being created

பிரமிள்: Difference between revisions

From Tamil Wiki
(Removed non-breaking space character)
(Category:சிறுகதையாசிரியர்கள் சேர்க்கப்பட்டது)
Line 96: Line 96:
{{Being created}}
{{Being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:சிறுகதையாசிரியர்கள்]]

Revision as of 20:26, 31 December 2022

பிரமிள்
பிரமிள்
பிரமிள்

பிரமிள் (ஏப்ரல் 20,1939 - ஜனவரி 6, 1997) நவீன தமிழ் கவிதை முன்னோடிகளுள் ஒருவர். இவரது இயற்பெயர் சிவராமலிங்கம். தருமு சிவராம் என்றழைக்கப்பட்டார். இவர் எண்ணியல் சோதிடத்தில் நம்பிக்கை கொண்டவராதலால் தன் பெயரை பானுசந்திரன், அரூப் சீவராம், பிரமிள் போன்ற பல புனைபெயர்களில் எழுதினார். விமர்சகராகவும், சிறுகதையாசிரியராகவும், ஓவியராகவும் விளங்கினார். இலங்கையில் பிறந்திருந்தாலும் தன் வாழ்நாளில் பாதியைத் தமிழகத்தில் வாழ்ந்ததால் தமிழக எழுத்தாளராகவே அறியப்படுகிறார். இலக்கியம் அளவுக்கே ஆன்மிகத்திலும் ஈடுபாடு கொண்டவர். ஒரு சாராரால் ஆன்மிக வழிகாட்டியாகவே கருதப்படுபவர்.

பிறப்பு, கல்வி

தருமு சிவராம் என்று அழைக்கப்பட்ட பிரமிளின் இயற்பெயர் சிவராமலிங்கம். இவர் ஏப்ரல் 20,1939 அன்று பிறந்தார். இவர் இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலையைச் சேர்ந்தவர். 1971-ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வந்து விட்டார். பிறகு தன் பெரும்பாலான வாழ்நாளை சென்னையிலேயே கழித்தார்.

இவருக்கு ஆரம்பக் கல்வி மட்டும் ராமகிருஷ்ண மடம் நடத்திய இரவுப்பாடசாலையில் கிடைத்தது.

தனிவாழ்க்கை

பிரமிள், இலங்கையில் பல்வேறு இடங்களில் சிற்சில காலம் வசித்திருக்கிறார். இந்தியாவிலும் டெல்லி, திருவனந்தபுரம், பூதப்பாண்டி, நாகர் கோயில், மதுரை என பல இடங்களில் வசித்திருந்தாலும் அதிக நாட்கள் சென்னையில் தான் பிரமிள் வாழ்ந்தார். சென்னையிலும் கூட பல இடங்கள் மாறி மாறி குடியேறியிருக்கிறார். தன்னை ஒரு 'க்யூபிச ஆளுமை' என்று குறிப்பிடும் பிரமிள், பிழைப்புக்காக எந்த வேலையும் செய்யாதவர். 'வாசிப்பது எழுதுவதுமே' தன் முழுநேர வேலை என்று வாழ்ந்த பிரமிள் திருமணம் செய்து கொள்ளாதவர்.

தருமு சிவராம் என்றே ஆரம்ப காலங்களில் இவர் அழைக்கப்பட்டார். எண்கணித ஈடுபாட்டால், வாழ்நாள் முழுதும் விதவிதமாகத் தன் பெயரை பல முறை மாற்றி எழுதிக்கொண்டே இருந்தார். இலக்கிய ஈடுபாட்டையும் மீறி நின்றது அவரது ஆன்மீக அக்கறை. ஜே.கிருஷ்ணமூர்த்தியின் மேல் அவருக்கு அபாரமான ஈடுபாடு இருந்தது. இளமையில் அவரை அதிகம் பாதித்தவர் திருக்கோணமலை இல்லறத்துறவி, சாது அப்பாத்துரை, யோகி ராம்சுரத் குமார், பேடா போன்ற பல ஞானிகளின் தொடர்பும் குறிப்பிடத்தகுந்தது

படைப்புலகம்

இலக்கியம்

பிரமிள் தனது இருபதாவது வயதில், சென்னையிலிருந்து வெளிவந்த எழுத்து பத்திரிகையில் கவிதைகளும் விமர்சனங்களும் எழுத ஆரம்பித்தார். முதன்மையாக கவிஞராகவே அறியப்படும் இவரின் படைப்பாற்றல் விமர்சனம், சிறுகதை, நாடகம் போன்றவற்றிலும் வெளிப்பட்டுள்ளது. 'படிமக் கவிஞர்’ என்றும் 'ஆன்மீகக் கவிஞர்’ என்றும் சிறப்பிக்கப்பட்டார்.

சி.சு.செல்லப்பா நடத்திய தமிழின் முன்னோடி சிறுபத்திரிகையான 'எழுத்து' பத்திரிகையில் தன் இருபது வயதில் எழுதத்தொடங்கினார். தன் இருபத்தி எட்டாவது வயதில் மௌனியின் சிறுகதைத் தொகுப்பிற்கு முன்னுரை எழுதினார். "கவிதைக் கோட்பாடுகளும் பாரதி கலையும்" என்ற தலைப்பில் பாரதியை மதிப்பீடு செய்து "எழுத்து" இதழில் எழுதிய கட்டுரை கவனம் பெற்றது.

லஷ்மி ஜோதி, இலக்குமி இளங்கோ, கௌரி, பூம் பொற்கொடி இளங்கோ, டி.சி.ராமலிங்கம், பிருமிள், பிரமீள், பிரேமிள், பிரமிள் பானு, ஜீவராம் அருப்பிருமீள், அஜித்ராம் பிரேமிள், பிரமிள் பானுச்சந்திரன், பானு அரூப் சிவராம், விக்ரம் குப்தன் பிரமிள், ராம் தியவ் விபூதி பிரமிள், தியவ் விஷ்னுவ் அக்னி ராம்பிரமிள், அரூப் சிவராமு, ஔரூப் சிவராம், தர்மு சிவராம், தருமு சிவராமு என்று பல புனைப்பெயர்கள் சூட்டிக் கொண்டு எழுதினார்.

தொடக்கத்தில் எழுத்து பத்திரிக்கையும் இடையில் கொல்லிப்பாவை பத்திரிக்கையும் இறுதியில் லயம் பத்திரிக்கையும் பிரமிளுக்கு முதன்மையான படைப்புக்களம் அமைத்துத் தந்தன. பிரமிளின் பெரும்பாலான நூல்களை கால. சுப்ரமணியம் தனது லயம் பதிப்பகம் மூலம் வெளியிட்டுள்ளார்.

ஓவியம்

ஓவியம், களிமண் சிற்பங்கள் செய்வதிலும் திறமை படைத்திருந்தார். புத்தகங்களிலும், இதழ்களிலும் இவர் வரைந்த ஓவியங்கள் வெளியாகியுள்ளன. 1971-ல் கண்டி பிரான்சு நட்புறவுக் கழகத்தில் இவரது ஓவியக் கண்காட்சி ஒன்று நடைபெற்றது.

திரைப்படம்

உலகத் திரைப்படங்கள் மீதும் பெரும் ஆர்வம் கொண்டிருந்த பிரமிள், தன் 'நக்ஷத்ரவாஸி' நாடகத்தை திரைப்படமாக்கினால், அதில் ரஜினிகாந்தையும், ஸ்ரீப்ரியாவையும் நடிக்க வைப்பதாக இருந்தார். பிறகு, "அதை திரைப்படமாக்க வேண்டும் என்று இப்போது தோன்றவில்லை" என்றார் பிரமிள். பிரமிளுக்கு பிடித்த, அவர் மீண்டும் மீண்டும் பார்த்த திரைப்படங்கள் Mackenna's Gold மற்றும் Blade Runner.

மதிப்பீடு

தமிழின் மாமேதை என்று தி. ஜானகிராமனாலும், உரைநடையின் அதிகபட்ச சாத்தியத்தை நிறைவேற்றியவர் என்று சி.சு.செல்லப்பாவாலும் பிரமிள் பாராட்டப்பட்டார்.

"தனது நிறைவேறாத ஆன்மிக இலக்கின், குறைபட்ட சாத்தியமாகவே தனது படைப்புகளைப் பார்த்திருக்கிறார் "என்று ஷங்கர் ராமசுப்ரமணியன் பிரமிளைப் பற்றிக் குறிப்பிடுகிறார். ஆங்கிலத்தில் வெளியான 'தமிழ்ச் சிறுகதைகள்' என்ற நூலில் பிரமிளின் 'சந்திப்பு' சிறுகதை சேர்க்கப்பட்டபோது, அந்தக் கதைதான் மிகச் சிறப்பானது என்று 'இந்தியன் எக்ஸ்பிரஸின்' டெல்லி பதிப்பு சொன்னது.

"தமிழ்ப் புதுக்கவிதையின் முழுமையான தனித்துவம் பிரமிள் கவிதைகளில் மட்டுமே உள்ளது. பிரமிள் காலந்தோறும் மனிதனை முடிவிலி நோக்கிச் செலுத்திய அடிப்படை வினாவால் உருவாக்கப்பட்டவர். எந்த வினா ரிக்வேதத்து சிருஷ்டிகீதத்தை, கணியன் பூங்குன்றனின் செய்யுள் வரிகளை உருவாக்கியதோ அதே வினாவால் செலுத்தப்பட்டவர். அவ்வினாவுக்கு விடைதேடும் பொருட்டு மரபு தனக்களித்த படிமப் பெரும் செல்வத்தைக் கருவியாக்கி முன்னகர்பவர். தன் ஆளுமையின் பெரும் கொந்தளிப்பான கவியுலகு ஒன்றை உருவாக்கியவர். எங்கெல்லாம் அந்த முதல்பெருவினா தன்னைச் செலுத்துகிறதோ அங்கெல்லாம் புத்தம்புது கவிமொழியை உருவாக்கியவர். நவீனத்தமிழ்ப் புதுக்கவிதையில் தமிழ் மரபின் சாரத்தைத் தன் வரிகளில் புதுப்பிக்க முடிந்த முதல் பெரும் கவிஞர். பித்தும் தன்முனைப்பும் தத்தளிப்பும் தரிசனங்களுமாக நம்முன் வாழ்ந்து மறைந்த இப்பெருங்கலைஞனைத் தமிழ் நமக்களிக்கும் பெருமிதம் ததும்பும் அனைத்துச் சொற்களாலும் நாம் கௌரவிக்கவேண்டும்" என எழுத்தாளர் ஜெயமோகன் தன் "இலக்கிய முன்னோடிகள்' (நற்றிணை பதிப்பகம்) நூலில் குறிப்பிட்டுள்ளார்.

காவியம் என்ற இவரது கவிதை தமிழில் நவீன புதுக்கவிதைக்கான மாதிரியாக அதிக அளவில் மேற்கோளாக காட்டப்படுகிறது.

மறைவு

உதரவிதானத்தில் ஏற்பட்ட புற்றுநோயால், பக்கவாதத்தால் உடல் செயலிழந்து, மூளையில் பாதிப்பு ஏற்பட்டு, பல மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பிரமிள், ஜனவரி 6, 1997 அன்று காலமானார். வேலூருக்கு அருகிலுள்ள கரடிக்குடி என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.

விருதுகள்

  • கும்பகோணம் சிலிக்குயில் பதிப்பகம் 1995-ஆம் ஆண்டு "புதுமைப்பித்தன் வீறு" விருதுவழங்கியது.
  • நியூயார்க் விளக்கு அமைப்பு 1996-ஆம் ஆண்டுக்கான "புதுமைப்பித்தன்" விருதை இவருக்கு அளித்தது.

நூல்பட்டியல்

கவிதைத் தொகுதிகள்
  • கண்ணாடியுள்ளிருந்து
  • கைப்பிடியளவு கடல்
  • மேல்நோக்கிய பயணம்
  • பிரமிள் கவிதைகள்
சிறுகதை தொகுப்பு
  • லங்காபுரி ராஜா
  • பிரமிள் படைப்புகள்
சிறுகதைகள் சில
  • காடன் கண்டது
  • பாறை
  • நீலம்
  • கோடரி
  • கருடனூர் ரிப்போர்ட்
  • சந்திப்பு
  • அசரீரி
  • சாமுண்டி
  • அங்குலிமாலா
  • கிசுகிசு
  • குறுநாவல்
  • ஆயி
  • பிரசன்னம்
  • லங்காபுரிராஜா
நாடகம்
  • நட்சத்ரவாசி
  • (அடையாளம்).
பிரமிள் நூல் வரிசை

(பதிப்பு: கால. சுப்ரமணியம்)

  • பிரமிள் கவிதைகள், 1998 (முழுத் தொகுதி) (லயம்)
  • தியானதாரா, 1989 (லயம்), 2005 (ஆகாஷ்), (1999), (2006), 2008 (கவிதா).
  • மார்க்ஸும் மார்க்ஸியமும். 1999. பீட்டர் வோர்ஸ்லி. (தமிழாக்கம்). (லயம்)
  • பிரமிள் படைப்புகள். 2003. (அடையாளம்)
  • வானமற்றவெளி: கவிதை பற்றிய கட்டுரைகள்.2004. (அடையாளம்).
  • பாதையில்லாப் பயணம்: ஆன்மீக-மறைமுகஞானப் படைப்புகள். 2007. (வம்சி)
  • பிரமிள் கவிதைகள். 2007. (சிறப்புப் பதிப்பு). (அடையாளம்).
  • விடுதலையும் கலாச்சாரமும்: மொழிபெயர்ப்புப் படைப்புகள். 2009. (விருட்சம்)
  • ஸ்ரீலங்காவின் தேசியத் தற்கொலை. 2009. (தமிழோசை).
  • யாழ் கதைகள். 2009. (லயம்).
  • காலவெளிக் கதை: அறிவியல் கட்டுரைகள். 2009. (உள்ளுறை).
  • வெயிலும் நிழலும்: இலக்கிய விமர்சனக் கட்டுரைகள். 2011. (வம்சி)
  • வரலாற்றுச் சலனங்கள்: சமுதாயவியல் கட்டுரைகள். 2011. (வம்சி)
  • எதிர்ப்புச்சுவடுகள்: பேட்டிகள், உரையாடல்கள். (வெளிவராதது)
  • அறைகூவல்: இலக்கிய அரசியல் எழுத்துகள். (வெளிவராதது)
  • தமிழின் நவீனத்துவம்: எழுத்து கட்டுரைகள். 2011. (நற்றிணை)
  • சூரியன் தகித்த நிறம் (மொழிபெயர்ப்புக் கவிதைகள். 2011. (நற்றிணை)
  • ஜே.கிருஷ்ணமூர்த்தியின் பாதையில்லாப் பயணம். 2014. (தமிழினி)
  • மார்க்ஸும் மார்க்ஸியமும் - பீட்டர் வோர்ஸ்லி. (தமிழாக்கம்). 2014.(தமிழினி)
  • பிரமிள் படைப்புகள்: தொகுதி 1 கவிதைகள். 2015. (அடையாளம்)
  • பிரமிள் படைப்புகள்: தொகுதி 2 கதைகள், நாடகங்கள். 2015. (அடையாளம்)
  • பிரமிள் படைப்புகள்: தொகுதி 3 விமர்சனக்கட்டுரைகள்-1. 2015. (அடையாளம்)
  • பிரமிள் படைப்புகள்: தொகுதி 4 விமர்சனக்கட்டுரைகள்-2. 2015. (அடையாளம்)
  • பிரமிள் படைப்புகள்: தொகுதி 5 பேட்டிகளும் உரையாடல்களும். 2015. (அடையாளம்)
  • பிரமிள் படைப்புகள்: தொகுதி 6. மொழிபெயர்ப்பு, அறிவியல் ஆன்மீகம். 2015. (அடையாளம்)

நினைவு நூல்கள்

  • நினைவோடை - சுந்தர ராமசாமி (2005)

வெளி இணைப்புகள்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.