வல்லிக்கண்ணன்

From Tamil Wiki
Revision as of 22:11, 15 February 2022 by Jeyamohan (talk | contribs)
வல்லிக்கண்ணன்

This page is being created by Ka. Siva

Template:Stub page

வல்லிக்கண்ணன் ( ) தமிழில் சிறுகதைகளும் கவிதைகளும் எழுதிய எழுத்தாளர். இதழாளர், இலக்கிய விமர்சகர், இலக்கிய வரலாற்றாளர் என்னும் தளங்களில் நீண்டநாட்கள் பணியாற்றினார். தமிழ்ப் புதுக்கவிதை இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர்.

பிறப்பு, கல்வி

ரா.சு. கிருஷ்ணசாமி என்ற இயற்பெயர் கொண்ட வல்லிக்கண்ணனின் சொந்த ஊர் நெல்லை அருகே உள்ள ராஜவல்லிபுரம் எனினும் அவர் பிறந்தது 12.11.1920 அன்று நாங்குநேரி அருகே உள்ள திசையன்விளை என்ற ஊரில்தான். வல்லிக்கண்ணனின் தந்தை ரா.மு. சுப்பிரமணிய பிள்ளை, தாய் மகமாயி அம்மாள்.  வல்லிக்கண்ணின்  தந்தை அரசுப் பணியில் இருந்தார். பத்தாவது வயதில் தந்தையை இழந்ததால் வல்லிக்கண்ணன் பள்ளிக்கல்வி மட்டுமே படித்தார்.

தனிவாழ்க்கை

பரமக்குடி வேளாண்மை அலுவலகத்தில் எழுத்தராக பணியாற்றினார். இலக்கியத்தின் மேல் கொண்ட விருப்பத்தினால் அரசுப்பணியில் இருந்து விலகினார். தன் சொந்த ஊர் பெயரின் ஒரு பகுதியான  வல்லியையும், தன் பெயரிலுள்ள கிருஷ்ணனின் இன்னொரு பெயரான கண்ணனையும் இணைத்து "வல்லிக்கண்ணன்" என்ற புனைப்பெயரோடு முழுநேர இலக்கியப் பணிக்குள் நுழைந்தார். இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. தன் தமையன் கோமதிநாயகத்துடன் வாழ்ந்தார்

இதழியல்

வல்லிக்கண்ணன் தமிழின் பழைய இதழ்கள் பலவற்றில் பணியாற்றிய அனுபவம் உடையவர்.புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த திருமகள் பத்திரிகை, கோவையிலிருந்து வந்த சினிமாஉலகம் பத்திரிகை மற்றும் சென்னையிலிருந்து வெளிவந்த நவசக்தி மாத இதழ்களில் சிலகாலம் பணியாற்றினார்.   கிராம ஊழியன் இதழில் இருவருடங்கள் ஆசிரியராகப் பணியாற்றியபின்,  ஹனுமான் வார இதழில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். எழுத்து இதழுடனும் பின்னர் நா.பார்த்தசாரதியின் தீபம் இதழுடனும் இணைந்து பணியாற்றினார்.

இலக்கியப்பணி

வல்லிக்கண்ணனின் முதல் கதை சந்திரகாந்தக்கல் பிரசண்ட விகடன் இதழில் வெளிவந்தது. பாரதி, பாரதிதாசன், புதுமைப்பித்தன் ஆகியவர்களை வல்லிக்கண்ணன் தன் முன்னோடிகளாகக் கொண்டவர்.   பாரதிதாசனைப் பற்றி முதலில் விமர்சன நூல் எழுதியவர் வல்லிக்கண்ணன்தான். வல்லிக்கண்ணன் தொடக்கம் முதல் சிறுகதைகள் எழுதினார். வசனகவிதையில் ஈடுபாடுகொண்டு தொடர்ந்து எழுதினார். வசனகவிதை எழுத்து இதழ் வழியாக புதுக்கவிதை என உருமாற்றம் அடைந்து நவீனக் கவிதையாக ஆனபோது அதன் முன்னோடிகளில் ஒருவராகத் திகழ்ந்தார்.

திரைப்படம்

‘லைலா மஜ்னு’ திரைப்படத்தில் சில காட்சிகளுக்கு வசனம் எழுதியுள்ளார்.

மதிப்பீடு

இலக்கியத்திற்காக அரசுப் பணியிலிருந்து விலகி, திருமணம் செய்து கொள்ளாமல் முழு நேர எழுத்துப் பணியில் இயங்கியது இலக்கியத்திற்குள் நுழைபவர்களுக்கு ஓர் ஊக்கத்தை அளிப்பதாகும். இவர் எழுதிய "சரஸ்வதி காலம்", "தமிழ்ப்புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்" மற்றும் "தமிழில் சிறு பத்திரிக்கைகள்" ஆகிய நூல்கள் அவர்கால இலக்கிய நிகழ்வுகளைக் கூறும் முக்கியமான நூல்களாகும்.

“வல்லிக்கண்ணனுக்கு இப்போது வயது எண்பது ஆகிறது. அவரது இலக்கிய வாழ்க்கை வணங்கத் தக்கதும், வழிபடத் தக்கதும் ஆகும். அவரைச் சுற்றி வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் நேரினும் அந்த மாற்றங்களை, அறிவாலும் சிந்தனையாலும் ஆக்கபூர்வமாய் வெளியிடும் திறனாலும் தவிர, தன் அளவில் எத்தகைய பாதிப்புகளுக்கும் ஆளாகாத ஓர் ஆத்ம யோகி அவர்" என்று   வல்லிக்கண்ணனுக்கு 80 வயதானபோது வெளியிடப்பட்ட மலரில் ஜெயகாந்தன் கூறியுள்ளார்.

மறைவு

9 நவம்பர் 2006 -இல் தன் 85- வது வயதில் வல்லிக்கண்ணன் மறைந்தார்.

விருதுகள்

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்” கட்டுரை நூல் 1978-க்கான சாகித்திய அகாடமி விருதைப் பெற்றது.

"வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002- ஆம் ஆண்டுக்கான சிறந்த சிறுகதை நூல் பரிசைப் பெற்றது.

நூல்கள்

கவிதை
  • அமர வேதனை - 1974
சிறுகதை
  • கல்யாணி முதலிய கதைகள்-1944
  • நாட்டியக்காரி-1946
  • ஓடிப் போனவள் கதை (சொக்கலிங்கம்)-1946
  • மத்தாப்பு சுந்தரி-1948
  • வல்லிக்கண்ணன் கதைகள்-1954
  • ஆண்சிங்கம்-1964
  • வாழ விரும்பியவன்-1975
  • அருமையான துணை-1991
  • வல்லிக்கண்ணன் கதைகள் (வேறு தொகுப்பு)-1991
  • மனிதர்கள்-1991
  • சுதந்திரப் பறவைகள்-1994
  • பெரிய மனுஷி (பால புத்தக வரிசை) (பல மொழிகளில்)-1996
  • வல்லிக்கண்ணன் கதைகள் (வேறு + 1 கதைகள்)-2000
  • தோழி நல்ல தோழி தான்-2000
  • வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்-2002
  • புண்ணியம் ஆம் பாவம் போம் சிறுகதைகள்-2002
  • வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்-2003

நாவல்

  • குஞ்சாலாடு (நையாண்டி பாரதி)- 1946
  • ராதை சிரித்தாள்-1948
  • ஒய்யாரி-1947
  • அவள் ஒரு எக்ஸ்ட்ரா-1949
  • அத்தை மகள்-1950
  • முத்தம்-1951
  • செவ்வானம் (கோரநாதன்)-1951
  • குமாரி செல்வா-1951
  • சகுந்தலா-1957
  • விடிவெள்ளி-1962
  • அன்னக்கிளி-1962
  • வசந்தம் மலர்ந்தது-1965
  • வீடும் வெளியும்-1967
  • ஒரு வீட்டின் கதை-1979
  • நினைவுச்சரம்-1980
  • அலைமோதும்கடலோரத்தில்-1980
  • இருட்டு ராஜா-1985
  • மன்னிக்கத் தெரியாதவர் - 1991
  • துணிந்தவன் - 2000
நாடகம்
  • நாசகாரக் கும்பல் (நையாண்டி பாரதி)-1948
  • விடியுமா-1948
கட்டுரைகள்
  • உவமைநயம்-1945
  • கோயில் களை மூடுங்கள் (கோரநாதன்)-1946
  • ஈட்டிமுனை (கோரநாதன்)-1946
  • அடியுங்கள் சாவுமணி (மிவாஸ்கி)-1947
  • சினிமாவில் கடவுள்கள் (கோரநாதன்-1947)
  • கொடு கல்தா (கோரநாதன்)-1948
  • எப்படி உருப்படும்? (கோரநாதன்)-1948
  • கேட்பாரில்லை (கோரநாதன்)- 1949
  • அறிவின் கேள்வி (கோரநாதன்)- 1949
  • விவாகரத்து தேவைதானா?-1950
  • நல்ல மனைவியை அடைவது எப்படி?-1950
  • கல்யாணத்துக்குப் பிறகு காதல் புரியலாமா?-1950
  • கல்யாணம் இன்பம் கொடுப்பதா? துன்பத்தைக் கெடுப்பதா?-1950
  • முத்துக்குளிப்பு-1965
  • வல்லிக்கண்ணன் கட்டுரைகள் -மித்ர-2004
  • வாசகர்கள் விமர்சகர்கள்-1987
  • மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்-1987
இலக்கிய வரலாறு
  • பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை-1981
  • சரஸ்வதி காலம்-1986
  • எழுத்தாளர்கள் பத்திரிகைகள் அன்றும் இன்றும்-1986
  • தமிழில் சிறு பத்திரிகைகள்-1991
  • தீபம் யுகம்-1999
  • புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 1977
வாழ்க்கை வரலாறு
  • புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை)-1987
  • ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்- 1995
  • எழுத்து சி.சு. செல்லப்பா-2002
  • எழுத்துலக நட்சத்திரம் (தீபம்) நா. பார்த்த சாரதி - 2005
  • தமிழ் வளர்த்த ஞானியார் அடிகள்-2003
  • நம் நேரு-1954
  • விஜயலஷ்மி (வரலாறு)-1954
தன் வரலாறு
  • வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்-1988
  • காலத்தின் குரல் (60 கேள்விகளுக்கு பதில்)-1980
  • வல்லிக்கண்ணன் கடிதங்கள்-1999
  • வாழ்க்கைச் சுவடுகள் (தன் வரலாறு)-2001
  • நிலைபெற்ற நினைவுகள்-2005

மொழி பெயர்ப்பு

  • டால்ஸ்டாய்-1956
  • கடலில் நடந்தது (கார்க்கி கட்டுரைகள்)-1956
  • சின்னஞ்சிறுபெண் (கார்க்கி கட்டுரைகள்)-1957
  • கார்க்கி கட்டுரைகள்-1957
  • தாத்தாவும் பேரனும் -1959
  • ராகுல் சாங்கிருத்யாயன்-1986
  • ஆர் மேனியன் சிறுகதைகள் 1991
  • சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் 1995
  • நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா 2005

உசாத்துணை

  • புத்தகம் பேசுது இதழ், 16, ஜூலை, 2010
  • இந்து தமிழ் திசை இணைய இதழ், 13.11.2020