under review

ஜான் மர்டாக் தமிழ் நூல் விவர அட்டவணை (1865): Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(; Added info on Finalised date)
Line 49: Line 49:
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|04-Sep-2024, 18:29:10 IST}}

Revision as of 01:03, 5 September 2024

ஜான் மர்டாக்கின் தமிழ் நூல் விவர அட்டவணை (1865)

பொயு 1865-ம் ஆண்டு வரை தமிழில் வெளிவந்த அச்சு நூல்களின் விவரங்களைத் தொகுத்து, ஜான் மர்டாக் ஆங்கிலத்தில் எழுதிய நூல் ‘Classified Catalogue Of Tamil Printed Books' என்னும் 'தமிழ் நூல் விவர அட்டவணை'. 1865 வரை தமிழில் அச்சிடப்பட்ட புத்தகங்களின் வகைப்படுத்தப்பட்ட பட்டியலான இந்நூல், தமிழில் வெளியான முதல் நூல் விவரப் பட்டியலாகக் கருதப்படுகிறது.

பதிப்பு, வெளியீடு

'Classified Catalogue Of Tamil Printed Books with Introductory Notices' என்னும் தமிழ் நூல் விவர அட்டவணை, 1865-ல், வேப்பேரி, தி கிறிஸ்டியன் வெர்னாகுலர் எஜுகேஷன் சொசைட்டி (The Christian Vernacular Education Society) நிறுவனத்தால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. இதனைத் தொகுத்தவர் ஜான் மர்டாக். இதன் மறுபதிப்பு, பிற்காலத்தில் 1900 வரை வெளியான நூல்களின் தரவுகளையும் சேர்த்து, 1968-ல், இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றபோது, பேராசிரியர் மு.சண்முகம் பிள்ளை அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு வெளிவந்தது. இதனை தி கிறிஸ்டியன் வெர்னாகுலர் எஜுகேஷன் சொசைட்டி நிறுவனம் வெளியிட்டது.

நோக்கம்

பிரிட்டிஷார் வருகைக்குப் பின் தமிழில் அச்சிடப்பட்டு வெளியான அச்சு நூல்கள் பற்றிய முறையான ஆவணப்பதிவுகள் இல்லை. ஆகவே, ஆங்கிலத்தில் உள்ளது போலவே தமிழிலும் அப்படி ஒரு தொகுப்பு நூலைக் கொண்டு வர வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்ட ஜான் மர்டாக், தனக்குக் கிடைத்த பதிவுகளைக் கொண்டும், தன் சேகரிப்பில் கிடைத்த ஆவணங்களைக் கொண்டும் பொயு 1865 வரை தமிழில் வெளியான நூல்களின் பட்டியலைத் தொகுத்தளித்தார். ‘தமிழில் அச்சிடப்பட்ட புத்தகங்களின் வகைப்படுத்தப்பட்ட பட்டியல்’ (Classified Catalogue Of Tamil Printed Books) என்று அத்தொகுப்பு நூலுக்குப் பெயரிட்டார்.

நூல் அமைப்பு

ஜான் மர்டாக், தனக்கு முன்னோடியான ஜே.லாங் (Rev. J. Long)கின் முறையைப் பின்பற்றியும், சென்னை, அரசுப் பள்ளித் தலைமைத் தமிழாசிரியராக விளங்கிய சி. இராசகோபால்பிள்ளை, மெக்கன்சி சுவடிப் பொறுப்பாளராகப் பணியாற்றிய டி.எஸ். கோதண்டசுவாமி ஐயர், தமிழில் நூல்களைப் படைத்த ஐரோப்பியத் தமிழறிஞர் ரெவரண்ட் எஸ்.வின்பிரெட் உள்ளிட்ட பலருடன் இணைந்து இப்பணியை மேற்கொண்டார். உலகப் புள்ளிவிவரக் குழுமத்தின் (The International Statistical Congress) அறிக்கையிலிருந்து செயல் திட்டத்தை உருவாக்கி, அட்டவணைப் பணியை மேற்கொண்டார். சென்னை மாநிலக் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர்கள் உதவியுடனும், ஏற்கனவே இத்துறையில் பணிசெய்தவர்கள் பலரது உதவிகளுடனும் இத்தொகுப்பு நூலை உருவாக்கினார்.

ஜான் மர்டாக், கீழ்க்காணும் வகைகளில் நூலைப் பகுத்து தொகுத்தளித்தார்.

  • அறிமுகம்
  • மதம்
  • நீதியியல்
  • தத்துவம்
  • அறிவியல்
  • கலை
  • இலக்கியம்
  • மொழியியல்
  • புவியியல் & வரலாறு
  • காலம் & செய்தித் தாள்கள்

- என வகைப்படுத்தி அதன் அடிப்படையில் நூல்களைத் தொகுத்துப் பட்டியலாக அளித்தார்.

உள்ளடக்கம்

தமிழில் 1865 வரை சமயம், தத்துவம், இலக்கியம், மொழியியல், கணிதம், புவியியல் மற்றும் வரலாறு, காலமுறை இதழ்கள், செய்தித்தாள்கள் என்று ஒவ்வொரு வகைப்பாட்டிலும் அச்சாகி வெளிவந்துள்ள நூல்களின் எண்ணிக்கை, நூல்களின் பெயர், ஆசிரியர்களின் பெயர், ஆசிரியர்கள் பற்றிய சிறு குறிப்பு, நூல்கள் பற்றிய சில அறிமுகங்கள், நூலில் கூறப்பட்டுள்ள பொருளின் சுருக்கம் போன்றவை ஜான் மர்டாக்கின் தமிழ் நூல் விவர அட்டவணை நூலில் இடம்பெற்றன. கூடவே தமிழ் மொழியின் சிறப்பு, பெருமை போன்றவற்றைப் பற்றியும் தனி அத்தியாயங்களில் ஜான் மர்டாக் விளக்கினார்.

அறிமுகம் என்ற பகுதியில், தனக்குக் கிடைத்த, தான் அறிந்த, தமிழ் மொழியோடு தொடர்புடைய அப்போதைய அனைத்துத் தகவல்களையும் ஆவணப்படுத்தினார். தமிழ் மொழி, இலக்கியம், கல்வி, புதிய தமிழ் வெளியீடுகளின் தேவை, பல்கலைக்கழகம் மற்றும் அரசுப் பள்ளிப் பாடப் புத்தகங்கள், தமிழ் அச்சுக்கலை, ஐரோப்பிய முறைகளில் அச்சிடுதல், வடமொழி இலக்கியம் தொடர்பாக அரசாங்கத்தின் கடமை, ராயல் ஆசியாடிக் சொசைட்டியின் (Royal Asiatic Society) முன்மொழிவு, நூற்பட்டியல் தொகுப்புப் பிரிவுகள் போன்றவற்றை அவை உள்ளடக்கி இருந்தன. தமிழ்மொழி, இலக்கியம், தமிழ்க் கல்வி, தமிழில் வெளிவர வேண்டிய நூல்கள், பல்கலைக்கழகம் மற்றும் அரசுப் பள்ளிகளுக்கான பாட நூல்கள், அச்சுமுறை, பதிப்புரிமை, வட்டார மொழிகளின் இலக்கிய வளர்ச்சிக்கு அரசு செய்ய வேண்டிய பணிகள் போன்ற குறிப்புகளையும் ஜான் மர்டாக் அளித்துள்ளார்.

ஜான் மர்டாக், கால்டுவெலின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம், வில்லியம் டெய்லரின் ஓரியண்டல் கையெழுத்துப் பிரதிகள் மற்றும் பிற படைப்புகளின் பட்டியல், எல்லீஸின் குறள் பதிப்பு, வீரமாமுனிவரின் இலக்கணம், மாக்ஸ்முல்லர், வில்சன் ஆகியவர்களின் கருத்துகளின் அடிப்படையில் தனது கருத்துகளைத் தொகுத்துக்கொண்டு முன்வைத்தார். தமிழ் நூல் விவர அட்டவணை, நூல் ஆசிரியரின் பெயர், நூலின் பெயர், நூலின் கருத்து, விலை, அச்சான ஆண்டு, பக்க எண்ணிக்கை, வெளியிட்டவர் பெயர் போன்ற தகவல்களை ஆவணப்படுத்தியது.

இந்நூல் அளித்துள்ள தரவுகளின் படி 1865 வரை வெளிவந்துள்ள தமிழ் அச்சுநூல்களின் எண்ணிக்கை 1755 ஆக அறியப்படுகிறது.

மதிப்பீடு

ஜான் மர்டாக்கின் தமிழ் நூல் விவர அட்டவணை, 1865 வரை தமிழில் அச்சிடப்பட்டு வெளிவந்துள்ள தமிழ் நூல்கள் எத்தனை, அவற்றின் பெயர்கள், ஆசிரியர்கள் பற்றிய தகவல்கள் மற்றும் என்னென்ன பொருண்மைகளில் எவ்வளவு நூல்கள் வெளிவந்தன என்பது போன்ற தகவல்களைக் கொண்ட ஆவணத்தொகுப்பு. இந்த அட்டவணை நூல் (Classical Catalogue on Tamil Printed books) மட்டும் வெளிவராமல் போயிருந்தால் 1865-க்கு முற்பட்ட அச்சு நூல்களின் தகவல்களை முழுமையாக அறிய இயலாமல் போயிருக்கும் என்பது ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

தமிழில் வெளியான முதல் நூல் விவரப் பட்டியல் நூலாகவும், பிற்காலத்தில் வெளியான பல நூல் விவர அட்டவணை நூல்களுக்கு முன்னோடி நூலாகவும், தமிழ் நூல் விவர அட்டவணை (Classified Catalogue Of Tamil Printed Books) நூல் அறியப்படுகிறது.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-Sep-2024, 18:29:10 IST