under review

திருமருகல் நடேச பிள்ளை

From Tamil Wiki
Revision as of 14:44, 3 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected text format issues)
திருமருகல் நடேச பிள்ளை, நன்றி - மங்கல இசை மன்னர்கள்
திருமருகல் நடேச பிள்ளை, நன்றி - மங்கல இசை மன்னர்கள்

திருமருகல் நடேச பிள்ளை (1874-1903) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த நாதஸ்வர கலைஞர்.

இளமை, கல்வி

நாகைப்பட்டணம் மாவட்டம் திருமருகல் என்னும் ஊரில் சிவஞானம் பிள்ளை - அவயாம்பாள் இணையருக்கு 1874-ஆம் ஆண்டு பிறந்தார். திருமருகல் மருதமுத்துப் பிள்ளையிடம் நாதஸ்வரப் பயிற்சியைத் தொடங்கினார். பின்னர் குழிக்கரை அய்யாஸ்வாமி பிள்ளையிடம் இசைப்பயிற்சி பெற்றார்.

தனிவாழ்க்கை

நடேச பிள்ளைக்கு கோவிந்தம்மாள், சாரதாம்பாள் என்னும் மூத்த சகோதரிகளும், கமலாம்பாள் என்ற தங்கையும் இருந்தனர். கோவிந்தம்மாளின் மகன்தான் திருவாவடுதுறை டி. என். ராஜரத்தினம் பிள்ளை. நடேச பிள்ளை, சிவஞான பிள்ளையின் தமக்கை குஞ்சம்மாளின் மகள் சீதாவை மணந்தார். சீதா விரைவிலேயே காலமானார். பின்னர் தன் ஆசிரியரான குழிக்கரை அய்யாஸ்வாமியின் மகள் கௌரியம்மாளை மணந்தார். நடேசபிள்ளை தன் மருமகனை (சகோதரி கோவிந்தம்மாளின் மகனை) சுவீகாரம் செய்துகொண்டார். அந்த ஸ்வீகார மகன் டி. என். ராஜரத்தினம் பிள்ளை(திருமருகல் நடேச பிள்ளை ராஜரத்தினம் பிள்ளை).

இசைப்பணி

நடேச பிள்ளை திருவாவடுதுறை ஸ்ரீ கோமுக்தீஸ்வரர் ஆலயம், ஸ்ரீ நமசிவாய மூர்த்திகளால் நிறுவப்பட்ட ஆதீனம் ஆகியவற்றில் நாதஸ்வரக் கலைஞராக பொறுப்பேற்க நேர்ந்ததும் திருமருகலில் இருந்து திருவாவடுதுறைக்குக் குடிபெயர்ந்தார். இவரது இசைப்புலமையைக் கண்டு ஆதீனகர்த்தர் மேலகரம் சுப்பிரமணிய தேசிகர், நடேச பிள்ளையை ஆதீனத்தின் ஆஸ்தான வித்வானாக ஆக்கினார். எட்டையபுரம் மன்னரும் ராமநாதபுரம் அரசியின் சகோதரர் கோட்டசாமித் தேவரும் நடேச பிள்ளைக்குக் கனகாபிஷேகம் செய்தனர். நீண்ட நேரம் பிருகாக்களைப் பாடுவது இவரது திறமையாக இருந்தது. 1902-ஆம் ஆண்டு கோயமுத்தூர் தாயம்மாள் வீட்டுத் திருமணத்தில் நடேச பிள்ளை மன்னார்குடி சின்னப்பக்கிரிப் பிள்ளையுடன் இணைந்து வாசித்தார். தவில் கலைஞர் அம்மாசத்திரம் கண்ணுஸ்வாமிப் பிள்ளையை அன்றுதான் முதலில் சந்தித்தார் நடேச பிள்ளை. அதன் பின்னர் நிரந்தரமாக நடேச பிள்ளைக்கு தவில் கலைஞராக ஆனார் கண்ணுச்சாமிப் பிள்ளை.

தவில் வாசித்த இசைக்கலைஞர்கள்

திருமருகல் நடேச பிள்ளையுடன் தவில் வாசித்த கலைஞர்கள்:

மறைவு

திருமருகல் நடேச பிள்ளை 1903-ஆம் ஆண்டு தன் இருபத்தியெட்டாம் வயதில் வயிற்றுப்போக்கால் காலமானார்.

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013


✅Finalised Page