ஜி. ராமநாதன்: Difference between revisions
Logamadevi (talk | contribs) No edit summary |
(; Added info on Finalised date) |
||
| Line 186: | Line 186: | ||
*தமிழ்த் திரையிசை ஆளுமைகள் 1931-2000, முனைவர் ஞா. கற்பகம், வெளியீடு: கற்பக வித்யா பதிப்பகம், சென்னை, முதல் பதிப்பு: ஜனவரி 2020. | *தமிழ்த் திரையிசை ஆளுமைகள் 1931-2000, முனைவர் ஞா. கற்பகம், வெளியீடு: கற்பக வித்யா பதிப்பகம், சென்னை, முதல் பதிப்பு: ஜனவரி 2020. | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|09-Aug-2026, 21:17:36 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Latest revision as of 03:43, 10 August 2026
- ராமநாதன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ராமநாதன் (பெயர் பட்டியல்)
ஜி. ராமநாதன், (1910 - நவம்பர் 20, 1963) தமிழ்த் திரைப்பட முன்னோடி இசையமைப்பாளர். கர்நாடக இசைக்கு முக்கியத்துவம் அளித்து இசையமைத்தார். இசையில் பல புதுமைகளைச் செய்தார். ஜி. ராமநாதன், பாபநாசம் சிவன், எம்.கே. தியாகராஜ பாகவதர் என மூவரும் இணைந்து காலத்தில் நிலைபேறுடைய பல பாடல்களை உருவாக்கி அளித்தனர்.
பிறப்பு, கல்வி
ஜி. ராமநாதன், 1910-ல், திருச்சி அருகே உள்ள பிச்சாண்டார் கோவிலில், கோபால்சாமி ஐயருக்குப் பிறந்தார். இளம் வயதிலேயே தாயையும் தொடர்ந்து தந்தையையும் இழந்தார். ஐந்தாம் வகுப்பு வரை கல்வி கற்றார். மூத்த சகோதரர் சுந்தர பாகவதரால் ஆதரிக்கப்பட்டார்.
தனி வாழ்க்கை
1942-ல் ஜி.ராமநாதனுக்கு திருமணம் நடந்தது. மனைவி ஜெயலட்சுமி. மகள்கள் சாயி தேவி, லட்சுமி.
இசை வாழ்க்கை
தொடக்கம்
ஜி. ராமநாதனின் மூத்த சகோதரர் சுந்தர பாகவதர், அக்காலத்தில் பிரபல ஹரிகதா வித்வானாக இருந்தார். சுந்தர பாகவதரின் கச்சேரிகளுக்குப் பின்பாட்டு பாடுபராகவும், கதாகாலேட்சபங்களுக்கு ஹார்மோனியம் வாசிப்பவராகவும் தனது இசை வாழ்க்கையைத் தொடங்கினார் ராமநாதன். வேகமாக ஹார்மோனியம் வாசிக்கும் திறன் கொண்டிருந்ததால் 'ஃபாஸ்ட் ஃபிங்கர் ராமநாதன்' என்று அழைக்கப்பட்டார்.
நாடக இசை
சுந்தர பாகவதர் ஹரிகதை சொல்பவராக மட்டுமல்லாமல் சிறந்த நடிகராகவும், நாடக ஆசிரியராகவும் விளங்கினார். அவர் மூலம் பல நாடகங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு ஜி.ராமநாதனுக்குக் கிட்டியது. வி.ஏ. செல்லப்பாவின் நாடகக் குழுவான 'பாரத கான சபா'வில் சேர்ந்து, பின்னணிப் பாடகராகவும் ஹார்மோனியம் வாசிப்பவராகவும் பணியாற்றினார். பவளக் கொடி, அல்லி அரசாணி மாலை, வள்ளி திருமணம் போன்ற பல நாடகங்களுக்குப் பின்னணி இசையமைப்பாளராகப் பணிபுரிந்தார்.
நாடகங்களில் பாடி நடித்துக் கொண்டிருந்த எம்.கே. தியாகராஜ பாகவதரின் நட்புக் கிடைத்தது. இருவரும் இணைந்து பல நாடகங்களில் பணியாற்றினர். பாகவதர் பாட, அவருடன் ராமநாதனும் இணைந்து பாடினார். அற்புதமான பல கர்நாடக ராகங்களின் கூட்டுக் கலவையாக இருந்த அப்பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.
திரையிசை
பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய 'காலவ ரிஷி' என்ற நாடகம் 1932-ல் திரைப்படமாக எடுக்கப்பட்டது. அதற்குப் பின்னணி அமைக்கும் இசைக் குழுவில் ராமநாதன் இடம்பெற்றார். அதுதான் அவரது முதல் திரையுலக வாய்ப்பு. ராமநாதனின் சகோதரர் சுந்தர பாகவதர் கதாநாயகனாக நடித்த 'விப்ரநாராயணா' படத்தின் இசைக் குழுவிலும் ராமநாதன் இடம் பெற்றார். தொடர்ந்து பல படங்களின் பின்னணி இசைக் குழுவில் இசைக் கலைஞராகப் பணிபுரிந்தார். மூத்த இசையமைப்பாளரும் பாடலாசிரியருமான பாபநாசம் சிவனுக்கு உதவியாளராகப் பணியாற்றினார். பல திரைப்படங்களுக்கு, பாபநாசம் சிவன் மெட்டமைக்க, ஜி. ராமநாதன் இசையமைத்தார். மாடர்ன் தியேட்டர்ஸின் இசையமைப்பாளராகப் பணியாற்றினார். மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் அழைப்பை ஏற்று திருச்சியிலிருந்து சேலத்திற்குக் குடிபெயர்ந்து வாழ்ந்தார்.
எம்.கே. தியாகராஜ பாகவதர் நடித்து 1936-ம் ஆண்டில் வெளியான 'சத்திய சீலன்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக ஜி. ராமநாதன் அறிமுகமானார். அதே ஆண்டில் ஏஞ்சல் பிலிம்ஸ் வெளியிட்ட 'பரசுராமர்' என்ற படமும், சி.வி.ராமன் தயாரிப்பு இயக்கத்தில் வெளியான 'ஹரிஹர மாயா' என்ற படமும் வெளியானது. தொடர்ந்து சி.வி. ராமனின் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு ஜி.ராமநாதனுக்குக் கிட்டியது. பி.யூ. சின்னப்பா நடித்து மாடர்ன் தியேட்டர்ஸின் தயாரிப்பில் வெளியான 'உத்தம புத்திரன்' திரைப்படம், ஜி. ராமநாதன் புகழ்பெறக் காரணமானது. தமிழின் முதல் இரட்டை வேடப் படத்திற்கு இசையமைத்தவர் என்ற சிறப்பும் அவருக்குக் கிடைத்தது. பின்னர் பட வாய்ப்புகள் அதிகரிக்கவே சென்னைக்குக் குடிபெயர்ந்தார்.
ராமநாதனின் இசை வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்திய படமாக 'சிவகவி' அமைந்தது. கிருபானந்த வாரியாரின் திரைக்கதையில் உருவான அப்படம், எம்.கே.தியாகராஜ பாகவதருக்கும் நல்ல புகழைப் பெற்றுத் தந்தது. உறுத்தாத பின்னணி இசை மூலமும், சிவனின் அழகான பாடல்களுக்கு தனது இசையமைப்பின் மூலமும் உயிர் கொடுத்திருந்தார் ஜி.ராமநாதன். தொடர்ந்து ஜி.ராமநாதன், பாபநாசம் சிவன், எம்.கே. தியாகராஜ பாகவதர் இணைந்த கூட்டணி பல வெற்றிப் படங்களைத் தந்தது. சங்கீத மும்மூர்த்திகள் போல் இவர்கள் 1950-களில் திரையிசை மும்மூர்த்திகளாகக் கருதப்பட்டனர். அக்காலத்தின் புகழ் பெற்ற இசையமைப்பாளர்களான எஸ்.வி. வெங்கட்ராமன், சி.ஆர். சுப்பராமன் இருவராலும் 'சங்கீத மேதை' என்று போற்றப்படக் கூடிய அளவிற்கு திறமை படைத்தவராக ஜி. ராமநாதன் விளங்கினார். பற்பல புதுமைகளைத் தனது பாடல்களில் புகுத்தினார். 'ஹரிதாஸ்' திரைப்படம் இரண்டு வருடங்களுக்கும் மேல் தொடர்ந்து ஓடியது. அதற்கு எம்.கே.டி., பாபநாசம் சிவன், ஜி.ராமநாதன் என்ற வலுவான கூட்டணியும், நல்ல பாடல்களும், இசையும் காரணமாக அமைந்தன.
சின்னப்பா, எம்.கே.டி படங்களைத் தொடர்ந்து அடுத்த தலைமுறை நடிகர்களான எம்.ஜி. ராமச்சந்திரன், சிவாஜி கணேசன் ஆகியோரது படங்களுக்கும் இசையமைத்து அவர்களைப் பிரபலப்படுத்தினார் ஜி.ராமநாதன். கர்நாடக இசை மட்டுமில்லாமல் நாட்டுப்புற இசையிலும் மேற்கத்திய இசையிலும் கவனம் செலுத்தினார். 'மதுரை வீரன்' திரைப்படத்தில் இடம் பெற்ற 'வாங்க மச்சான் வாங்க' மற்றும் 'தூக்கு தூக்கி'ப் படப் பாடலான ' ஏறாத மலைதனிலே - தாம் திமி திமி தங்க கோனாரே' போன்ற பாடல்கள் அக்காலத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றன. 'தூக்கு தூக்கி' படத்தின் மூலம் முதன் முதலில் சிவாஜி கணேசனுக்கு டி.எம். சௌந்தரராஜனைப் பின்னணி பாடவைத்தார். அது முதல் தொடர்ந்து சிவாஜியின் ஆஸ்தான பின்னணிப் பாடகராக டி.எம்.எஸ். செயல்பட்டார்.
சிவாஜி நடித்த 'உத்தம புத்திரன்' படத்தில் இடம் பெற்ற பிரபல பாடலான 'யாரடி நீ மோகினி' ராக்-அண்ட் ரோல் இசையில் அமைக்கப் பெற்று ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. பாரதியார் பாடல்களைப் பட்டி - தொட்டியெங்கும் பரப்பியதிலும் ஜி.ராமநாதனுக்கும் முக்கியப் பங்குண்டு. குறிப்பாக 'கப்பலோட்டிய தமிழன்' படத்தில் பாரதி பாடல்களுக்கு அவர் மெட்டமைத்திருந்த விதம் அக்காலத்தில் அனைவராலும் பாராட்டப் பெற்றது.
கர்நாடக ராகங்களைத் தனது படத்தில் புகுத்தியது மட்டுமல்லாமல் மேலும் பல புதுமைகளையும் தனது பாடல்களில் செய்திருக்கிறார் ஜி.ராமநாதன். சோகத்திற்குரிய ராகமான முகாரியில் அவர் போட்ட காதல் டூயட்தான் 'வாடா மலரே தமிழ்த் தேனே..' (அம்பிகாபதி-1957). 'அன்பே.. இன்பம்... எங்கே.. இங்கே..' என்று கேள்வி-பதிலாக டூயட் பாடலை முதன் முதலில் அளித்தவரும் ஜி.ராமநாதன் தான். புன்னாகவராளி, கானடா, ராகமாலிகா, சிந்துபைரவி போன்ற ராகங்களில் அவர் பல பாடல்களை இயற்றினார்.
இசையமைப்போடு மட்டும் நின்று விடாமல் தானும் சில பாடல்களைப் பாடினார். கே.வி. மகாதேவன் இசையில் 'அல்லி பெற்ற பிள்ளை' படத்திற்காக 'எஜமான் பெற்ற செல்வமே' என்று குதிரை பாடுவது போன்ற பாடலுக்கு ஜி. ராமநாதன் பின்னணி பாடியுள்ளார். தமிழ் மற்றும் பிறமொழிப் படங்கள் என சுமார் 80-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஜி. ராமநாதன் இசையமைத்தார்.
பாடகர்கள்
ஜி. ராமநாதனின் இசையமைப்பில், கீழ்காணும் பாடகர்கள் பின்னணி பாடிப் புகழ்பெற்றனர்.
- எம்.கே. தியாகராஜ பாகவதர்
- பி.யூ. சின்னப்பா
- வி.என். சுந்தரம்
- ஜி. கிருஷ்ணவேணி
- திருச்சி லோகநாதன்
- டி.எம். சௌந்தரராஜன்
- சீர்காழி கோவிந்தராஜன்
- பி.பி. ஸ்ரீனிவாஸ்
- பி.லீலா
- பி. சுசீலா
- எஸ். வரலட்சுமி
- பி. பானுமதி
பாடல்கள்
ஜி. ராமநாதனின் இசையமைப்பில் வெளியான கீழ்காணும் பாடல்கள் அவருக்குப் பெரும் புகழ் சேர்த்தன.
- சொப்பன வாழ்வில் மகிழ்ந்து...
- வதனமே சந்திர பிம்பமோ...
- மன்மத லீலையை வென்றார் உண்டோ...
- அன்னையும் தந்தையும் தானே...
- வடிவேலும் மயிலும் துணை...
- வாராய் நீ வாராய்...
- சின்னப் பயலே சின்னப் பயலே...
- சுந்தரி சௌந்தரி நிரந்தரியே...
- மாசிலா நிலவே நம்...
- என்ன செய்தாய் அப்பா...
- நமக்கினி பயமேது...
- நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே...
- வா கலாப மயிலே...
- சிந்தனை செய் மனமே...
- வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்...
- நான் பெற்ற செல்வம்...
- நாடகமெல்லாம் கண்டேன் உனது ஆடும் விழியிலே
- கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே...
- யாரடி நீ மோகினி...
- காத்திருப்பான் கமலக்கண்ணன்...
- உன்னழகைக் கன்னியர்கள்...
- முல்லைமலர் மேலே மொய்க்கும் வண்டு போலே...
- அன்பே அமுதே அருங்கனியே...
- மண்ணுலகெல்லாம் பொன்னுலகாக மாறிடும் வேளை...
- வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும்...
- வனமேவும் ராஜகுமாரா...
- இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே....
- வெள்ளிப்பனி மலையின் மீதுலாவுவோம்...
- காற்றுவெளியிடைக் கண்ணம்மா...
- என்று தணியும் இந்த சுதந்திர தாகம்...
- கண்ணன் மனநிலையை தங்கமே தங்கம்...
- ஒரு மடமாதும் ஒருவனுமாகி...
- உலவும் தென்றல் காற்றினிலே...
- வாங்க மச்சான் வாங்க...
- ஏறாத மலைதனிலே...
- ஓடி விளையாடு பாப்பா...
- வாடா மலரே தமிழ்த் தேனே...
- நிலவோ அவள் இருளோ...
- ஆடவேண்டும் மயிலே...
- நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை...
திரைப்படங்கள்
ஜி. ராமநாதன் தனியாகவும், சமயங்களில் பிற இசையமைப்பாளர்களுடன் இணைந்தும் பல படங்களுக்கு இசை அமைத்தார். ஜி. ராமநாதன் இசையமைத்த படங்களில் சில...
- காலவ ரிஷி
- ஹரிஹர மாயா
- பரசுராமர்
- சத்தியசீலன்
- உத்தமபுத்திரன் (பி.யூ. சின்னப்பா)
- தூக்குத்தூக்கி
- உத்தமபுத்திரன் (சிவாஜி கணேசன்)
- அம்பிகாபதி
- ஆரியமாலா
- தேவகி
- போஜன்
- சிவகவி
- விப்ர நாராயணா
- கிருஷ்ண பிடாரன்
- லக்ஷ்மி விஜயம்
- ஸ்ரீ ஆண்டாள்
- ஆனந்தன் அல்லது அக்னி புராண மஹிமை
- பிருதிவிராஜன்
- ஏகம்பவாணன்
- ஜகதலப் பிரதாபன்
- ஸ்ரீ வள்ளி
- ஆரவல்லி சூரவல்லி
- கடகம்
- குண்டலகேசி
- இன்பவல்லி
- ரத்னகுமார்
- பாரிஜாதம்
- மாயாவதி
- ஹரிதாஸ்
- ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி
- சுதர்சன்
- ஜமீந்தார்
- அமரகவி
- சக்கரவர்த்தி திருமகள்
- பொன்முடி
- டாக்டர் சாவித்திரி
- மகேஸ்வரி
- நல்ல தங்கை
- சதாரம்
- அமரதீபம்
- வணங்காமுடி
- கற்புக்கரசி
- கோகிலவாணி
- காத்தவராயன்
- மந்திரிகுமாரி
- மதுரை வீரன்
- சாரங்கதாரா
- வீரபாண்டிய கட்டபொம்மன்
- கப்பலோட்டிய தமிழன்
- புதுயுகம்
- ராஜா தேசிங்கு
- சவுக்கடி சந்திரகாந்தா
- அரசிளங்குமரி
- கடவுளின் குழந்தை
- பட்டினத்தார்
- தெய்வத்தின் தெய்வம்
- சதாரம்
- நான் பெற்ற செல்வம்
நடிப்பு
ஜி. ராமநாதன் சில திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார். 'ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி' படத்தில் சாமியாராக நடித்தார்.
தயாரிப்பு
ஜி. ராமநாதன், திரைப்படத் தயாரிப்பாளராகவும் செயல்பட்டார். 'புதுயுகம்' என்ற படத்தைத் தயாரித்தார். அப்படம் தோல்வி அடைந்தது. 'பட்டினத்தார்' படத்தைத் தயாரித்ததுடன், அதில் பிரபல பின்னணிப் பாடகர் டி.எம். சௌந்தரராஜனை கதாநாயகனாக்கினார். அதில் வரும் பட்டினத்தாரின் 'உடற்கூறு வண்ணத்திற்கு' ராமநாதன் இசையமைத்திருக்கும் விதமும், டி.எம்.எஸ். பாடலைப் பாடிய விதமும் அனைவராலும் பாரட்டப்பட்டது. தொடர்ந்து 'தெய்வத்தின் தெய்வம்' என்ற படத்தையும் தயாரித்தார்.
விருது
- கெய்ரோ ஆப்பிரிக்க ஆசிய திரைப்பட விழாவில் அளிக்கப்பட்ட சிறந்த இசையமைப்பாளருக்கான விருது
- இசைமேதை, சங்கீதச் சக்கரவர்த்தி என இசை ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.
மறைவு
டி.எம். சௌந்திரராஜன் நடித்த அருணகிரிநாதர் திரைப்படத்திற்காக 'நிலவோ அவள் இருளோ', 'அம்மா தெய்வம் ஆனதுமே', 'ஆடவேண்டும் மயிலே' ஆகிய மூன்று பாடல்களுக்கு இசை அமைத்திருந்த நிலையில், கல்லீரல் பாதிப்பால் நோய்வாய்ப்பட்ட ஜி. ராமநாதன், நவம்பர் 20, 1963 அன்று காலமானார். (அருணகிரிநாதர் திரைப்படத்திற்கு ஜி. ராமநாதனின் மறைவுக்குப் பின் டி.ஆர். பாப்பா இசையமைத்து நிறைவு செய்தார்)
மதிப்பீடு
மேற்கத்திய மோகமும் இந்திப்படப் பாடல் மோகமும் அதிகரித்து வந்த காலத்தில், தமிழின் பாரம்பரிய இசையின் வலிமையை மீட்டுத் தந்தவராக ஜி.ராமநாதன் அறியப்படுகிறார். இசை என்பது படித்தவர்களுக்கு மட்டுமல்ல; பாமரர்களின் உள்ளத்தையும் ஒன்றச் செய்யக் கூடியது என்பதை ஜி.ராமநாதன் தனது பல நாட்டுப்புறப் பாடல் மெட்டுக்களால் அறியச் செய்தார். இசைக்காகவே படங்களை ஓட வைக்க முடியும் என்பதைப் பல வெற்றிப் படங்களின் மூலம் நிரூபித்தார். கர்நாடக இசையை வெகுஜன மக்களிடம் கொண்டு சேர்த்தவர்களில் முதன்மையானவராக அறியப்படுகிறார்.
கண்ணதாசன், ஜி.ராமநாதன் இசையைப் பற்றிக் கூறும் போது, "அவர் மிகுந்த தொழில் பக்தி உள்ளவர். தேர்ந்த இசை ஞானம் மிக்கவர். கர்நாடக சங்கீதப் பாடல்களுக்கு இசையமைக்க வெறும் பத்து நிமிடமே அவருக்குப் போதும். அதில் அபார ஞானம் அவருக்கு உண்டு. என்னுடைய ஆரம்ப நிலையிலும் என்னை மதித்தவர். கர்நாடக சங்கீத மெட்டில் நான் முதன் முதலில் எழுதிய 'கேட்பதெல்லாம் காதல் கீதங்களே...' (இல்லறஜோதி) என்ற பாடலுக்கு இசை ஜி.ராமநாதன் தான். நடக்கும் போது படுக்கும் போது ஏதாவது பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருப்பார். அவர் இசை என்றால் பாபநாசம் சிவனும், பாகவதரும் உடனடியாக படங்களுக்கு ஒப்புக் கொள்வார்கள்" என்று குறிப்பிட்டார்.
உசாத்துணை
- வாமனன் வலைத்தளக் கட்டுரை
- தென்றல் இதழ் கட்டுரை
- சிமுலேஷன் படைப்புகள்
- அந்திமழை இதழ் கட்டுரை
- ஜி. ராமநாதன் பாடல்கள், யூ ட்யூப் தளம்
- ஜி. ராமநாதன் திரைப்படப் பாடல்கள், யூ ட்யூப் தளம்
- சங்கீத சக்ரவர்த்தி ஜி. ராமநாதன், வாமனன், மணிவாசகர் பதிப்பகம், பதிப்பு: 2006
- தமிழ்த் திரையிசை ஆளுமைகள் 1931-2000, முனைவர் ஞா. கற்பகம், வெளியீடு: கற்பக வித்யா பதிப்பகம், சென்னை, முதல் பதிப்பு: ஜனவரி 2020.
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Aug-2026, 21:17:36 IST