ஹேமா ஆனந்ததீர்த்தன்: Difference between revisions
No edit summary |
Logamadevi (talk | contribs) No edit summary |
||
Line 85: | Line 85: | ||
*[https://www.commonfolks.in/books/hema-ananda-theerthan ஹேமா ஆனந்ததீர்த்தன் நூல்கள், காமன்ஃபோல்க்ஸ் தளம்] | *[https://www.commonfolks.in/books/hema-ananda-theerthan ஹேமா ஆனந்ததீர்த்தன் நூல்கள், காமன்ஃபோல்க்ஸ் தளம்] | ||
{{ | {{Finalised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 12:42, 3 October 2024
ஹேமா ஆனந்ததீர்த்தன் (ஜூலை 21, 1923 - 1986) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். வங்கியில் உயரதிகாரியாகப் பணியாற்றினார். பொது வாசிப்புகுரிய பல சிறுகதைகளை, நாவல்களை எழுதினார். கன்னடத்திலிருந்து சில முக்கிய நூல்களை மொழிபெயர்த்தார்.
பிறப்பு, கல்வி
ஹேமா ஆனந்ததீர்த்தன் (புனைபெயர்), ஜூலை 21, 1923 அன்று கோபிச்செட்டிப்பாளையத்தில் பிறந்தார். கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர். கோபிச்செட்டிப்பாளையத்திலும், கோவையிலும் பள்ளி, கல்லூரி பயின்றார். பொருளாதாரத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றார். சி.ஏ.ஐ.ஐ.பி பட்டம் பெற்றார். தமிழோடு ஆங்கிலம், இந்தி, மராத்தி, கன்னடம், மலையாள மொழிகளில் புலமை பெற்றார்.
தனி வாழ்க்கை
ஹேமா ஆனந்ததீர்த்தன், ரிசர்வ் வங்கியில் உதவி தலைமை உயரதிகாரியாகப் (Deputy Chief Officer) பணியாற்றினார். மணமானவர்.
இலக்கிய வாழ்க்கை
ஹேமா ஆனந்ததீர்த்தன் பள்ளியில் பத்தாம் வகுப்புப் படிக்கும்போது எழுதத் தொடங்கினார். 1939-ல், கோவையிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த ‘பாரதமாதா’ என்னும் காலணா இதழில் ஹேமா ஆனந்ததீர்த்தனின் முதல் படைப்பு வெளியானது. தொடர்ந்து ஆலிவர் கோல்ட் ஸ்மித் எழுதிய 'A City Night Piece', டென்னிஸனின் 'Dora' என்னும் நீள்கவிதை ஆகியவற்றை மொழிபெயர்த்து வெளியிட்டார். செயின்ட்ஜோசப் கல்லூரி ஆண்டு மலரில் வெளியான சில சிறுகதைகளை மொழிபெயர்த்தார்.
ஹேமா ஆனந்ததீர்த்தன், குமுதம் இதழில் மென்பாலியல் சார்ந்த பல சிறுகதைகளை எழுதினார். மாலைமதியில் பாலியல் சார்ந்த பல நாவல்களை எழுதினார். குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி. அண்ணாமலையால் தொடர்ந்து எழுத ஊக்குவிக்கப்பட்டார். ஹேமா ஆனந்ததீர்த்தனின் படைப்புகள் ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், இதயம் பேசுகிறது, குங்குமம், சாவி, தினமணி கதிர், குங்குமச்சிமிழ், ராணி முத்து, கதைக்கதிர் போன்ற இதழ்களில் வெளியாகின.
ஹேமா ஆனந்ததீர்த்தன், 300-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 30-க்கும் மேற்பட்ட நாவல்களையும் எழுதினார். இவருடைய சிறுகதைகளில் சில கன்னடம், தெலுங்கு, மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.
ஹேமா ஆனந்ததீர்த்தனின் ஒரு நாவல் ‘பட்டம் பதவி’ என்ற தலைப்பில் திரைப்படமானது.
மொழிபெயர்ப்பு
ஹேமா ஆனந்ததீர்த்தன், தென்னிந்திய மொழிகள் புத்தக ட்ரஸ்ட்டின் வேண்டுகோளுக்கிணங்க மொழிபெயர்ப்பில் ஈடுபட்டார். கன்னடத்திலிருந்து பல முக்கியமான படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்தார். தன் மொழிபெயர்ப்பு ஈடுபாடு பற்றி ஹேமா ஆனந்ததீர்த்தன், “எனக்குத் தெரிந்த மலையாளம், கன்னடம், மராத்தி ஆகிய மொழிகளில் நல்லதொரு படைப்பைப் படிக்கும் வாய்ப்புக் கிட்டியபோது அந்த நூலைத் தமிழ் வாசகர்களுக்கு வழங்க வேண்டும் என்ற என் ஆசை என்னை மொழிபெயர்ப்பில் ஊக்கியதற்கு முக்கியக் காரணமாகும்” என்று குறிப்பிட்டார்.
சர்ச்சை
ஹேமா ஆனந்ததீர்த்தன் பாலியல் சார்ந்த எழுத்துக்களை அதிகம் எழுதியதால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ‘துக்ளக்’ இதழில் ‘துர்வாசர்’ (வண்ணநிலவன்) ‘தமிழன் என்று சொல்லடா தலை குனிந்து நில்லடா’ என்ற தொடர் கட்டுரையில், ஹேமா ஆனந்ததீர்த்தனின் எழுத்துக்களை மிகக் கடுமையாகச் சாடி எழுதினார். மணியன் போன்றவர்கள் ஹேமா ஆனந்ததீர்த்தனை ஆதரித்து எழுதினர். ’சோ’ ராமசாமியும் இவ்வகைப் போக்குகளைக் கண்டித்து எழுதினார்.
குமுதம் இதழ் நடத்திய ‘சந்திக்கிறார்கள்’ பகுதியில், ஹேமா ஆனந்ததீர்த்தனை, எழுத்தாளர் கோவி. மணிசேகரன் ”செக்ஸ் எழுத்தாளர்’ என்று சாடி மிகக் கடுமையாக விமர்சித்தார்.
மறைவு
ஹேமா ஆனந்ததீர்த்தன் 1986-ல் காலமானார்.
மதிப்பீடு
ஹேமா ஆனந்ததீர்த்தன் பொது வாசிப்புக்குரிய பல சிறுகதைகளை பாலியல் கலந்து எழுதினார். வெகுஜன வாசகர்களால் ஈர்க்கப்பட்ட எழுத்தாளராக இருந்தார். குமுதத்தின் எழுத்தாள முகங்களுள் ஒன்றாக அறியப்பட்டார். ஹேமா ஆனந்ததீர்த்தன் பற்றி ஜெயமோகன், “ஹேமா ஆனந்ததீர்த்தனின் மொழியாக்கம் சரளமாகவும் நுட்பமாகவும் இருக்கிறது. தமிழில் ஒருகாலத்தில் கிளுகிளு எழுத்துக்காக பெயர் பெற்றிருந்த இவர் இன்று அவரது கன்னட மொழியாக்கங்களுக்காகவே நினைக்கப்படுகிறார். உண்மையில் அவருக்குப் பின்னர் கன்னடத்திலிருந்து தமிழுக்கு இத்தனை சிறப்பாக மொழியாக்கம் செய்யும் எவருமே அமையவில்லை. [1]” என்று மதிப்பிட்டார்.
நூல்கள்
நாவல்கள்
- மிஸ் ரேவதி
- திரிவேணி
- கண்ணாமூச்சி
- வைரப்பூ
- தேடி வந்த தேவதை
- பெண் வாசனை
- மனைவியின் குழந்தை
- சரயு உன்னை நடுத்தெருவில்
- வரப்பிரசாதம்
- வெறும் மனிதர்கள்
- எத்தனை கோடி இன்பம்
- ஒரு இரவின் சில நிமிடங்கள்
- துடிப்புகள்
- பெண்ணா பதுமையா?
- மன்னிப்பே கிடையாது
- புதிருக்குப் பெயர் பூமா
- அவளுக்கு யார் வேண்டும்
சிறுகதை
- பெட்டர் லேட் தென் நெவர்
- எனக்கும் ஆபரேஷன்
- நாமக்கல்லிலே பன்னிரண்டு நாள்
- ஒண்ணும் புரியலை
சிறார் படைப்பு
- சிறுவர் சிறுகதைப் பூங்கா
மொழிபெயர்ப்பு
- ஆண்டு விழா
- சென்னபசவப்ப நாய்க்கன்
- சொப்பன மாளிகை
- என் கதை
- சாக்கடையிலிருந்து
- முதலில்லாததும் முடிவில்லாததும்
- சிக்கவீர ராஜேந்திரன்
- பாழடைந்த கோவில்
- கீதா ஸாரோத்தாரம்
அடிக்குறிப்பு
உசாத்துணை
- எழுதுவது எப்படி? பாகம்-3, தொகுப்பாசிரியர்: மகரம், பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடு
- ஹேமா ஆனந்ததீர்த்தன் நூல்கள், காமன்ஃபோல்க்ஸ் தளம்
✅Finalised Page