சேந்தங்கண்ணனார்: Difference between revisions

From Tamil Wiki
; Added info on Finalised date
Line 60: Line 60:


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:புலவர்]]

Revision as of 00:54, 21 December 2025

சேந்தங்கண்ணனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய இரண்டு பாடல்களில் ஒரு பாடல் அகநானூறிலும் ஒரு பாடல் நற்றிணையிலும் இடம்பெற்றுள்ளன.

வாழ்க்கை குறிப்பு

சேந்தங்கண்ணனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். கண்ணனார் என்னும் இயற்பெயர் கொண்டவர். சேந்தன் என்பவரின் மகன். பாண்டிய நாட்டில் கொற்கை துறைமுகத்து அடுத்துள்ள நெய்தல் நிலத்தை சேர்ந்தவர்.

இலக்கிய வாழ்க்கை

சேந்தங்கண்ணனார் பாடிய இரு பாடல்கள் அகநானூறிலும்(350) நற்றிணையிலும்(54) இடம்பெற்றுள்ளன. அகநானூறின் 360-ம் பாடல் பகற்பொழுதில் வேலை நிமித்தம் வந்து தலைவியைக் காணாமல் சென்றுவிடும் தலைவனை நோக்கி தோழி அழைப்பதாக நெய்தல் திணையில் அமைந்துள்ளது. நற்றிணை 54-ம் பாடல் தலைவனின் பிரிவால் வருந்தும் தலைவி நாரையை தூது விடுவதாக நெய்தல் திணையில் அமைந்துள்ளது.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

அகநானூறு - 350
  • பெரிய கடற்கரையுடைய நெய்தல் நிலத்துக்குரிய தலைவனின் தேரானது மணிகள் கட்டப்பட்டு அத்திரி குதிரைகளால் இழுக்கப்படுவதாகும்.
  • தலைவியின் ஊரில் உள்ள பரதவர்கள் சுறா மீன்கள் நீந்தப்பெறும் கடற்பகுதியில் மூழ்கி வலம்புரி சங்கும் முத்தும் கொண்டு வருவர். அதனை கொற்கை துறைமுகத்தில் வணிகரிடம் விற்பர்.
  • கழிமுகத்தில் வீசப்பெறும் கடலலையால் கடற்கரையில் பூத்துள்ள சிறிய நெய்தலும் காவி பூவும் கூம்புகின்றன.
  • கரிய நிறமுடைய சேற்று மண்ணில் இரு பக்கமும் கொடுக்குள் நீண்ட நண்டின் காலடித்தடம் காணப்படவில்லை. எங்கும் அமைதி நிலவுகிறது.
நற்றிணை - 54
  • நாரையின் கால்கள் கருமையாகவும் உடற்பகுதி வெண்மையாகவும் இருக்கும்.
  • நாரையானது வளைந்த நீர் பரப்பை உடைய கழிமுகத்தில் தன் இனத்து பறவைகளுடன் பறந்து சென்று இரைதேடி வரும்.
  • நாரை இறைச்சி உணவாகிய மீன்கள் கூட்டமாக சேர்ந்து உண்ணும்.
  • தலைவரது ஊர்த்துறையில் கன்னித்தன்மை உடைய ஞாழல் மரத்தின் தழைகளை பறித்து தழையாடையாக அணிவர். கண்டல் மரத்தை வேலியாக நடுவர். அங்கே கழிமுகத்தில் ஓடும் நீரானது ஞாழல் மரத்தையும் கண்டல் மரத்தையும் தழுவி செல்லும்.
  • காதற்கொண்டு தனித்திருக்கும் பெண்ணுக்கு சிறிய அழகிய மாலைப்பொழுதானது பெருந்துயரத்தை விளைவிக்கும்.

பாடல் நடை

அகநானூறு - 350

  • திணை: நெய்தல் துறை: பகற்குறி வந்து நீங்குந் தலைமகற்குத் தோழி சொல்லியது.

கழியே, சிறுகுர னெய்தலொடு காவி கூம்ப
எறிதிரை யோதந் தரலா னாதே
துறையே, மருங்கிற் போகிய மாக்கவை மருப்பின்
இருஞ்சேற் றீரளை அலவன் நிவப்ப
வழங்குநர் இன்மையிற் பாடான் றன்றே
கொடுநுகம் நுழைந்த கணைக்கால் அத்திரி
வடிமணி நெடுந்தேர் பூண ஏவாது
ஏந்தெழின் மழைக்கண் இவள்குறை யாகச்
சேர்ந்தனை சென்மோ பெருநீர்ச் சேர்ப்ப
இலங்கிரும் பரப்பின் எறிசுறா நீக்கி
வலம்புரி மூழ்கிய வான்றிமிற் பரதவர்
ஒலிதலைப் பணிலம் ஆர்ப்பக் கல்லெனக்
கலிகெழுகொற்கை எதிர்கொள இழிதருங்
குவவுமணல் நெடுங்கோட் டாங்கண்
உவக்காண் தோன்றுமெஞ் சிறுநல் லூரே.

நற்றிணை - 54

  • திணை: நெய்தல் துறை: காமமிக்க கழிபடர் கிளவி

வளைநீர் மேய்ந்து கிளைமுதற் செலீஇ
வாப்பறை விரும்பினை ஆயினுந் தூச்சிறை
இரும்புலா அருந்துநின் கிளையொடு சிறிதிருந்து
கருங்கால் வெண்குருகு எனவ கேண்மதி
பெரும்புலம் பின்றே சிறுபுன் மாலை
அதுநீ அறியின் அன்புமார் உடையை
நொதுமல் நெஞ்சங் கொள்ளாது என்குறை
இற்றாங்கு உணர உரைமதி தழையோர்
கொய்குழை அரும்பிய குமரி ஞாழல்
தெண்டிரை மணிப்புறந் தைவருங்
கண்டல் வேலிநும் துறைகிழ வோற்கே.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 25-Feb-2025, 22:15:48 IST