second review completed

பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 1: Line 1:
{{first review completed}}
{{second review completed}}


[[File:Pinna.png|thumb|பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர்]]
[[File:Pinna.png|thumb|பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர்]]

Revision as of 08:25, 4 February 2022


✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.


பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர்

பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர்(பின்னத்தூரார்) (இலட்சுமி நாராயண அவதானிகள் ) (செப்டெம்பர் 10, 1862 - ஜூலை 30, 1914) பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடையின் உருவாக்கத்தில் பெரும்பங்காற்றிய தமிழறிஞர். இலக்கண நூல்கள் மற்றும் பாடநூல்களின் ஆசிரியர். பழந்தமிழ் நூல்களுக்கு உரை எழுதியவர். நினைவாற்றல் கலைஞர், கவிஞர், தமிழாசிரியர், மொழிபெயர்ப்பாளர், கல்வெட்டியல் ஆய்வாளர் என பன்முகத்தன்மை கொண்ட தமிழறிஞர். இவருடைய நற்றிணை (பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் உரை) தமிழ் இலக்கியத்திற்கு இன்றியமையாத பங்களிப்பு.

பிறப்பு, கல்வி

பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டத்தைச் சேர்ந்த பின்னத்தூர் அப்புசாமி ஐயர் என்னும் வேங்கடகிருஷ்ணனுக்கும் சீதாலட்சுமிக்கும் செப்டெம்பர் 10, 1862-ல் பிறந்தார். அவதானிகள் (நினைவாற்றல் கலை) வரிசையில் வந்தவர் இவருடைய தந்தை. வேதவிற்பன்னர். பின்னத்தூர் நாராயணசாமி ஐயரின் இயற்பெயர் இலட்சுமி நாராயண அவதானிகள். இவருடன் பிறந்தவர்கள் மூன்று தம்பிகளும் மூன்று தங்கைகளும். பிற்காலத்தில் இவர் சொந்த ஊரான பின்னத்தூர் என்ற பெயராலேயே அழைக்கப்பட்டார். அப்புசாமி ஐயர் தன் மகனுக்கு இளமையிலேயே சமஸ்கிருதத்தையும் அவதானக் கலையையும் கற்றுக் கொடுத்தார். நாராயணசாமி ஆரம்ப காலத்தில் வேதமும் கற்றார்.

பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் தனது தொடக்கக்கல்வியை கிருஷ்ணாபுரம் முத்துராம பாரதியாரின் திண்ணைப் பள்ளியில் பெற்றார். சமஸ்கிருதம் மற்றும் வேதம் கற்றார். தமிழ் இலக்கண, இலக்கியங்களை திருமறைக்காட்டில் (வேதாரண்யம்) தங்கியிருந்த ஈழத்துப் புலவர் பொன்னம்பலம் பிள்ளை என்பவரிடம் கற்றார். பின்னத்தூரில் திண்ணைப் பள்ளிக்கூடம் நடத்திய கிருஷ்ணாபுரம் முத்துராம பாரதியிடம் நாராயணசாமி சில ஆண்டுகள் தமிழ் பயின்றார். யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரின் மருமகன் பொன்னம்பலம் பிள்ளை வேதாரண்யத்தில் சில ஆண்டுகள் வசித்தபோது அவரிடம் சிலப்பதிகாரத்தை பாடம் கேட்டிருக்கிறார்.

தனிவாழ்க்கை

பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் தன் 37 வயதில் (செப்டம்பர் 1899) கும்பகோணம் டவுன் உயர்நிலைப் பள்ளியில் பணிக்குச் சென்றார். இறுதிக் காலம் வரை அங்கேயே பணிபுரிந்தார்.

இலக்கியவாழ்க்கை

பின்னத்தூரார் நூல்

பின்னத்தூர் நாராயணசாமி ஐயரின் இலக்கிய வாழ்க்கை இரண்டு முகம் கொண்டது. உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியர், பழந்தமிழ்நூல்களுக்கு உரை எழுதியவர். உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்காக இவர் எழுதிய எளிய பாடநூல்கள் தமிழ் உரைநடையின் இலக்கண அமைப்புக்கு வழிகாட்டியாக அமைந்தவை. பழந்தமிழ் நூல்களுக்கு முறைமைசார்ந்த ஆய்வுரைகளை வழங்குவதில் இவருடைய நற்றிணை உரை முன்னுதாரணமாக கருதப்படுகிறது.

நூல்கள்

இவர் இயற்றிய இயன்மொழி வாழ்த்து என்ற நூல் புதுக்கோட்டை சமஸ்தானம் இராஜமார்த்தாண்ட தொண்டைமான் என்பவர் பற்றியும் அவரது நாட்டின் ஆட்சிமுறை பற்றியும் வாழ்த்திப் பாடுவது. இந்நூலின் முதல் பகுதி தொண்டைமானின் நாட்டின் ஐந்து திணை நிலங்கள் பற்றியும் இரண்டாம் பகுதி புதுக்கோட்டை நகர மக்கள் பற்றியும் கூறுகிறது. 19ஆம் நூற்றாண்டின் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் இயல்பான செய்திகளைச் சித்திரிக்கும் பெருமை இந்நூலுக்கு உண்டு. புதுக்கோட்டைச் சாலையில் கல்லாலான தெரு தூண்கள் நின்றன. இதில் இருந்த கண்ணாடி விளக்கை ஏற்ற பணியாளர் இருந்தனர். இது போன்ற செய்திகள் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாஞ்சாலக்குறிச்சி கட்டபொம்மன் புதுக்கோட்டையில் தங்கியபோது ஆங்கிலேயரின் வேண்டுகோளுக்கிணங்க கட்டபொம்மனையும், ஊமைத்துரையையும் பிடித்துக் கொடுத்தவர் விஜயரகுநாத தொண்டைமான் என்ற செய்தி இந்நூலில் பெருமையாகவே விவரிக்கப் படுகிறது. இது போலவே மருது சகோதரர்களை பிடிக்க புதுக்கோட்டை அரசர்கள் உதவினார்கள் என்ற செய்தி பெருமையாய்க் கூறப்படுகிறது. இப்படி ஒரு கருத்து பாமரர்களிடம் இருந்தது என்பதையும் ஆங்கிலேயர்களின் விசுவாசிகளாக ஒரு கூட்டம் இதை நியாயப்படுத்தியது என்பதையும் இயல்பாகவே இந்நூல் விவரிக்கிறது.பின்னத்தூரார் இயற்றிய மாணாக்கராற்றுப் படை என்ற நூல் பழைய ஆற்றுப்படை இலக்கிய மரபின் அடிப்படையில் எழுதப்பட்டது. இதில் கும்பகோணம் டவுன் உயர்நிலைப்பள்ளி மையப்படுத்தப்படுகிறது. முக்கியமாக ஏழை மாணவர்களை இப்பள்ளிக்கு ஆற்றுப்படுத்துவது இதன் சிறப்பு.

மொழியாக்கம்

பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் சமஸ்கிருத மொழியில் காளிதாசன் எழுதிய ‘பிரகசன’ என்ற நாடக நூலைத் தமிழில் மொழிபெயர்த்தார். இது அச்சில் வரவில்லை. இது போன்று இவர் வடமொழியிலிருந்து மொழிபெயர்த்து எழுதிய வேறு நூல்களும் அச்சில் வரவில்லை.

உரைகள்

பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு நூல்களைப் பற்றி ஆய்வு மேற்கொண்டு உரை எழுதினார். இந்நூல்கள் நேரடியான நடைகொண்டவை. திணை, இலக்கண விளக்கம், இலக்கணக் குறிப்பு, பாடல், பாடல் பொருள் விளக்கம், சொல்விளக்கம், எடுத்துக்காட்டு, உள்ளுறை, துறைவிளக்கம், மெய்ப்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய முறைமைகொண்டவை. ஒவ்வொரு பாடலடிக்கும் தெளிவான விளக்கமும் இடம்பெற்றுள்ளது.

மறைவு

பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் நீரிழிவு நோயால் அவதிப்பட்டு பின்னத்தூரில் ஜூலை 30, 1914ல் தன் 52-வது வயதில் காலமானார்.

நூல்கள்

படைப்புகள்

  • நீலகண்டேசுரக் கோவை
  • இடும்பாவன புராணம்
  • இறையனாற்றுப்படை
  • சிவபுராணம்
  • சிவகீதை
  • நரிவிருத்தம்
  • மாணாக்கராற்றுப்படை (1900)
  • இயன்மொழி வாழ்த்து
  • தென்தில்லை உலா
  • தென்தில்லைக் கலம்பகம்
  • பழையது விடு தூது
  • மருதப்பாட்டு
  • செருப்பு விடு தூது
  • தமிழ் நாயக மாலை
  • களப்பாழ்ப் புராணம்
  • இராமாயண அகவல்
  • அரதைக்கோவை
  • வீர காவியம்

உரைகள்

மொழிபெயர்ப்பு

காளிதாசனின் “பிரகசன” நாடகம்

உசாத்துணை

அ.கா. பெருமாள்: ”தமிழறிஞர்கள்” புத்தகம்

https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZU0kJUy.TVA_BOK_0005957/mode/2up

https://munaivaramani.blogspot.com/2010/12/1915_9153.html