைப்பாக இடப்பட்டது. கலாசார திணைக்களம் வெளியிட்ட ஒரு தாய் மக்கள் என்னும் நூலில் மூன்று எழுத்தாளர்களின் ஆங்கிலச் சிறுகதைகள் இவரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு சேர்க்கப்பட்டன. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச் சேவையிலும் மகளிர் நிகழ்ச்சி, உரை நிகழ்ச்சி, உரைச்சித்திரம் போன்றவற்றினை எழுதி அவற்றில் பங்கு கொண்டார். 1994 முதல் 2000 ஆண்டுவரை பி.பி.சி நடத்திய ’இலங்கைக்கடிதம்’ என்னும் நிகழ்ச்சியில் பங்குபெற்று அதனை மாதா மாதம் எழுதித் தொகுத்து வழங்கினார்

பேச்சாளர்

அன்னலட்சுமி இராஜதுரையின் இலக்கியம் பற்றிய உரைகள் இலங்கை ரூபவாகினி, சக்தி, வசந்தம் போன்ற தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டன.

பாடலாசிரியர்

அன்னலட்சுமி இராஜதுரையால் இயற்றப்பட்ட இரு மெல்லிசைப் பாடல்கள் இசையாக்கம் பெற்றன. ‘இயற்கை அன்னை நீயே உன்னை இறைஞ்சுகிறேன் தாயே’ என்னும் பாடல் அருமைநாயகம் என்பவராலும் ’என் நெஞ்சிலே ஒரு ராகம்’, ’என் கண்ணே அனுராகம்’ என்னும் பாடல் முத்தழகு என்பவராலும் பாடப்பெற்று ஒலிபரப்பாகின.

விருதுகள்

  • 1992-ல் அன்னலட்சுமி இராஜதுரையின் பத்திரிகைப் பணியைப் பாராட்டி இந்து கலாச்சார அமைச்சு 'தமிழ்மணி' விருது வழங்கியது.
  • 1993-ல் எட்மண்ட் விக்கிரமசிங்க அறக்கட்டளை வழங்கிய சிறந்த பத்திரிகையாளருக்கான விருதை பெற்றார்.
  • 1996-ல் தென்கிழக்கு ஆய்வுமையம், பிரதி அமைச்சர் இஸ்புல்லாஹ் தலைமையில் சம்மாந்துறையில் பொன்னாடை போர்த்தி கௌரவித்தது.
  • 2002-ல் இலங்கை பத்திரிகையாளர் சங்கம் நீண்டகால சிறந்த பத்திரிகை சேவைக்காக தங்கப்பதக்கம் வழங்கியது.
  • 2008-ல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷே பெண் பத்திரிகையாளருக்கு வழங்கப்பட்ட கௌரவ நிகழ்வில் தமிழ்ப் பத்திரிகையாளருக்கான கௌரவம் அன்னலட்சுமி இராஜதுரைக்கு வழங்கப்பட்டது.
  • 2011-ல் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் தமிழில் விருது வழங்கியது.
  • 2015-ல் இலங்கை வானொலி மற்றும் கொடகே சகோதரர்கள் (பிறைவேட்) லிமிட்டேட் இணைந்து நடத்திய கௌரவிப்பு நிகழ்வில் கலை, இலக்கியத்துறை யிலும், ஊடகத்துறையிலும் பெரும்பணி ஆற்றியமைக்காக பாராட்டும் கௌரவிப்பும் வழங்கப்பட்டது.

நூல்கள்

கவிதை
  • இருபக்கங்கள்
நாவல்
  • உள்ளத்தின் கதவுகள்
குறுநாவல்
  • விழிச்சுடர்
சிறுகதைகள்
  • நெருப்பு வெளிச்சம்
பிற
  • நினைவுப் பெருவெளி

உசாத்துணை

  • [https:/

oolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF,_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88 ஆளுமை:அன்னலட்சுமி, இராசதுரை: noolaham]

இணைப்புகள்

  • [https:/noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF கலைக்கேசரி இதழ்கள்: noolaham]

{Finalised}}