under review

பிரதாப சந்திர விலாசம்: Difference between revisions

From Tamil Wiki
(Removed extra blank characters from template paragraphs)
(Corrected section header text)
Line 36: Line 36:
* [https://www.tamilvu.org/courses/degree/d051/d0514/html/d05143l1.htm தமிழ் இணையப் பல்கலைக்கழகப் பாடம்]  
* [https://www.tamilvu.org/courses/degree/d051/d0514/html/d05143l1.htm தமிழ் இணையப் பல்கலைக்கழகப் பாடம்]  
* [https://www.aniarticle.com/2022/01/nadagakali-tamil-parithimar.html தமிழ் நாடகக் குறிப்புகள்]
* [https://www.aniarticle.com/2022/01/nadagakali-tamil-parithimar.html தமிழ் நாடகக் குறிப்புகள்]
== இணைப்புக் குறிப்புகள் ==
== அடிக்குறிப்புகள் ==
<references />
<references />
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
{{Finalised}}
{{Finalised}}

Revision as of 13:21, 16 December 2022

பிரதாப சந்திர விலாசம்: மறு பதிப்பு (1915)

பிரதாப சந்திர விலாசம் (1877) தொடக்ககால தமிழ் சமூக நாடகங்களில் ஒன்று. இதனை இயற்றியவர் ப.வ. இராமசாமி ராஜு. சமூகசீர்திருத்த நோக்கமும் பகடித்தன்மையும் கொண்ட படைப்பு.

எழுத்து, வெளியீடு

ப.வ. இராமசாமி ராஜு இந்நாடகத்தை 1877ல் எழுதினார்.  காசி விஸ்வநாத முதலியார் எழுதிய 'டம்பாச்சாரி விலாசம்’ என்ற நாடகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதே வகையில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களுடன் கூடிய பல நாடகங்கள் வெளியாகின. அவற்றுள் ஒன்று பிரதாப சந்திர விலாசம்.

இந்த நாடகத்தை 2007-ல் 'எனி இந்தியன்’ பதிப்பகம் மறுபதிப்புச் செய்தது.

நோக்கம்

இந்த நாடகம்  எழுதப்பட்டதன் நோக்கமாக இராமசாமி ராஜு, நூலின் முகவுரையில், "நம்முடைய நாட்டில் அநேகர் இயற்கையாக நல்லறிவு படைத்துக் கல்வி கற்றுத் தேர்ந்து, அவரவர் அதிர்ஷ்டத்துக்கும் முயற்சிக்கும் தக்கபடி மதிப்புள்ள ஸ்திதிக்கு வந்தும், அற்ப வயதிலேயே தங்காலத்தை முடித்து, மனைவி மக்களை வருத்தத்தில் மூழ்த்தி, பந்து மித்திரர்களுக்கெல்லாம் தீராத கிலேசத்தை உண்டாக்கி விட்டுப் போகின்றனர். இந்த விபரீதத்துக்கு பெரும்பாலும் காரணமேதோவென்று ஆராயப் புகின், இந்நூலில் வெளியிட்டு மறுத்திருக்கும் துன்பங்களேயோம். அந்தோ! வேசையர் முதலிய மாதர்களோடும், ஒயின், பிராந்தி முதலிய சாராய வர்க்கங்களோடும் தம் வாழ்நாளை நமனார்க்குக் கொள்ளை கொடுக்கும் துரதிர்ஷ்டப் பிராணிகளின் தொகை எண்ணி முடியுமோ! ஆகையால் என் சக்தி புத்திகளுக்குத் தக்கபடி யான் லோகோபகாரமாக நினைத்து இயற்றிய இந்த நூலை நடுவுநிலைமையுற்ற மேலோர் நன்கு மதிக்கின், அது யான் இதை இயற்றும் விஷயத்தில் செய்த முயற்சிக்கு ஓர் பயனாகும். கெடுதி விலக்கைக் கருத்தாய்க் கொண்டு அக்கெடுதியைப் பற்பலவிதமாய் விளக்கிக் காட்டுதல் மூத்தோர் வழக்கம். அப்படியே கீர்வாணம், தமிழ், இங்க்லீஷ் முதலிய பாஷைகளில் அனேக மகாகவிகள் செய்திருக்கின்றனர். அவ்வழியே யானும், யானையுலாவுங் காட்டில் பூனை சென்றாற்போல் தொடர்ந்தனன்." என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதாப சந்திர விலாசம் - நாடக முன்னுரை

அமைப்பு

காட்சி, அங்கம் என்ற பகுப்புடன் நாடகம் எழுதப்பட்டுள்ளது. முதல் காட்சியில் கட்டியங்காரன் வந்து நாடகத் தலைவரை அறிமுகப்படுத்தி நாடகத்தை ஆரம்பித்து வைக்கிறான். பாடலும் வசனமும் கலந்து  இந்நாடகத்தில் இடம் பெற்றுள்ளது. இதில் நாடகப் பாத்திரங்கள்,   அவரவர் படிப்பு, ஜாதி, சமூகப் படிநிலை இவற்றிற்கேற்ப செந்தமிழிலும், பேச்சு மொழியிலும், ஆங்கிலத்திலும், தெலுங்கிலும், உருதுவிலும், கன்னடத்திலும் வேறுபட்ட பாணிகளில் பேசும் வகையில் வசனம் அமைக்கப்பட்டுள்ளது.

பாவாடை ஜித்தர், இடிமுழங்கி, ஸண்டே மாஸ்டர், குசும்பா மாஸ்டர், ஷோக் சுந்தரம், மத்தாப்பு சுந்தரம், சட்பட் படீல், திருவேங்கடத்தானு எனப் பல பாத்திரங்கள் பல்வேறு வகையில் உரையாடுகின்றனர். நகைச்சுவை ததும்ப நாடக வசனங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கதை

மாயோ கவர்னர் ஜெனரல் ஆட்சி செய்த காலத்தில் நிகழ்ந்ததாக இந்தக் கதை அமைக்கப்பட்டுள்ளது. லக்ஷ்மிவிலாசர் என்னும் ஜமீன்தாரின் மகனான பிரதாப சந்திரன், சென்னையில் உயர்கல்வி கற்று, மதிப்பும், மரியாதையும் கொண்டவராக இருக்கிறார். தன்னைப் போன்ற நண்பர்களை இணைத்துக் கொண்டு பல்வேறு பொது நலப் பணிகளைச் செய்து வருகிறார். அப்போது சில தீய நண்பர்களின் தொடர்பால் அவரது வாழ்க்கை தடம் மாறுகிறது. பல்வேறு துன்பங்களைச் சந்திக்கிறார். அவமானம் அடைகிறார்.  பல்வேறு இன்னல்களுக்குப் பின் மனம் திருந்துகிறார். தன் தந்தையுடன் மாயோ பிரபுவின் தர்பாருக்குச் செல்கிறார். அங்கிருந்து வேட்டைக்குச் சென்றபோது மனோன்மணி என்னும் பெண்ணைச் சந்திக்கிறார். அவளை மணம் செய்து கொண்டு ஒழுக்க சீலராக இனிது வாழ்கிறார்.

பிரதாப சந்திர விலாசம் மறு பதிப்பு- என் இ இந்தியன் பதிப்பகம்

இலக்கிய மதிப்பீடு

’நாடக மேடை நினைவுகள்' நூலில் பம்மல் சம்பந்த முதலியார், தான் எழும்பூரில் உள்ள பெகன்ஸ் பீல்ட் (Beaconsfield) என்னும் நாடார் பங்களாவில் ’பிரதாப சந்திர விலாசம்’ நாடகம் பார்த்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

'நாடகக் கலை’ நூலில், அவ்வை டி.கே. ஷண்முகம் "பிரதாப சந்திரன் நாடகத்தை நாங்கள் எங்கள் குழுவில் 1926-ல் பல முறை நடித்திருக்கிறோம். நானே பிரதாப சந்திரனாகவும், சில நாடகங்களில் விசுவாச காதகன் என்ற தீயோனாகவும் நடித்திருக்கிறேன்." என்று குறிப்பிட்டிருக்கிறார்

இந்த நாடகம் குறித்து இந்திரா பார்த்தசாரதி, "ப.வ. இராமசாமி ராஜு அவர்களால் எழுதப்பட்ட 'பிரதாபசந்திர விலாசம்' என்ற நாடகம், பெரும்பான்மையான தமிழிலக்கிய வரலாற்றாசிரியர்களின் கவனத்தைப் பெறவில்லை என்று தோன்றுகிறது. இது, பெ.சுந்தரம் பிள்ளை அவர்களின், 'மனோன்மணி'யத்துக்கும் காலத்தால் முந்தியது. மேடையில் நடிக்கப்படுவதற்கென்றே எழுதப்பட்ட நாடககம் போல் இது தோன்றினாலும், எப்பொழுதாவது மேடையேறியிருக்கின்றதா என்பதும் தெரியவில்லை. ஒரு தடவை மேடையேறியதாகவும், இது செல்வாக்கு மிகுந்த சிந்தாதிரிப்பேட்டை முதலியார் ஒருவரைச் சித்திரிப்பதுபோல் தோன்றியதால், அரசாங்கத் தடை உத்தரவுக்குள்ளாகியதாக அமரர் க.நா.சுப்ரமணியம் பல ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் சொன்னார் [1]" என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதாப சந்திர விலாசம் நாடகம் குறித்து பம்மல் சம்பந்த முதலியார், தனது நாடகத் தமிழ் என்னும் நூலில், "ஸ்ரீ ராமஸ்வாமி ராஜு என்பவர் பிரதாபசந்திர விலாசம் என்று ஒரு தமிழ் நாடகத்தை 1877 வருஷத்தில் எழுதினார். இவர் தமிழ், சம்ஸ்கிருதம், ஆங்கிலம் எனும் மூன்று பாஷைகளிலும் தேர்ச்சி பெற்றவர். இங்கிலாந்துக்குப் போய்த் திரும்பி வந்தவர்; சங்கீதத்தில் தேர்ச்சியடைந்தவர்; தனது மேற்கூறிய நாடகத்துக்கு வேண்டிய பாட்டுகளைத்தானே கவனம் செய்து, ராக தாளங்களை அமைத்திருக்கிறர். நாடக  நாயகனை, டம்பாச்சாரி விலாசத்திலிருப்பது போல் கல்வியறிவு இல்லாதவனாயல்லாது, கற்றறிந்தவனாக ஏற்படுத்தியுள்ளார். இந்த நாடகமானது சில சமயங்களில் மேடையில் ஆடப்பட்டதை நான் பார்த்திருக்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்

ஆவணம்

தமிழ் இணைய நூலகத்தில் 'பிரதாப சந்திர விலாசம்’ நூல் சேகரிக்கப்பட்டுள்ளது.

வரலாற்று இடம்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பொதுரசனைக்குரிய வகையில் , படிப்பதற்கும் மேடையில் நடிப்பதற்கும் ஏற்ற வகையில் இந்த நாடக நுால் எழுதப்பட்டிருக்கிறது. தமிழின் தொடக்ககால சமூக நாடகமான இது தொடர்ச்சியாக சமூகச் சீர்த்திருத்தக் கருத்துக்கள் கொண்ட நாடகங்கள் உருவாக முன்னோடியாய் அமைந்தது.

இந்நாடகம் பற்றி வெளி ரங்கராஜன், "ராமசாமி ராஜூ தமிழ்க் கவிதை நடையையும், பேச்சு மொழி இயல்புகளையும் தன்னுடைய காலகட்டத்தின் குறிப்பிட்ட சிந்தனைத் தேவைகளுக்காக ஒரு நாடக பாணியில் வடிவமைத்ததை ஒரு முக்கியமான படைப்புச் செயல் என்றே கருத வேண்டும். முக்கியமாக அச்சமயங்களில் அதிகம் புழக்கத்தில் இருந்த மணிப்பிரவாள நடையை விலக்கி, கம்பரின் பாதிப்பில் உருவான தமிழ்க் கவிதை ஒட்டத்தையும் இசைத்தன்மையையும் உள்வாங்கி, தமிழ், தெலுங்கு மற்றம் ஆங்கில வார்த்தைகள் கொண்ட ஒரு பேச்சுமொழியை உரையாடலுக்குப் பயன்படுத்தியதை ஒரு வித்தியாசமான முயற்சி என்றே கொள்ள வேண்டும்." என்று மதிப்பிட்டுள்ளார்.

இந்திரா பார்த்தசாரதி, "அக்காலத்திய சமூக மாற்றங்களை அறிவதற்கான ஓர் அற்புத வழிகாட்டி, பிரதாபசந்திர விலாசம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page