under review

எஸ். தனபால்

From Tamil Wiki

To read the article in English: S. Dhanapal. ‎

தனபால் (ஓவியர்) (நன்றி - விக்கிபீடியா காமன்ஸ்)

எஸ். தனபால் (மார்ச் 3, 1919 - மே 15, 2000) தமிழ்நாட்டின் நவீன ஓவிய சிற்பக் கலைஞர்களில் ஒருவர். பல்துறை ஆர்வம் கொண்டவர். கலைஞராகவும் கலை ஆசிரியராகவும் ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் இயங்கியவர். இவரது சிற்பங்களான ஔவையார், தாய்-குழந்தை, கிராம தேவதை முதலியவை தமிழ்ப் பாரம்பரியத்தையும் இந்திய அழகியலையும் நவீனத்துவம் கலந்து வெளிப்படுத்துபவை. சென்னையை மையமாகக் கொண்டு இயங்கிய 'மெட்ராஸ் ஆர்ட் மூவ்மென்ட்' என்ற கலை இயக்கத்தை ராய் சௌத்ரி, பணிக்கர், எல் முனிசாமியுடன் ஒருங்கிணைத்தவர். தென்னிந்திய ஓவியர் சங்கத்தின் துணைத் தலைவர், தலைவர் பதவிகளிலும், லலித் கலா அகாடமியின் தேர்வு மற்றும் நிர்வாக குழுவிலும் இருந்தார். சென்னை மற்றும் கும்பகோணம் கவின்கலைக்(ஓவியக் கல்லூரி) கல்லூரிகளில் முதல்வராகப் பணியாற்றியுள்ளார். இவரது மாணவர்களில் பலர் பிற்காலத்தில் சிறந்த கலைஞர்களாக உருவானார்கள்.

பிறப்பு, கல்வி

தனபால் மார்ச் 3, 1919 அன்று சென்னை மயிலாப்பூரில் பிறந்தார். அப்பா சுப்புராயுலுவின் சொந்த ஊர் ஆந்திரா. அம்மா முனியம்மா சென்னை மீஞ்சூர் பகுதியை சேர்ந்தவர். மூன்று பெண் குழந்தைகளுடன் தனபாலையும் சேர்த்து நான்கு குழந்தைகள்.

மளிகை கடை வைத்திருந்த அப்பா சுப்புராயலு தனபாலுக்கு எட்டு வயது இருக்கும் போது மறைந்தார். அவர்களுக்கு உடைமையான வீடுகளில் இருந்து வரும் வாடகை, அம்மாவும் அத்தை ஆனந்தம்மாளும் எலுமிச்சை ஊறுகாய் தயாரித்து விற்பதன் மூலம் வரும் வருமானம் போன்றவற்றால் வாழ்ந்தார்கள். ஓவியம், நாட்டியம், இசை, அரங்க நாடகம், தற்காப்புக் கலை, போன்சாய் வளர்ப்பு என பல்துறை ஆர்வம் கொண்டவர் தனபால். இசையில் அரியக்குடி இராமானுஜ அய்யங்கார் தனபாலை கவர்ந்தவர். பிரபல நடனக் கலைஞர் உதய்சங்கர், ராம் கோபால், நடராஜன் போன்றவர்கள் சென்னையில் நடத்திய நாட்டிய நிகழ்ச்சிகள் தனபாலுக்கு நாட்டியத்தின் பால் ஆர்வம் வர காரணமாக இருந்தன. காட்டுமன்னார்கோயில் முத்துக்குமாரசுவாமி நட்டுவனாரிடம் பரத நாட்டியம் பயின்றார். அன்று பிரபலமாக இருந்த நடராஜன்-சகுந்தலா நாட்டிய தம்பதியின் குழுவில் சேர்ந்து 'சித்திரம் தனபால்' என்ற பெயருடன் நாட்டிய நாடகங்களை அரங்கேற்றினார். பிறகு தனிக் குழுவாகவும் புத்தர், இயேசு கிறிஸ்து, சிவதாண்டவம் நாடகங்கள் நடத்தினார். நாடகத்திற்கு தேவையான நகைகள், அலங்கார உடைகள், அரங்கம் வடிவமைக்கவும் உதவி இருக்கிறார். கதகளி குமாரிடம் கதகளியும், போலோநாத்திடம் கதக்கும் கற்றார். தனபாலின் 'மீனவ' நடனம் புகழ்பெற்றது. இவரது நடனத்திறமை காரணமாக பி. எஸ். செட்டியாரிடமிருந்து கன்னா பிலிம்ஸார் எடுத்த 'திருமழிசை ஆழ்வார்' திரைப்படத்தில் நடிக்க அழைப்பு வந்தது. ஆழ்வாருக்குக் காட்சி தரும் கிருஷ்ணனாகவும் சிவனாகவும் நடித்தார்.

தனி வாழ்க்கை

1945-ல் பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து கொண்டிருந்த மீனாட்சியை மணந்தார். இவருக்கு இரு மகன்கள்: சுரேந்திரன், ரவி, ஒரு மகள்: ரேவதி. இவர் மகள் ரேவதி தனபாலின் மாணவரும் ஓவியருமான ஆர். பி. பாஸ்கரனைத் திருமணம் செய்து கொண்டார். நடிகர் என்.எஸ். கிருஷ்ணனின் தம்பியின் மகளை தனபாலின் மூத்த மகன் சுரேந்திரன் திருமணம் செய்து கொண்டார்.

ஓவியக் கல்வி, பணி

மயிலாப்பூர் கோவில் வாகன வேலைப்பாடுகள் இவரை சிறு வயதில் கவர்ந்திருக்கிறது. மரப்பொம்மை செய்யும் பள்ளி நண்பனின் அப்பாவுடன் சேர்ந்து மரத்தாலான பீர்க்கங்காய் செய்தது தான் தன் முதல் கலைப்படைப்பு என்று தனபால் கூறியிருக்கிறார். தனபாலின் பள்ளி ஆசிரியராக இருந்த தமிழறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமியின் வழிகாட்டுதலில் ஓவியக் கல்லூரியில் சேர்ந்தார். ஆரம்பத்தில் ஓவியம் கற்க சில புகைப்பட ஸ்டூடியோக்களில் வேலை பார்த்தார். அடுத்து சென்னை ஓவியக் கல்லூரியில் படித்தவரான கோவிந்தராஜூ நாயக்கரிடம் முறையாக ஒரு வருடம் ஓவியம் பயின்றார். இப்பயிற்சியின் விளைவால் கலைக் கல்லூரி தகுதி பரீட்சையில் வென்றார். 1935-ல் சென்னை ஓவியக்(அரசு கவின்கலை மற்றும் கைவினை) கல்லூரியில் வரைகலை(painting) மாணவராக சேர்ந்து பட்டம் பெற்றார். பின்னாளில் சிற்பத் துறையை தன் முதன்மை ஊடகமாகக் கொண்டு அக்கல்லூரியின் சிற்பத் துறை ஆசிரியரானார்.

1968-ல் கும்பகோணம் ஓவியக் கல்லூரியின் முதல்வரானார். 1972-1977 ஆண்டுகளில் சென்னை ஓவியக் கல்லூரி முதல்வராக இருந்து ஓய்வு பெற்றார்.

கலை வாழ்க்கை

Composition, 1954, Tempera, 25.4 × 45.7 cm
கலைக்கல்லூரி

கல்லூரி காலங்களில் அருகில் இருந்த மூர் மார்க்கெட், மிருக காட்சி சாலை மற்றும் பல இடங்களில் சென்று வரைந்து பழகினார். கல்லூரி முதல்வர் ராய் சௌத்ரியின் அணுக்கமான மாணவராக இருந்தார். ஜி. டி. பால்ராஜ், ஞானாயுதம், சையத் அகமது போன்ற மூத்த மாணவர்களின் படைப்புகள் தனபாலை கவர்ந்தன. தனபாலின் ஆரம்பகால ஓவியங்களில் நந்தலால் போஸ் போன்ற வங்க மறுமலர்ச்சி ஓவியர்கள் மற்றும் மேலைநாட்டு இம்பிரசனிச ஓவியங்களின் பாதிப்பு இருந்தது.

Christ, 1958, Bronze, 43x17 cm
கலைப்படைப்புகள்

தனபாலின் படைப்புகளை மூன்று காலகட்டங்களாக பிரிக்கலாம். ஆரம்பத்தில் ஓவியங்கள் மட்டும் வரைந்தார். கல்லூரி காலத்தில் இவர் வரைந்த கோட்டோவியங்களிலும் வண்ண ஓவியங்களிலும் மண்ணின் நிலப்பரப்பும் மனிதர்களும் நவீனம் கலந்து வெளிப்படுகின்றன. பிறகு சிற்பத்தை தன் ஊடகமாக தேர்ந்தெடுத்தார். இறுதிக் காலத்தில் சிற்பங்கள் உருவாக்க அவரது உடல்நிலை ஒத்துழைக்காததால் அதிகமாக கோட்டோவிங்கள் மற்றும் அரூப ஓவியங்கள் வரைந்தார்.

Mother and child, 1957, Bronze, 47 x 33 x 25.4 cm
E. Ve. Ra, 1955

தனபாலின் சிற்பங்களை மூன்றாக வகைப்படுத்தலாம்.

  • முதலாவது- ஔவை, தாயும் குழந்தையும்(Mother & Child), கிறிஸ்து(Christ), மேரியும் ஏசுவும்(Mary & Christ), கிராம தேவதை(Village Diety), காளை(Bull), சிரசு(Head) என்று இவர் வடித்த மரபும் நவீன வடிவமும் இணைந்த சிற்பங்கள்.
  • இரண்டாவது -நவீனத்தின் சாயல் அதிகம் தெரியும் தலையற்ற உடல்(Torso), தொகுப்பு(Composition) போன்ற சிற்பங்கள்.
  • மூன்றாவது -தலைவர்களை நேரடியாக பார்த்தும் புகைப்படங்கள் உதவியுடனும் யதார்த்த(Realistic) பாணியில் இவர் உருவாக்கிய காந்தி, நேரு, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், காமராஜர், பெரியார், திரு.வி.க, சி. ஆர். ரெட்டி, பிட்டி தியாகராஜர், பாரதிதாசன், ஏ. லட்சுமணசாமி முதலியார் போன்றவர்களின் தலை மற்றும் மார்பளவு சிலைகள்.

1956-ல் புத்தரின் இரண்டாயிரத்து ஐந்நூறாவது ஜெயந்தியை முன்னிட்டு ஆறடிக்கு நான்கு அடி அளவில் முப்பது புத்தரின் வாழ்க்கை ஓவியங்களை கேன்வாஸில் வரைய அரசு முடிவெடுத்தது. அன்றைய கல்வி அமைச்சர் சி. சுப்பிரமணியம் அப்பொறுப்பை தனபாலிடமும் சீனிவாசலுவிடமும் ஒப்படைத்தார். ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத் புத்த ஜெயந்தி விழாவை துவக்கி வைக்க சென்னை அருங்காட்சியகத்தில் அன்று திறக்கப்பட்ட புத்தரின் நூற்றாண்டு விழா கட்டிடத்தில் அந்த ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டது.

ஆர் கே சண்முகம் செட்டியார் உட்பட பல முக்கிய பிரமுகர்களுக்கு கலைப் படைப்புகள் செய்து கொடுத்திருக்கிறார்.

பயணம்

தன் சக மாணவரும் நெருங்கிய நண்பருமான கே சி எஸ் பணிக்கருடன் இந்திய நகரங்களுக்கு பயணம் செய்தார். வங்காளத்தின் நந்தலால் போஸ், ஜெமினி ராய், ராம் கிங்கர் பெய்ஜ் முதலிய முக்கிய கலைஞர்களை சந்தித்து பேசினர். இப்பயணம் தனபால் தன் துறையாக ஓவியத்தையும் சிற்பத்தையும் முழுநேரமாக தேர்வு செய்ய உந்துதலாக இருந்தது.

பாரீஸ், ரோம், செக்கோஸ்லோவாக்கியா போன்ற நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்து அங்குள்ள கலைப் படைப்புகளை பார்வையிட்டிருக்கிறார்.

பிற பணிகள்
Composition, Bronze, 23x16 cm

தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் காமராஜர் இருபது நாட்களுக்கு மேல் நடத்திய ஓவியக் கண்காட்சி மேளா சிறப்புற தனபாலும் பணிக்கரும் உழைத்தார்கள். அது சென்னையில் முதன்முதலில் நடந்த பெரிய ஓவியக் கண்காட்சியாக அமைந்தது.

சோழ மண்டல கலை கிராமம் துவங்கப்பட்ட போது கே சி எஸ் பணிக்கருடன் தனபாலும் முக்கிய பொறுப்பு வகித்தார். பிற்பாடு கருத்து வேறுபாடு காரணமாக சோழ மண்டலத்தில் இருந்து விலகினார்.

தென்னிந்திய கலைஞர்களின் கூட்டமைப்பிலும் தனபால் முக்கிய உறுப்பினராகப் பணியாற்றினார்.

தனபால் சென்னை ஓவியக் கல்லூரி முதல்வராக இருந்த போது அன்றிருந்த வழக்கப்படி ராஜ்பவன் கலைச்சேகரிப்புகளில் கருத்துச் சொல்பவராகவும் ஆலோசனை வழங்குபவராகவும் இருந்தார்.

விருத்தாச்சலத்தில் இருந்த அரசு ஸெராமிக் தொழிற்சாலையின் பீங்கான் துறைக்கு கவுரவ ஆலோசகராக பணியாற்றியிருக்கிறார். சிம்ஸன் குரூப் கம்பெனியின் கலை ஆலோசகராக இருந்துள்ளார்.

1978-ல் ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற அகில இந்திய கலைஞர்கள் முகாமில் பங்கேற்றார்.

1979-ல் தமிழ்நாடு லலித் கலா அகாடமி சார்பாக ஊட்டியில் நடைபெற்ற அகில இந்திய கலைஞர்கள் முகாமில் கலந்து கொண்டார்.

1980-ல் சென்னையில் நடைபெற்ற அகில இந்திய சிற்பிகள் முகாமில் பங்கேற்றார். அதே ஆண்டு லலித் கலா அகாடமியின் நடுவர் குழுவில் இருந்தார்.

அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஓவிய ஆசிரியர்களுக்கு குறுகிய காலப் பயிற்சி முகாம்கள் நடத்தியுள்ளார்.

கடைசி ஆண்டுகளில் கலாக்ஷேத்ராவில் நுண்கலைத் துறைப் பேராசிரியராக பணியாற்றினார்.

இறப்பு

தனபால் மே 15, 2000 அன்று தன் 82-ஆவது வயதில் காலமானார்.

கலைத்துறையில் இடம், அழகியல்

Avvaiyar, 1960, Bronze, 17 x 22 cm

தனபால் சிற்பத்தை தன் முதன்மை ஊடகமாக கொண்டவர். அதனால் அவரது முக்கிய படைப்புகள் பெரும்பாலும் சிற்பங்களாக உள்ளன. தனபாலின் படைப்புகளில் இந்திய பாரம்பரியச் சிற்பங்கள் மற்றும் வங்காள மறுமலர்ச்சி கலைஞர்களான நந்தலால் போஸ், ஜெமினி ராய் போன்றவர்களின் தாக்கம் உண்டு. நீண்ட கண்கள் இந்திய பாரம்பரிய சிற்ப ஓவியங்களில் உள்ள முகங்களுடன் நவீனமாக வெளிப்படும் இப்படைப்புகளுக்கு உதாரணம் இவரது 'சிலுவையை சுமக்கும் கிறிஸ்து' சிற்பம். தனபால் வடித்த ஈ.வெ.ரா போன்ற யதார்த்த பாணி தலைவர்கள் சிலைகளில் இவரது ஆசான் ராய் சௌத்ரி, மேற்கத்திய சிற்பிகளான ரோடின், ஹென்ரி மூர் போன்றவர்களின் பாதிப்புகளை உணரலாம்.

தனபாலின் ஔவையார், கிராம தேவதை போன்ற படைப்புகள் தமிழ் மரபின் அழகியல் நவீனத்துவத்துடன் வெளிப்படும் சிற்பங்கள்.

உருவச்சிலை(portrait) வடிப்பதில் தனபால் திறமை வாய்ந்தவராக இருந்தார். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், திரு.வி.க, காமராஜர், ஈ.வெ.ரா போன்ற பல தலைவர்கள் பொறுமையாக அவருக்கு வடிவ மாதிரியாக(model) இருந்துள்ளனர். கையில் இருந்த ஓரே ஒரு புகைப்படத்தை வைத்து தனபால் காந்தி சிலையை உருவாக்கினார். காந்தியை நேரடியாக அறிந்தவர்களான அவரது மகன் தேவதாஸ் காந்தி, ராஜாஜி ஆகியவர்கள் அச்சிலையின் தத்ரூபத்தை பார்த்து வியந்தார்கள்.

தனபால் தன் கலைக்கான பின்னணியை பற்றி கூறும் போது "என்னுடைய அம்மா பூஜையறையில் வைத்திருந்த வெண்கலச் சிற்பங்களில் இருந்து இது ஆரம்பித்திருக்கலாம் என நினைக்கிறேன். எனக்கு மரபும் நவீனமும் ஒன்றுக்கொன்று முரண்படும் இருவேறு பார்வைகளாகத் தெரியவில்லை. அவ்விரண்டிலுமே நான் ஒருமையை, ஒரு தொடர்ச்சியைக் காண்கிறேன். நான் பல்லவ சிற்பங்களில் துவங்கி, ரோடினை உள்வாங்கி, மூருக்கு வந்து சேர்ந்தேன். இவைகளுக்கிடையில் எந்த தொடர்ப்பின்மையையும் நான் உணரவில்லை".

Ravana, 1988, Pen and ink on paper, 21.6 × 12.7 cm, (Thanks: artsy.net)

தனபால் ஒரு கலைஞனாக மட்டுமின்றி சிறந்த கலைஞர்களின் உருவாக்கத்தில் பங்காற்றிய கலை ஆசிரியராகவும் விளங்கினார். சென்னை ஓவியக் கல்லூரியின் சிற்பத் துறைக்கு தனபாலின் பங்களிப்பு ஏராளம். ராய் சௌத்ரி காலத்தில் கல்லூரியில் பிளாஸ்டர் ஆப் பாரீசோடு சிலைவடிப்பு நின்று விடும் நிலைமை இருந்தது. ராய் சௌத்ரி தனிப்பட்ட முறையில் ஏற்கும் சிற்பங்களை வெண்கலமாகவும் பளிங்காகவும் வடிக்க அதை பிளாஸ்டர் ஆப் பாரீஸில் செய்து இத்தாலி போன்ற நாடுகளுக்கு அனுப்புவது வழக்கம். தனபால் சென்னை கவின் கலைக் கல்லூரியின் சிற்பத்துறை பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பின் அரசுக்கு கடிதமெழுதி வெங்கல வார்ப்பு(casting)க்கும், அதற்கு மாதிரிப் படிவ அச்சு(mould) எடுப்பதற்கு பூஷணம் என்ற நிபுணரும் நியமிக்கப்படவும் வழி செய்தார். கம்பிகளில் மாணவர்கள் சிற்பம் உருவாக்க ஒரு வெல்டரையும் (welder) கேட்டுப் பெற்றார். வெறும் மூன்று மாணவர்களுடன் கல்லூரியின் கடைசி விஷயமாகப் பேசப்பட்டு வந்த சிற்பத்துறை தனபால் பொறுப்பேற்ற பின் கல்லூரி முதல்வர் பணிக்கரின் துணையுடன் தரம் உயர்த்தப்பட்டு அவர் காலத்தில் படித்த மாணவர்களான கானாயி குஞ்ஞுராமன், பூல்சந்த் பைன், ரேணு தத்தா, ஜப்பானிய தடானி, ராணி பூவையா, வித்யாசங்கர், பி வி ஜானகிராமன் என்று பலரும் சிறந்த சிற்பிகளாக உயர்ந்தார்கள். சென்னை மற்றும் கும்பகோணம் கவின்கலை கல்லூரிகளில் முதல்வராகவும் பணியாற்றி கல்லூரி மாணவர்களின் வளர்ச்சிக்கு உதவினார்

இவரிடம் ஓவியப்பயிற்சி பெற்ற மாணவர்கள் பலரும் மிகச் சிறந்த கலையாளுமைகளாக உருவானார்கள். எல் முனுசாமி, ஆதிமூலம், கலை இயக்குநர் பி. கிருஷ்ணமூர்த்தி, ராமானுஜம் போன்றவர்கள் இதில் முக்கியமானவர்கள். ஓவியர் ஆதிமூலம் தன் ஆசிரியர் தனபாலை பற்றி கூறும் போது, "எனக்கு தனபால் கோட்டோவியம் வரைந்து காண்பித்த போது தான் கோடுகளின் சுதந்திரத்தை புரிந்து கொண்டேன். கோடுகளின் நளினத்தை அழகை சில நாட்களிலேயே என்னால் உள்வாங்க முடிந்தது. அது எனக்கு ஓவியக் கல்லூரியில் சேரும் ஆர்வத்தை தூண்டியது" என்றார்.

விவாதங்கள்

தனபால் தன் சுயசரிதையில் கலை இரசனை இல்லாமல் செய்யப்படும் படைப்புகள், கலை மற்றும் கலைஞர்களிடம் சில அரசாங்க அதிகாரிகளுக்கு இருக்கும் அலட்சிய போக்குகள் மீது தன் விமர்சனத்தை பதிவு செய்திருக்கிறார்.

தனபால் தான் பார்த்து வளர்ந்த மைலாப்பூர் கோவில் சுற்றுப்புறம் குட்டி மெரினா போல இருக்கும் என்றும் இன்றைக்கு கோவில் சுவரை ஒட்டி கழிவறை, கோவில் உட்பிரகாரத்தில் கண்ணை பறிக்கும் விதத்தில் வண்ண ஓவியங்களை வரைந்திருப்பது கோவிலின் அழகை கெடுக்கிறது என்றார்.

அண்ணா, எம்.ஜி.ஆர் சமாதிகள் மற்றும் தலைவர்களின் சிலைகள் கலைரசனை இல்லாமல் வடிவமைத்திருப்பதை சுட்டிக்காட்டியிருக்கிறார். காந்தி மண்டபத்தை பஜனை மண்டபம் போல் கட்டியிருப்பதாக விமர்சித்தார்.

விருதுகள்

1962-ல் புதுடெல்லியில் நடந்த தேசிய கலைக் கண்காட்சியில் தனது படைப்பிற்காக சிறந்த சிற்பிக்கான தேசிய விருதை பெற்றார்.

1978-ல் தமிழ்நாடு லலித் கலா அகாடமியின் சிறந்த சிற்பிக்கான மாநில விருது தனபாலுக்கு வழங்கப்பட்டது.

1980-ல் சிற்பத் துறையில் தனபாலின் பங்களிப்பிற்காக மத்திய கல்வி அமைச்சகத்தின் பண்பாட்டு துறையின் பெல்லோசிப் விருதும், அதே ஆண்டில் தமிழ்நாடு லலித் கலா அகாடமியின் பெல்லோசிப் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

கண்காட்சிகள்

தனிநபர் மற்றும் குழு கண்காட்சிகள்

1945-ல் புதுடெல்லி தேசிய கலை காட்சியகத்தில் நடந்த நவீன சிற்பக் கண்காட்சியில் இவரது சிற்பங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

1959-ல் மேற்கு ஜெர்மனியில் நடைபெற்ற உலகக் கலைக் கண்காட்சியில் இவரது படைப்பும் பங்குபெற்றது.

1962-ல் லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் கலைக் கண்காட்சியில் பங்கேற்றார். அதே ஆண்டு புதுடெல்லியில் நடைபெற்ற தேசிய கலைக் கண்காட்சியில் பங்கேற்றார்.

1978-ல் இவரது ஓவியங்களும் சிற்பங்களும் கோவையில் நடைபெற்ற தனிநபர் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டன.

1980-ல் இந்தியாவின் வெவ்வேறு இடங்களில் நடந்த லலித் கலா அகாடமியின் வெள்ளிவிழா கொண்டாட்டத்தின் போது இவரது படைப்புகளும் கண்காட்சியில் இடம்பெற்றன.

மரணத்திற்குப் பிந்தைய கண்காட்சிகள்

2001-ல் தனபாலின் படைப்புகள் ஆகஸ்ட் 14-28 வரை லலித்கலா அகாடமியால் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன.

2007-ல் லண்டனில் உள்ள நோபிள் ஸேஜ் காலரியில் தனபால் வரைந்த 52 ஓவியங்களின் கண்காட்சி நடந்தது.

2019-ல் தனபால் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது மகன் ரவி தனபால் மற்றும் தனபாலின் மாணவர்கள் இணைந்து தனபால் மற்றும் அவரது மாணவர்களின் படைப்புகள், அரிய புகைப்படங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது.

நிரந்தர காட்சிபடுத்தல்கள்

புதுடெல்லி சென்னையில் உள்ள தேசிய அருங்காட்சியகங்களிலும், நாடாளுமன்றம், சென்னை காந்தி அருங்காட்சியகம், ராஜ்பவன், லலித்கலா அகாதமி, மேற்கு ஜெர்மனி அருங்காட்சியகம் போன்ற பல்வேறு இடங்களில் தனபாலின் படைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

நூல்கள்

'ஒரு சிற்பியின் சுயசரிதை'. தனபால் ஜனவரி 17, 1993 முதல் ஆகஸ்ட் 31, 1993 வரை எட்டு மாதங்கள் 'ஒரு சிற்பியின் சுயசரிதை' என்ற தொடரை ஆனந்த விகடனில் எழுதினார். இத்தொடர் கட்டுரைகளை நூலாக கிருஷ்ண பிரபு காலச்சுவடு பதிப்பகம் மற்றும் சிறுவாணி வாசகர் மையம் உதவியுடன் பதிப்பித்திருக்கிறார்.

உசாத்துணை