under review

கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரனார்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Added First published date)
 
Line 185: Line 185:
* சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை 4: புலவர் கா. கோவிந்தன்: திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்
* சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை 4: புலவர் கா. கோவிந்தன்: திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்
* [https://www.tamilvu.org/ta/library-l1280-html-l1280266-126779 கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரன், கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனா: tamivu]
* [https://www.tamilvu.org/ta/library-l1280-html-l1280266-126779 கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரன், கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனா: tamivu]


{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|03-Jun-2024, 21:52:38 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 16:01, 13 June 2024

கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரனார் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஆறு பாடல்கள் சங்கத்தொகை நூலான புறநானூற்றில் உள்ளன.

கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரனார் சேரமான் குட்டுவன் கோதை, சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி, சோழன் கடுமான் கிள்ளி, ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன், சோழிய ஏனாதி திருக்குட்டுவன் ஆகியோரின் வீரத்தையும், கொடைத்தன்மையையும் பாடினார்.

வாழ்க்கைக் குறிப்பு

கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரனார் சங்கப்புலவர்களில் ஒருவர். பழைய புதுக்கோட்டைத் தனியரசு நாட்டையே சங்கத்தமிழர்கள் கோனாடு என வழங்கினர். மதுரைக்குமரனாரின் எறிச்சலூர் கீழ்க்கோனாட்டில் (தற்போதைய அறந்தாங்கி) உள்ளது.

இலக்கிய வாழ்க்கை

கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரனார் புறநானூற்றில் (54, 61, 167, 180, 197, 394 ) ஆறு பாடல்களைப் பாடினார்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

புறநானூறு 54
  • பாடப்பட்டோன்: சேரமான் குட்டுவன் கோதை
  • சேரமான் குட்டுவன் கோதை: இரவலர்கள் எளிதாக அணுகும்படி அமைந்தவன், பகைவர்க்கு எளியவன் அல்ல. மழை பொழியும் வானம் நாணும் வகையில் தன்னிடம் வந்தோர்க்குக் குறையாது கொடுக்கும் கவிந்த கைகளையுடைய வள்ளல். வலிமை மிகுந்த பெரிய கைகளையுடையவன்.
  • சேரமான் குட்டுவன் கோதையின் நாட்டுக்குள் நுழைந்த வஞ்சின வேந்தரின் நிலை பசிய இலைகளால் தொடுக்கப்பட்ட மாலையையும், அழுக்குப் படிந்த உடையையும், சீழ்க்கை அடிக்கும் வாயையும் உடைய இடையன் ஒருவன் சிறிய ஆட்டுக்குட்டிகளுடன், நெருங்க முடியாத ஒருபுலி இருக்கும் பெரிய அகன்ற இடத்துக்குள் நுழைவதைப் போன்றது.
புறநானூறு 61
  • பாடப்பட்டோன்: சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி.
  • சென்னியின் நாட்டின் வளம்: கொண்டையில் கூழைச்சிண்டு போட்டு தழைப்போடு கூடிய பூவைச் செருகியிருக்கும் உழத்தியர் களை பறிக்கும்போது நெய்தல் பூவையும், ஆம்பல் பூவையும் களைந்து எறிவர். அந்த வயலில் மேயும் மலங்குமீனையும் வாளைமீனையும் பிடித்துத் துண்டுதுண்டுகளாக நறுக்கிச் சமைத்து, புதுநெல் அரிசிப் பொங்கலோடு சேர்த்து உண்ட வயல் தொழிலாளர்கள் நெல்லுக் கட்டுகளைத் தூக்கிக்கொண்டு தள்ளாடித் தள்ளாடி நடப்பர். அவர்களின் சிறுவர்கள் அங்குள்ள வைக்கோல் போரின்மீது ஏறி, தேங்காயைப் பறித்து உண்பர். அது நாக்குக்குத் தெவிட்டிவிட்டால் பனம்பழத்தைப் பறித்து உண்ண முயல்வர்.
  • சென்னியின் வீரம்: வேலேந்தி தேரில் செல்லும் சென்னி அரசன் இத்தகைய வளமான நாட்டை போரிட்டு வென்று தனதாக்கிக்கொண்டவன். அவன் மார்பைத் தாக்க வருபவர் இறுதி ஆதல் உறுதி. கணையமரம் போன்ற தோளோடு போராடியவர் வாழ்ந்ததில்லை. அவன் காலடியில் கிடப்பவர்கள் வருந்தியதில்லை.
புறநானூறு 167
  • பாடப்பட்டோன் : சோழன் கடுமான் கிள்ளி
  • கிள்ளியின் குதிரை வீரன் பகைவரை எதிர்த்து நின்று வாள்காயம் பட்ட உடம்போடு உள்ளான். அவனுடைய பகைவர் புறமுதுகிட்டு ஓடியதால் காயமில்லாமல் உள்ளனர் என புலவர் அவனைப் பாராட்டுகிறார்.
புறநானூறு 180
  • பாடப்பட்டோன்: ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன்.
  • மாறனின் குணம்: வறுமை தீரக் கொடுக்கும் செல்வமும் அவனிடத்தில் இல்லை. அதே நேரத்தில் இல்லை என மறுக்கும் சிறுமைக் குணமும் அவனிடத்தில் இல்லை. தன் அரசனுக்கு நேரும் துன்பத்தை அவன் தாங்கிக்கொள்வான். அவன் உடம்பில் இரும்பு ஆயுதம் தாக்கிய விழுப்புண் காயங்கள் இருக்கும். அவை மருந்துக்காகப் பட்டையைக் காயப்படுத்திய மரத்தில் காயம் ஆறிப்போய் உள்ள வடுக்களைப் போல இருக்கும். கொடை வழங்குவதற்காகவே ஈந்தூரில் அவன் இருக்கிறான். அவன் பசிப்பிணிக்குப் பகைவன்.
  • வறுமை தீர தன்னுடன் ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறனிடம் வருமாறு முதிர்ந்த புலவனை மதுரைக்குமரனார் அழைக்கிறார். உதவும்படி அவனிடம் கேட்டால் பட்டினி கிடக்கும் தன் வயிற்றைக் கொல்லனிடம் காட்டி உதவும்படி வேண்டுவான். தன் வேலைத் திருத்திக் கூர்மையாக்கித் தரும்படிக் கேட்பான். அந்த வேலைப் பயன்படுத்தி உணவுப்பொருள்களை ஈட்டிக்கொண்டுவந்து வழங்குவான்.
புறநானூறு 197
  • பாடப்பட்டோன் : சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்.
  • காற்றைப்போல் தாவிச் செல்லும் குதிரை, கொடி பறக்கும் தேர், கடல் போல் ஆட்படை தோற்றத்தால் மலையையும் மலைக்கவைக்கும் களிறு, இடி போல் முழங்கும் முரசம் இவற்றையெல்லாம் கொண்டவராய் போரில் வெற்றி கண்டவர் ஆயினும் மண்ணகமெல்லாம் பரந்து நிற்கும் தானை உடையவர் ஆயினும் வெற்றியின் அடையாளமாக ஒளிரும் பூண் உடைய வேந்தராயினும் அவரது வெண்கொற்றக்குடைச் செல்வத்தைக் கண்டு நான் வியக்கமாட்டேன். எம்மால் வியக்கப்படுபவர் ஆட்டுக்குட்டி மேய்ந்த பின்னர் வீட்டு முள்வேலியில் துளிர்த்துப் படர்ந்திருக்கும் முஞ்ஞைக் கொடியைச் சமைத்து வரகரிசிச் சோற்றுடன் உண்ணும் சிற்றூர் மன்னர் ஆயினும் என் பெருமையை உணர்ந்து நடந்துகொள்ளும் பண்பாளரே.
  • மிகப் பெருந் துன்பத்தில் உழன்றாலும் இரக்க-உணர்ச்சி இல்லாதவருடைய செல்வத்தைப் பெற நினைக்கவும் மாட்டேன் என புலவர் குறிப்பிடுகிறார்.
  • நல்லறிவு உடையோரின் வறுமை போற்றுதலுக்குரியது.
புறநானூறு 394
  • பாடப்பட்டோன்: சோழிய ஏனாதி திருக்குட்டுவன்.
  • நிலவு உதித்திருந்த வைகறை விடியலில் கிணைப்பறையில் இசையை முழக்கிக்கொண்டு குட்டுவன் ஆளும் வஞ்சிநகரின் பெருமையைப் புலவர் பாடியபோது அவன் மகிழ்ந்து போர்க்களத்தில் பகைவரைக் கொன்று சினம் தணியாத புலால் நாறும் தந்தத்தை உடைய ஒரு யானையைப் பரிசாக வழங்கினான். அதைக் கண்டு அவர் அஞ்சி விலகியதைப் பார்த்து, தான் குறைவாகக் கொடுத்தமைக்கு நாணி மேலும் யானையை வழங்கினான். அதுமுதல் புலவர் சுற்றம் ‘நெருங்கமுடியாத பரிசில் தந்துவிடுவான்’ என்று எண்ணி அவனிடம் பரிசில் கேட்டுச் செல்வதையே விட்டுவிட்டார்.

பாடல் நடை

  • புறநானூறு 54

(திணை: வாகை; துறை: அரசவாகை)

எங்கோன் இருந்த கம்பலை மூதூர்
உடையோர் போல இடையின்று குறுகிச்
செம்மல் நாளவை அண்ணாந்து புகுதல்
எம்அன வாழ்க்கை இரவலர்க்கு எளிதே;

இரவலர்க்கு எண்மை அல்லது; புரவுஎதிர்ந்து
வானம் நாண வரையாது சென்றோர்க்கு
ஆனாது ஈயும் கவிகை வண்மைக்
கடுமான் கோதை துப்பெதிர்ந்து எழுந்த
நெடுமொழி மன்னர் நினைக்குங் காலைப்

பாசிலைத் தொடுத்த உவலைக் கண்ணி
மாசுண் உடுக்கை மடிவாய் இடையன்
சிறுதலை ஆயமொடு குறுகல் செல்லாப்
புலிதுஞ்சு வியன்புலத்து அற்றே
வலிதுஞ்சு தடக்கை அவனுடை நாடே.

  • புறநானூறு 61

(திணை: வாகை, துறை: அரச வாகை)

கொண்டைக் கூழைத் தண்டழைக் கடைசியர்
சிறுமாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும்,
மலங்கு மிளிர், செறுவின் தளம்புதடிந் திட்ட
பழன வாளைப் பரூஉக்கண் துணியல்
புதுநெல் வெண்சோற்றுக் கண்ணுறை ஆக,
விலாப் புடை மருங்கு விசிப்ப மாந்தி,
நீடுகதிர்க் கழனிச் சூடுதடு மாறும்
வன்கை வினைஞர் புன்தலைச் சிறாஅர்
தெங்குபடு வியன்பழம் முனையின், தந்தையர்
குறைக்கண் நெடுபோர் ஏறி, விசைத் தெழுந்து,
செழுங்கோட் பெண்ணைப் பழந்தொட முயலும்,
வைகல் யாணர், நன்னாட்டுப் பொருநன்,
எகுவிளங்கு தடக்கை இயல்தேர்ச் சென்னி,
சிலைத்தார் அகலம் மலைக்குநர் உளர்எனின்,
தாமறி குவர்தமக்கு உறுதி; யாம் அவன்
எழுஉறழ் திணிதோள் வழுவின்றி மலைந்தோர்
வாழக் கண்டன்றும் இலமே; தாழாது,
திருந்து அடி பொருந்த வல்லோர்
வருந்தக் காண்டல், அதனினும் இலமே!

  • புறநானூறு 167

(திணை: வாகை, துறை: அரச வாகை)

நீயே, அமர்காணின் அமர்கடந்து, அவர்
படை விலக்கி எதிர் நிற்றலின்,
வாஅள் வாய்த்த வடுவாழ் யாக்கை யொடு,
கேள்விக்கு இனியை, கட்கின் னாயே!
அவரே, நிற்காணின் புறங் கொடுத்தலின்,
ஊறுஅறியா மெய் யாக்கை யொடு.
கண்ணுக்கு இனியர்; செவிக்குஇன் னாரே!
அதனால்,நீயும் ஒன்று இனியை;அவரும்ஒன்றுஇனியர்;
ஒவ்வா யாவுள, மற்றே? வெல்போர்க்
கழல்புனை திருந்தடிக் கடுமான் கிள்ளி!
நின்னை வியக்குமிவ் வுலகம்; அது
என்னோ? பெரும! உரைத்திசின் எமக்கே.

  • புறநானூறு 180

(திணை: வாகை, துறை: வல்லாண்முல்லை)

நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலனே;
இல்லென மறுக்கும் சிறுமையும் இலனே;
இறையுறு விழுமம் தாங்கி, அமர்அகத்து
இரும்புசுவைக் கொண்ட விழுப்புண்நோய் தீர்ந்து,
மருந்துகொள் மரத்தின் வாள்வடு மயங்கி,
வடுவின்றி வடிந்த யாக்கையன், கொடையெதிர்ந்து,
ஈர்ந்தை யோனே, பாண்பசிப் பகைஞன்;
இன்மை தீர வேண்டின், எம்மொடு
நீயும் வம்மோ? முதுவாய் இரவல!
யாம்தன் இரக்கும் காலைத், தான்எம்
உண்ணா மருங்குல் காட்டித், தன்ஊர்க்
கருங்கைக் கொல்லனை இரக்கும்,
திருந்திலை நெடுவேல் வடித்திசின் எனவே.

  • புறநானூறு 197

(திணை: பாடாண், துறை: பரிசில் கடா நிலை)

வளிநடந் தன்ன வாஅய்ச் செலல் இவுளியொடு
கொடிநுடங்கு மிசைய தேரினர் எனாஅக்,
கடல்கண் டன்ன ஒண்படைத் தானையொடு
மலைமாறு மலைக்குங் களிற்றினர் எனாஅ,
உரும்உடன் றன்ன உட்குவரு முரசமொடு
செருமேம் படூஉம் வென்றியர் எனாஅ,
மண்கெழு தானை, ஒண்பூண் வேந்தர்
வெண்குடைச் செல்வம் வியத்தலோ இலமே;
எம்மால் வியக்கப் படூஉ மோரே,
இடுமுள் படப்பை மறிமேய்ந்து ஒழிந்த 10
குறுநறு முஞ்ஞைக் கொழுங்கண் குற்றடகு,
புன்புல வரகின் சொன்றியொடு, பெறூஉம்,
சீறூர் மன்னர் ஆயினும், எம்வயின்
பாடறிந்து ஒழுகும் பண்பி னோரே;
மிகப்பேர் எவ்வம் உறினும், எனைத்தும்
உணர்ச்சி யில்லோர் உடைமை யுள்ளேம்;
நல்லறி வுடையோர் நல்குரவு
உள்ளுதும், பெரும! யாம், உவந்து நனி பெரிதே!

  • புறநானூறு 394

(திணை: பாடாண், துறை: கடைநிலை)

சிலையுலாய் நிமிர்ந்த சாந்துபடு மார்பின்,
ஒலிபுனற் கழனி வெண்குடைக் கிழவோன்,
வலிதுஞ்சு தடக்கை வாய்வாள் குட்டுவன்,
வள்ளிய னாதல் வையகம் புகழினும்!
உள்ளல் ஓம்புமின், உயர்மொழிப் புலவீர்!
யானும், இருள்நிலாக் கழிந்த பகல்செய் வைகறை,
ஒருகண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றிப்,
பாடுஇமிழ் முரசின் இயல்தேர்த் தந்தை
வாடா வஞ்சி பாடினேன் ஆக,
அகமலி உவகையொடு அணுகல் வேண்டிக்,
கொன்றுசினந் தணியாப் புலவுநாறு மருப்பின்
வெஞ்சின வேழம் நல்கினன் ; அஞ்சி
யான்அது பெயர்த்தனென் ஆகத், தான்அது
சிறிதென உணர்ந்தமை நாணிப், பிறிதும்ஓர்
பெருங்களிறு நல்கி யோனே; அதற்கொண்டு,
இரும்பேர் ஒக்கல் பெரும்புலம்பு உறினும்,
துன்னரும் பரிசில் தரும் என,
என்றும் செல்லேன், அவன் குன்றுகெழு நாட்டே!

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 03-Jun-2024, 21:52:38 IST