திருவாரூர் தேர்: Difference between revisions
Logamadevi (talk | contribs) No edit summary |
(Corrected typo errors; ; Added info on Finalised date) |
||
| Line 320: | Line 320: | ||
*[https://www.youtube.com/watch?v=OvTXLKs8x5k Thiruvarur Ther Thiruvizha 2025 | Thiruvarur Therottam Live | திருவாரூர் ஆழித்தேரோட்டம் 2025, யூடியூப்.காம்] | *[https://www.youtube.com/watch?v=OvTXLKs8x5k Thiruvarur Ther Thiruvizha 2025 | Thiruvarur Therottam Live | திருவாரூர் ஆழித்தேரோட்டம் 2025, யூடியூப்.காம்] | ||
==அடிக்குறிப்புகள்== | == அடிக்குறிப்புகள் == | ||
<references /> | <references /> | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|22-Feb-2026, 06:02:14 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Latest revision as of 03:44, 23 February 2026
திருவாரூர் தியாகராஜர் கோவில் தேர் தமிழகத்திலுள்ள தேர்களில் பெரியது. இத்தேர் ஆழித்தேர் என்றழைக்கப்படுகிறது. திருவாரூர் கோவில் ஆழித்தேர் திருவிழாவில் வீதிவிடங்கரான தியாகராஜர் திருவீதிகளில் எழுந்தருளும் விழா சிறப்புமிக்கது. திருவாரூர் தேரின் அழகும் தனித்துச் சொல்லப்படுவது.
ஆழித்தேர் திருவிழா
திருவாரூர் தேர் திருவிழா பங்குனி உத்திர நாளில் பங்குனி ரதோஸ்தவ விழாவாக நடைபெறுகிறது. ஹஸ்த நட்சத்திரத்தில் துவஜாரோஹணம் (கொடியேற்றம்) செய்து, பூசத்தில் தேருக்குச் சென்று, ஆயில்யத்தில் தேரோட்டம் தொடங்கி, உத்திரத்தில் தீர்த்தம் அருளி, உத்திராடத்தில் விழாவைப் பூர்த்தி செய்வது மரபு என மொத்தம் முப்பத்தியாறு நாள் விழா எடுக்கப்படுகிறது. இது தவிர விழா தொடங்குவதற்கு முன் பூர்வாங்கம் ஒரு நாளும், ஐயனார் திருவிழா ஐந்து நாளும், பூர்வாங்கம் ஒரு நாளும், பிடாரி திருவிழா பத்து நாளும், பூர்வாங்கம் இரண்டு நாளும், கொண்டாடி மொத்தம் ஐம்பது நாட்கள் ரதோஸ்தவம் நடத்துகின்றனர்.
ஆரூர் தேர் திருவிழாவை அப்பர் முன்னின்று நடத்துவதாக நம்பப்படுகிறது. திருஞானசம்பந்தர் தைப்பூசத் திருவிழாவை நிகழ்த்தியதாகவும், பங்குனி ரத நாளுக்கு பந்தக்கால் நட்டு தலயாத்திரை மேற்கொண்டதாகவும், பின்னர் அப்பர் வந்து கொடியேற்றி பங்குனித் திருநாள் எடுத்ததாகவும் தலமரபு. இதன் காரணமாக திருவாரூரில் தைப்பூசத் திருவிழா சம்பந்தர் விழாவென்றும், பங்குனித் தேர் திருவிழா அப்பர் விழாவென்றும் அழைக்கப்படுகிறது.
தைப்பூசம்
தைப்பூச திருவிழா ரதோஸ்தவத்திற்கு முன்னோடியாக நிகழ்த்தப்படுகிறது. இதில் சம்பந்தர் திருமேனி எழுந்தருளப்பெற்று, விக்னேஸ்வரர் ஸ்தம்பத்தை சண்டிகேசர் சன்னதியிலும், பிரபஸ்தம்பத்தை ஆயிரங்கால் மண்டபத்திலும், ரதஸ்தம்பத்தை தேரடியிலும் நாட்டுகின்றனர்.
கொடியேற்றம்
கொடியேற்றத்திற்கு முதல் நாள் அப்பர் திருமேனி உலா வரும்போது தியாகராஜர் முன் அப்பருக்குத் திருவோடு அளிக்கப்படும். இந்நிகழ்வு ரதோஸ்தவத்திற்காக அப்பர் ஆரூருக்கு எழுந்தருளும் சடங்காக நடக்கிறது. இதற்கு மறுநாள் கொடியேற்றம் நிகழும். ரிஷப உருவம், மங்கலச் சின்னங்கள், திரிசூலம் வரைந்து கொடியை வழிபாட்டிற்குப் பின் கொடிமரத்தில் ஏற்றுவர்.
ஶ்ரீமுகம்
கொடியேற்றத்திற்கு முன்பாக தமிழ் அண்டாரம், பெரிய பிள்ளை என்ற கோவில் கணக்கர், கோவில் சிப்பந்திகள், தியாகராஜருக்கு வழிபாடு நிகழ்த்தும் நயினார் ஆகியோர் தியாகராஜருக்கு முன் சென்று ஶ்ரீமுகம் வாசிப்பர். இதனை இறைவனின் திருமுகமாகக் கருதி நயினாரோடு, கோவில் பெரிய கணக்கர் வாசிப்பார்.
யக்ஞகத்ரய நிர்மான த்ரான நிர்வான காரணம்
ததிதம் சாசனம் சம்போக பூர்வாரூர் வாசினஹ
நம்மனுக்கு வந்தொண்டரான ஆலால சுந்தரர்க்கும்
நமக்கும் ஶ்ரீ விபவ நாம்சம்வத்சரம் மாசி மாதம்
பன்னிரெண்டாம் தேதி மகத் துவஜாரோஹணம்
செய்து பங்குனி மாதம் ஐந்தாம் தேதி அடிய முடிய
நெடிய திருவீதியில் திரு ஆழித் திருத்தேரில்
திருஉலா செய்து அருளுகிற படியால் ஸ்தானம்
மகேஸ்வர பரிச்சின்னங்களை கூட்டிக் கொண்டு வரவும்
தாமும் வரவும் சுபமஸ்து
இதன் பின் இறைவனின் திருமுகம் படி கோவில் பொறுப்பாளரான சண்டிகேசர் விழா பற்றி உலக மக்களுக்கும், தேவர்களுக்கும் அழைப்பு விடுக்க வேண்டும். இதற்காக சண்டிகேசர் திருமுகம் ஒன்றும் வாசிக்கப்படும். இதனை கோவில் பெரிய கணக்கர் சண்டிகேசர் சன்னதி முன் வாசிப்பார். இதன் பின் தமிழ் பண்டாரம் அந்த திருமுகத்தை எடுத்துச் சென்று பிற கோவில் இறைவன் முன்பு வாசிப்பார். மேலே சொன்ன ஸ்லோகம் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலக் கல்வெட்டு ஒன்றில் காணப்படுகிறது.
சண்டிகேசர் சுபமஸ்து
ஶ்ரீ தியாகராஜா சிவாக்ஞையாலே பரிபாலனம்
ஆதி சண்டிகேஸ்வரர் அரன் அருளால் இப்பூதலத்தில்
தேவாலயங்களில் உள்ள தேவர்கள் வரவும், தாமும் வரவும்
ஶ்ரீவிபவ நாம சம்வத்சரம் மாசி மாதம் 12-ம் தேதி
பெருமாள் தியாகராஜருக்கு மகத்துவஜாரோஹணம் பண்ணி
பங்குனிமாதம் ஐந்தாம் தெதி அடிய முடிய நெடிய திருவீதியில்
திரு ஆழித்தேரில் திருஉலாச் செய்து அருளுகிறபடியால் ஸ்தான
மாகேஸ்வர பரிச்சின்னங்களை கூட்டிக் கொண்டு
வரவும் - தாமும் வரவும் சுபமஸ்து
தமிழகத்தில் ஆழித்தேர் திருவிழாவுக்கு மட்டும் பூவுலகில் மட்டுமன்றி தேவர்கள், முனிவர்கள், திருமால், நான்முகன், பிற தெய்வங்கள் பார்க்க வருவதாக ஐதீகம். எனவே தியாகராஜப் பெருமான் மண்டபத்தில் அன்னப் பாவாடை விரிக்கப்படும். தியாகேசருக்கு திருவமுது படைத்த பின், தரையில் விரிக்கப்பட்டுள்ள தென்னங் கமுதுகளின் மேல் விரிக்கப்பெற்றுள்ள வாழை இலைகளில் பரப்பி அதற்கு வழிபாடு நடைபெறும். இப்பாவாடை அமுது விழாவிற்கு வந்துள்ள தேவர்களுக்கும், கணங்களுக்குமானது. இப்பணியை அம்மையப்பன் என்னும் ஊரைச் சேர்ந்த, அறவுளம் கொண்ட தியாகராஜனின் அடியவர் நிகழ்த்துவார்.
யாகசாலை
அழைப்பு முறையாக நிகழ்ந்தபின் யாகசாலை பூஜைகள் தொடர்ந்து நடைபெறும். முதல் நாள் கணப்தி பூஜையும், வாஸ்து சாந்தியும் நிகழும். மறுநாள் மிருத்சங்கிரஹணமும், அங்குரார்ப்பணமும் நிகழ்ந்து, அதற்கு மறுநாள் துவஜாரோகணம் நிகழும். கொடியேற்றத்திற்கு பின் ஏழு நாள் விநாயகர் திருநாளும், சுப்ரமணியர் திருநாளும் இணைந்து நிகழும்.
பக்தோற்சவம்
விநாயகர் திருநாளுக்குப் பின் மூவர் முதலியர் திருநாள் நிகழும். இது பக்தர்களின் திருநாளாக அனுஷ்டிக்கப்படுவதால் பக்தோற்சவம் என்றழைப்பர். இந்நிகழ்ச்சி மூன்று நாள் நடைபெறும். இதில் அதிகாரநந்தி, சண்டிகேசர், அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் திருமேனி திருவுலா நிகழும்.
சந்திரசேகரர் பட்டோற்சவம்
பக்தோற்சவம் நிகழ்ந்த பின் ஒரு நாள் காலபைரவர் விழா நிகழும். அதன் மறுநாள் காட்சி கொடுத்த நயினார் விழா நிகழும். மூன்றாம் நாள் சந்திரசேகரர் பட்டம் ஏற்கும் திருவிழா நடைபெறும். தியாகராஜர் ஆரூரில் அரசனாக இருப்பதால் அவர் சிம்மாசனம் இன்றி எங்கும் எழுந்தருள மாட்டார். எனவே தியாகேசருக்கு பதிலாக வீதியில் சந்திரசேகரரே உலா வருவார். இந்நிகழ்வு சந்திரசேகரர் பட்டோற்சவம் என்றழைக்கப்படுகிறது.
சந்திரசேகரர் பட்டம் கட்டிக்கொண்டு வீதியில் உலா வரும் நிகழ்வை முசுகுந்தன் திருவிழா என்றழைக்கும் குறிப்பு ஆரூர் ஓவியங்களில் உள்ளது. விழாவை அரசன் முசுகுந்தன் முன்னின்று நடத்துவதாக ஐதீகம். இவ்விழாவில் அஸ்திரதேவருக்கும் முக்கிய இடமுண்டு. அவருக்கும் சிறப்பு வழிபாடுகள் நிகழும். சந்திரசேகரர் பட்டம் ஏற்று திக்வலம் வரும்போது திக்பிரயோக மந்திரங்கள் சொல்லி திக்பலியும் வழங்குவர். ஈசான மூலையில் முட்டுக்காரர் சுத்தமத்தளத்தை தலையில் ஏந்திக் கொண்டு பூத நிருத்தம்[1] வாசிப்பர். இவ்விசை வாசிக்கும் போது விண்ணில் பூதகணங்கள் நிருத்தம் ஆடி மகிழும் என்பது நம்பிக்கை. இதன் பின் சந்திரசேகரர் வீதியில் உலா வருவார்.
கேடக உற்சவம்
இதற்கு மறுநாள் சந்திரசேகரரின் கேடக உற்சவம் நிகழும். அதற்கு மறுநாள் வன்மீகநாதருக்கு ஆயிரம் கலசங்களால் செய்யப்பெறும் திருமஞ்சன விழா நிகழும்.
வசந்த உற்சவம்
இவை அனைத்தும் முடிந்தபின் தியாகராஜரின் வசந்த உற்சவம் தொடங்கும். முதல் நாள் எட்டு திசையிலும் துவஜாரோகணம் நிகழும். தியாகராஜப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நிகழ்ந்த பின் எட்டுக் கொடிகளும் ஏற்றப்படும். மறுநாள் இந்திர விமான உற்சவம். அன்று சந்திரசேகரர் விமான உற்சவத்தில் ஏறி உலா வருவார். பின் பூதவாகன உற்சவம் ஒருநாளும், வெள்ளியானை உற்சவம் ஒருநாளும், வெள்ளி ரிஷப வாகன உற்சவம் ஒருநாளும் நடைபெறும்.
ஆழித்தேர் திருவிழா
மறுநாள் ஆயில்ய நட்சத்திரத்தில் தியாகராஜர் தேருக்கு எழுந்தருளி மகாரதாரோகணம் நடைபெறும். இந்நாள் விழாவையே ஆழித்தேர் திருவிழா என்றழைக்கின்றனர். நான்கு ரத வீதிகளிலும் உலா போகும் ஈசனுக்கு மறுநாள் பிராயசித்தாபிஷேகம் நிகழும். அன்று பங்குனி உத்திரம் என்பதால் சந்திரசேகரர் தீர்த்தமும் வழங்குவார். இரவு மகா அபிஷேகம் நிகழும். மறுநாள் பதஞ்சலி முனிவருக்கும், வியாக்ரபாதருக்கும் தியாகேசர் பாத தரிசனம் காட்டுவார். இது ஆரூரில் முக்கிய நிகழ்வு. உத்திராட நாளில் விழா நிறைவுறும்.
வரலாற்றுக் குறிப்புகள்
- திருவாரூர் கோவில் தேவாசிரியன் மண்டபத்தில் பொ.யு. 1700-ல் விதானத்தில் வரையப்பெற்ற ஓவியத் தொகுப்பில் பங்குனி திருநாள் காட்சிகள் துவஜாரோகணம் என்னும் கொடியேற்றத்துடன் தொடங்கி அனைத்து நிகழ்வுகளும் தமிழில் எழுதப்பட்ட காட்சி விளக்கங்களுடன் உள்ளன.
- தஞ்சாவூர் சரஸ்வதி மஹாலில் கிடைக்கும் ஆவணங்களில் பொ.யு.1843 ஆண்டைச் சேர்ந்த மோடி ஆவணம், பங்குனி ரதோஸ்தவ விழா மாசி 8-ம் தேதி தொடங்கி சித்திரை 2-ம் தேதி வரை மொத்தம் ஐம்பது நாட்கள் நிகழ்ந்ததாகக் குறிப்பு உள்ளது.
- ஆரூர் கல்வெட்டில் பங்குனி திருநாள் பற்றிய குறிப்புகள் உள்ளன. இரண்டாம் பிரகாரம் மேற்கு பகுதியிலுள்ள இரண்டாம் குலோத்துங்கனின் ஏழாம் ஆட்சி ஆண்டு கல்வெட்டு (பொ.யு. 1140) "திருப்பங்குனி உத்திரத் திருநாளைக்கு திருக்கொடி ஏற்றுக்குத் திருமுளை சார்ந்த எழுந்தருளும் திருநாள் ஒன்றும், திருநாளில் எழுந்தருளும் திருநாள் பத்தும்" என்றுள்ளன.
- ஆவணங்களில் கிடைக்கும் தேர் திருவிழா பற்றிய பழமையான குறிப்பு பொ.யு. 1748-ம் ஆண்டைச் சேர்ந்தது. இது பற்றிய குறிப்பு தஞ்சை சரஸ்வதி மஹாலில் உள்ள மோடி ஆவணங்களில் உள்ளது.
விழா நாட்கள்
ஆரூர் தேர் திருவிழா பங்குனி உத்திர நாளிலும், மார்கழி ஆதிரை நாளிலும் நடைபெறுகிறது. இதனை அப்பர்,
ஆரூர் அகத்து அடக்கிப் பார் ஊ பரப்பத் தம் பங்குனி உத்தரம் பார் படுத்தான்
என்றும்,
இந்திரன் ஆதிவானவர், சித்தர் எடுத்து ஏத்தும் அந்திரன் ஆரூர் ஆதிரைநாளால் அது வண்ணம்!
என்றும் பாடுகிறார்.
தேர் அமைப்பு
திருவாரூர் தேரின் சக்கரம் ஒவ்வொன்றும் 24.5 அடி நீளமும், 2 அடி அகலமும், .5 அடி உயரமும் கொண்டது. இரண்டு இரும்பு அச்சுகளில் 9 அடி விட்டமுள்ள 1.5 அடி அகலமுள்ள நான்கு சக்கரங்களின் மேல் தேர் அமைந்துள்ளது. தேரின் மரப்பகுதி நான்கு அடுக்குகளைக் கொண்டுள்ளது. கீழ்ப்பகுதி 20 அடி உயரம் உடையது. இரண்டாவது பகுதி 4 அடி உயரம் கொண்டது. மூன்றாவது பகுதி 3 அடி உயரம் உள்ளது. மேடை நான்காம் பகுதி. மேடையின் மேல் தியாகராஜர் ஏறி வலம் வருவார். பொ.யு. 2015 தேர் திருப்பணி நிகழ்ந்த போது இது ஏழு அடுக்காக மாற்றப்பட்டது. தியாகேசர் அமர்விடம் 7.45 அடி பக்கங்களைக் கொண்ட சதுர வடிவம், உயரம் 2.5 அடி, கீழே உள்ள மூன்று நிலைகளில் தேர் கட்டுமானத்திற்கான கால்கள் நடப்படும். மேலிருந்து பார்த்தால் முதல் நிலை எண்கோண வடிவாகவும், இரண்டாவது நிலை தேரின் மேல்புற அலங்காரத்தின் குறுக்கு வெட்டுத்தோற்றமாகவும் (20 பட்டைகளாகக் காணப்படும்), மூன்றாம் நிலை கமல வடிவாக காணப்படும்.
இதில் கீழ்நிலையில் ஒவ்வொரு மூலைக்கும் ஒன்பது கால்கள் வீதம் 36 கால்கள் பொருத்தப்படுகின்றன. இதற்கான துவாரங்கள் தேரில் இருக்கும். துவாரத்தின் உள் தேரின் உள்பக்கமாக மூன்று கனமான இரும்பு வளையங்கள் உள்ளன. இவற்றில் பனங்கால்களின் முனைகள் சேர்க்கப்படும். இந்த நிலையில் உள்ள பனங்கால்கள் 18.25 அடி உயரம் உடையவை. இதற்கு அடுத்த நிலையில் மூலைக்கு ஐந்து விதம் 20 கால்கள் சேர்க்கப்படும். இதன் கால்களின் உயரம் 14.25 அடி. கமல பகுதியில் நான்கு கால்கள் சேர்க்கப்படும். இதன் உயரம் 11.25 அடி. மொத்தமாக சேர்க்கப்படும் 60 கால்கள் ஒரே மட்டமாக அமையும். மேற்பக்கம் இந்த கால்களில் கூர் வாங்கப்படும். கூர்கள் சட்டக்கோர்வை எனப்படும் துளைபோடப்பட்ட பனைமரம் அல்லது தென்னை மரங்களால் இணைக்கப்படும். இந்த சட்டக்கோர்வை 10 துளைக் கோர்வை, 8 துளைக் கோர்வை, 6 துளைக் கோர்வை, 4 துளைக் கோர்வை, 2 துளைக் கோர்வை என அந்தந்த அளவுக்கு ஏற்றவாறு 10 அடி நீளத்திலிருந்து 32 அடி நீளம் வரை பொருத்தப்படும்.
இந்த 60 பனங்கால்களின் மேல் தேரின் மேற்புறம் உள்ள அலங்காரங்கள் அனைத்தும் நிற்கும். இரும்பு வளையங்களில் உள்ள 60 கால்கள் தான் மேற்கண்ட பாரம் அனைத்தையும் சுமக்க வேண்டும். இதற்காக 24 சவுக்கை மரங்கள், 60 அடி உயரமும், 2 அடி சுற்றளவும் கொண்டவை நான்கு மூலைகளிலும் மூலைக்கு 6 வீதம் தேரின் உச்சியிலிருந்து கீழ்மரநிலை வரை கட்டப்படுகின்றன.
இவ்வாறு முதல் நிலை பனங்கால்கள் அமைக்கப்பட்ட பின் மீதி மூன்று நிலைகளில் பனங்கால்களும், சட்டக்கோர்வைகளும் சேர்த்து கட்டப்பட்டு தேரின் உள்கூடு நான்கு நிலைகளாக 48 அடி உயரத்திற்கு கட்டப்படும். அதன் மேல் மரச்சட்டங்களால் சிகரம் அமைக்கப்பட்டு கலசம் பொருத்தப்படும். சிகர அமைப்பின் உயரம் 12 அடி, விட்டம் 12 அடி. தேர் கலசத்தின் உயரம் 6 அடி.
| தேர் பகுதி | அளவு | |
|---|---|---|
| 1 | மரத்தேர் | 30 அடி |
| 2 | விமானம் வரை உள்ள தேர்சீலைகளால் அலங்கரிக்கப்படும் பகுதி | 48 அடி |
| 3 | சிகரம் | 12 அடி |
| 4 | தேர் கலசம் | 6 அடி |
| மொத்தம் | 96 அடி |
மரத்தேரின் எடை இரும்பு அச்சு, சக்கரத்துடன் சேர்த்து 220 டன். இதன் மீது ஐந்து டன் எடையுள்ள பனஞ்சப்பைகளும், 50 டன் எடையுள்ள மூங்கில்களும், 10 டன் எடையுள்ள சவுக்கு மரங்களும், 1 டன் எடைக்கொண்ட கயிறு, அரை டன் துணிகள் உபயோகிக்கப்படும். தேரின் முன்புறம் கட்டப்படும் குதிரைகள், யாளிகள், பிர்மா (பொம்மை), நான்கு பக்கமும் கட்டப்படும் அலங்காரத் தட்டிகள் என எடை சுமார் 5 டன் இருக்கும். இவை தவிர தேரைச் சுற்றி இரும்பு கயிறு, ஹைட்ராலிக்பிரேக் போன்ற இரும்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டிருக்கும். அனைத்தையும் சேர்த்து மொத்த தேரின் எடை 300 டன் எனக் கொள்ளலாம்.
அலங்காரம்
| அலங்காரம் | எண்ணிக்கை | |
|---|---|---|
| 1 | பெரிய குதிரை | 4 |
| 2 | ரிஷபம் | 8 |
| 3 | யாளம் | 2 |
| 4 | பாம்பு யாளம் | 1 |
| 5 | பிர்மா | 1 |
| 6 | துவாரபாலகர் | 2 |
| 7 | கமாய் கால் | 2 |
| 8 | மேல் கிராதி | 4 |
| 9 | கீழ் கிராதி | 2 |
| 10 | பெரிய கத்தி கேடயம் | 2 |
| 11 | பூக்குடம் | 16 |
| 12 | ராஜாராணி | 2 |
| 13 | கிழவன் கிழவி | 2 |
| 14 | சுருட்டி | 4 |
| 15 | இலை | 8 |
| 16 | பின்பக்கம் கமாய் கால் | 6 |
| 17 | அம்பராத்தோணி | 2 |
| மொத்தம் | 68 |
தேரில் குதிரைகள் நான்கும், பாம்பு யாளமும் முன்புறம் பொருத்தப்பட்டிருக்கும். இவை 32 அடி நீளமும், 11 அடி உயரமும் கொண்டது. நான்கு குதிரைகளையும் தேரில் பூட்டி லகானை இடது கையில் பிடித்து, வலது கையில் சாட்டையுடன் நான்முகனின் உருவம் அமைக்கப்பட்டிருக்கும். தேரின் முன்புறம் 20 அடி தூரத்திற்கு நீண்டிருக்கும். இரும்புக் கயிற்றின் முனையிலுள்ள வளையங்கள் தேரின் வடங்களில் பொருத்தப்பட்டிருக்கும், இது ஒவ்வொன்றும் 425 அடி நீளம் கொண்டவை. வடத்தின் சுற்றளவு 21 அங்குலம். நான்கு வடத்தின் மொத்த எடை 4 டன்.
தேரை ஒட்டுவதற்குப் 450 முட்டுக்கட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு முட்டுக்கட்டையும் 30 - 45 கிலோ எடையுள்ளவை. 1.5 அடி உயரம், 2.5 அடி நீளம், 1 அடி அகலமுள்ளவை.[2] இது தவிர 750 பரப்புக்கட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை தேர் சக்கரம் தரையில் பதிந்துவிடாமல் இருக்க பயன்படுகின்றன.
தேர்ச்சீலைகள் 450 சதுர அடி கொண்டது. மொத்தம் 17 சீலைகள் உள்ளன. 18 அடி உயரம் 20 அடி அகலம் கொண்ட நான்கு வாசல் மாலைகளும், 18 அடி உயரம் கொண்ட 28 தொம்பைகளும்[3] பயன்படுத்தப்படுகின்றன. தேர் சீலைகள் மூன்று நிலைகளாகக் கட்டப்படுகின்றன. கீழ்நிலையில் உள்ளவை 32 அடி நீளம் 14 அடி உயரம் உள்ள 6 சீலைகள். அடுத்த நிலையில் இதே அளவில் 5 சீலைகளும், மூன்றாம் நிலையில் நான்கு சீலைகளும் கட்டப்படுகின்றன. விமானத்தில் போர்த்தி 2 சீலைகள் கட்டப்படுகின்றன.
எரிந்த தேர்
பொ.யு. 1926-ம் ஆண்டு திருத்தேர் விழாவின் போது தீ பற்றி முற்றிலுமாக எரிந்தது. தேர் விழா கிழக்கு ராஜகோபுரத்தில் தொடங்கி கமலாலய குளத்தின் அருகே வடகிழக்கு பகுதிக்கு வந்த போது வேட்டுகள் போடும் போது எழுந்த தீப்பொறியால் தேர் கூரையில் தீப்பிடித்தது எனச் சிலர் கூறுகின்றனர். சிலர் பலகார கடையிலிருந்த வாணலி தீப்பிடித்ததாகவும் அந்த தீ தேர் தொம்பையில் பற்றிக் கொண்டதாகக் கூறுகின்றனர். தீ முழுவதுமாக இரண்டு நாள் எரிந்தது எனச் சொல்லப்படுகிறது.
இந்நிகழ்வின் போது தேரிலிருந்த தியாகராஜரை முத்துக்கொத்தனார் என்பவர் காப்பாற்றினார். கீழே வீசப்பட்ட தியாகராஜரை மக்கள் மேற்கு கோபுரம் வழியாகக் கொண்டுச் சென்று கோவிலில் வைத்தனர். வரலாற்றில் அன்று ஒரு நாள் மட்டுமே தியாகராஜர் மேற்கு கோபுரம் வாயிலாக உள்ளே சென்றது குறிப்பிடத்தக்கது.
பழைய தேர் தற்போதிருக்கும் ஆரூர் தேரை விட அளவில் பெரியது. அத்தேருக்கு பத்து சக்கரங்கள் உண்டு.
தேர் பத்திரிக்கை
பொ.யு. 1926-ம் ஆண்டு எரிந்த தேர் பற்றிய குறிப்பும், மக்கள் புதிய தேர் செய்வதற்கு எடுத்த முயற்சியும் பற்றிக் கூறும் திருவாரூர் திருத்தேர் திருப்பணி விண்ணப்பம் என்ற பொ.யு. 1928-ம் ஆண்டை சேர்ந்த விண்ணப்பம் ஒன்று ஆரூர் கோவிலில் உள்ளது. இது ஆரூர் தேர் திருவிழா பற்றிய முக்கிய ஆவணமாகக் கருதப்படுகிறது.
மோடி ஆவணங்கள்
திருவாரூர் தேர் பற்றிய குறிப்பு இலக்கியங்களில் மூவர் தேவாரம் பெரிய புராணம், கல்வெட்டுகளில் கிடைக்கின்றன. அதற்கு பின் தஞ்சை மராட்டியர்கள் காலத்தில் மோடி ஆவணங்களில் கிடைக்கின்றன என்றாலும் அவை மிக சொற்பமானவை. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மோடி ஆவணங்களை ஏ, பி, சி எனப் பிரித்து முக்கியமான ஆவணங்களை ஏ வரிசையில் சென்னை ஆவண காப்பகத்திலும், பி வரிசையிலுள்ள நிலங்கள் பற்றிய குறிப்புகள் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் பாதுகாத்தனர். சி பிரிவு ஆவணங்களை எரித்து விட உத்திரவிட்டனர். இதனை ராஜாராம் சாஹேப் தடுத்து தஞ்சை சரஸ்வதி மஹாலில் இவ்வாணங்கள் பாதுகாக்கப்பட்டன. இந்த ஆவணங்களில் திருவாரூர் தேர் பற்றிய விவரங்கள் சில கிடைத்துள்ளன. அவற்றுள் சில தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
மொழிபெயர்ப்பு குறிப்பு
| ஆண்டு | ஆட்கள், செலவு விவரம் | குறிப்பு | மூட்டை | ஏடு எண் |
|---|---|---|---|---|
| பொ.யு. 1748 | திருவையார் 4500 பேர், சுவாமிமலை 140, கணபதி அக்ரஹாரம் 200, மொத்தம் 4840 | மூன்று ஆவணங்கள் | 112 | 47 |
| பொ.யு. 1749 | திருவையார் சுபா சென்ற வருடப் பிரகாரம் 4840 வட்டவாரி நிலக் கணக்கு ஸ்ரோத்திரிய விவரம் | 112 | 48 | |
| பொ.யு. 1765 | மஹால் மாதவாரி செலவு ஜமா குறிப்புகள். பிரயாண செலவு ராஜ ஶ்ரீ மகாராஜ் சாஹேப் (இரண்டாம் துளஜா மன்னர்) திருவாரூர் தேர் உத்சவத்திற்கு பங்குனி மாதத்தில் வந்த வகையில் செலவு ஜாபிதா பிரகாரம் மாதம் சௌவல் 1041 1/2 சக்கரங்களும், 2 1/4 வீசம் பணமும் | 121 | 71 | |
| பொ.யு. 1776 | சாமான்கள் விவரமும், வலங்கைமான் பத்து வாங்கியவிடத்து மாமல்வேதாருக்கு தாக்கீது ஆகிவந்து அடையவும் - உத்தரவு விவரம் | 113 | 33 | |
| பொ.யு. 1777 | சுபா திருவையார் ஆட்கள் விவரம்; தேருக்கு மேற்கு பக்கத்தில் முதல் நாடாவிற்கு சென்ற வருட பிரகாரம் ஆட்கள் 4686 இதில் வஜா கும்பகோணம் சுபா பிரவேசம் ஆட்கள் முதலிய விவரம் | 112 | 63 | |
| பொ.யு. 1776 | ராஜ ஶ்ரீ அமர சிங் ராஜா திருவாரூரில் ஶ்ரீ தியாகராஜ சுவாமியின் தேர் திருவிழாவிற்காக தேரை பார்ப்பதற்காக நாகபட்டிணத்திலிருந்து மிஸ்தர் டூரியன் துரை வருகிறார். அவருக்கு திருவாரூரில் காஸா உலுப்பை[4] 20 கொடுக்க உத்தர்வாகியிருக்கிறது. | 5 | 26 | |
| பொ.யு. 1777 | ரயத்து வகையறா கொரநாடு மஹால் தேதி 9 ரம்ஜான் தாலுகா திருநாகேஸ்வரம் வட்டத்தின் ஆட்கள் திருவாரூர் தேரின் மொயின் பிரகாரம் அனுப்பாமல் கம்மியாக அனுப்பியவிடத்து தாலுகா குணம்பி வெங்கடாஜலப் பிள்ளை இடமிருந்து தண்டனை குற்றத்திற்காக வாங்கியது ஒரு சக்கரமும் 2 பணமும் | 113 | 13 | |
| பொ.யு. 1789 | ஶ்ரீ தியாகராஜ சுவாமியின் தேருக்கு சென்ற வருட பிரகாரம் ஊர்வாரி ஆட்கள் 4799க்கு கணக்கு விபரம் சுபா திருவையாறு சுபா மாயவரம் வகையில் ஆட்கள் கணக்கு விவரம் | 37 ஏடுகளில் விரிவான கணக்குகள் | 112 | 65/1 |
| பொ.யு. 1793 | திருவாரூர் ஶ்ரீ தியாகராஜ சுவாமியின் தேருக்கு ஆட்கள் விவரம் திருவையாறு சுபா 4500, சுவாமிமலை 140, கணபதி அக்ரஹாரம் 200; மொத்தம் 4840 | 112 | 65/1 | |
| பொ.யு. 1797 | திருவாரூர் ஶ்ரீ தியாகராஜரின் தேருக்கு ஆட்கள் திருவையாறு சுபா சென்ற வருட பிரகாரம் ஆட்கள் 4840 ஊர்வாரி கணக்கு, நிலப்பரப்பு மொத்த நிலம் கணக்கு | 112 | 56 | |
| திருவாரூர் ஶ்ரீ தியாகராஜ பங்குனி ரதோ உத்சவம் மாசி மாதம் 8-ம் தேதி முதல் சித்திரை 2-ம் தேதி வரையில் 55 நாட்கள் உற்சவ விவரங்கள் | 309 | 75/255-13 |
ராஜ கன்யா பரிணயம்
சாஹோஜி மன்னரின் அவைப்புலவரான திரையம்பகர் எழுதிய 'ராஜ கன்யா பரிணயம்' என்னும் நூலில் சாஹோஜி மன்னர் திருவாரூர் தேர் திருவிழா காண ராஜவீதியில் பல்லக்கில் பவனி வருவதும், அப்போது காஷ்மீரநாட்டு அரசகுமாரி மாளிகை ஒன்றிலிருந்து பார்த்து அரசர் மேல் மையல் கொண்டதாகவும், அவள் நிலை உணர்ந்த பெற்றோர் ஆரூரன் அருளால் சாஹோஜி மன்னருக்கே திருமணம் முடித்ததாகவும் பாடப்பட்டுள்ளது. இது மராட்டிய மொழி நூல். இதில் திருவாரூர் தேர் திருவிழா பற்றிய குறிப்புகள் உள்ளன.
தேர் கலைஞர்கள்
தேர் தூண்கள், மேற்கூரை அமைப்பு அனைத்தும் தேர் கொத்தனார்களால் செய்யப்படுகிறது. தேர் குதிரைகளை ஸ்தபதி உருவாக்குவார். தேர்ச்சீலை, தொம்பை செய்ய வண்ணத்தார்கள், துணி தைப்பவர்கள் உதவுவர். அனைத்திற்கும் தலைமையாக தேர் கொத்தனார் விளங்குவார்.
முத்துக் கொத்தனார்
முத்துக் கொத்தனார் பொ.யு. 1920 களில் திருவாரூர் தேரின் தலைமை கொத்தனார் ஆக இருந்தவர். 1926-ல் தேர் தீப்பற்றிய போது தீயின் இடையே தியாகராஜர் திருமேனியை பீடத்தோடு விளிம்பு வரை கொண்டு வந்த பின் மாலைக் கயிற்றால் திருமேனியை கீழே தள்ளிக் காப்பாற்றினார். முத்துக் கொத்தனார் சீடராக கோவிந்தசாமி கொத்தனார் பணியாற்றினார். அவருக்கு கீழே சண்முகக் கொத்தனார், வடிவேல் கொத்தனார் ஆகியோர் பணிபுரிந்தனர்.
ஸ்தபதி கனகசபை கண்டியர்
ஸ்தபதி கனகசபை கண்டியர் தேருக்குக் குதிரைகள், தேர்யாளம், பக்கத்தட்டிகள், பிற அலங்கார முகப்புகள் செய்யும் குடும்பத்தில் வந்தவர். நெட்டி, வைக்கோல், மூங்கில் சிம்புகள், காகிதம், வண்ணங்கள் கொண்டு பிரம்மாண்ட தேர் குதிரைகள், பொம்மைகள் செய்வதில் வல்லவர். தற்போது இவரது மகனும் பேரனும் இதனை செய்து வருகின்றனர்.
தற்போதைய தேர்
பொ.யு. 2010-ல் நிகழ்ந்த தேர் திருவிழாவுக்கு பின் தேர் பழுதடைந்ததால் புதுப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக 2015 வரை தேரோட்டம் நிகழவில்லை. புதிய தேர் 30 அடி உயரத்தில் 31 அடி நீளமும், 31 அடி அகலமும் கொண்டு 300 டன் எடை கொண்டு அமைந்தது. இதன் வெள்ளோட்டம் 2015-ல் நிகழ்ந்தது. இதன் பின் தொடர்ந்து தேரோட்டம் நிகழ்ந்து வருகிறது.
வள்ளுவர் கோட்டம்
சென்னையிலுள்ள வள்ளுவர் கோட்டத்திலுள்ள தேர் திருவாரூர் தேரை மாதிரியாகக் கொண்டு அமைக்கப்பட்டது.
உசாத்துணை
- திருவாரூர் திருக்கோவில் டாக்டர் குடவாயில் பாலசுப்ரமணியன்
வெளி இணைப்புகள்
- ஆசியாவின் மிகப்பெரிய தேர்: 'ஆரூரா... தியாகேசா...' - முழக்கத்தோடு வரப்போகும் திருவாரூர் ஆழித்தேர்!, விகடன்
- Thiruvarur Ther Thiruvizha | "தேரின் அமைப்பு சொல்லும் பெரும் வரலாறு" காண கிடைக்காத காட்சி, யூடியூப்.காம்
- Thiruvarur Ther Thiruvizha 2025 | Thiruvarur Therottam Live | திருவாரூர் ஆழித்தேரோட்டம் 2025, யூடியூப்.காம்
அடிக்குறிப்புகள்
- ↑ சந்திரசேகரர் விழாவின்போது ஈசான மூலையில் மட்டும் சுத்த மத்தளம் இசைப்பவர்கள் மத்தளத்தை தங்கள் தலையின் மேலுள்ள பரிவட்டத்தின் மேல் வைத்துக் கொண்டு இருகைகளையும் உயர்த்தி இசைப்பர். தாளங்களும், இயக்கப்பெறும் முறைகளும் ஒரு குறிப்பிட்ட முறைப்படி நிகழும் இதற்கு பூதநிருத்தம் என்று பெயர்.
- ↑ இந்த முட்டுக்கட்டைகள் ஒன்றிரண்டு முறையே பயன்படுத்த முடியும். தேர் சக்கரத்தின் கீழ் கொடுத்தவுடன் நொறுங்கிவிடும்.
- ↑ தேர் அலங்கார பொருள் வட்டமாக நீண்டிருக்கும்
- ↑ கோவிலுக்கு அனுப்பும் காணிக்கை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 22-Feb-2026, 06:02:14 IST
