கே. சீனிவாசலு: Difference between revisions
Jayaramart (talk | contribs) |
Jayaramart (talk | contribs) |
||
Line 201: | Line 201: | ||
கலை விமர்சகர் எஸ்.ஏ. கிருஷ்ணன் கூறுவது: 'சீனிவாசலு தான் போற்றும் ஜாமினி ராயிடம் ஒரு இணைமனதை கண்டுகொண்டார். ஜாமினி ராயின் துணிச்சலான நன்கு பின்னப்பட்ட வடிவமைப்பு, வண்ணத்தின் கச்சிதமான பயன்பாடு ஆகியவற்றால் சீனிவாசலு பெரிதும் ஈர்க்கப்பட்டார் என்றாலும், சீனிவாசலுவின் படைப்புகளில் ஜாமினி ராயின் நேரடி பாதிப்பு இருப்பதற்கான எந்த தடையத்தையும் பார்க்க முடியவில்லை. அவர்கள் இருவரது படைப்புகளின் கருத்தியலில், நடைமுறை அம்சத்தில் ஒற்றுமையும் வேற்றுமையும் உள்ளன. ஜாமினி ராயின் முக்கிய படைப்புகளில் ஒளி-நிழலின்(chiarascuro) அம்சம் சிறிதளவு கூட இல்லை. அவரது படைப்பு முறை மிகவும் நேரடியானது. அதன் வலிமை, வடிவம் கிட்டத்தட்ட உச்சத்தை தொட்டுவிடுவது. அதுபோலவே ஜாமினி ராயின் நிறங்கள் தட்டை பரப்பாக தீட்டப்பட்டது. அதன் பலனாக ஆற்றலும் எளிமையும் ஒரே நேரத்தில் வெளிப்படுவது. தூய அடிப்படை வடிவிற்கான தன் தேடலில் படைப்புகளில் இருக்கும் அதிகப்படியான அம்சங்களை எல்லாம் நீக்கி விடுகிறார் ஜாமினி ராய். சீனிவாசலுவின் அணுகுமுறை வித்தியாசமானது. அவர் ஆபரணங்களில், நுணுக்கமான வேலைப்பாடுகளில் திளைக்கிறார்... ஒருபுறம், இருவரும் அந்தந்த பகுதிகளில் உள்ள நாட்டுப்புறக் கலையின் ஆற்றலாலும் எளிமையாலும் கவரப்பட்டனர். ஜாமினி ராயிடம் சந்தால் பழங்குடியினர் ஏற்படுத்திய அதே தாக்கத்தை சீனிவாசலுவிடம் ராயலசீமாவின் சுகாலிகள் ஏற்படுத்தியிருக்கலாம். இருவருமே நாட்டுப்புற நாடகங்களிலிருந்து தங்கள் படைப்புகளுக்கான அடிப்படையை பெற்றவர்கள். கொண்டப்பள்ளி, திருப்பதி பொம்மைகள், தோல் பாவைகள், கோவில் சுவரோவியங்கள் சீனிவாசலுவின் பாணியை வடிவமைத்தது போல பாங்குரா, பீர்பூம், மிட்னாபூரில் உள்ள பட்டுவா ஓவியங்கள், நாட்டார் பொம்மைகள், சுடுமண் சிற்பங்கள் ஜாமினி ராயை ஈர்த்து அவரது படைப்பு பாணியை தீர்மானித்தன. சீனிவாசலுவின் ஆரம்பகால பாணியை தீர்மானிப்பதில் லேபாக்ஷி சுவரோவியங்கள் பங்களித்தது போலவே ஜாமினி ராய்க்கு விஷ்ணுபூர் சுடுமண் ஓடுகள், டானிஹார் சிற்பங்கள் இருந்தது' என்றார். | கலை விமர்சகர் எஸ்.ஏ. கிருஷ்ணன் கூறுவது: 'சீனிவாசலு தான் போற்றும் ஜாமினி ராயிடம் ஒரு இணைமனதை கண்டுகொண்டார். ஜாமினி ராயின் துணிச்சலான நன்கு பின்னப்பட்ட வடிவமைப்பு, வண்ணத்தின் கச்சிதமான பயன்பாடு ஆகியவற்றால் சீனிவாசலு பெரிதும் ஈர்க்கப்பட்டார் என்றாலும், சீனிவாசலுவின் படைப்புகளில் ஜாமினி ராயின் நேரடி பாதிப்பு இருப்பதற்கான எந்த தடையத்தையும் பார்க்க முடியவில்லை. அவர்கள் இருவரது படைப்புகளின் கருத்தியலில், நடைமுறை அம்சத்தில் ஒற்றுமையும் வேற்றுமையும் உள்ளன. ஜாமினி ராயின் முக்கிய படைப்புகளில் ஒளி-நிழலின்(chiarascuro) அம்சம் சிறிதளவு கூட இல்லை. அவரது படைப்பு முறை மிகவும் நேரடியானது. அதன் வலிமை, வடிவம் கிட்டத்தட்ட உச்சத்தை தொட்டுவிடுவது. அதுபோலவே ஜாமினி ராயின் நிறங்கள் தட்டை பரப்பாக தீட்டப்பட்டது. அதன் பலனாக ஆற்றலும் எளிமையும் ஒரே நேரத்தில் வெளிப்படுவது. தூய அடிப்படை வடிவிற்கான தன் தேடலில் படைப்புகளில் இருக்கும் அதிகப்படியான அம்சங்களை எல்லாம் நீக்கி விடுகிறார் ஜாமினி ராய். சீனிவாசலுவின் அணுகுமுறை வித்தியாசமானது. அவர் ஆபரணங்களில், நுணுக்கமான வேலைப்பாடுகளில் திளைக்கிறார்... ஒருபுறம், இருவரும் அந்தந்த பகுதிகளில் உள்ள நாட்டுப்புறக் கலையின் ஆற்றலாலும் எளிமையாலும் கவரப்பட்டனர். ஜாமினி ராயிடம் சந்தால் பழங்குடியினர் ஏற்படுத்திய அதே தாக்கத்தை சீனிவாசலுவிடம் ராயலசீமாவின் சுகாலிகள் ஏற்படுத்தியிருக்கலாம். இருவருமே நாட்டுப்புற நாடகங்களிலிருந்து தங்கள் படைப்புகளுக்கான அடிப்படையை பெற்றவர்கள். கொண்டப்பள்ளி, திருப்பதி பொம்மைகள், தோல் பாவைகள், கோவில் சுவரோவியங்கள் சீனிவாசலுவின் பாணியை வடிவமைத்தது போல பாங்குரா, பீர்பூம், மிட்னாபூரில் உள்ள பட்டுவா ஓவியங்கள், நாட்டார் பொம்மைகள், சுடுமண் சிற்பங்கள் ஜாமினி ராயை ஈர்த்து அவரது படைப்பு பாணியை தீர்மானித்தன. சீனிவாசலுவின் ஆரம்பகால பாணியை தீர்மானிப்பதில் லேபாக்ஷி சுவரோவியங்கள் பங்களித்தது போலவே ஜாமினி ராய்க்கு விஷ்ணுபூர் சுடுமண் ஓடுகள், டானிஹார் சிற்பங்கள் இருந்தது' என்றார். | ||
[[File:Mother & Child 3.jpg|alt=Mother & Child|thumb|401x401px|Fig. 25. 1954, Mother & Child (B&W copy). இந்த ஓவியத்தில் உருவங்கள் மேலிருந்து (top angle) காட்டப்பட்டுள்ளன.]] | [[File:Mother & Child 3.jpg|alt=Mother & Child|thumb|401x401px|Fig. 25. 1954, Mother & Child (B&W copy). இந்த ஓவியத்தில் உருவங்கள் மேலிருந்து (top angle) காட்டப்பட்டுள்ளன.]] | ||
ஜாமினி ராய் ஓவியங்களுடன் ஒப்பிடும்போது சீனிவாசலுவின் | ஜாமினி ராய் ஓவியங்களுடன் ஒப்பிடும்போது சீனிவாசலுவின் பல ஓவியங்களில் அசாதாரண கோணங்கள் (angles) உள்ளன (பார்க்க Fig. 25). வெவ்வேறு கோணங்கள் இருந்தாலும் ஓவியங்கள் ஐரோப்பிய யதார்த்த ஓவியங்களில் உள்ளது போல அல்லாமல், இந்திய மரபு சிற்ப ஓவிய தொகுப்புகளுக்கு நெருக்கமானதாக இருக்கிறது. சீனிவாசலுவின் ஓவியங்கள் இருபரிமாணத்தை கொண்டவையாக அமைந்திருக்கிறது. அவரது பல ஓவியங்கள் பார்வை கோணத்தின் (perspective) அடிப்படையில் வரையப்பட்டிருக்காது. அதை ஈடுசெய்யும் விதத்தில் வரையப்பட்டிருக்கும் உறுதியான கோடுகள் பார்வையாளரின் கவனத்தை ஓவியத்திற்குள் நிலை நிறுத்துகிறது. | ||
கோடுகள் சீனிவாசலுவின் ஓவியங்களில் முக்கிய பங்கு வகித்தன. மெலிதான கோடுகள் மென்மை நளினத்தையும், தடித்த எல்லை கோடுகள் ஆண்மை தன்மையையும் கொண்டிருக்கிறது. உருவங்கள் விறைப்பாக, நிமிர்வாக (பார்க்க Fig. 12) உள்ள படைப்புகளையும், உருவங்கள் நளினத்துடன் நாட்டியத் தன்மையுடன் (பார்க்க Fig. 1) உணர்வெழுச்சி அளிக்கும் ஆக்கங்களையும் சீனிவாசலு உருவாக்கியுள்ளார். இந்த நளினமும் நாட்டியத் தன்மையும் கலாக்ஷேத்ரா சூழல், இந்திய மரபோவியத்தில் இருந்து சீனிவாசலுவுக்கு கிடைத்திருக்கலாம். பெரும்பாலான உருவங்கள் ஒரு பக்க (profile) தோற்றத்துடனோ நேராகவோ காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சீனிவாசலுவின் ஓவியங்களில் வடிவமைப்புகள், வண்ணங்கள் நாட்டார் தன்மையையும் சில நேரங்களில் செவ்வியல் தன்மையையும் கொண்டுள்ளது. | கோடுகள் சீனிவாசலுவின் ஓவியங்களில் முக்கிய பங்கு வகித்தன. மெலிதான கோடுகள் மென்மை நளினத்தையும், தடித்த எல்லை கோடுகள் ஆண்மை தன்மையையும் கொண்டிருக்கிறது. உருவங்கள் விறைப்பாக, நிமிர்வாக (பார்க்க Fig. 12) உள்ள படைப்புகளையும், உருவங்கள் நளினத்துடன் நாட்டியத் தன்மையுடன் (பார்க்க Fig. 1) உணர்வெழுச்சி அளிக்கும் ஆக்கங்களையும் சீனிவாசலு உருவாக்கியுள்ளார். இந்த நளினமும் நாட்டியத் தன்மையும் கலாக்ஷேத்ரா சூழல், இந்திய மரபோவியத்தில் இருந்து சீனிவாசலுவுக்கு கிடைத்திருக்கலாம். பெரும்பாலான உருவங்கள் ஒரு பக்க (profile) தோற்றத்துடனோ நேராகவோ காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சீனிவாசலுவின் ஓவியங்களில் வடிவமைப்புகள், வண்ணங்கள் நாட்டார் தன்மையையும் சில நேரங்களில் செவ்வியல் தன்மையையும் கொண்டுள்ளது. |
Revision as of 15:52, 27 September 2024
கே. சீனிவாசலு (அடையார் சீனிவாசலு) (ஜனவரி 6, 1923 - ஆகஸ்ட் 3, 1994) இந்தியாவின் தமிழ்நாட்டில் செயல்பட்ட நவீன ஓவியக் கலைஞர். மெட்ராஸ் நவீன காண்பியல் கலைச்சூழலில் தென்னிந்திய நாட்டுப்புறம், இந்திய மரபு சார்ந்த அழகியலை படைப்புக்களாக ஆக்கியவர். இந்திய நவீன ஓவியர்களுள் முக்கியமானவரான வங்காளத்தை சேர்ந்த ஜாமினி ராயுடன் ஒப்பிடப்படுபவர். கலாக்ஷேத்ராவின் கலை இயக்குநராகவும், மெட்ராஸ் மற்றும் கும்பகோணம் அரசினர் கலை தொழில் கல்லூரிகளின் (இன்றைய அரசு கவின்கலைக் கல்லூரி) துணை முதல்வராகவும் முதல்வராகவும் பணியாற்றியவர். லலித்கலா அகாடமியின் நடுவராக செயல்பட்டார்.
பிறப்பு, இளமை
கே. சீனிவாசலு ஜனவரி 6, 1923 அன்று பிரிட்டிஷ் இந்தியாவில் மெட்ராஸ் மாகாணத்தில் பிறந்தார். தந்தை ஆர். கிருஷ்ணசுவாமி நாயுடு, தாய் ராஜம்மா. சீனிவாசலுவுக்கு எஸ். சேஷாத்ரி என்ற அண்ணனும், பத்மாவதி என்ற அக்காவும் இருந்தனர். சீனிவாசலுவுக்கு அடுத்ததாக பிறந்த தம்பி ஒருவர் சிறுவயதிலேயே காலமானார். புச்சையா என்பது சீனிவாசலுவின் செல்லப் பெயராக இருந்தது.
சீனிவாசலுவின் தந்தையார் ஒரு பதிப்பகத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றினார். பிற்காலத்தில் சென்னை திருவல்லிக்கேணியில் ஒரு தேநீர்க்கடை நடத்தினார்.
சீனிவாசலுவின் தந்தை கிருஷ்ணசுவாமி களிமண் சிற்பங்கள் உருவாக்குவதில் நிபுணத்துவம் கொண்டிருந்தார். நாடகத்திலும் அவருக்கு ஈடுபாடு இருந்தது. சென்ட்ரல் ரயில் நிலையம், குடிசைகள், வயலில் வேலை செய்யும் ஆண் - பெண்கள், திருவிழா காட்சிகள், குன்றுகள், மரங்கள், ரிப்பன் மாளிகை போன்ற உருவங்களை சிறிய அளவில் உருவாக்கி, அவற்றை சென்னை பீப்பிள்ஸ் பார்க்கில் நடந்த விழாவில் அங்கு காட்சிப்படுத்தப்பட்ட கைவினை பொருள்களுடன் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
கே. சீனிவாசலு தன் தந்தையைப் பார்த்து தானும் களிமண் உருவங்கள் உருவாக்குவதை கற்றுக்கொண்டார். 'தான் ஒரு வேளை களிமண்ணில் படைப்புகள் உருவாக்குவதை தொடர்ந்து செய்திருந்தால் தான் ஒரு நல்ல சிற்பியாகி இருக்கலாம்' என்று சீனிவாசலு கூறியுள்ளார். தன் தந்தை விநாயகர் சதுர்த்தி விழாக்காலத்தில் சொந்தத் தேவைக்காகவும், விற்பனைக்காகவும் விநாயகர் உருவங்கள் உருவாக்குவதை பார்த்து வளர்ந்தவர் என்பதால் தானும் அப்பழக்கத்தை முதிய வயது வரை தொடர்ந்தார்.
இளமைப் பருவத்தை ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள நாகலாபுரம் என்ற தன் பூர்விக கிராமத்தில் கழித்தார் சீனிவாசலு. ஆந்திராவின் புகழ்பெற்ற கொண்டப்பள்ளி மரப்பொம்மைகள், கருங்காலி மரத்தில் செய்யப்படும் திருப்பதி பொம்மை உருவங்கள், ஆந்திரா-தமிழ்நாட்டின் தோல்பாவைகள் சீனிவாசலுவை கவர்ந்தன. ஆரம்பத்தில் மகிழ்ச்சிக்காக அப்பொம்மைகளை பார்த்து வரைய ஆரம்பித்து பிற்காலத்தில் சீனிவாசலுவின் படைப்புகளில் அவை முக்கிய கருக்களாக மாறின.
தான் சிறுவனாக இருந்தபோது சேர்ந்த ஒரிஜினல் பாய்ஸ் நாடகக் கம்பெனி நிறுவனத்தின் திரைச்சீலைகள் மூலம் தான் தனது வாழ்க்கையில் ஓவியத்தின் அறிமுகம் நிகழ்ந்தது என்று சீனிவாசலு தெரிவித்திருக்கிறார். முதலில் படங்கள் வரையவும் வண்ணங்கள் மேல் ஈடுபாடு உண்டாகவும் அதுவே காரணமாக இருந்தது. சீனிவாசலுவின் குடும்பம் அவரது கொள்ளுத்தாத்தா காலத்தில் உள்ளூர் கலை நிகழ்ச்சிகளுக்காக ஒரு அரங்கத்தை வைத்திருந்தது. நாடகங்களுக்கு தேவையான பின்னணி ஓவியங்கள், பொருட்கள், மேடை அலங்காரம், கட்-அவுட்கள் செய்து கொடுத்து தன் குடும்பத்தினருடன் சம்பந்தப்பட்ட நாடக வாழ்க்கையில் தானும் ஆர்வத்துடன் பங்களிப்புகளை செய்தார் சீனிவாசலு. அந்த நாடகங்கள் யாவும் புராணங்கள், நாட்டார் மரபுகள் சார்ந்தவையாக இருந்ததால் அவை சீனிவாசலுவின் படைப்புகளுக்கு வலுவான அடித்தளத்தை உருவாக்கி அளித்தன.
தனி வாழ்க்கை
சீனிவாசலுவின் மனைவி பெயர் நாகரத்தினம், சென்னை மின்ட் தெருவில் வாழ்ந்த தெலுங்கு குடும்பத்தைச் சேர்ந்தவர். சீனிவாசலு - நாகரத்தினம் இணையருக்கு எஸ். சேஷாத்ரி, கே. சித்தரஞ்சன் (கே. கோபால்), எஸ். தியாகராஜன் என்று மூன்று மகன்கள், கே. சித்ரா ஜெகந்நாதன், எஸ். சங்கமித்ரா- சபிதா என்ற இரட்டையர்கள், எஸ். சுஜாதா என்று நான்கு மகள்கள். வங்க நிலத்தின் மீது சீனுவாசலுவுக்கு இருந்த பற்று காரணமாக வங்கத்தில் உள்ள சித்தரஞ்சன் லோகோமோட்டிவ் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரிலிருந்து தன் இரண்டாவது மகனுக்கு சித்தரஞ்சன் என்று பெயரிட்டார்.
சீனிவாசலு தான் வரைந்த புத்தர் சார்ந்த ஓவியங்களின் தாக்கத்தால் தன் மகள்களுள் ஒருவருக்கு சங்கமித்ரா என்று பெயரிட்டார். அசோக் லேலண்ட் நிறுவனத்தில் பணிபுரிந்த சீனிவாசலுவின் மூத்த மகன் சேஷாத்ரி, கலாக்ஷேத்ராவில் சீனிவாசலு செய்த அரங்க வடிவமைப்புகள், அலங்கார வேலைகளுக்கு உதவியாக இருந்தார்.
ஓவியக்கல்வி, பணி
பள்ளிக் கல்வியில் சிறப்பாக செயல்பட பெற்றோர் அழுத்தம் கொடுத்தபோது வீட்டை விட்டு வெளியேறினார் சீனிவாசலு. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர் தங்கராஜ் என்ற மருத்துவரை வழிகாட்டியாக கொண்டார். டாக்டர் தங்கராஜ் மாலை நேரங்களில் வால்டாக்ஸ் சாலையில் நடத்திய தனியார் சிகிச்சை மையத்தில் சிறு வேலைகளில் உதவினார். அந்த மருத்துவர் சீனிவாசலுவின் ஓவியத் திறமையை அறிந்து 1936-ஆம் ஆண்டு அவரை மெட்ராஸ் கலை பள்ளியில் சேர்த்தார். சீனிவாசலு கலைப் பள்ளியின் நுழைவுத் தேர்வில் நன்றாக தேர்ச்சி பெற்றதால் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்க்கப்பட்டார்.
அப்போது டி.பி. ராய் சௌத்ரி மெட்ராஸ் கலை பள்ளியின் முதல்வராக இருந்தார். சீனிவாசலு படிக்கும் காலத்தில் கே.சி.எஸ். பணிக்கர், பரிதோஷ் சென், எஸ். தனபால் போன்ற முக்கிய கலைஞர்கள் மெட்ராஸ் கலைப் பள்ளியில் மாணவர்களாக இருந்தார்கள். மெட்ராஸ் கலைப் பள்ளியில் மேற்கத்திய கல்விசார் (academic) முறையிலான ஓவிய பாடத்திட்டம் இருந்தது. காலையில் வகுப்பறையில் உருவப்படங்கள் (model drawing), மாதிரி-உருவ ஓவியங்கள் (still life) வரைதல், பிற்பகல் வெளியே சென்று வெளிப்புற காட்சிகளை (Outdoor study) நீர் வண்ணம் அல்லது தைல வண்ணத்தில் வரைந்து பழகுவது மாணவர்களின் வழக்கம்.
சீனிவாசலு ஐரோப்பிய மறுமலர்ச்சி ஓவியர்கள், பிரிட்டிஷ் ஓவியர்களை புத்தகங்கள் வாயிலாக தெரிந்து கொண்டார். டர்னர் (J.M.W. Turner), ப்லின்ட் (William Russel Flint), ஹிட்ளர் (Rowland Hidler) ஆகியவர்களின் படைப்புகள் அவரை ஈர்த்தது. பிராங்க் ப்ரைங்விங் (Frank Brangwyn) சீனிவாசலுவுக்கு பிடித்த பிரிட்டிஷ் ஓவியர். பிரிட்டிஷ் ஓவியர்களின் யதார்த்தமான ஓவியங்கள் எழுச்சியூட்டும் வண்ணங்களுடன் மிக அழகாக இருப்பதாக சீனிவாசலு கருதினார். இந்த முன்னோடிகளின் செல்வாக்குடன் இந்தியக் கருக்களை சித்தரித்து ஒரு உள்நாட்டு பாணி ஒன்றை உருவாக்க நினைத்தார் சீனிவாசலு.
1938-ல் சீனிவாசலு தன் நினைவிலிருந்து வரைந்த புத்தரை நிறுவுதல் (பார்க்க: Fig. 3, Erection of Buddha) என்ற தொகுப்பு ஓவியம் (group composition), கலைப்பள்ளி பாடங்களுக்கு வெளியே இந்தியக் கருவை மையமாக கொண்டு செய்த முயற்சிகளுள் முன்னோடியான ஒன்று. பலர் சேர்ந்து புத்தரின் சிலை ஒன்றை பீடத்தில் நிறுவ தீவிரமாக முயலும் காட்சியாக வரையப்பட்ட இந்த ஓவியம் கலைப்பள்ளி முதல்வர் டி.பி. ராய் சௌத்ரியின் பாராட்டைப் பெற்றது.
அதன் பிறகு ராய் சௌத்ரி சீனிவாசலுவுக்கு உடற்கூறியலை முழுமையாகவும் துல்லியமாகவும் வரைந்து பழக கூடுதல் உருவ மாதிரிகளை (human models) ஏற்பாடு செய்து கொடுத்தார். 1939-ல் சீனிவாசலு வரைந்த நிர்வாண ஓவியம் (பார்க்க: Fig. 4, Nude study) யதார்த்தத் தன்மையும் (academic realism), மனப்பதிவுவாத (impressionistic) கோடுகளையும் கொண்டுள்ளது.
மை மேகசின் (My Magazine) என்ற பத்திரிகையில் ஓவியங்கள் வரைந்து கிடைத்த சிறு வருமானத்தில் தன் தினசரிச் செலவுகளை சமாளித்தார் சீனிவாசலு. வரைந்த ஓவியங்களை திருப்பி கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் நண்பர்களிடம் வரைவதற்கான உபகரணங்களை பெற்று வரைந்தார். இக்காரணத்தால் சீனிவாசலுவால் அக்காலங்களில் வரைந்த ஓவியங்களை பாதுகாக்க முடியவில்லை.
இரண்டாம் ஆண்டு இறுதியில் வகுப்பில் முதலிடத்தில் வந்ததால் சீனிவாசலுவுக்கு சென்னை விக்டோரியா தொழில்நுட்ப நிறுவனத்தின் (Victoria Technical Institute) உதவித் தொகையாக மாதம் ரூபாய் 15 கிடைத்தது. அத்தொகையின் உதவியால் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி பெரியளவில் பயிற்சிகளில் ஈடுபட்டார். கலைப்பள்ளி இறுதி ஆண்டில் டைபாய்டு காய்ச்சல் காரணமாக பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது உலகப் போரும் துவங்கியதால், தன் நண்பனின் அழைப்பின் பேரில் நாகலாபுரத்தில் போய் தங்கினார். இதன் காரணமாக கலைப்பள்ளி இறுதி தேர்வில் சீனிவாசலுவால் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனால் கலைப்பள்ளி முதல்வர் கேட்டுக் கொண்டபடி தேர்வுக்கான வகுப்பு பாடங்களை அனுப்பியதால் இறுதி தேர்வில் தங்கப் பதக்கத்துடன் வென்று 1941-ல் மெட்ராஸ் கலைப் பள்ளியில் டிப்ளமோ முடித்தார் சீனிவாசலு.
ஒரு நாள் பிரம்மஞான சங்கத்தின் வளாகத்தில் சீனிவாசலு இயற்கை ஓவியம் வரையும் திறமையை கண்ட ருக்மிணி தேவி அருண்டேல் அவரை சென்னை அடையாறு பெசன்ட் பள்ளியின் ஓவிய ஆசிரியராக 1943-ஆம் ஆண்டு சேர்த்துக் கொண்டார். தியோசபிகல் சொசைட்டி, பெசன்ட் பள்ளி, கலாக்ஷேத்ரா போன்ற நிறுவனங்களின் இருப்பிடமாக அடையார் பகுதி இருந்தது. இந்நிறுவனங்களில் இந்திய மரபு நடனம், இசை, ஓவியங்களை மீட்கும் பணிகள் நடந்து கொண்டிருந்தது. அது மட்டுமல்லாமல் நாடகம், அலங்காரம், நாட்டுப்புற நடனம் ஆகியவற்றுக்கும் அங்கே இடமிருந்தது. இந்திய கலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட அச்சூழல் சீனிவாசலு தன் மண் சார்ந்த விஷயங்கள் நோக்கி திரும்ப தூண்டுகோலானது.
சீனிவாசலுவின் ஓவியங்களில் அடையாற்றின் சூழல் எதிரொலித்தது. 1961ஆம் ஆண்டு அடையாறு பக்தவத்சலம் நகரில் வீடு வாங்கி குடிபெயர்ந்தார் சீனுவாசலு. கலைச் சூழலில் அடையாறு சீனிவாசலு என்றே அழைக்கப்பட்டார். அடையாறு வீட்டில் சீனிவாசலுவை சந்திக்க வரும் கலைஞர்கள் எஸ். தனபால், கிருஷ்ணா ராவ், ரெட்டப்ப நாயுடு, கலம்காரி கலைஞர் கோரா ராமமூர்த்தி, பிலகா கிருஷ்ணமூர்த்தி, ஆர்.பி. பாஸ்கரன், கே.எம். ஆதிமூலம், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான விநாயகம், தீனதயாள் போன்றவர்கள் சீனிவாசலுவுக்கு நெருக்கமானவர்களாக இருந்தார்கள். அடையாறு வீட்டின் கூரை வேய்ந்த மாடியில் சீனிவாசலுவின் மாணவர்கள் தங்கிப் படிப்பது வழக்கமாக இருந்தது.
1963-ல் எழும்பூர் மாண்டியத் சாலையில் இருந்த கைவினைத் துறையின் வடிவாக்க மையத்தின் தலைவராக சீனிவாசலுவுக்கு அரசு வேலை கிடைத்தது. பெசன்ட் பள்ளி வேலையை ராஜினாமா செய்தார். கைவினை மையத்தில் கைவினைஞர்கள் நகலெடுப்பதற்காக பாரம்பரியமான வடிவமைப்புகளை புதிய முறையில் உருவாக்கி அளிப்பது, பொம்மைகள் உருவாக்குதல், புதியவர்களுக்கு பயிற்சி அளிப்பது ஆகியவற்றை செய்தார். பயன்பாட்டுத் தேவைகளான பாத்திரங்கள் (பார்க்க: Fig. 5), ஜவுளி போன்றவற்றுக்கு கலை வடிவம் கொடுக்கும் முயற்சிகளை மேற்கொண்டார். கூடவே வாரத்திற்கு ஓரிரு முறை மாலை வேளைகளில் கலாக்ஷேத்ராவில் நுண்கலை வகுப்புகள் எடுத்தார். அடுத்து சில வருடங்கள் சென்னை, கும்பகோணம் அரசினர் கலை தொழில் கல்லூரிகளின் துணை முதல்வராகவும் முதல்வராகவும் இருந்து ஓய்வு பெற்றார். பிறகு தன் இறுதிக் காலம் வரை சென்னை கலாக்ஷேத்ராவில் கலை இயக்குநராகவும் ஓவிய ஆசிரியராகவும் பணியாற்றினார்.
சீனிவாசலு லலித் கலா அகாடமியின் உறுப்பினராகவும் நடுவராகவும் இருந்துள்ளார். லலித் கலா அகாடமியின் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டாலும் சீனிவாசலுவால் வெற்றிபெற முடியவில்லை.
கலை வாழ்க்கை
மெட்ராஸ் கலைப்பள்ளி காலம்
சீனிவாசலு சிறுவயதிலேயே வரைகலைஞராக இருந்தாலும், மெட்ராஸ் கலைப் பள்ளியில் சேர்ந்த பிறகே முறைப்படி ஓவியம் கற்கத் துவங்கினார். கலைப் பள்ளி நாட்களில் சீனிவாசலு ஐரோப்பிய கல்விசார் யதார்த்த பாணி (academic realism) முறைப்படி, மனித உடற்கூறியலுக்கு (human anatomy) முக்கியத்துவம் கொடுத்து மனித உருவங்கள், நிர்வாண ஓவியங்கள், நிலக் காட்சிகள் வரைந்தார். இந்தியக் கருவும் மேற்கத்திய வெளிப்பாட்டு முறையும் உள்ள புத்தரை நிறுவுதல் (Erection of Buddha), கடல் திருவிழா (Sea Festival) போன்ற தொகுப்போவியங்கள் (group compositions) வரைந்து பார்த்தார்.
மனப்பதிவுவாதம் (Impressionism) போன்ற கலை இயக்கங்களின் செல்வாக்கும் சீனிவாசலுவின் ஓவியங்களில் இருந்தது. சீனிவாசலு அப்போது வரைந்த ஓவியங்கள் பெரும்பாலும் நீர்வண்ணம் (water colours), டெம்பரா (tempera) உபயோகித்து வரையப்பட்டன. தைல வண்ணம் (oil colors) சீனிவாசலுவுக்கு பிடித்தமான ஊடகமானாலும், விலை அதிகம் என்பதால் அதை பயன்படுத்துவதை தவிர்த்தார். மெட்ராஸ் கலைப் பள்ளியில் பயின்ற மேற்கத்திய பாணி ஓவியங்களை பற்றி சீனிவாசலு கூறியது:
'நான் நிச்சயமாக மேற்கத்திய ஓவிய முறைகளுக்கு மிகவும் கடன்பட்டிருக்கிறேன். நீர் வண்ணம், பேஸ்டலில் (pastel) வரையப்பட்ட மேற்கின் படைப்புகளை ஆர்வத்துடன் கற்றேன். மேற்கின் யதார்த்தவாதம், நீர்வண்ணத்தில் தீட்டப்படும் நிலக் காட்சி ஓவியங்கள், மாதிரி-உருவ ஓவியங்கள், உருவப்படங்கள், நிர்வாண ஓவியங்கள் போன்றவற்றை நம் பாரம்பரிய அடிப்படைகளில் எந்த மாற்றத்தையும் வருத்தாமல் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியும். அத்தகைய மேற்கத்திய நுட்பங்களில் நான் கொண்டிருந்த அடிப்படை அறிவு எனக்கு நம்பிக்கையை அளித்து பேருதவி புரிந்தது' என்று குறிப்பிட்டார்.
அடுத்த காலங்களில் உருவாக்கிய படைப்புகளை மெட்ராஸ் கலைப் பள்ளியில் பயின்ற டெம்பரா, நீர் வண்ணம் போன்ற ஊடகங்களை பயன்படுத்தியே வரைந்தார் சீனிவாசலு.
ஜி.ஹச். கசின்ஸ், பெங்காள் பள்ளி, இந்திய மரபு
சீனிவாசலு அடையாறில் பணியாற்றத் துவங்கிய பிறகு புகழ்பெற்ற கலை விமர்சகரான டாக்டர் ஜி.ஹச். கசின்ஸிடமிருந்து (Dr.G.H. Cousins) இந்திய நவீனக் கலைப் போக்குகளை, இந்தியக் கலையை மீட்க முயற்சித்த பெங்காள் மறுமலர்ச்சி பள்ளியின் நோக்கங்களை தெரிந்து கொண்டார். பெங்காள் ஓவியர்களின் படைப்புகளை கூர்ந்து பயின்றார். டோலி (Doli) (பார்க்க Fig. 6) போன்ற படைப்புகளை பெங்காள் பள்ளியின் கழுவும் முறையிலான பாணியில் செய்து பார்த்தார்.
இந்த அனுபவங்களும் அருகில் இருந்த கலாக்ஷேத்ராவின் இந்திய நடனம், இசை நிறைந்த சூழலும் சீனிவாசலுவிடம் இருந்த இந்திய தன்மையின் பற்றாக்குறையை அவருக்கு உணர வைத்து இந்திய கலை மற்றும் பாரம்பரியம் நோக்கித் திரும்ப வழிவகுத்தது. தான் படித்த மெட்ராஸ் கலைப் பள்ளியில் பெயரளவிற்கு கூட இந்தியாவின் வளமான பாரம்பரியம் பற்றியோ, அஜந்தா, எல்லோரா, சித்தன்னவாசல் பற்றியோ சொல்லித்தரப்படவில்லை என்றும், குறைந்த பட்சம் இப்போதாவது டாக்டர் கசின்ஸ் தன் கண்களை திறந்தது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் சீனிவாசலு தெரிவித்தார்.
பெங்காளின் புகழ்பெற்ற ஓவியர் நந்தலால் போஸால் வரையப்பட்டு, தற்போது டெல்லி தேசிய நவீன கலைக்கூடத்தில் இருக்கும் 'பிரதிக்ஷா' என்ற ஓவியத்தின் நேரடி செல்வாக்கு சீனிவாசலு வரைந்த 'நிலாவும் வண்டியும்' (Fig. 7) என்ற நிலக்காட்சி ஓவியத்தில் காண முடிகிறது.
சமண சிற்றோவியங்கள், ஜாமினி ராயின் அறிமுகம்
1940 காலகட்டங்களில் சீனிவாசலுவுக்கு மேற்கு இந்தியாவின் சமண சிற்றோவியங்களின் (jain miniatures) மூல சேகரிப்புகளை அறியும் வாய்ப்பு கிடைத்தது. பெங்காளின் நவீன ஓவியர் ஜாமினி ராயின் (Jamini Roy) செல்வாக்கும் இவரிடம் உருவானது.
படிநிலைகளை கருத்தில் கொண்டு வரையப்பட்டிருக்கும் உருவங்கள், பக்கவாட்டில் துருத்தி நிற்கும் கண்கள், தட்டையான இருபரிமாண வெளி, தாளலயத்துடன் எங்கும் பாயும் கோடுகள், வடிவமைப்புகள் ஆகிய சமண சிற்றோவியங்களின் பண்புகள், ஜாமினி ராயின் கோடுகளின் எளிமை துணிவு ஆகியவை சீனிவாசலுவை கவர்ந்தது. ஜாமினி ராயின் பேசுபொருட்களான மீனுடன் பூனை, குதிரை பொம்மை முதலியவை சீனிவாசலுவின் ஓவியங்களிலும் உள்ளது. சீனிவாசலுவின் படைப்புகளில் காணப்படும் முகங்களை தாண்டி பக்கவாட்டில் துருத்தி நிற்கும் நீண்ட கண்கள், நீளமான கழுத்து, சிறிய உதடுகள், தட்டையான கழுத்துப்பட்டை ஆகியவை ஜாமினி ராயின் ஓவியங்களில் உள்ள இயல்புகள்.
சீனிவாசலு ஜாமினி ராயை பற்றி கூறுவது, "நான் அவரை நவீன நாட்டுப்புற கலையின் முன்னோடியாக பெருமதிப்புடன் ஏற்றுக்கொள்கிறேன். ஜெமினி ராய் நாட்டார் அழகியலை ஏற்றுக் கொண்டதன் மூலம் நவீன இந்திய ஓவியத்தில் புதுயுக பழங்குடி மரபொன்றிற்கு தொடக்கம் குறித்தார்". ஜி.ஹச். கசின்ஸின் உரை, பெங்காள் பள்ளி ஓவியங்கள், கலாக்ஷேத்ராவின் சூழல், ஜாமினி ராயின் ஓவியங்கள், மேற்கிந்திய சமண சிற்றோவியங்கள் ஆகியவை சீனிவாசலுவின் படைப்புகளில் செல்வாக்கை செலுத்தின.
தென்னிந்திய நாட்டுப்புறத் தாக்கம்
1947-ல் கலாக்ஷேத்ராவில் நடந்த ஒரு நாட்டிய நாடகத்திற்காக ஶ்ரீரங்கம், காஞ்சிபுரம், ஶ்ரீவில்லிபுத்தூர் போன்ற தென்னிந்திய கோவில்களில் உள்ள சில வடிவமைப்புகளை நகலெடுத்தார் சீனிவாசலு. இந்த பணி அவருக்கு பல தென்னிந்திய கோவில்களின் ஓவியங்கள், சிற்பங்களை அறிமுகப்படுத்தியது. அதற்காக பயணித்த போது தென்னிந்திய கிராமப்புற மக்களின் அன்றாட வாழ்க்கை, தொன்மங்கள், சின்னங்கள், ஐய்யனார் போன்ற தென்னிந்திய நாட்டார் தெய்வ வடிவங்கள், பிரபலமான நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகள், திருவிழாக்களால் ஈர்க்கப்பட்டார். அவற்றை தன் படைப்புகளிலும் காட்டினார்.
அப்பயணத்தை பற்றி சீனிவாசலு கூறியது: "மக்கள், அவர்களின் ஊர் தெய்வங்கள், திருவிழாக்கள், அவர்களின் சடங்குகள், பொம்மலாட்டம், பொய்க்கால் குதிரை-ஆட்டம், கோலாட்டம், ஜல்லிக்கட்டு, கரகம் போன்ற நடனங்கள் ஆகியவற்றை கவனித்தேன். அதெல்லாம் என்னை நிறைய ஓவியங்கள் வரைய தூண்டிய போது பிற்காலத்தில் அவ்வோவியங்கள் நாட்டுப்புறக் கலை ஆக்கங்களாக அறியப்படும் என்று எனக்கு அப்போது தெரியாது."
இதன் தாக்கம் அவரது கோலாட்டம் (Kolattam), சீட்டாட்டக்காரர்கள் (Card players), கயிறு இழுத்தல் (Tug of War), சேவல் சண்டை (Cockfighting) (பார்க்க Fig. 8), கண்ணாடியுடன் கூடிய பெண், தெரு பிச்சைக்காரர்கள், தோட்டிகள் போன்ற ஓவியங்களில் வெளிப்பட்டது. கிராமியம் சார்ந்த சூழல், எளிய அன்றாட வாழ்கை சார்ந்த கருப்பொருட்களின் மேல் சீனிவாசலுவிற்கு இருக்கும் ஆர்வம் இந்த ஓவியங்களில் தெரிகிறது.
லேபாக்ஷி, சிகிரியா, தஞ்சை ஓவியங்கள்
1940களின் பிற்பகுதியில் இலங்கையின் சிகிரியாவில் உள்ள சுவரோவியங்கள், தஞ்சாவூர் சோழர்கால ஓவியங்களை நகலெடுக்கும் பணிக்கு மெட்ராஸ் அரசு அருங்காட்சியகத்தால் நியமிக்கப்பட்டார் சீனிவாசலு.
பின்னர், விஜயநகர காலத்தில் கட்டப்பட்ட நாகலாபுரம் கோயில் நிர்வாகிகளின் வேண்டுகோளின்படி அக்கோவிலின் உற்சவ வாகனங்களை புதிதாக வண்ணம் தீட்டியும், அழிந்து கொண்டிருந்த சுவரோவியங்களை புனரமைத்தும் கொடுத்தார் சீனிவாசலு. இந்த அனுபவம் பின்னர் சீனிவாசலு லேபாக்ஷி சுவரோவியங்களை நகலெடுத்த போது உதவியது.
ராஜாஜி மெட்ராஸ் மாகாண முதலமைச்சராக இருந்த போது பாபனேஷ்வரா கோவிலை பார்வையிட்டார். அக்கோவிலில் உள்ள பழைய கால சுவரோவியங்கள் ராஜாஜியை கவர்ந்ததால், இது போன்ற புராதன இடங்களில் உள்ள கலைப்படைப்புகள் பாதுகாக்க படவேண்டும் என்று கல்லூர் சுப்பாராவிடம் வலியுறுத்தினார். கல்லூர் சுப்பாராவ் அன்று மெட்ராஸ் மாகாணத்தின் பகுதியாக இருந்த ஆந்திராவின் ஹிந்துப்பூரில் உள்ள லேபாக்ஷி வீரபத்திரர் கோவில் மேற்கூரையில் வரையப்பட்ட விஜயநகர காலத்து சுவரோவியங்களை நகலெடுக்கும் பொறுப்பை சீனிவாசலுவிடமும், பி.எல். நரசிம்மமூர்த்தியிடமும் ஒப்படைத்தார்.
1948 முதல் 1951 வரை லேபாக்ஷி சுவரோவியங்களை 500 பகுதிகளாக வரைந்தார் சீனிவாசலு. அச்சுவரோவியங்களில் உள்ள பெண் வடிவங்கள், செழுமையான அடர் நிறங்கள், உடைகள், புடவை, திரைச்சீலை, நகைகளில் உள்ள வடிவமைப்புகள், அலங்காரங்கள் சீனிவாசலுவின் படைப்புகளிலும் எதிரொலித்தது.
சீனிவாசலு வரைந்த சிவ நடனம் ஓவியத்தில் (பார்க்க Fig. 9) தஞ்சாவூர் சோழர் கால சுவரோவியத்தின் பாதிப்பை காண முடிகிறது.
சீனிவாசலுவின் படைப்புகளில் சிகிரியா ஓவியங்கள், தஞ்சை சோழ ஓவியங்களை விட லேபாக்ஷி ஓவியங்களின் செல்வாக்கு பெரியளவில் இருந்ததாக விமர்சகர்கள் குறிப்பிட்டார்கள். சீனிவாசலு வரைந்த தாமரை-மாலை (Lotus Garland) (பார்க்க Fig.10) ஓவியம் லேபாக்ஷி சுவரோவியங்களின் தாக்கத்திற்கு உதாரணம். புகழ்பெற்ற தாமரை-மாலை ஓவியத்திற்கு ஜனாதிபதி விருது கிடைத்தது. பின்னர் இந்த ஓவியம் சோவியத் அரசாங்கத்தால் வாங்கப்பட்டது.
"வாழ்க்கையில் நான் என்னவாக ஆகவேண்டும் என்பதற்கு நான் நகல் எடுத்த கோவில் ஓவியங்கள் மூலம் ஒளி கிடைத்தது. முதலில் அஜந்தாவின் சமகாலத்தை சேர்ந்த ஶ்ரீலங்காவில் உள்ள சிகிரியா மலைக் கோட்டை சுவர் ஓவியங்களை நகல் எடுக்கச் சென்றேன். அந்த ஓவியங்கள் புத்த மதம் சார்ந்ததாக இருந்தன. ஆனால் தஞ்சை பெரிய கோயிலில் உள்ள சோழர்கால ஓவியங்களில் தட்டையான தள அமைப்பிலேயே ஏற்படுத்தப்பட்ட ஒளி/நிழல் பிரமிப்பை உண்டாக்கியது. இது அஜந்தாவின் வண்ண உத்திகளைக் கொண்டிருந்தது. அடுத்து ஆந்திராவில் லேபாக்ஷி சுவர் ஓவியங்களை நகல் எடுத்த போது கருப்பு நிறத்தாலான அழுத்தமான வரை கோடுகள் என் மனதில் அழுத்தமாகப் பதிந்து விட்டன" என்றார் சீனிவாசலு.
கே. சீனிவாசலுவும், பி.எல். நரசிம்ம மூர்த்தியும் நகலெடுத்த லேபாக்ஷி ஓவியங்கள் ஆகஸ்ட் 19, 1951 அன்று மெட்ராஸ் தலைமை நீதிபதி பி.வி. ராஜமன்னாரால் திறந்து வைக்கப்பட்டது.
கலாக்ஷேத்ரா
சீனிவாசலு 1978-ல் கும்பகோணம் கலைக் கல்லூரியின் முதல்வர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். அதற்கடுத்து கலாக்ஷேத்ராவின் கலை இயக்குநராக பொறுப்பேற்று தன் இறுதி காலம் வரை அங்கே பணியாற்றினார்.
சீனிவாசலு தன் சகோதரி பத்மாவதியையும் கலாக்ஷேத்ராவில் ஒப்பனை கலைஞராக சேர்த்துக் கொண்டார். கலாக்ஷேத்ராவின் நுண்கலைத் துறையின் தலைவர் பொறுப்பையும் வகித்து, அத்துறையின் பாடத்திட்டத்தை உருவாக்கினார் சீனிவாசலு. இந்தியக் கலை மரபை பாதுகாக்கும் நோக்கில் அரக்கு, கண்ணாடி ஓவியம், நிர்மல் ஓவியம், சிற்றோவியம், கலம்காரி, தஞ்சாவூர் ஓவியம் போன்ற உள்நாட்டு பாணி தொழில் நுட்பங்களுடன் மேற்கத்திய வழியில் யதார்த்த உருவங்கள் வரைவதற்கான பயிற்சி, தைல வண்ணம், நீர் வண்ணம் போன்ற தொழில்நுட்ப பயிற்சிகளும் சீனிவாசலு உருவாக்கிய பாடத்திட்டத்தில் இருந்தன.
சீனிவாசலு கலாக்ஷேத்ராவின் மாணவர்களுக்கு அளித்த இந்திய தொழில் நுட்பங்கள் சார்ந்த பயிற்சிகள் அவரையும் படைப்பு சோதனைகள் செய்ய தூண்டியது. தஞ்சாவூர் பாணி ஓவிய நுட்பங்களில் இருந்து தனக்கென ஒரு பாணியை உருவாக்கினார். கலம்காரியில் புதிய முயற்சிகள் செய்து பார்த்தார். ஒரு பெண்ணின் கற்பனை (A Lady's Imagination) (பார்க்க Fig.11) ஒரு சிறந்த உதாரணம். இந்த கலம்காரி படைப்பில் ஒரு பெண் தன் இளமையை நினைவுகூருகிறாள். இது ஒரு இளம் பெண்ணின் முகம், பின்னணியில் உள்ள வெவ்வேறு கண்கள், கைகள், முகம் ஆகியவற்றால் உணர்த்தப்படுகிறது.
சீனிவாசலு அடையார் பெசன்ட் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்த காலத்திலும் பின்னர் கலாக்ஷேத்ராவின் கலை இயக்குநராக ஆன போதும் கலாக்ஷேத்ராவின் கலைநிகழ்ச்சிகளுக்கு தேவையான மேடை பின்னணி ஓவியங்கள், தொம்மைகள், அரங்க வடிவமைப்புகள், ருக்மிணி தேவி அருண்டேல், பத்மா சுப்ரமணியம் போன்ற கலைஞர்களுக்கு தேவையான கிரீடம் போன்ற அணிகலன்கள் வடிவமைத்து கொடுத்தார். ருக்மிணி தேவி அருண்டேல் தன் அரங்கத்திற்கு தேவையான பின்னணி ஓவியங்களுக்கான காட்சியை முதலில் சீனிவாசலுவிடம் விளக்கி சிறிய அளவில் ஓவியம் தீட்டச் செய்வார். ஒரு சரியான வடிவம் கிடைத்த பின் அதை பெரிய அளவில் அதற்கென்று தயாரிக்கப்பட்ட துணியில் தன் உதவியாளர் மாணவர்களுடன் வரைவார் சீனிவாசலு. அடிப்படை ஓவியத்தை சீனிவாசலு வரைந்து அளிப்பார். அவருக்கு உதவும் சில மாணவர்கள் குறிப்பிட்ட இடத்தில் வண்ணங்களை நிரப்புவது போன்ற பணிகளை செய்வார்கள். இறுதியாக சீனிவாசலு அதில் இருக்கும் குறைகளை எல்லாம் களைந்து இறுதி வடிவத்தை கொடுப்பார். கூடவே தான் நினைத்த விதத்தில் அந்த ஓவியங்கள் வந்திருக்கிறதா என்று பலமுறை ருக்மிணி தேவி அருண்டேல் வந்து பார்ப்பார். தேவைப்பட்டால் ஓவியங்கள் மேம்படுத்தப்படும். கலாக்ஷேத்ரா மேடையில் கலைஞர்கள் உள்ளே வருவதற்கும் வெளியே போவதற்கும் அலங்கார மரச்சட்டகம் இருக்கும். இது போன்றவற்றை சீனிவாசலு முதலில் சென்று தேர்ந்தெடுக்க, ருக்மிணி தேவி அருண்டேலும் சீனிவாசலுவும் சென்று வாங்கி வருவார்கள் என்று சீனிவாசலுவின் மாணவியாக இருந்த லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி குறிப்பிட்டார்.
கலாக்ஷேத்ராவில் சீனிவாசலுவின் மாணவராக இருந்த ஓவியர் அரவக்கோன், சீனிவாசலுவின் இயல்புகளை பதிவு செய்துள்ளார். 'முறையாக பள்ளிக் கல்வி பயிலாததால் சீனிவாசலுவுக்கு ஆங்கில மொழிச் சிக்கல் இருந்தது. ஆங்கில மொழி ஆசிரியர் வெங்கடேஸ்வருலு அவருக்கு கடிதங்களை எழுத உதவினார். சீனிவாசலு மாதக்கணக்கில் கூட ஓவியம் தீட்டாமல் இருப்பார். திடீரென்று ஒருநாள் வண்ணங்கள், அடுக்கி வைக்கப்பட்ட ஒரே அளவான கெட்டி அட்டைத் தாள்கள், தூரிகைகள், தூரிகைகளை கழுவ சட்டியில் நீர் ஆகியவற்றுடன் தாம்பூலம், டீ துணையோடு படைப்புகள் நிகழும். மார்பில் கட்டிய லுங்கியுடன் தரையில் சப்பணமிட்டு அமர்வார். வண்ணங்களை குழைக்க கடப்பாக்கல் தரையையே பயன்படுத்துவார். பின்மாலை துவங்கி இரவு முழுவதும் ஓவியங்கள் தீட்டி ஐந்து ஆறு ஓவியங்களை உருவாக்குவார்'. சீனிவாசலு படைப்புகளை உருவாக்கியதை காண நேர்ந்த போது கிடைத்த மகிழ்ச்சியும் பிரமிப்பும் இன்று நினைத்தாலும் முழுமையாக உள்ளதாக அரவக்கோன் குறிப்பிட்டுள்ளார். சீனிவாசலு விதவிதமாக உடை அணிவதில் விருப்பம் உடையவராக இருந்தார். இஸ்லாமியரை போல குல்லா, பர்மிய தொப்பி, வெள்ளைநிற ஜிப்பா வேட்டி, நிறைய வண்ணங்கள் கொண்ட ஜிப்பா, தொப்பி மற்றும் பெரிய மணிமாலை என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான உடை அணிவார்.
பயணம்
சீனிவாசலுவுக்கு நிதிநல்கையுடன் யு.எஸ்.ஏ., யு.கே., பிரான்சு போன்ற நாடுகளில் பயணிப்பதற்காக பயண மானியமும் கிடைத்தது. ஆனால் அப்பயணத்தை வீட்டு ஞாபகம் காரணமாக இடையிலேயே நிறுத்திவிட்டு ஒரே மாதத்தில் ஊர் திரும்பினார்.
சீனிவாசலுவின் படைப்புலகம்: பயன்படுத்திய ஊடகங்கள் & தொழில் நுட்பங்கள் (Mediums & Techniques)
கிடைக்கும் எந்த ஊடகத்தையும் பயன்படுத்தி படைப்புகள் செய்வது, முடிந்தவரை விலை குறைந்த ஊடகங்களை தேர்ந்தெடுப்பது சீனிவாசலுவின் பழக்கமாக இருந்தது. ஒரு ஊடகத்தை பயன்படுத்த ஆரம்பித்தால் அந்த ஊடகத்தில் சிறிது காலம் தொடர்ந்து படைப்புகள் செய்வது சீனிவாசலுவின் வழக்கம். சீனிவாசலு தன் வாழ்நாளெல்லாம் வெவ்வேறு ஊடங்களை, தொழில்நுட்பங்களை பயன்படுத்தி படைப்புகள் உருவாக்கினார். சீனிவாசலுவின் படைப்புலகத்தை அவர் அந்தந்த காலகட்டத்தில் அதிகமாக பயன்படுத்திய ஊடகங்களின் அடிப்படையில் பிரிக்கலாம்.
டெம்பரா, நீர் வண்ணம், தைல வண்ணம்
மெட்ராஸ் கலைப்பள்ளியில் படிக்கும் காலங்களில் துவங்கி 1970 வரை டெம்பரா, நீர் வண்ணம் ஆகிய ஊடகங்களை சீனிவாசலு அதிகமாக பயன்படுத்தினார். தைல வண்ணமும் சீனிவாசலுவுக்கு பிடித்தமான ஊடகம்.
வண்ணமெழுகுக் குச்சிகள் & நீர்வண்ணம்
சீனிவாசலு 1960-ல் வண்ணமெழுகு குச்சிகளையும் (crayons) நீர்வண்ணத்தையும் கலப்பு ஊடகங்களாக (mixed media) பயன்படுத்தி படைப்புகள் செய்தார். அது சீனிவாசலுவின் முந்தைய படைப்புகளில் இருந்த நுணுக்கமான அலங்காரத் தன்மையை குறைத்து முற்றிலும் மாறுபட்ட தன்மையை படைப்புகளுக்கு அளித்தது.
குழந்தைகளுக்கு ஓவியம் சொல்லிக்கொடுக்கும் போது குழந்தைகள் வண்ணமெழுகு குச்சிகளை அதிகம் பயன்படுத்துவதை பார்த்த சீனிவாசலு, அந்த ஊடகத்தின் சுதந்திரமான வெளிப்பாடுகளால் ஈர்க்கப்பட்டார். எனவே சீனிவாசலு அதை பல்வேறு வழிகளில் பரிசோதிக்கத் தொடங்கி இறுதியாக இந்த நீர்வண்ணம், வண்ணமெழுகுக்குச்சிகள் கலந்த ஊடகத்திற்கு வந்து சேர்ந்தார்.
சீனிவாசலு நேரடியாக கருப்பு நிற வண்ணக்குச்சி மூலம் தேவையான படத்தை உருவாக்குவார். பின்னர் அவர் பல்வேறு வண்ணங்களைப் பயன்படுத்தி உருவங்களை பூர்த்தி செய்வார். அந்த ஓவியத்தின் மேல் கருப்பு அல்லது நீல நிற மையை தண்ணீருடன் கலந்து நீர்வண்ணமாக பயன்படுத்தி தாள் முழுவதும் பூசுவார். அது உலர்ந்த பிறகு கரடுமுரடான மேற்பரப்பு கொடுக்க கத்தி போன்ற கூரான கருவிகளால் ஓவியத்தின் மேல் கீறல்களை உருவாக்கி படைப்பை முடிப்பார். சீனிவாசலு இந்த வண்ணக்குச்சி & நீர்வண்ணம்- கலப்பு ஊடகத்தை அதன் பிரகாசமான வண்ணங்களுக்காகவும், கையாள்வதற்கு எளிமையாக இருந்ததாலும் பெரிதும் விரும்பினார். ஒரு நாளைக்கு 3 முதல் 4 ஓவியங்களை இந்த கலப்பு ஊடகத்தில் வரைந்தார்.
இதில் உருவான படைப்புகளில் கோடுகள் தடிமனாகவும், தெளிவாகவும் இருந்தது. கறுப்பு நிறத்திற்கு இருந்த முக்கியத்துவம் இந்த ஓவியங்களுக்கு ஒரு ஆழத்தை அளித்தது. இந்த ஊடகத்தில் வரையப்பட்ட உறுதியான உருவங்களுக்கு வைரபட்டை போன்று செவ்வக வடிவில் பெரிதுபடுத்தப்பட்ட கண்கள், தடிமனான கழுத்தின் மேல் பெரிய தலை இருந்தது. 1960 முதல் 1964 வரை இந்த ஊடகத்தில் நிறைய படைப்புகள் செய்தார் சீனிவாசலு.
இந்த ஊடகத்தில் வரைந்த ஓவியங்களில் தாசரி (விஷ்ணு பக்தர்கள்) (பார்க்க Fig. 12) சீனிவாசலுவின் விருப்பமான பேசுபொருளாக இருந்தது. தாசரிகள் தங்கள் கைகளில் பித்தளை பாத்திரங்களை ஏந்திக்கொண்டும், கடவுளின் மீது பாடல்களைப் பாடிக்கொண்டும், உணவுக்காகவும் தெருக்களில் குழுவாகச் செல்வார்கள். தாசரிகளின் தலைப்பாகைகள், அவர்களின் நெற்றியில் உள்ள 'நாமம்' (ரங்கநாதரின் சின்னம்) ஆகியவற்றால் சீனிவாசலு ஈர்க்கப்பட்டார். சீனிவாசலு இதைப் பற்றி கூறியது: 'இவர்கள் காவிரி ஆற்றில் தினமும் குளித்து, நெற்றியிலும் உடலிலும் 'நாமம்' பூசுவதை நான் பார்த்திருக்கிறேன். இந்த பேசுபொருள் இதற்கு முன் வேறு எந்த கலைஞராலும் சித்தரிக்கப்படவில்லை. இவர்கள் நமது கலாச்சாரம், இந்து மதம், சமூகம், ஆன்மீகத்தை பிரதிநிதித்துவம் செய்வதாக நான் உணர்கிறேன்' என்றார்.
உலோகம்
1970களில் சீனிவாசலு தன் ஊடகமாக உலோகத்தை பயன்படுத்த ஆரம்பித்தார். சென்னை திருவல்லிக்கேணியின் நெரிசலான தெருக்களில் நடந்து கொண்டிருக்கும் போது தாந்திரிக எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட செப்பு தகடுகளை பார்த்தார் சீனிவாசலு. அவை சீனிவாசலுவின் ஆர்வத்தை தூண்டவே, விலை மலிவான மெல்லிய அலுமினியத் தகடுகளில் தன் பரிசோதனை முயற்சியை தொடங்கினார். அது சரி வராமல் போனதும் ஒரு பொறியாளரின் ஆலோசனைப்படி கனமான தகடுகளை பயன்படுத்தினார். பின்னர் வெவ்வேறு வடிவங்களில் உள்ள ஆணித் தலைகளின் அடையாளங்களை தகடுகளின் மேல் பதித்து வித்தியாசமான தோற்றத்தன்மையை உருவாக்க முயற்சித்தார்.
உலோகத்தின் மேல் வண்ணங்கள் ஏற்றுவது சீனிவாசலுவுக்கு இன்னொரு சவாலாக இருந்தது. வண்ணங்கள் உலோகத்தில் பிடிக்கவில்லை. சீனிவாசலு தற்செயலாக உலோகத்தின் மேல் கருப்பு நிறத்தை அடித்து விட்டு சரிவராமல் அதை கழுவிய போது மங்கலான தோற்றத்தை கொடுத்தது. மறுநாள் அதன் மேல் புது வண்ணத்தை அடித்தவுடன் உலோகத்தின் மேல் இருந்த எஞ்சிய கருப்பு நிறமே பிடிமானமாக செயல்பட்டு புது வண்ணத்தை ஒட்ட வைத்தது. கூடுதல் பளபளப்பைக் கொடுப்பதற்காக அதன் மேல் இறுதியாக வார்னிஷ் அடித்து முடித்தார்.
இந்த முறையில் நம்பிக்கை ஏற்பட்டவுடன் பெரிய படைப்புகளை செய்ய ஆரம்பித்தார். கருப்பொருள்கள் பெரும்பாலும் புராணம் சார்ந்தவை. 1971-ல் இந்த முறையில் உருவாக்கப்பட்ட ஸ்ரீ ராமகிருஷ்ண சக்கரம், ஸ்ரீ பிரம்ம சக்கரம், ஸ்ரீ கிருஷ்ண சக்கரம், ஸ்ரீ ஓம் காளி சக்கரம், ஸ்ரீ சண்முகச் சக்கரம் மூலம் மரபார்ந்த சக்கரங்களுக்கு மறு விளக்கம் அளித்தார் சீனிவாசலு. சண்முகன் (பார்க்க Fig. 13) போன்ற கடவுள் உருவங்கள், விலங்குகள், பறவைகள், ஆயுதங்கள், மலர் உருவங்கள், பிற பாரம்பரிய சின்னங்கள் இந்த படைப்புகளில் பொறிக்கப்பட்டது. வண்ணங்கள் மேற்பரப்பில் மெல்லிய அடுக்காக இருக்கும் அதே நேரத்தில் நுண்மையான வேலைப்பாடுகள் இந்த படைப்புகளில் காணப்படுகிறது. சீனிவாசலுவின் இந்த படைப்புகள் ருமேனியா, செக்கோஸ்லோவாக்கியா போன்ற ஐரோப்பிய நாடுகளில் காட்சிக்கு வைக்கப்பட்டன.
அடுத்து, சீனிவாசலு உலோகத்தில் சுரண்டுவதன் மூலம் உருவங்களை உருவாக்கினார். திருஷ்டி உருவம், பசுவுடன் கிருஷ்ணர், காவடி ஆட்டம், பெண்மணி (Lady) (பார்க்க Fig. 14), மீனுடன் பூனை (பார்க்க Fig. 15) போன்ற படைப்புகள் இந்த முறையில் உருவாக்கப்பட்டன. மீனுடன் பூனை படைப்பை கிட்டத்தட்ட ஒரு முட்டை வடிவத்தில் உருவாக்கினார் சீனிவாசலு. பூனை & மீன்- இரண்டின் கண்களுக்கும் அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளன.
சீனிவாசலுவின் உலோக படைப்புகளின் ஓரங்களில் அடையாளங்களால் ஆன வடிவமைப்புகளை உருவாக்க சுத்தியல் பொதுவாக பயன்படுத்தப்பட்டது. இந்த வகை படைப்புகள் அனைத்திலும் பின்னணி அலங்காரங்கள் நிரம்பி இருக்கின்றன. இதிலும் திருப்தி ஏற்படாமல் மேலும் ஆழமான உருவங்களுக்காக இதற்கென்று வடிவமைக்கப்பட்ட சுத்தியலை உலோகத்தில் அடித்து உருவங்களை உருவாக்கினார் சீனிவாசலு. இந்த முறை மூலம் கிறிஸ்துவுடன் தேவதைகள், குழந்தை கிறிஸ்துவுடன் மடோனா, தயிர் விற்பவர், குதிரை மீது பாயும் புலி, குழந்தை கிருஷ்ணன், காளை போன்ற உருவங்களை வடித்தார்.
உலோகப் படைப்புகளின் உச்சமாக திருவனந்தபுரம் ஶ்ரீ சித்திரை திருநாள் மருத்துவ மையத்தில் 'ஜீவ ஜோதி' (பார்க்க Fig. 18) என்ற உலோக சுவர் சிற்பத்தை சீனிவாசலு உருவாக்கினார். ஒன்பது பகுதிகள் (panels) கொண்ட இப்படைப்பு அலுமினிய உலோக தகடுகளில் உருவாக்கப்பட்ட உருவங்களின் மேல் இராயன முறையில் தயாரிக்கப்பட்ட நீர்வண்ணத்தால் வண்ணம் தீட்டி (chemical water colour on metal foil) உருவாக்கப்பட்டது. சிவப்பு, நீலம், பச்சை, கருப்பு, மஞ்சள் ஆகிய வண்ணங்கள் இந்த உருவாகத்தில் பயன்படுத்தப்பட்டன.
சித்திரை திருநாள் மருத்துவ மையத்தின் நோக்கமான துன்பத்தில் நோயில் இருப்பவர்களுக்கு நல்வாழ்வளிப்பது, மருத்துவாழ் மலையை தூக்கி செல்லும் ஆஞ்சநேயர், நோயாளியை குணப்படுத்தும் கிறிஸ்து, நவீன இருதய அறுவை சிகிச்சை, அஸ்வினி தேவர்கள், அமிர்த கலசத்துடன் கூடிய மோகினி, தொழுநோயாளியை குணப்படுத்தும் குருநானக், அமிர்த கலசம் ஏந்திய தன்வந்திரி ஆகியவைகள் இந்த படைப்பின் ஒன்பது பகுதிகளில் சித்தரிக்கப்பட்டன. யதார்த்தத் தன்மை, நாட்டுப்புறம், பாரம்பரியம், அரூபம் ஆகிய பாணிகளின் கலவையுடன் ஒளிரும் வண்ணங்கள், சிக்கலான மேல் கட்டமைப்பு, அலங்கார வடிவங்கள் இந்த ஆக்கத்தில் இருந்தன.
எனாமல் ஓவியங்கள் (Enamel paintings)
அடுத்ததாக சீனிவாசலு தெருவோர விளம்பர பலகைகளால் ஈர்க்கப்பட்டு எனாமலை ஊடகமாக பயன்படுத்தினார். கடைகள், தொழிற்சாலைகளின் விளம்பர பலகைகள் ஒரு நிறத்திலும் பெரிய விளம்பர தட்டிகளுக்கு 2 முதல் 3 நிறங்களும் பயன்படுத்தப்பட்டிருப்பதை கவனித்தார் சீனிவாசலு. அதை தெரிந்து கொள்ள தொழிற்சாலைக்கு நேரடியாக சென்று விஞ்ஞானிகளை கலந்தாலோசித்தார். முதன்மை வண்ணங்களை (primary colors) பெற்று சிறிய அளவில் படைப்புகள் செய்து பார்த்தார். வண்ணங்கள் காயாமல் இருக்கும் போதே கூர்மையான பொருட்கள், தூரிகையின் பின்பகுதி உபயோகித்து எல்லைக்கோடுகள் உருவாக்கினார். இந்த தொழில்நுட்பத்தில் கரக நடனக்காரர், அனுமன், குழந்தை கிருஷ்ணன், அம்மாவுடன் குழந்தை போன்ற படைப்புகள் செய்தார். டெல்லியில் உள்ள தூமிமால் கலைக்கூடத்தில் இந்த படைப்புகளின் ஒரு கண்காட்சியும் நடத்தினார். இந்த வகை படைப்புகளுக்கு தலைப்பிடப்படாத இந்த படைப்பு (Untitled painting) (பார்க்க Fig. 16) ஒரு உதாரணம்.
தஞ்சாவூர் ஓவியங்கள், கண்ணாடி ஓவியங்கள், குப்பி வண்ணங்கள் (Poster color)
சீனிவாசலு கலாக்ஷேத்ராவில் நுண்கலை மாணவர்களுக்கு தஞ்சாவூர் ஓவியங்கள், கண்ணாடி ஓவியங்கள் (glass paintings), குப்பி வண்ணங்கள் பயிற்றுவித்தார். கண்ணாடியின் மேல் தங்கத் தாள்கள் பயன்படுத்தி தஞ்சாவூர் ஓவியங்களில் சோதனை முயற்சிகள் செய்தார். கண்ணாடியில் திருப்பி வரையப்படும் முறையில் (Reverse glass technique) ஓவியங்கள் உருவாக்கினார்.
கிறிஸ்து, ராமாயண காட்சிகளை கண்ணாடி ஓவியங்களில் சித்தரித்தார். தான் கலாக்ஷேத்ராவில் வருவதற்கு முன் சீனிவாசலு நிறைய ஓவியங்களை டெம்பரா உபயோகித்து வரைந்ததாகவும், தான் கலாக்ஷேத்ராவில் பயிலும் போது சீனிவாசலு டெம்பரா பொடி வைத்திருந்தாலும் அதை உபயோகிக்காமல் பேப்பரில் குப்பி வண்ணங்களை உபயோகித்து ஓவியங்கள் வரைந்ததாகவும் 1987 முதல் 1990 வரை கலாக்ஷேத்ராவில் அவரது மாணவராக இருந்த கேரளாவை சேர்ந்த முரளிதரன் தெரிவித்தார்.
பிற ஊடகங்கள், தொழில் நுட்பங்கள்
காகிதத்தில் இந்தியன் மை (Indian ink) கொண்டு வரைவது, பிளாஸ்டிக் தாள்களின் மேல் வண்ணங்கள் பயன்படுத்தி உருவாக்கிய ஓவியங்கள் (பார்க்க Fig. 17), புகைப்படத் துறையில் பயன்படுத்தும் வண்ணங்கள் (photo color), செங்கற்கள், சிமென்ட் கான்கிரீட், பத்திக்(batik), காகிதக்கூழ் (papier mache), உலோகத்தின் மேல் செல்லோபோன் படத்தொகுப்பு ஓவியங்கள் (Cellophane collages on metal), கலம்காரி, மரம், பட்டுத்துணி மேல் டெம்பரா (egg tempera on silk), சுடுமண் (terracotta), உள்வெட்டு (stencil) ஓவியங்கள், இரும்பு, வெண்கலம் என்று மேலும் பல தொழில் நுட்பங்கள், ஊடகங்களில் படைப்புகள் உருவாக்கியுள்ளார் சீனிவாசலு.
இதர படைப்பு வேலைகள் சில (Commissioned works)
1948-ல் தமிழக கல்வித் துறைக்காக நுங்கம்பாக்கத்தில் சுவர் சிற்பம் ஒன்றை வடிவமைத்தார் சீனிவாசலு.
1956-ல் முதல் லோக்சபா சபாநாயகர் ஜி.வி. மாவ்லங்கரின் யோசனையின் பேரில் இந்தியாவின் முக்கிய கலைஞர்களால் இந்திய மரபை வரலாற்று தருணங்களை பிரதிபலிக்கும் ஓவியங்கள் வரையப்பட்டு பாராளுமன்றத்தின் கீழ் தளத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அதில் சீனிவாசலுவின் ராமாயணக் காட்சி ஓவியமும் இடம்பெற்றது. இந்த ஓவியத்தின் முதல் காட்சி வால்மீகியின் கருணையை பறைசாத்துவதாக மா-நிஷாத என்று ஆரம்பிக்கும் ராமாயணத்தின் முதல் சுலோகத்துடன் உள்ளது. அடுத்த இரண்டு காட்சிகள் இராமனும் நிஷாதர்களின் அரசனான குகனும் சந்திப்பதை சித்தரிக்கிறது.
1952-ல் கையெழுத்திட்ட சீனிவாசலுவின் ஓவியம் (பார்க்க Fig. 18) சென்னை அகில இந்திய வானொலி நிலையத்தில் இருக்கிறது. 1959-ல் சீனிவாசலு அகில இந்திய வானொலி நிலையத்திற்காக ஒரு சுவர் படைப்பை செய்து அளித்தார் என்று நளினியின் ஆய்வேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1957ல் புத்த ஜெயந்திக்காக சென்னை அரசு அருங்காட்சியகத்தில் உள்ள நூற்றாண்டு மண்டபத்தில் புத்தரின் வாழ்க்கை தனபாலாலும் சீனிவாசலுவாலும் சுவரோவியங்களாக வரைந்து காட்சிக்கு வைக்கப்பட்டன. இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் இக்கண்காட்சியை திறந்து வைத்தார்.
1968-ல் நடந்த இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சிக்காக சென்னை அண்ணா நகர் டவர் பூங்காவில் ஒரு சுவர் சிற்பத்தை உருவாக்கினார் சீனிவாசலு. இந்த படைப்பு வேலை சிம்ப்சன் & கோ நிறுவனத்தால் அளிக்கப்பட்டது.
சீனிவாசலு 1970களில் கிண்டியில் உள்ள மத்திய பெட்ரோகெமிக்கல் தொழில்நுட்ப கழகத்துக்காக (CIPET- Central Institute of Petrochemicals Engineering & Technology), நாக-நாகினி சுடுமண் (terracotta) சிற்பங்கள். கண்ணாடி இழைகளால் (fibre glass) உருவாக்கப்பட்ட சூரியன், யக்ஷி, துவாரபாலகர்கள். கண்ணாடி ஜன்னல்களுக்கான (stained glass window) நவக்கிரக உருவங்கள், விலங்குகள், பறவைகளை கருப்பொருளாகக் கொண்டு உருவாக்கப்பட்ட 80 அடி நீளமும் 10 அடி உயரமும் கொண்ட கான்கிரீட் பகுப்புக்கள், இரும்பு ஜன்னல் தட்டிக்கான (Wrought iron grill window) (பார்க்க Fig. 19) வடிவமைப்பு போன்ற படைப்புகள் செய்து கொடுத்துள்ளார். பக்தர்கள், கிராம தெய்வங்கள், பாம்புகள், பறவைகள், மத அடையாளங்களுடன் ஜன்னல் தட்டி உருவானது. ஜன்னல் தட்டி இரும்பால் ஆனதால் அதற்கு தகுந்தவாறு எளிமைப்படுத்தப்பட்ட நேரான வளைந்த கோடுகளால் வடிவமைக்கப்பட்டது.
1974-ல் திருச்சி விமான நிலையத்திற்கு ஒரு சுவர் படைப்பு செய்தார்
1975-ல் நெய்வேலியில் இரண்டு கோவில்கள் புதுப்பிக்கப்பட்டன.
1976-ல் காரன் பல்கலைக்கழகத்திற்கும் விராகனூரிலும் தலா ஒரு சுவர் படைப்பு(mural). விராகனூர் படைப்பில் மதுரை மாவட்டத்தின் மீனாட்சி கல்யாணம், வைகை ஆறு போன்றவற்றை குறிக்கும் சுவர் சிற்பத்தை உருவாக்கினார் சீனிவாசலு. இந்த படைப்பில் கண்ணாடி பயன்படுத்தினார்.
1978, அடையாறில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர் (CSIR- Council of Scientific & Industrial Research)க்காக கட்டடக்கலை வரலாற்றை விளக்கும் வகையில் சுவர் சிற்பத்தின் வேலை ஒன்று நிறைவேற்றப்பட்டது. இந்த படைப்பு ஶ்ரீ சித்திரை திருநாள் மருத்துவ மையத்திற்காக உருவாக்கப்பட்ட 'ஜீவ ஜோதி' (பார்க்க Fig. 21) படைப்பை போன்றே அலுமினிய உலோக தகடுகளில் இரசாயன முறையில் தயாரிக்கப்பட்ட நீர்வண்ணத்தால் வண்ணம் தீட்டி உருவாக்கப்பட்டது.
1980-ல் கல்விச் சங்கத்திற்காக சுவரோவியம் வடிவமைத்தார். அதே ஆண்டில் கும்பகோணத்தில் நடந்த மகாமகம் திருவிழாவை ஒட்டி காதி & கிராமத் தொழில்களுக்கான கூடாரத்தை (pavilion) வடிவமைத்துக் கொடுத்தார்.
மேசனைட் (masonite) அட்டைகளில் ஜெஸ்ஸோவால் (gesso) அடித்தளம் ஏற்படுத்தப்பட்டு டெம்பராவில் வரைந்த இரு சுவரோவியங்களை மதுரையிலும் மெட்ராஸிலும் உள்ள காந்தி நினைவு மண்டபங்களுக்கு செய்து கொடுத்தார் சீனிவாசலு.
காமராஜர் பல்கலைக்கழகத்தின் உடற்கல்வி துறை (physical education) கட்டிடத்தில் டைல் (tile) ஓடுகளால் ஒரு படைப்பையும், ஒரு தடகள வீரர் தீபம் ஏந்திக்கொண்டு முன்னால் ஓட அவரை தொடர்ந்து ஓடும் மற்ற தடகள வீரர்களின் நவீனமும் நாட்டார் கூறும் வெளிப்படும் ஒரு கான்கிரீட் சிற்பத்தையும் (The Torch Bearer) வடிவமைத்துக் கொடுத்தார்.
ஏ.எஸ். ராமன் இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியில் எழுதிய தொடருக்கு ஓவியங்கள் வரைந்திருக்கிறார் சீனிவாசலு.
சென்னை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற தமிழ் மாநாட்டையொட்டி அங்கு ஒரு சுவரோவியத்தை உருவாக்கினார்.
சீனிவாசலுவின் படைப்புகள் திருச்சி, மதுரை விமான நிலையங்களில் வைக்கப்பட்டது.
மெட்ராஸ் விமான நிலையத்திற்கான ஒரு சுவர் சிற்பத்தின் வேலை சீனிவாசலுவிடம் அளிக்கப்பட்டது. ஆனால் அந்த பணி சில காரணத்தால் நிறைவேற்றப்படவில்லை. கோவில் தேர், நாதஸ்வரம் வாசிப்பவர், பெண் பக்தர், பொய்க்கால் குதிரை, கரகம், தோரணம், அலங்காரங்கள் என்று ஒரு திருவிழா காட்சியின் சித்தரிப்பு இந்த சுவர் சிற்பத்தின் ஆயத்த மாதிரி ஓவியத்தில் உள்ளது. சீனிவாசலு ப்ளையுட்டில் கட்-அவுட் படைப்புகளாக செய்ய நினைத்திருந்த இந்த படைப்பில் கண்ணாடி, மணிகள்(beads), தங்கம் போன்றவற்றால் வேலைப்பாடுகள் செய்யவும் திட்டமிட்டிருந்தார்.
சீனிவாசலுவின் ஓவியக் குறிப்புகள் (Drawings & Key sketches)
சீனிவாசலு போகிற போக்கில் வரைந்த ஓவியங்கள், பெரிய படைப்புகள் செய்வதற்கான ஆரம்பநிலை மாதிரி ஓவியங்கள், கிறுக்கல்கள், சிறு ஓவியங்கள், ஓவியக்குறிப்புகள் ஆகியவைகளை ஓவியம் வரைவதற்கான புத்தகம், காகிதம் மட்டுமின்றி தன் கையில் கிடைக்கும் அழைப்பிதழ்கள், துண்டு பிரசுரங்கள் என்று அனைத்திலும் வரைந்து வைக்கும் பழக்கமுள்ளவர். இந்த வகை ஓவியங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை ஓவியர் ராம சுரேஷ் உதவியுடன் கோப்புகளாக தொகுக்கப்பட்டு சீனிவாசலுவின் மகன் சித்தரஞ்சனின் (கோபால்) பாதுகாப்பில் இருந்தது.
அப்படி சீனிவாசலு காகிதங்களில் கிறுக்கிய சிறு ஓவியங்கள் பல பிற்காலத்தில் பெரிய படைப்புகளாக உருமாறின. புராண இதிகாச காட்சிகள், கடவுள்களில் குறிப்பாக விநாயகர் (பார்க்க Fig. 22), பொம்மை விற்பனையாளர், மீனவர், மீன் விற்கும் பெண்கள், குழந்தைக்கு முலையூட்டும் தாய், திருவிழா காட்சிகள், சைக்கிள் சாஸ்திரி, நாட்டார் தெய்வங்கள், நிலக் காட்சிகள், சுடுமண் குதிரையின் ஓவியங்கள், யானை, மாடு போன்ற விலங்குகள், கலை நடன நிகழ்ச்சிகளின் அரங்க வடிவமைப்புகள், அலங்கார கோப்பை போன்ற கைவினைகளுக்கான மாதிரி ஓவியங்கள், மடோனாவும் குழந்தையும் போன்ற கிறித்தவ ஓவியங்கள், கவரியுடன் கூடிய பெண்கள், நடனப் பெண்கள், ஆண்-பெண் கலவி ஓவியங்கள் (பார்க்க Fig. 23) போன்றவை இந்தவகை ஓவியக் குறிப்புகளில் இருந்தன.
இவற்றில் கறுப்பு, நீலம், சிவப்பு நிற பேனாக்கள், மைகள் பயன்படுத்தி வரையப்பட்ட ஓவியங்களும், பல வண்ணங்கள் பயன்படுத்தி தீட்டப்பட்ட ஓவியங்களும் உண்டு. அன்றாட சித்தரிப்புகள் முதல் அரூப ஓவியங்கள் வரை சீனிவாசலு வரைந்த ஓவியங்கள் ஆயிரத்திற்கும் மேல் இருக்கலாம் என்று 1983-ல் சீனிவாசலுவை நேரில் கண்டு எழுதப்பட்ட தன் கல்லூரி இறுதி ஆண்டு ஆய்வறிக்கையில் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவி நளினி குறிப்பிட்டிருக்கிறார்.
கலைத்துறையில் இடம், அழகியல்
சீனிவாசலு தென்னிந்திய நாட்டார் அழகியலை, இந்திய மரபை தன் படைப்புகளில் வெளிப்படுத்தியவர். விமர்சகர்களால் சீனிவாசலு ஜாமினி ராயுடன் ஒப்பிடப்படுகிறார். ஜாமினி ராய் பெங்காளின் பட்டுவா ஓவியங்கள், பெங்காள் நாட்டார் பண்பாடு, இந்திய மரபு ஆகியவற்றில் இருந்து தனக்கான பாணியை உருவாக்கிக் கொண்டது போல, சீனிவாசலு தன் கலைக்கான அடிப்படை படிமத்தை தான் வளர்ந்த ஆந்திர கிராமிய சூழல், ஜாமினி ராய், நந்தலால் போஸ் போன்ற பெங்காள் ஓவியர்களின் ஓவியங்கள், லேபாக்ஷி போன்ற மரபு சுவரோவியங்கள், தென்னிந்திய நாட்டுப்புற கலை பண்பாடு ஆகியவைகளில் இருந்து பெற்றுக் கொண்டார்.
கலை விமர்சகர் எஸ்.ஏ. கிருஷ்ணன் கூறுவது: 'சீனிவாசலு தான் போற்றும் ஜாமினி ராயிடம் ஒரு இணைமனதை கண்டுகொண்டார். ஜாமினி ராயின் துணிச்சலான நன்கு பின்னப்பட்ட வடிவமைப்பு, வண்ணத்தின் கச்சிதமான பயன்பாடு ஆகியவற்றால் சீனிவாசலு பெரிதும் ஈர்க்கப்பட்டார் என்றாலும், சீனிவாசலுவின் படைப்புகளில் ஜாமினி ராயின் நேரடி பாதிப்பு இருப்பதற்கான எந்த தடையத்தையும் பார்க்க முடியவில்லை. அவர்கள் இருவரது படைப்புகளின் கருத்தியலில், நடைமுறை அம்சத்தில் ஒற்றுமையும் வேற்றுமையும் உள்ளன. ஜாமினி ராயின் முக்கிய படைப்புகளில் ஒளி-நிழலின்(chiarascuro) அம்சம் சிறிதளவு கூட இல்லை. அவரது படைப்பு முறை மிகவும் நேரடியானது. அதன் வலிமை, வடிவம் கிட்டத்தட்ட உச்சத்தை தொட்டுவிடுவது. அதுபோலவே ஜாமினி ராயின் நிறங்கள் தட்டை பரப்பாக தீட்டப்பட்டது. அதன் பலனாக ஆற்றலும் எளிமையும் ஒரே நேரத்தில் வெளிப்படுவது. தூய அடிப்படை வடிவிற்கான தன் தேடலில் படைப்புகளில் இருக்கும் அதிகப்படியான அம்சங்களை எல்லாம் நீக்கி விடுகிறார் ஜாமினி ராய். சீனிவாசலுவின் அணுகுமுறை வித்தியாசமானது. அவர் ஆபரணங்களில், நுணுக்கமான வேலைப்பாடுகளில் திளைக்கிறார்... ஒருபுறம், இருவரும் அந்தந்த பகுதிகளில் உள்ள நாட்டுப்புறக் கலையின் ஆற்றலாலும் எளிமையாலும் கவரப்பட்டனர். ஜாமினி ராயிடம் சந்தால் பழங்குடியினர் ஏற்படுத்திய அதே தாக்கத்தை சீனிவாசலுவிடம் ராயலசீமாவின் சுகாலிகள் ஏற்படுத்தியிருக்கலாம். இருவருமே நாட்டுப்புற நாடகங்களிலிருந்து தங்கள் படைப்புகளுக்கான அடிப்படையை பெற்றவர்கள். கொண்டப்பள்ளி, திருப்பதி பொம்மைகள், தோல் பாவைகள், கோவில் சுவரோவியங்கள் சீனிவாசலுவின் பாணியை வடிவமைத்தது போல பாங்குரா, பீர்பூம், மிட்னாபூரில் உள்ள பட்டுவா ஓவியங்கள், நாட்டார் பொம்மைகள், சுடுமண் சிற்பங்கள் ஜாமினி ராயை ஈர்த்து அவரது படைப்பு பாணியை தீர்மானித்தன. சீனிவாசலுவின் ஆரம்பகால பாணியை தீர்மானிப்பதில் லேபாக்ஷி சுவரோவியங்கள் பங்களித்தது போலவே ஜாமினி ராய்க்கு விஷ்ணுபூர் சுடுமண் ஓடுகள், டானிஹார் சிற்பங்கள் இருந்தது' என்றார்.
ஜாமினி ராய் ஓவியங்களுடன் ஒப்பிடும்போது சீனிவாசலுவின் பல ஓவியங்களில் அசாதாரண கோணங்கள் (angles) உள்ளன (பார்க்க Fig. 25). வெவ்வேறு கோணங்கள் இருந்தாலும் ஓவியங்கள் ஐரோப்பிய யதார்த்த ஓவியங்களில் உள்ளது போல அல்லாமல், இந்திய மரபு சிற்ப ஓவிய தொகுப்புகளுக்கு நெருக்கமானதாக இருக்கிறது. சீனிவாசலுவின் ஓவியங்கள் இருபரிமாணத்தை கொண்டவையாக அமைந்திருக்கிறது. அவரது பல ஓவியங்கள் பார்வை கோணத்தின் (perspective) அடிப்படையில் வரையப்பட்டிருக்காது. அதை ஈடுசெய்யும் விதத்தில் வரையப்பட்டிருக்கும் உறுதியான கோடுகள் பார்வையாளரின் கவனத்தை ஓவியத்திற்குள் நிலை நிறுத்துகிறது.
கோடுகள் சீனிவாசலுவின் ஓவியங்களில் முக்கிய பங்கு வகித்தன. மெலிதான கோடுகள் மென்மை நளினத்தையும், தடித்த எல்லை கோடுகள் ஆண்மை தன்மையையும் கொண்டிருக்கிறது. உருவங்கள் விறைப்பாக, நிமிர்வாக (பார்க்க Fig. 12) உள்ள படைப்புகளையும், உருவங்கள் நளினத்துடன் நாட்டியத் தன்மையுடன் (பார்க்க Fig. 1) உணர்வெழுச்சி அளிக்கும் ஆக்கங்களையும் சீனிவாசலு உருவாக்கியுள்ளார். இந்த நளினமும் நாட்டியத் தன்மையும் கலாக்ஷேத்ரா சூழல், இந்திய மரபோவியத்தில் இருந்து சீனிவாசலுவுக்கு கிடைத்திருக்கலாம். பெரும்பாலான உருவங்கள் ஒரு பக்க (profile) தோற்றத்துடனோ நேராகவோ காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சீனிவாசலுவின் ஓவியங்களில் வடிவமைப்புகள், வண்ணங்கள் நாட்டார் தன்மையையும் சில நேரங்களில் செவ்வியல் தன்மையையும் கொண்டுள்ளது.
சீனிவாசலுவின் ஓவியங்களில் உபயோகப்படுத்தப் பட்டிருக்கும் பழுப்பு, காவி நிறங்கள் ஜாமினி ராயின் படைப்புகளில் உள்ளது போன்றே மண்ணிற்கு நெருக்கமான வண்ணங்களாக இருப்பதால் நாட்டார் தன்மையை பிரதிபலிக்கிறது. ஆனால் வண்ணங்களின் பயன்பாட்டில் ஜாமினி ராயை போல் அடர்த்தியாக அல்லாமல் தளர்வாகவும் இலகுவாகவும் சீனிவாசலு பயன்படுத்தினார். பல ஓவியங்களில் மார்பு, புட்டத்தை குறிக்க கோடுகளை பயன்படுத்தியுள்ளார் (பார்க்க Fig. 26).
சீனிவாசலு தன் ஓவியங்களில் பொம்மைகள், பொம்மை விற்பவர்களை தொடர்ந்து சித்தரித்தார். விநாயகர், கிருஷ்ணன், ஆஞ்சநேயர் இவரது ஓவியங்களில் தொடர்ந்து சித்தரிக்கப்பட்டனர். தாய்-குழந்தை, மீன் விற்கும் பெண்கள் (பார்க்க Fig. 27) திரும்ப திரும்ப சீனிவாசலுவின் ஓவியங்களில் வரும் பேசு பொருட்கள். கிறித்து (பார்க்க Fig. 28), கன்னிமேரி, பைபிள் சார்ந்த ஓவியங்கள் வரைந்திருக்கிறார்.
வளர்ப்பு பிராணிகளின் மீது ஆர்வமுள்ள சீனிவாசலு தன் அடையார் வீட்டில் பச்சைக்கிளி, புறாக்கள், ஆடு, எருமை, வான்கோழி, மணிப்புறா, விதவிதமான கோழிகள் வளர்த்தார். தன் ஓவியங்களிலும் ஆடு, மாடு போன்ற மிருகங்களை சித்தரித்தார் (பார்க்க Fig. 29 ஆடும் குட்டிகளும் ஓவியம்). சேவல் சண்டைகளை தன் படைப்புகளில் சித்தரித்துள்ளார்.
இந்தியாவின் மூத்த நவீன கலைஞர் பி.ஸி. சன்யால் சீனிவாசலுவை பற்றி கூறியது: 'சீனிவாசலு ஒரு கலைஞராக நிஜ வெளிப்பாட்டை கொண்டிருப்பது அவர் தன் சொந்த பண்பாட்டில் ஆழமாக வேரூன்றி இருப்பதால் இருக்க வேண்டும். கலாக்ஷேத்ரா, அடையார் உடனான அவரது நீண்ட தொடர்பு, அவரது கண்ணோட்டத்தையும் பார்வையையும் பெரிய அளவில் வடிவமைத்துள்ளது என்று நான் நினைக்கிறேன். அந்த தொடர்பு அவரது படைப்பு செயல்பாட்டிற்கு அர்த்தத்தை அளித்ததாக நம்புகிறேன். அவர் உள்நாட்டு தொழில்நுட்பங்களான சுவரோவியங்கள், கண்ணாடி ஓவியம், வண்ணங்கள், நிறமிகளின் குணம் ஆகியவற்றை வெற்றிகரமாக ஆய்ந்து கற்றுள்ளார். ஜாமினி ராய்க்கு சமானமாக தென்னிந்தியாவில் நாட்டார் பண்பாட்டில் இருந்து தங்களுக்கான தூண்டுதலை பெற்றுக்கொண்டவர்களுள் சீனிவாசலுவும் ஒருவர். சீனிவாசலுவின் படைப்புகள் நவீனத்துவத்தின் புதிய அலையில் எந்த நேரடியான பாதிப்பையும் செலுத்தியதாக தெரியவில்லை. ஆனால் நவீனத்துவத்தின் அலையால் சீனிவாசலு அடித்து செல்லப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சீனிவாசலு எப்படியோ அப்படியே அவரது படைப்புகளும் இருக்கிறது.'
சீனிவாசலு லேபாக்ஷி போன்ற இந்திய மரபோவியங்களை படியெடுத்த பிறகு அவரது ஓவியங்களின் உடை ஆபரணம் அலங்காரங்களில் நுண்ணிய வேலைப்பாடுகள் வரத் துவங்கின. இந்த கால ஓவியங்களின் மற்றொரு சிறப்பென்பது நான்கில் மூன்று பகுதி (three-fourth profile) தெரியும் பக்கவாட்டு உருவங்களில் முகத்தை தாண்டி வெளியே சென்றிருக்கும் நீண்ட கண்கள், குறிப்புணர்த்தும் பின்னணிகள், பாயும் மென்மையான கோடுகள் ஆகியனவாகும். சீனிவாசலுவிடம் செல்வாக்கை உருவாக்கிய ஜாமினி ராய் ஓவியங்கள், சமண சிற்றோவியங்கள், லேபாக்ஷி ஓவியங்கள் ஆகியவற்றின் பொது கூறாக முகத்தை தாண்டி வெளியே துருத்தி நிற்கும் நீளமான கண்கள் உள்ளது.
1960களில் சீனிவாசலு பயன்படுத்திய வண்ணக்குச்சி & நீர் வண்ணத்தால் ஆன ஓவியங்களில் நுணுக்கங்கள் இருக்கவில்லை. ஆனால் 1970களில் உருவாக்கப்பட்ட உலோக படைப்புகளில் மிக நுணுக்கமான வேலைகள் இருந்தன. அடுத்தடுத்த காலங்களில் சீனிவாசலு கோணங்கள், வடிவங்கள் (Geometrical) கொண்ட படைப்புகள், உள்வெட்டு ஓவியம் (stencil) பாணியிலான படைப்புகள், அரூபத்துக்கு மிக அருகில் செல்பவை, மிக நவீனமாக கோணல், எளிமை தன்மைகளை கொண்ட உருவ வடிவங்கள் கொண்ட ஓவியம், சிற்பங்களை படைத்தார்.
சீனிவாசலுவின் உள்வெட்டு (Stencil) ஓவியங்கள், நுணுக்கங்கள் எதுவும் இல்லாமல் மிக எளிமைபடுத்தப்பட்ட ஆழமான உருவங்களை கொண்டவை. குழலூதுபவர் குழந்தையுடனும் நாயுடனும் இருக்கும் ஓவியத்தில் (பார்க்க Fig. 30) கண்கள், தலைப்பாகை, குழலூதுபவரின் வாய், குழலின் அடிப்பகுதியில் உள்ள துளை ஆகியவற்றை குறிக்க சிறிய வெற்றிடங்கள் விடப்பட்டு உருவங்கள் முழுமையாக கருப்பு நிறத்துடன் உள்ளன. பின்னணியில் குழலின் ஒலி அலைகளை காட்டும் விதத்தில் கோடுகள் உள்ளன. இவரது ஓவிய உருவங்களில் வாதுமை வடிவில் வரையப்பட்ட கண்கள் பிற்காலத்தில் வைரபட்டை போன்று சதுர உருவை அடைந்தன.
புதிது புதிதாக சோதனை முயற்சிகளில் ஈடுபட்ட சீனிவாசலுவின் இயல்பும், ஒவ்வொரு காலகட்டத்தில் பயன்படுத்திய ஊடகங்களும் அவரது படைப்பு வெளிப்பாட்டிலும் மாற்றங்களை ஏற்படுத்தியது. நாட்டார் மரபு, இந்திய மரபோவியங்களின் தன்மை முதல் நவீனமான வெளிப்பாடுகள் வரை தன் படைப்புகளில் கொண்டிருந்தார் சீனிவாசலு. ஊடகங்கள், வெளிப்பாட்டுமுறை மாறினாலும் கருக்கள் தென்னிந்திய நாட்டார் மரபை, இந்திய புராண மரபை ஒட்டியே இருந்தது.
டெல்லியில் உள்ள தமிழ்நாடு விருந்தினர் மாளிகைக்காக செய்யப்படவிருந்த சுவர் சிற்பத்தின் (murals) மாதிரி ஓவியங்கள் (பார்க்க Fig. 31) சீனிவாசலுவின் மிக நவீனமான வெளிப்பாடுகளில் ஒன்றாகும். ஜல்லிக்கட்டு, மாட்டுப் பொங்கல், நாதஸ்வரம் ஊதுபவர், பொய்க்கால் குதிரை நடனம், கோவில் தேர், வழிபாடு நடத்தும் பெண், மேள வாத்தியக்காரர், கிராம தேவதை, சிலம்பம் விளையாட்டு, காவடி, கரகம் என்று தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை இந்த ஓவியங்கள் வெளிப்படுத்துகிறது. உருவங்கள் வலிமையான கோடுகளுடன் சிதைவுத் தன்மையுடன் உள்ளது. பெரும்பாலான உருவங்களின் கண்கள் வெற்றிடமாக விடப்பட்டுள்ளது. உருவங்களின் மற்ற சில பகுதிகளிலும் வெற்றிடங்கள் உள்ளது. (செம்பில் உருவாக்க திட்டமிட்டிருந்த இந்த சுவர் சிற்பம் ஏதோ காரணத்தால் நிறைவேற்றப்படவில்லை. ஒரு வேளை இந்த படைப்பு செய்து முடிக்கப்பட்டிருந்தால் சீனிவாசலுவின் மிகச் சிறந்த ஆக்கங்களில் ஒன்றாக இருந்திருக்கும் என்று விமர்சகர்கள் கருதுகிறார்கள்).
சீனிவாசலு ஒரு நல்ல வடிவமைப்பாளராகவும் திகழ்ந்தார். ஆடைகள் முதல் கட்டிட அலங்காரம் வரை வடிவமைப்புகள் செய்து கொடுத்துள்ளார். பி.ஆர். ராமச்சந்திர ராவ் எழுதி 1953-ல் வெளியான 'நவீன இந்திய ஓவியம்'(Modern Indian Painting) புத்தகத்திற்கான ஓவியங்கள் வரைந்து கொடுத்தார் சீனிவாசலு. கலை விமர்சகரான அஞ்சலி சர்க்கார் இந்திய சமகால கலையில் சீனிவாசலுவின் பங்களிப்பு பற்றி கூறியது: 'சீனிவாசலு தனக்கான வடிவங்களை தென்னிந்தியாவின் நாட்டுப்புற கலையில் தேடி கண்டடைந்தார். நாட்டுப்புற கலையில் இருந்து பெற்ற தீவிரமான தூண்டுதலுடன் பாரம்பரியத்தின் எல்லைகளை தாண்டி கடந்த காலத்துடன் பிணைக்கப்பட்ட ஒரு நவீன பாணியை உருவாக்கினார். இதுவே சமகால இந்திய கலையில் சீனிவாசலுவின் பங்களிப்பு ஆகும்' என்றார்.
விவாதங்கள்
சீனிவாசலு மீண்டும் மீண்டும் நாட்டார் பண்பை தன் கலை மொழிக்கான அடித்தளமாக கொண்டதாகவும் சீனிவாசலுவின் படைப்புலகம் ஜாமினி ராயை அடியொற்றி உள்ளதாகவும் விமர்சனத்திற்கு உள்ளானது. ஏ.எஸ். ராமன், எஸ்.ஏ. கிருஷ்ணன், அஷ்ரபி பகத் போன்ற எழுத்தாளர்களும் கலை விமர்சகர்களும் இத்தகைய விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதத்தில் தங்கள் கருத்துக்களை கூறியுள்ளனர்.
நாட்டார் மொழியை அடித்தளமாக கொண்டிருப்பதே அவர் மெட்ராஸ் கலைச் சூழலில் தனித்தன்மை கொண்டவராக இருப்பதற்கான காரணம் என்று கலை விமர்சகர் அஷ்ரபி பகத் கருதினார்.
சீனிவாசலு ஜாமினி ராயை தன் ஆதர்சமாக கொண்டாலும், சீனிவாசலுவின் ஓவியங்களில் உள்ள தனித்தன்மைகளான நுணுக்கமான வேலைப்பாடுகள், ஒளி-நிழல் தன்மை ஆகியவை ஜாமினி ராயின் ஓவியங்களில் இல்லை என்பதை எஸ்.ஏ. கிருஷ்ணன் சுட்டிக்காட்டி உள்ளார்.
ஜாமினி ராயை ஒப்பிடும் போது தன் வாழ்நாளில் மிக அதிகமான ஊடகங்களை பயன்படுத்தியவர் சீனிவாசலு. சீனிவாசலுவின் படைப்பு மொழியிலும் தொடர்ச்சியான மாற்றங்கள் இருந்தது. சீனிவாசலுவின் பிற்காலத்தைய படைப்புகள் பிராந்திய தன்மையும் மிக நவீன வெளிப்பாடுகளும் ஒருங்கே கொண்டது.
மறைவு
கே. சீனிவாசலு தமது கடைசி வருடங்களில் குடிப் பழக்கத்துக்கு ஆளானார். ஆகஸ்ட் 3, 1994 அன்று மறைந்தார்.
விருதுகள் & அங்கீகாரங்கள்
- 1946, மைசூர் கண்காட்சியில் தங்கப் பதக்கம் பெற்றார்.
- 1947, தமிழ்நாடு அகில இந்திய காங்கிரஸ் நடத்திய கலைக் கண்காட்சியில் சீனிவாசலுவின் நாட்டுப்புற பாணி ஓவியத்திற்கு விருது வழங்கப்பட்டது.
- 1949, கல்கத்தாவில் உள்ள அகாடமி ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் (Akademy of Fine Arts, Calcutta) ஆராய்ச்சிக்காக நிதிநல்கை விருது வழங்கியது.
- 1949-50, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, சென்னையில் ஏற்பாடு செய்த அகில இந்திய காதி, சுதேசி மற்றும் தொழில்துறை கண்காட்சியில் சீனிவாசலு நீர்வண்ணத்தால் வரைந்த 'உருவப்படத்திற்கு(portrait)' முதல் பரிசு கிடைத்தது.
- 1952, 'தாமரை மாலை' (Lotus Garland) (பார்க்க fig. 10) ஓவியத்திற்காக குடியரசுத் தலைவர் விருது பெற்றார்.
- 1952, சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியாவில் உள்ள அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஏசியன் ஸ்டடீஸில் (American Academy of Asian Studies) நடைபெற்ற இந்திய கலை விழாவில் அறிவிப்பு சுவரொட்டி (poster) ஓவியப் போட்டியில் இரண்டாம் பரிசு.
- 1953, பாரம்பரிய பாணியிலான 'இந்திய விளையாட்டு' என்ற படைப்பிற்கு ஹைதராபாத் கலை சங்கத்தின்(Hyderabad Art Society) முதல் பரிசு.
- 1953, அகில இந்திய கலை மற்றும் கைவினை சங்கத்தின் (All India Fine Arts and Crafts Society) ஆண்டு கண்காட்சியில் இந்தியா குடியரசுத் தலைவரின் வெள்ளிப் பலகை விருது கிடைத்தது.
- 1955, அமெரிக்காவில் ஓஹியோ பல்கலைக்கழகத்தில் (Ohio University) வண்ணக் கலையில் (Advance painting) மேற்படிப்பு படிப்பதற்காக ஸ்மித் முண்ட் (Smith Mundt Scholarship) நிதிநல்கை விருது வழங்கப்பட்டது - நியூயார்க் இந்தியா ஹவுஸ்ஸில் தனிநபர் கலைகாட்சி, யு.எஸ்.ஏ., யு.கே. மற்றும் தெற்கு பிரான்சுக்கு பயணம்.
- 1955, 22-வது ஆண்டு அகில இந்திய கலைக் கண்காட்சியில் சிறந்த படைப்பிற்கான விருது இந்திய குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டது.
- 1955, ஆலப்புழா எஸ்.டி.வி கல்லூரியின் பொன்விழாவை முன்னிட்டு நடந்த அகில இந்திய கண்காட்சியில் 'ஒப்பனை அறை' (Toilet) என்ற டெம்பரா ஓவியத்திற்கு தங்கப் பதக்கம் கிடைத்தது.
- 1955, திருவனந்தபுரம் நகர சபை ஏற்பாடு செய்த அகில இந்திய தொழில்துறை, விவசாயம் மற்றும் கலைக் கண்காட்சியில் நீர் வண்ண ஓவியங்களுக்கான தங்கப் பதக்கம்.
- 1967, லலித் கலா அகாடமியின் சிறந்த ஓவியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- பிப்ரவரி 9, 1985, அகில இந்திய கலை & கைவினை சங்கம் (All India Fine Arts & Crafts Society) கலைத்துறையில் கே. சீனிவாசலுவின் பங்களிப்புக்காக புது தில்லியில் கௌரவம் அளித்து சிறப்பித்தது.
- ஏப்ரல் 4, 1985, தமிழ்நாடு ஓவிய நுண்கலைக் குழு கே. சீனிவாசலுவையும் கலைத் துறையில் சாதனை படைத்த பிற கலைஞர்களான ஆர்.பி. பாஸ்கரன், ஆர். வரதராஜன், கே.எஸ். ராவ் ஆகியவர்களையும் ஹோட்டல் சுதர்சன் இன்டர்நேஷனலில் நடந்த விழாவில் கௌரவித்தது.
கலைக் கண்காட்சிகள்
தனிநபர் மற்றும் குழு கலை கண்காட்சிகள்
- 1945, கிழக்கு மாநாடு (Eastern convention) தொடர்பாக அடையாறு தியோசாபிகல் சங்கத்தில் ஒரு கலை கண்காட்சியை ஏற்பாடு செய்தார் சீனிவாசலு.
- 1947, வாஷிங்டனில் நடந்த இந்திய கலை கண்காட்சியில் பங்கேற்பு.
- 1951, பாரிஸ் கலை கண்காட்சியில் (Salon de Mai, Paris exhibition) சீனிவாசலுவின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.
- 1954: மெட்ராஸ் யு.எஸ்.ஐ.எஸில் (U.S.I.S, Madras) தனிநபர் கலை கண்காட்சி.
- 1956, செக்கோஸ்லோவாக்கியா கலை கண்காட்சி.
- 1960, யு.எஸ்.எஸ்.ஆர், சீனா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியாவில் இந்திய அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட கலைக் கண்காட்சியில் பிற கலைஞர்களின் படைப்புகளுடன் சீனிவாசலுவின் படைப்புகளும் காட்சிப்படுத்தப்பட்டன.
- 1962, லண்டன் காமன்வெல்த் ஆர்ட்ஸ் டுடே (Commonwealth Arts Today, London) கண்காட்சியில் பங்கேற்றார். காமன்வெல்த் ஆர்ட்ஸ் டுடே கண்காட்சி சிற்றேடுக்கான அட்டைப்படமாக சீனிவாசலுவின் ஓவியம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதே ஆண்டு வாழ்க்கையும் பூமியும் (Life and Earth) என்ற ஓவியம் காமன்வெல்த் கண்காட்சியில் பாராட்டப்பட்டது.
- 1966, ஜப்பான் டோக்கியோவில் நான்-அப்ஸ்ட்ராட் பெயின்டிங்கில் (Non-abstract painting) பங்கேற்பு.
- 1968: பம்பாய் குழு கண்காட்சியில் (group exhibition) பங்கேற்பு.
- 1972, மெட்ராஸ் மேக்ஸ் முல்லர் பவனில் உலோக ஓவியங்களின் தனி நபர் கலை கண்காட்சி.
- 1981, அரசு அருங்காட்சியகத்தில் சீனிவாசலு படைப்புகளுக்கான (retrospective) கலை கண்காட்சி நடத்தப்பட்டது. அதே ஆண்டு தில்லி தூமிமல் கலைக்கூடம் சீனிவாசலுவின் எனாமல் & உலோக கண்காட்சியை ஏற்பாடு செய்தது.
- இது தவிர போலந்து, ஜெர்மனி, சான் பிரான்ஸிஸ்கோ, லண்டன், பாரிஸ் உட்பட இந்திய, உலக அளவில் பல முக்கிய கலை கண்காட்சிகளில் சீனிவாசலுவின் படைப்புகள் இடம்பெற்றன.
மரணத்திற்கு பிந்தைய கலை கண்காட்சிகள்
- 2020-ஆம் ஆண்டு சென்னை ஆர்ட் வேல்ட் சரளாஸ் ஆர்ட் சென்டரின்(Art World Sarala's Art Centre) 55-வது வருட கொண்டாட்டத்தை முன்னிட்டு கே. சீனிவாசலுவின் படைப்புகளுக்கான ஒரு இணையவழி கலை கண்காட்சியை ஏற்பாடு செய்யப்பட்டது.
- 2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சீனிவாசலுவின் கலை பங்களிப்புக்கு மரியாதை செலுத்தும் விதமாக சென்னை தட்சிண்சித்ராவின் வரிஜா கலைக்கூடத்தில்(Varija Gallery of DakshinaChitra Museum) சீனிவாசலுவின் படைப்புகள் 23 நாள் காட்சிப் படுத்தப்பட்டன.
- 2022-ஆம் ஆண்டு மே மாதம் அஷ்விதா கலைக்கூடம்(Ashvita art gallery) சீனிவாசலுவின் 1950 காலகட்ட படைப்புகளை பெருமளவில் கொண்ட ஒரு கலை கண்காட்சியை(K. SREENIVASULU- A RETROSPECTIVE) நடத்தியது.
- 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 5 வரை சீனிவாசலுவின் படைப்புகளை கொண்ட கலைகாட்சியை சென்னையில் உள்ள ஆர்ட்வேல்டு சரளாஸ் ஆர்ட் சென்டர்(Art World Sarala's Art Centre) நடத்தியது.
- கே. சீனிவாசலுவின் 100-வது ஆண்டை முன்னிட்டு அவரது 100 படைப்புகள் கொண்ட கலை கண்காட்சியை (100 YEARS OF K. SREENIVASULU) 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 முதல் 23 வரை சென்னை லலித் கலா அகாடமி நடத்தியது.
பிற பணிகள்
- 1944, மெட்ராஸ் கல்வித் துறையின் கலை பிரிவுக்கான பாடத்திட்டத்தை உருவாக்கும் உறுப்பினர்.
- 1948, மெட்ராஸ் பப்ளிக் இன்ஸ்டிடியூட்டில் ஓவியத்திற்கான உறுப்பினர்.
- 1950, மெட்ராஸ் முற்போக்கு ஓவியர்கள் சங்கத்தின் (Progressive Painters Association) தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1956, ஆந்திரப் பிரதேசத்தில் கல்வி வாரியத்தின் ஓவியப் பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டார்.
- 1957-1971 வரை, லலித் கலா அகாடமியின் பொதுக்குழு உறுப்பினர்.
- 1958, லலித் கலா அகாடமியின் நடுவர் குழுவிற்கு நியமன உறுப்பினர். அதே ஆண்டு இந்திய அரசாங்கத்தின் பொதுப்பணித்துறையின் அலங்காரக் குழு (Decoration Committee) உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.
- 1960, மெட்ராஸ் லலித் கலா அகாடமியின் நிர்வாகக் குழு உறுப்பினர். அதே ஆண்டு யு.எஸ்.எஸ்.ஆர்., சீனா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியாவில் இந்திய அரசாங்கத்தின் பிற அழைப்பாளர்களுடன் இணைந்து படைப்புகளை காட்சிப்படுத்தினார்.
- 1961, மெட்ராஸ் நேச்சர் ஆர்ட் கேலரியின் (Nature Art Gallery) கொள்முதல் குழுவில் உறுப்பினர்.
- 1963, மெட்ராஸ் கைவினை துறை மையத்தின் (Design Demonstration Centre) பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
- 1964, புது தில்லியில் கல்வி அமைச்சகத்தின் பயன்பாட்டு கலை (Applied Arts) பிரிவின் உறுப்பினராக பணியாற்ற லலித் கலா அகாதமியின் நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
- 1965, டெல்லி எஐஎப்எஎஸ் (AIFAS) துணைத் தலைவர்.
- 1971, மெட்ராஸ் தென்னிந்திய ஓவியர்கள் சங்கத்தின் (South Indian painters Association) துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1982, மதுரை மாவட்டம் காந்திகிராமத்தின் கிராமப்புற கல்வி நிறுவன நிர்வாகக் குழு நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
பொது, தனியார் சேகரிப்புகளில் உள்ள சீனிவாசலுவின் படைப்புகள் (எம். நளினியின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி)
- எட்கர் ஏ. ஆல்பின் சேகரிப்பில் தேங்காய் விற்பனையாளர் (Coconut seller); டெம்பெரா(Tempera)- 1954.
- பான்லே சி. ஷெர்பர்ட்டின் சேகரிப்பில் கூடை பின்னுபவர் (Basket Weaver); டெம்பெரா- 1953.
- வால்டர் எச்.சி. லாவ்ஸ்: மீன் விற்பனையாளர்கள் (Fisherwomen); மை & நீர்வண்ணம் (Water color)- 1954, கோபினி; டெம்பெரா- 1955.
- புது தில்லி தேசிய நவீன கலைக் கூடத்தில் மீனவப் பெண்கள் (Fisherwomen); டெம்பெரா- 1958.
- எஐஎப்எஎஸ்(AIFAS), புது தில்லி, கடல் திருவிழா (Sea Festival); நீர் வண்ணம்- 1943.
- என்.கே.விநாயகம்: குடை விற்பவர்(Umbrella Seller); டெம்பெரா- 1947, கோயில் கார் திருவிழா (Temple Car Festival); டெம்பெரா- 1948, கருப்பு இளவரசி (Temple Car Festival); டெம்பெரா- 1955.
- ஏஐஆர், மெட்ராஸ்: கிருஷ்ணா; டெம்பெரா- 1955.
- பி. ரே: அலங்காரம் (Decoration); டெம்பெரா- 1948.
- பத்மநாப தம்பி: டம்மி குதிரை நடனம் (Dummy Horse dance); டெம்பெரா- 1950.
- தூமிமல் கலைக்கூடம்: விஷ்ணு மற்றும் கருடன்; உலோகத்தில் நீர் வண்ணம் (Water color on Metal)- 1970.
- தூமிமல் ஆர்ட் கேலரி: டெவில் டான்ஸ் (Devil Dance); நீர் வண்ணம்- 1970.
- மெட்ராஸ் அரசு அருங்காட்சியகம்: பால்காரி (Milkmaid); உலோகம்- 1970, சோளக்கொல்லை பொம்மை(Scare Crow); உலோகத்தில் நீர் வண்ணம்- 1971, தயிர் விற்பனையாளர்கள் (Curd Sellers); உலோகம்- 1975
- டிஎம்டி. உமா பாலகிருஷ்ணன்: கணேசா (சிற்றோவியம்- தஞ்சாவூர் பாணி- 1980).
ஆவணங்கள்
- ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியின் கவின் கலைப் பிரிவில் பயின்ற நளினி என்ற மாணவி 1983-ஆம் ஆண்டு தன் முதுகலை பட்டப் படிப்பிற்காக கே. சீனிவாசலு பற்றி ஒரு ஆய்வறிக்கையை (Sreenivasulu: A creative Genius) சமர்ப்பித்துள்ளார்.
- 1966-ல் சீனிவாசலு பற்றி எஸ்.ஏ. கிருஷ்ணன் எழுதி லலித் கலா அகாடமி ஒரு நூலை (‘K. Sreenivasulu’, A Monograph, S.A. Krishnan) வெளியிட்டது.
உசாத்துணை
- “Sreenivasulu: A creative Genius”, Nalini, Thesis submitted to the university of Madras for the M.A. Degree in History of Fine Arts, 1983 [From the Library collection of Dept. of Fine Arts, Stella Maris College, Chennai]
- ‘K. Sreenivasulu’, A Monograph, S.A. Krishnan. [New Delhi: Lalit Kala Akademi, 1966]https://ia803400.us.archive.org/1/items/ksreenivasulu0000jaya/ksreenivasulu0000jaya.pdf
- K. SREENIVASULU [1923-1995] CONFLATION OF NATIVE SENSIBILITY WITH MODERN APPROACH- an article by Dr. Ashrafi Bhagat
- அறையை வீடாக்கும் சுவர்களும் சுவர்களின் மீதேறிய ஓவியங்களும் - அரவக்கோன் (அ. நாகராஜன்)
- ஓவியர் திரு ஶ்ரீநிவாசலு, ஒரு வித்தியாசமான ஓவியர் (கலைமணி- தினமணி, புதன்கிழமை- நவம்பர் 12, 1991. பேட்டியெடுத்தவர்: க்ருஷாங்கனி)
- K. Sreenivasulu, Ghose.A.K, Roopalekha, Vol. XXXVII, Nos. 1 & 2, All India Fine Arts and Crafts Society, New Delhi
- The Art of Sreenivasulu, Jag Mohan, The March of India, Vol. VI, No.5, May-June, 1954.
- K. Sreenivasulu- A versatile Painter, Shantanu Ukil, Thought, February 26, 1972.
- Abanindranath Tagore and the art of his times, 1968, Lalit Kala Akademi, New Delhi
- Indian Art Since The Early 40's- A Search For Identity, The Artists Handicrafts Association, cholamandal, Madras, 1974.
- Moving Focus, K.G. Subramanyam, Lalit Kala Akademi, New Delhi, 1978
- Modern Art Not Very Popular South, A.S. Raman, The Times of India, 25 April 1954
- The Art Exhibition in Delhi, Shibdas Bannerji, Indian Express, 5 April 1953
- Inspiration from Folk Style, Anjali Sircar, The Hindu, Sunday, 17 June 1979
- Booklet of Sree Chitra Tirunal Medical Centre, Trivandrum, 1977
- Artist who inscribes tantras on metals, The Evening News, Thursday, August 14, 1980
- https://www.indulgexpress.com/culture/art/2021/nov/26/a-retrospective-exhibition-on-late-eminent-painter-k-sreenivasulu-features-a-potpourri-of-natural-co-37279.html
- https://kizhakkutoday.in/india-oviyargal-21/
- https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0018979_Administration_Report.pdf
- https://www.youtube.com/watch?v=Q8fC942l9M4&t=446s
- https://www.youtube.com/watch?v=nsXjjpABcxc
- https://www.youtube.com/watch?v=Q8fC942l9M4
- https://www.youtube.com/watch?v=XTBKscGmL-c&t=367s
- https://www.youtube.com/watch?v=t8Ek0K32oaw
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.