மண்டிகர்: Difference between revisions
No edit summary |
|||
Line 72: | Line 72: | ||
நன்றி: [[அ.கா. பெருமாள்]], [[பக்தவத்சல பாரதி]] | நன்றி: [[அ.கா. பெருமாள்]], [[பக்தவத்சல பாரதி]] | ||
{Standardised}} | {{Standardised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 18:56, 23 August 2022
மண்டிகர் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வாழும் நாடோடி இனம். கணிகர் என்னும் மராட்டிய சமூகத்தின் ஒரு பிரிவினர். தோல்பாவைக் கூத்து நிகழ்த்தும் சாதியினர்.
இனப்பரப்பு
மண்டிகர் மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி என தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அதிகம் வாழ்கின்றனர். மண்டிகர் கோவில்பட்டி நரிக்குளம் காலனியை ஒட்டியும், நாகர்கோவில் அருகே உள்ள திருமலாபுரத்திலும் அதிகம் வாழ்கின்றனர். மண்டிகர் இனப் பஞ்சாயத்து இப்பகுதியில் நடைபெறும். மண்டிகர் சாதிச் சங்கத் தலைவர்களும் உறுப்பினர்களும் இப்பகுதியில் அதிகம் வாழ்கின்றனர்.
தொன்மம்
சீதையை திருமணம் செய்த இராமன் அயோத்தியில் வாழ்ந்த போது கைகேயியின் சூழ்ச்சியால் வனவாசம் செல்ல நேர்ந்தது. இராமனுடன் சீதையும், லட்சுமணனும் வனவாசம் சென்ற போது அயோத்தி மக்களும் உடன் சென்றனர். அயோத்தி மக்கள் தன்னுடன் வருவதைக் கண்ட இராமன் அவர்களிடம் அயோத்தி திரும்பும் படி வேண்டினான்.
இராமனின் சொல் கேட்காத சிலர் இராமனுடன் சென்றனர். அவர்கள் கங்கை கரையில் தங்கி பதினாழு ஆண்டுகள் காய் கனி மாமிசம் மட்டும் சாப்பிட்டு காலம் கழித்தனர். அயோத்தி மக்கள் காட்டில் வாழ்ந்து காட்டாளர்கள் போல் மாறினர்.
இலங்கையிலிருந்து போர் முடிந்து நாடு திரும்பிய இராமனைக் கண்டு கங்கைக் கரையில் இருந்த மக்கள் மகிழ்ந்தனர். ஆனால் இராமனுக்கு அவர்களை அடையாளம் தெரியவில்லை. இதனை அறிந்தவர்கள் மனம் உடைந்து அயோத்திக்கு திரும்பக் கூடாது எனத் தீர்மானம் செய்தனர். இராமன் அவர்களை மறந்த போதும் அவர்கள் இராம பக்தர்களாகவே இருந்தனர். அந்தக் கூட்டத்தில் இருந்த சிலர் இராம நாமத்தைப் பஜனையாகப் பாடிக் கொண்டு நாடோடிகளாய் திரிந்தனர். அவர்களை ’இராமக் குளவர்’ என்று அழைத்தனர். பின்னர் மண்டிகர் என்றழைக்கப்பட்டனர்.
புலம்பெயர்வு
மண்டிகர் சேர்த்த பன்னிரெண்டு கணிகர் இனம் மகாராஷ்டிரத்தை பூர்விகமாக கொண்டவர்கள். பொ.யு. பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பணத்திற்காகப் போர் செய்யும் கூலி வீரர்களாகப் பணியாற்றினர். பின் அரசியல் காரணங்களால் தெற்கிலிருக்கும் தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்து வந்தனர். கணிகர்களின் இடம்பெயர்வு பதினேழாம் நூற்றாண்டின் இறுதியிலோ, பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலோ நிகழ்ந்திருக்கலாம் என மண்டிகர் இனத்தை ஆய்வு செய்த ஆய்வாளர் அ.கா. பெருமாள் குறிப்பிடுகிறார்.
தஞ்சை மாவட்டத்தில் 1676 முதல் 1855 வரை மராட்டியரின் ஆட்சி நடந்தது. இக்காலகட்டத்தில் மராட்டிய பிரிவினருடன் கணிகர்களும் வந்திருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. மராட்டிய அரசர் ஷாஜி (1684 - 1712) காலத்தில் தஞ்சையில் மராட்டிய கலைகள் வளர்ச்சி கண்டன. இக்காலகட்டத்தில் மண்டிகர்கள் தோல்பாவைக்கூத்து நிகழ்த்துவதற்காக தஞ்சைக்கு குடிபெயர்ந்திருக்கலாம்.
இரண்டாம் சரபோஜி (1798 - 1833) அரசருக்கு பின்னர் வந்த மராட்டிய அரசர்கள் தோல்பாவைக் கூத்திற்கு உரிய இடம் அளிக்கவில்லை. முந்தைய அரசர்கள் கொடுத்துவந்த மானியத்தை ஆங்கிலேயர்கள் பரித்துக் கொண்டனர். கலைஞர்களின் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்திருந்த கள்ளர் சாதியினரிமிருந்து வருமானம் வருவதும் நின்றது. இப்பாதிப்பால் மண்டிகர் தென் தமிழகம் நோக்கி இடம்பெயர்ந்தனர்.
மண்டிகர் தென் தமிழகத்திற்கு இடம்பெயர்ந்ததற்கு ஆய்வாளர்கள் பல கருத்துக்கள் கூறுகின்றனர். வடதமிழகத்தில் இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு தெருக்கூத்து செல்வாக்குடன் விளங்கியதால் மண்டிகர்கள் தென் மாவட்டங்களை தேர்ந்தெடுத்திருக்கலாம் என்றும், வைணவ சார்புடைய யாதவர், நாயுடு, நாயக்கர் சாதியினர் இக்கலையை ஆதரிக்க முன்வந்ததாலும் தென் தமிழகத்திற்கு இடம்பெயர்ந்தனர் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மேலும் திருவிதாங்கூர் அரசர் சுவாதி திருநாள் (1813 - 1846) காலத்தில் தஞ்சை மாவட்டக் கலைஞர்கள் பலர் தென் திருவிதாங்கூருக்கு குடிபெயர்ந்தனர். இது தஞ்சை அரசரான சிவாஜி ராவ் காலத்தில் நிகழ்ந்திருக்க வேண்டுமென சாமிராவ் (1830 - 1900) கூறிய செவி வழிச் செய்தி மூலம் அறியமுடிகிறது.
தஞ்சையில் இருந்து தெற்கு வந்தவர்கள் மதுரை, திருநெல்வேலியில் குடிபெயர்ந்தனர். திருவிதாங்கூருக்கு வந்தவர்கள் குமரி மாவட்டத்தில் குடியேறினர்.
கணிகர் குழு பிரிவுகள்
கணிகர் எனப் பொது குழுவாகக் கூறப்பட்டாலும் கோந்தளா, சவான், சஸான், டொர்கர், பாங்கோத், பாங்கா, புத்ரீகர், மண்டிகர், முத்ரீகர், வாக்டுகர், வாடுகர், வாவுடுகர் என பன்னிரெண்டு உட்பிரிவுகள் கொண்டவர்கள். இவை தவிர தேளிராஜா, அம்பிளியா, கோண்டு, மெகார், அடகா போன்ற பிரிவுகளும் உள்ளன.
கணிகரின் இந்த பன்னிரெண்டு பிரிவுகளில் மண்டிகர் தவிர மற்ற பதினோரு பிரிவினரும் ஜோதிடத்தை தங்கள் தொழிலாகக் கொண்டவர்கள். மண்டிகர் மட்டும் தோல்பாவைக்கூத்து நிகழ்த்துபவர்கள். இவர்கள் மதுரையை தங்கள் மையமாக கொண்டு நாடோடிகளாக வாழ்பவர்கள்.
சமூகப் பிரிவுகள்
மண்டிகர் இனம் தந்தை வழி சமூகம். மண்டிகர் இனத்தின் ஆண் கணிகர் குழுவில் உள்ள மற்ற பதினோரு குலத்திலும் ஒருவரை திருமணம் செய்துக் கொள்ளலாம். இத்தம்பதியருக்கு பிறக்கும் குழந்தை மண்டிகராகவே கருதப்படுவார். ஆனால் மண்டிகர் இனத்துப் பெண் மற்ற பிரிவு ஆணை மணந்தால் பிறக்கும் குழந்தை அந்தப் பிரிவைச் சேர்ந்ததாகவே கொள்ளப்படும்.
இவர்களிடம் தொழில், வட்டாரம், வழிபாடு போன்ற வகையில் வேறுபாடுகள் கிடையாது.
இன அடையாளக் கூறுகள்
மண்டிகர் ஆண் எப்போதும் மீசையுடனே இருக்க வேண்டும். மீசையில்லாத மண்டிகரைப் பொண்டுகச் செட்டி என கேலி செய்கின்றனர். மண்டிகரின் தாய்மொழி மராட்டி. ஆனால் இவர்கள் பிறரிடம் தமிழிலேயே பேசுகின்றனர். பிறரோடு இருக்கும் போது தங்கள் குழுவில் மராட்டியில் உரையாடுகின்றனர். மண்டிகப் பெண்களில் சிலர் அரைகுறை இந்தியிலும் பேசுகின்றனர்.
தொழில்
பார்க்க: தோல்பாவைக் கூத்து
கணிகர் குழுவில் மண்டிகர் மட்டுமே தோல்பாவைக்கூத்து நிகழ்த்தலாம் என்ற வாய்மொழி மரபு உள்ளது. மண்டிகரைத் தவிர மற்ற சாதியினர் இக்கலையை நிகழ்த்தினால் ‘மண்டிகர்ச்சு பிந்தாச்சு (மண்டிகர்களுக்கு பிறந்தவன்)’ எனக் கூறும் வழக்கம் இவர்களிடம் உள்ளது. கணிகரின் பிற பிரிவினர் ‘பால்காபாக்கா’ என்னும் சடங்கைச் செய்த பின்னர் தோல்பாவைக் கூத்து நிகழ்த்தலாம்.
தோல்பாவைக் கூத்து குடும்பக் கலையாக நிகழ்கிறது. தோலில் வரையப்பட்ட வண்ணப் படங்களை விளக்கின் ஒளி ஊடுருவும் திரைச்சீலையில் பொருத்தி கதைப்போக்கிற்கு ஏற்ப உரையாடி, பாடி, ஆட வைப்பது கலையின் நிகழ்த்து முறை. ஒரு குடும்பத்தின் தலைவர் குழுவின் தலைவராக இருப்பார். இவரே நிகழ்ச்சியை நடத்துவார். ஒரு குழுவில் ஐந்து முதல் ஒன்பது பேர் வரை இருப்பர். தோல்பாவைக் குழுவில் பாவையாட்டி, சுரப்பெட்டி இசைப்பவர், மிருதங்கம் அடிப்பவர், அனுமதிச் சீட்டு வழங்குபவர், அவருக்குக் காவலாக இஉர்ப்பவர், அறிவிப்பாளர், விளம்பரம் செய்பவர், பாவையாட்டிக்குத் துணையாகக் கூத்தரங்கில் இருப்பவர் என ஒன்பது பேர் வரை இருப்பர்.
குழு தலைவர் பாவையாட்டுதல், பாவையாட்டி குழுவை நிர்வாகம் செய்தல், கதை உரையாடல்களை குரல் மாற்றி பேசுதல், பாடி நிகழ்ச்சி நடத்துதல், தோலில் படம் வரைதல் போன்றவற்றை செய்வார். பெண் பாவையாட்டி நிகழ்ச்சி நடத்தும் வழக்கம் இல்லை. பெண் இசைக்கருவி இசைத்தல், பக்கப்பாட்டு பாடுதல் போன்ற வேலைகளைச் செய்கின்றனர். வயதான ஆண் மிருதங்கம் வாசிப்பார்.
தென் தமிழகத்தின் மட்டும் நிகழும் இக்கலையின் கலைஞர்கள் தங்களுக்குள் பேசி நிகழ்ச்சி நடத்த வேண்டிய ஊர்களைப் பிரித்துக் கொள்வர். இதனை தங்கள் பஞ்சாயத்தில் வாய்மொழியாகப் பேசி முடிவு செய்வர். குறிப்பிட்ட எல்லையில் நிகழ்ச்சி நடத்தியவர்கள் அதனை மாற்றும் வழக்கம் இல்லை. இது 1970 வரை வழக்கில் இருந்தது. மதுரையில் உள்ள மண்டிகர்கள் மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், இராமநாதபுரம் பகுதிகளிலும் கூத்து நிகழ்த்தினர். கன்னியாகுமரி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம், தூத்துக்குடி மாவட்டமும் எல்லைகளாகத் தனித்தனியே கொண்டனர். எல்லை வகுத்துக் கொண்ட இடங்களில் இவர்கள் தங்கள் நாடோடி வாழ்க்கையை நிகழ்த்தினர்.
கலைஞர்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயர்ந்து சென்ற போது கூத்து நிகழ்த்துவதற்குரிய பொருட்களையும், சொந்தப் பொருட்களையும் தலையில் சுமந்து சென்றனர். சிலர் மாட்டுவண்டியிலும் கொண்டு சென்றனர். இந்நிலை 1940 வரை இருந்தது. தலையில் சுமந்து சென்ற குழுக்களின் எல்லை குறுகியதாக இருந்தது. இது இவர்களின் அனுபவங்களையும், கலையையும் கட்டுப்படுத்தியது.
இக்கலை ஒரு காலத்தில் இலவசமாக நிகழ்த்தப்பட்டது. கலைக்குரிய உபகரணங்களையும், கலைஞர்களின் சாப்பாட்டு பொறுப்பையும் ஊர் மக்களே ஏற்றுக் கொள்வர். நிகழ்ச்சி நடத்த ஊர்க்காரர்களே கூலி பேசி அழைக்கத் தொடங்கினர். கலைஞர்கள் டிக்கெட் விற்று நிகழ்ச்சி நடத்தத் தொடங்கிய போது அவர்களின் பொருளாதாரம் மிகவும் பாதித்தது. கலைக்குழுக்களும் சுருங்க ஆரம்பித்தன.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு மண்டிகர் பெண்கள் பச்சைக் குத்தும் தொழிலைச் செய்தனர். மண்டிகர் ஆண்கள் பலூன், பிளாஸ்டிக் பொருட்களை விற்கவும், பெண்கள் ஒப்பனைச் சாதனங்களை விற்கும் தொழிலையும் பரவலாகச் செய்கின்றனர். சினிமா பாடலுக்கு ஏற்ப மேடையில் நடனம் ஆடும் ‘பாட்டும் ஆட்டமும்’ நிகழ்ச்சியை மண்டிகர்கள் நிகழ்த்துகின்றனர்.
திருமணம்
மண்டிகர் இனத்தில் பிறந்த அனைவரும் சகோதர சகோதரிகளாகக் கருதுகின்றனர். அதனால் மண்டிகர் தங்கள் இனத்தில் மணவுறவு வைத்துக் கொள்வதில்லை. கணிகரின் பிற பிரிவினரோடு மணவுறவு வைத்துக் கொள்கின்றனர். இந்த வழக்கத்தை மீறுகின்றவனை ஏடா மண்டிபுக்கர் (பைத்தியக்கார மண்டிகனே) என்றழைத்து அபராதமும் தண்டனையும் கொடுக்கின்றனர்.
மண்டிகர் திருமணத்தில் முறை பெண்களை மட்டும் உறவுமுறையில் திருமணம் செய்யவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. உடன் பிறந்த சகோதரியை தவிர்த்து பிற உறவு முறைகளில் திருமணம் செய்கின்றனர். தாயின் உடன் பிறந்த தங்கை (சித்தி), தந்தையுடன் பிறந்த தங்கை (அத்தை), ஒன்றுவிட்ட தங்கை போன்ற உறவுகளுடன் மணம் கொள்வது வழக்கில் உள்ளது. “கூத்தாடிக்கு முறையும் இல்லை கொழுக்கட்டைக்கு தலையும் இல்லை” என்பது மண்டிகரின் பழமொழி. மண்டிகரின் பஞ்சாயத்தில் சில சமயம் இதனை தகாத உறவு எனக் கண்டித்தாலும் அபராத தொகை கட்டினால் ஏற்றுக் கொள்ளப்படும்.
மண்டிகரின் திருமணத்தில் சீதனம் கொடுக்கும் வழக்கம் கிடையாது. பெண் பருவமடையும் முன்பே திருமணம் செய்யும் வழக்கம் உள்ளது. பழங்காலத்தில் குழந்தை திருமணம் இருந்தது, இப்போது பதினாறு, பதினேழு வயதில் திருமணம் நிகழ்த்துகின்றனர். இவர்களது திருமணம் மூன்று நாள் நடைபெறும். மூன்று நாள் செலவு மாப்பிள்ளை வீட்டைச் சார்ந்தது. திருமணம் முடிந்த மூன்றாம் நாள் ‘சேர்பெருவத்தாலா’ என்னும் வீட்டோடு சேர்த்தல் ‘முதல் இரவு’ நடைபெறும்.
மண்டிகர் ஆண் வேறு சாதி பெண்ணைத் திருமணம் செய்தால், அந்தப் பெண்ணை வாய்க்காலில் நிற்க வைத்து மண்டிகர் அல்லாத மூத்த கணிகரிடம் தீயில் வாட்டிய தங்க ஊசியை கொடுத்துப் பெண்ணின் நாக்கில் வைத்து எடுப்பர். பின் அப்பெண்ணின் கழுத்தில் கிடக்கும் மாலையை முன்பக்கம் பார்த்துக் கொண்டே கழற்றி பின்புறம் எறிய வேண்டும். இதன் பின் அப்பெண்ணை மண்டிகராக ஏற்றுக் கொள்வர்.
மண்டிகரிடம் விதவை மறுமணமும், விவாகரத்தும் சாதாரணமாக நிகழ்கிறது. மண்டிகரின் விவாகரத்து முறையும் மிகவும் எளிமையானது. பஞ்சாயத்தில் விவாகரத்துக்குரிய கணவனும், மனைவியும் அமர்வர். பஞ்சாயத்துத் தலைவர் அவர்களிடம் விவாகரத்து விருப்பம் உள்ளதா என வினவுவார். அவர்கள் சம்மதம் தெரிவித்ததும் ஒரு ஊசியில் நூலைக் கோர்த்து முடிச்சு போட்டு அதை அறுத்து விடுவார். ஊசியையும் உடைத்து விடுவார். விவாகரத்து கிடைத்ததும் கணவனும், மனைவியும் வேறு மறுமணம் செய்துக் கொள்ளலாம்.
பஞ்சாயத்து முறை
மண்டிகரின் பஞ்சாயத்து முறையில் இடம் வரையறை கிடையாது. பஞ்சாயத்து எங்கு வேண்டுமானாலும் நிகழலாம். இவர்களின் பஞ்சாயத்து கூடியதும் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். அவர் நாவுதார் (நியாயஸ்தர்) என்றழைக்கப்படுவார். வயதில் மூத்தவர் அல்லடு வாய் சாமர்த்தியம் உள்ளவர் தலைவராக இருப்பார். இவர் தலைப்பாகை அணிந்து வருவார். மண்டிகரின் பஞ்சாயத்து எந்தவித பிரச்சனைக்காகவும் கூடும். கணவன், மனைவி உறவுச் சிக்கல், விவாகரத்து, தகாத உறவு, பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை, தொழில் நடத்துகின்ற இடப் பிரச்சனை, மண்டிகர் அல்லாத கணிகரின் வீட்டில் உண்பது தொடர்பான தீட்டு, மண்டிகர் சடங்கினை கணிகர் அல்லாத சாதியினர் செய்வதால் வரும் தீட்டை விசாரிப்பது போன்றது பொதுவான காரணங்கள்.
மண்டிகர் இனத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருப்பதில்லை. பணம் கொடுக்கல் வாங்கலில் நியாயமாக நடந்துக் கொள்கின்றனர். பணம் கொடுத்த மண்டிகன், பணம் வாங்கிய மண்டிகனைப் பஞ்சாயத்தில் வைத்து சில நடைமுறைகள் வழி எச்சரிப்பார். ஒரு செருப்பு, துடப்பம் கையில் எடுத்துச் செருப்பில் கொஞ்சம் தண்ணீரை விட்டு, ‘உன் அப்பன் பேரால் இதைச் செய்கிறேன்’ அல்லது ‘உன் அப்பன் பேரைச் சொல்லி நாயின்/பன்றியின் காதை அறுப்பேன்’ எனக் கூறுவார். அதன் பின்னும் திருப்பிக் கொடுக்கவில்லை என்றால் அவனைப் ‘பாடுகா’ (ஒதுக்கப்பட்டவன்) என்று கூறி சாதிவிலக்குச் (சாதிப்பிரஷ்டம்) செய்வர்.
முன்னாளில் தவறு செய்தவனை தரையில் வட்டம் வரைந்து இருபது நாழிகை (எட்டு மணி நேரம்) நிற்க வைப்பதுண்டு அல்லது குற்றவாளியின் மீசையை எடுக்க பஞ்சாய்த்து முடிவு செய்யும். இவை இரண்டு கொடிய் தண்டனையாகக் கருதப்பட்டு வந்தன.
மண்டிகர் தன் சாதி வழக்கத்தை மீறுவதில் தடையில்லை. ஆனால் பஞ்சாயத்தில் குஷால் தண்டு (சந்தோஷ அபராதம்) கட்டினால் மட்டும் போதும். முன்னால் இது பன்னிரெண்டு ரூபாயாக இருந்தது. குற்றங்களின் தரம், பஞ்சாயத்தில் இருப்பவர்கள் எண்ணிக்கை, அன்றைய மனநிலை. குற்றவாளியின் வசதி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அபராதம் தீர்மானிக்கப்படும்.
சமயம்
மண்டிகர் குடியிருப்பில் தனிப்பட்ட தெய்வகளுக்கு வழிபாடு, கோவில்கள் கிடையாது. 1960-க்கு பின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டணம் முத்தாரம்மன் கோவிலுடன் இவர்கள் தங்களைத் தொடர்புபடுத்திக் கொள்கின்றனர். அங்கு நிகழும் நவராத்திரி விழாவில் நேர்ச்சைக்காகவும், பக்திக்காகவும் பல்வேறு வேடங்கள் தரித்து ஆடும் வழக்கம் உள்ளது. மண்டிகரிடம் இது புதிதாக ஏற்பட்ட வழக்கம். தமிழகத்தின் மண்டிகர் அனைவரையும் நவராத்திரி விழாவில் சந்திக்கலாம்.
உசாத்துணை
- தமிழகத்தில் நாடோடிகள் சங்ககாலம் முதல் சமகாலம் வரை - பக்தவத்சல பாரதி (பதிப்பாசிரியர்)
இணைப்புகள்
நன்றி: அ.கா. பெருமாள், பக்தவத்சல பாரதி
⨮ Standardised
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.