ஜெகசிற்பியன்

From Tamil Wiki
Revision as of 23:57, 10 March 2022 by Tamaraikannan (talk | contribs) (Standardised)
Jegasirpiyan
ஜெகசிற்பியன்

ஜெகசிற்பியன் (ஜூன் 19, 1925 - மே 26, 1978) 1950-1980 காலகட்டத்தில் பிரபலமாக இருந்த எழுத்தாளார். வாரப் பத்திரிகைகளில் பொதுவாசிப்புக்காக நிறைய எழுதினார். இன்றும் அவரது வரலாற்று நாவல்கள் நினைவு கூரப்படுகின்றன.

பிறப்பு, இளமை

ஜூன் 19, 1925-ல் மயிலாடுதுறையில், பொன்னப்பா-எலிசபெத் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இயற்பெயர் பாலையன். தொழிற்கல்வி நிலையத்தில் பயிற்சி பெற்று, பிறகு சென்னை ஓவியக் கல்லூரியில் ஓவியம் கற்றார். ஓவியக் கல்லூரியில் இவருடன் பயின்றவர் பின்னாளில் பிரபலமான ஓவியர் "மணியம்".

தனி வாழ்க்கை

முழு நேர எழுத்தாளர். எழுத்து மூலம் அவருக்கு பெரிதாக வருமானம் கிடைக்கவில்லை என்று அமுதசுரபி இதழின் ஆசிரியராக இருந்த விக்கிரமன் கூறுகிறார். ஆரம்ப நாட்களில் வருவாய்க்காக துப்பறியும் கதைகளும் எழுதினாராம்.

ஜெகசிற்பியனின் மனைவி பெயர் தவசீலி. அஜந்தா, வசீகரி, ஏழிசைவல்லபி என்று மூன்று மகள்கள்.

பங்களிப்பு

இலக்கிய வாழ்க்கை

ஜெகசிற்பியனின் முதல் சிறுகதை 1939-ல் "நல்லாயன்' என்ற இதழில் வெளிவந்தது. ஆரம்ப் காலத்தில் பாலையா, தஞ்சை ஜெர்வாஸ், மாயவரம் ஜெர்வாஸ் என்ற பெயர்களில் பல்வேறு இதழ்களில் அவரது சிறுகதைகள் வெளிவந்தன. நல்ல புனைபெயரைத் தேடிக் கொண்டிருந்தார். கவியோகி சுத்தானந்த பாரதியார், தன்னுடைய புதினம் ஒன்றில் ஷேக்ஸ்பியரின் பெயரை 'செகப்பிரியர்' என்று தமிழ்ப்படுத்தி இருந்தார். அந்தப் பெயரையே 'ஜெகசிற்பியன்" என்று மாற்றி தனது புனைபெயராக்கிக் கொண்டார். "நான் இந்த உலகத்தில் என் உயிரை விட மேலாக நேசிப்பது இரண்டு. ஒன்று, எனது அருமைப் பிள்ளைகள். மற்றொன்று, எனது அழகான புனைபெயர்" என்று குறிப்பிடுகிறார்.

1948-ல் "ஏழையின் பரிசு" என்ற தனது முதலாவது முதல் நாவலை எழுதினார். 'காதம்பரி' என்ற மாத இதழ் நடத்திய போட்டியில், "கொம்புத் தேன்" என்ற குறுநாவலை முதல் பரிசுக்குரிய படைப்பாக புதுமைப்பித்தன் தேர்ந்தெடுத்தார். 1957-ல் ஆனந்த விகடன் நடத்திய வெள்ளி விழாப் போட்டியில் இவருடைய "திருச்சிற்றம்பலம்" என்ற வரலாற்று நாவலும், 'நரிக்குறத்தி'[1] என்ற சிறுகதையும் முதல் பரிசுகள் பெற்றன.

வானொலிக்காக பல நாடகங்களையும் எழுதி இருக்கிறார்.

விருதுகள்

  • "கொம்புத் தேன்" என்ற குறுநாவலுக்காக 'காதம்பரி' என்ற மாத இதழ் நடத்திய போட்டியில் முதல் பரிசு; தேர்ந்தெடுத்தவர் புதுமைப்பித்தன்
  • "திருச்சிற்றம்பலம்" நாவலுக்காக ஆனந்த விகடன் நடத்திய வெள்ளி விழா வரலாற்று நாவல் போட்டியில் முதல் பரிசு (1957)
  • "நரிக்குறத்தி"[1] என்ற சிறுகதைக்காக நாவலுக்காக ஆனந்த விகடன் நடத்திய வெள்ளி விழா சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு (1957)
  • பாரதபுத்திரன் சிறுகதைத் தொகுப்புக்கு தமிழ் வளர்ச்சித் துறை பரிசு (1979-1981)
  • தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் திரு.வி.க. பரிசு (மறைவுக்குப் பின்)

இலக்கிய முக்கியத்துவம்

ஜெகசிற்பியன் பொதுவாசிப்புக்காக வாரப் பத்திரிகைகளில் எழுதினார். அவரது வரலாற்று நாவல்கள் எழுதப்பட்ட காலத்தில் வாசகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருந்தன. வாரப் பத்திரிகைகளில் நட்சத்திர எழுத்தாளராக சில காலமேனும் திகழ்ந்திருக்கிறார். அவரது சமூக நாவல்களில் பல அன்றைய லட்சியவாத, காந்தீய நோக்கில எழுதப்பட்டவை.

விமர்சகர் ஜெயமோகன் அவரது 'ஆலவாய் அழகன்' நாவலை வரலாற்று மிகுகற்பனை நாவல்களின் (Historical romances) பட்டியலிலும், 'பத்தினிக் கோட்டம்' மற்றும் 'திருச்சிற்றம்பலம்' நாவல்களை இரண்டாம் பட்டியலிலும் வைக்கிறார்.

மறைவு

மே 26, 1978-ல் காலமானார்.

படைப்புகள்

சிறுகதைத் தொகுதிகள்

154 சிறுகதைகளை எழுதி இருக்கிறார். இவை 12 தொகுதிகளாக வெளியிடப்பட்டன.

  • அக்கினி வீணை (1958)
  • ஊமைக்குயில் (1960)
  • நொண்டிப் பிள்ளையர் (1961)
  • நரிக்குறத்தி (1962)
  • ஞானக்கன்று (1963)
  • ஒரு நாளும் முப்பது வருடங்களும் (இரு குறுநாவல்கள்; 1962)
  • இன்ப அரும்பு (1964)
  • காகித நட்சத்திரம் (1966)
  • கடிகாரச் சித்தர் (1967)
  • மதுரபாவம் (1967)
  • நிழலின் கற்பு (1969)
  • அஜநயனம் (1972)
  • ஒரு பாரதபுத்திரன் (1974)
சமூக நாவல்கள்
  • ஏழ்மையின் பரிசு (1948)
  • சாவின் முத்தம் (1949)
  • கொம்புத் தேன் (1951)
  • தேவதரிசனம் (1962)
  • மண்ணின் குரல் (1964)
  • ஜீவகீதம் (1966)
  • காவல் தெய்வம் (1967)
  • மோகமந்திரம் (1973)
  • ஞானக்குயில் (1973)
  • கிளிஞ்சல் கோபுரம் (1977)
  • ஆறாவது தாகம் (1977)
  • காணக் கிடைக்காத தங்கம் (1977)
  • இனிய நெஞ்சம் (1978)
  • சொர்க்கத்தின் நிழல் (1978)
  • இன்று போய் நாளை வரும் (1979)
  • இந்திர தனுசு (1979)
வரலாற்று நாவல்கள்
  • மதுராந்தகி (1955)
  • நந்திவர்மன் காதலி (1958)
  • நாயகி நற்சோணை (1959)
  • லவாயழகன் (1960)
  • மகரயாழ் மங்கை (1961)
  • மாறம்பாவை (1964)
  • பத்தினிக் கோட்டம் (பாகம் 1; 1964)
  • பத்தினிக் கோட்டம் (பாகம் 2; 1976)
  • சந்தனத் திலகம் (1969)
  • திருச்சிற்றம்பலம் (1974)
  • கோமகள் கோவளை (1976)
நாடகங்கள்
  • சதுரங்க சாணக்கியன்
  • நடை ஓவியம் (ஓரங்க நாடகத் தொகுப்பு)
திரைப்படங்கள்
  • கொஞ்சும் சலங்கை (1961) திரைப்படத்துக்கு வசனம்
மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்
  • 'ஜீவகீதம்' நாவல் பதின்மூன்று இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.
  • ஜெகசிற்பியனின் 30 சிறுகதைகள் ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம், டச்சு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.

உசாத்துணை

இணைப்புகள்