under review

பெ. வரதராஜுலு நாயுடு: Difference between revisions

From Tamil Wiki
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(Added First published date)
 
Line 45: Line 45:
* [https://inctamilnadu.in/sri-varadarajulu-naidu/ Sri.Varadarajulu Naidu: Tamilnadu congress committee]
* [https://inctamilnadu.in/sri-varadarajulu-naidu/ Sri.Varadarajulu Naidu: Tamilnadu congress committee]
* [https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2013/may/12/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5.%E0%AE%89.%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F--26377.html பாரதி, வ.உ.சி யால் போற்றப்பட்டவர்: தினமணி]
* [https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2013/may/12/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5.%E0%AE%89.%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F--26377.html பாரதி, வ.உ.சி யால் போற்றப்பட்டவர்: தினமணி]


{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|17-Nov-2023, 21:39:14 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 14:06, 13 June 2024

பெ. வரதராஜுலு நாயுடு

பெ. வரதராஜுலு நாயுடு (ஜூன் 4, 1887 - ஜூலை 23, 1957) அரசியல்வாதி, விடுதலைப் போராட்ட வீரர், சித்த ஆயுர்வேத மருத்துவர், பத்திரிக்கையாளர், பேச்சாளர் கட்டுரையாளர். முற்போக்கு தேசியவாத சிந்தனை கொண்டவர். தொழிலாளர் நல உரிமைக்காகப் போராடினார். சென்னை மாநிலச் சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு

வரதராஜுலு நாயுடு சேலம் மாவட்டம் ராசிபுரத்தில் ஜூன் 4, 1887-ல் பெருமாள் நாயுடு, குப்பம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். எட்டாம் வயதில் தந்தையையும், பன்னிரெண்டாம் வயதில் தாயையும் இழந்தார். கோயம்புத்தூரில் தாயின் சகோதரி வீட்டில் வளர்ந்தார். அவரின் ஆதரவில் பள்ளிக் கல்வி பயின்றார். 1906-ல் வந்தே மாதரம் இயக்கத்தில் ஈடுபட்டதால் உயர்கல்வியை நிறைவு செய்யவில்லை. கல்கத்தா தேசியக்கல்லூரியில் இரண்டாண்டு இந்திய மருத்துவம் கற்றார். சித்தவைத்தியம், ஆயுர்வேத வைத்தியம் இரண்டிலும் தேர்ச்சி பெற்றார்.

தனிவாழ்க்கை

பெ. வரதராஜுலு நாயுடு தன் 24-ம் வயதில் ருக்மணியைத் திருமணம் செய்துகொண்டார். மகன்கள் கிருஷ்ணதாஸ், ராமதாஸ், பாலச்சந்திர ஆர்யா, பிரதாப சந்திரா, இந்திர குமார், தயானந்தா. மகள்கள் லீலாவதி, சரஸ்வதி, மாயாதேவி. திருப்பூரை இருப்பிடமாகக் கொண்டு மருத்துவத் தொழிலில் ஈடுபட்டார். ’மின்சார ரசம்’ என்ற பெயரில் அக்காலத்தில் வலி நிவாரண மருந்தைத் தயாரித்தார். அவரது ஆயுர்வாத மருத்துவம் சேலத்தில் பிரபலமானதால் சேலம் நரசிம்மய்யர் ஆயுர்வேத மருத்துவ நிலையத்தைத் திறந்து வைத்தார். ஆண்டுக்கு இருபத்தி நான்காயிரம் வருமானம் வந்தது. மூவாயிரம் வருமான வரி கட்டினார். 1916-ல் அரசியல் ஈடுபாட்டால் மருத்துவத் தொழிலைக் கைவிட்டார். வரதராஜுலு நாயுடு ஏழை மக்கள் கல்வி கற்க திண்டிவனம் அருகே அசோகபுரி கிராமத்தில் குருகுலத்தைத் தொடங்கினார். அவரின் மறைவிற்குப்பின் குடும்பத்தினர் குருகுலம் அறக்கட்டளையை நடத்தி வருகின்றனர். ருக்மணி டிசம்பர் 26, 1988-ல் காலமானார்.

பெ. வரதராஜுலு நாயுடு

சமூகப்பணி

  • 1917-ல் நாகப்பட்டினத்தில் தென்னிந்திய ரயில்வே தொழிலாளர் சங்கம் அமைக்கப் பங்காற்றினார். 1924-ல் சென்னை மாகாணத் தொழிலாளர் இரண்டாவது மாநாடு பெ. வரதராஜுலு நாயுடு தலைமையில் கூடியது. 1926-ல் அகில இந்திய தொழிலாளர் யூனியன் காங்கிரசின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1930-ல் கூனூரில் நடைபெற்ற தொழிலாளர் மாநாட்டில் 'நிலத்தை தேசியமயமாக்க வேண்டும்' என்ற முழக்கத்தை முன்னெடுத்தார்.
  • வரதராஜுலு நாயுடு தீண்டாமைக்கு எதிரானவர். 1924-ல் வ.வே.சு ஐயர் சேரன்மாதேவியில் தொடங்கிய குருகுலத்தில் பிராமணச் சிறுவர்கள் தனியாகவும் பிறர் தனியாகவும் உணவருந்தும் ஏற்பாட்டைக் கண்டித்தார்.

அரசியல் வாழ்க்கை

காங்கிரஸ்

வரதராஜுலு நாயுடு 1906-ல் நாட்டில் பரவிய 'வந்தே மாதரம்' இயக்கத்தால் கவரப்பட்டு "முற்போக்காளர் சங்கம்" எனும் ஓர் அமைப்பை மாணவர்களிடையே அமைத்தார். அன்னியத் துணி விலக்கு, சுதேசியம் எனும் தேசிய இலட்சியங்களை எடுத்துச் சென்றார். புதுச்சேரியில் 1908-ல் பாரதியாரைச் சந்தித்ததார். 1916-ல் ஹோம் ரூல் கிளர்ச்சியைக் கண்டித்து கவர்னர் பென்ட்லாண்ட் பேசியதை எதிர்த்து தீவிர அரசியலில் ஈடுபட்டார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். உரைகள் நிகழ்த்தினார். ஜஸ்டிஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்ட போது அதனை எதிர்த்து வரதராஜுலு பிரசாரம் செய்தார். 1918-ல் மதுரை ஹார்வி மில் தொழிலாளர் வேலை நிறுத்தத்தை ஊக்குவித்து ஆற்றிய பேச்சுக்காக அவருக்கு முதல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சொற்பொழிவில் அரசு நிந்தனைக்குரிய குற்றம் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டு, பதினெட்டு மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. விசாரணையில் நாயுடுவின் சார்பில் சி. ராஜகோபாலாச்சாரி வாதாடி விடுதலை பெறச் செய்தார். ஜஸ்டிஸ் கட்சி தேசியவாதத்தை வலுவிழக்கச் செய்கிறதென அவர்களை எதிர்த்தார். ஜஸ்டிஸ் கட்சிக்கு மாற்றாக சென்னை மாகாணச் சங்கத்தின் கொள்கைகள் பரவ பிரசாரம் செய்தார். 1923-ல் பெரியகுளம் தாலுக்கா மாநாட்டில் தடை உத்தரவை மீறிப் பேசியதற்காக ஆறுமாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. காங்கிரஸில் பெ. வரதராஜுலு நாயுடு முற்போக்கு கொள்கையில் ஈடுபட்டு இடதுசாரி தேசியவாதியாக இருந்தார்.

ஆகஸ்ட் 1020-ல் காந்தி திருப்பூர் வந்தபோது பெ. வரதராஜுலு நாயுடுவின் வீட்டில் தங்கினார். 1921-ல் மீண்டும் சேலம் வந்தபொழுது இவரது வீட்டில் தங்கினார். அப்பொழுது நடைபெற்ற மகளிர் கூட்டமொன்றில் பெ. வரதராஜுலு நாயுடுவின் மனைவி ருக்மணி தாம் அணிந்திருந்த நகைகள் அனைத்தையும், காந்தியிடம் கொடுத்தார். வரதராஜுலு நாயுடு 1922-ல் காந்தி சிறைப்படுத்தப்பட்டபொழுது அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க அரசாங்கத்துக்குரிய வருமான வரியைக் கட்ட மறுத்தார். வரி மறுப்பைக் குறிப்பிட்டு நாயுடு அரசாங்கத்திற்கு எழுதிய கடிதம் காந்தியின் 'யங் இந்தியா' வில் வெளிவந்தது.

1930-32 -களில் காந்தி நடத்திய உப்பு சத்தியாகிரகத்தையும், சட்டமறுப்பு இயக்கம் முதலியவற்றையும் நாயுடு எதிர்த்தார். 1929-ல் காங்கிரசோடு கருத்து வேற்றுமை கொண்டு காங்கிரசை விட்டு வெளியேறினார். 1946-ல் மீண்டும் காங்கிரஸில் இணைந்தார்.

இந்து மகாசபை

வரதராஜுலு நாயுடு 1939-ல் இந்து மகாசபையில் சேர்ந்தார். சாவர்க்கர், மூஞ்சே போன்ற தலைவர்களுடன் பழகினார். வட இந்தியப் பயணம் மேற்கொண்டார். பாரத இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி வேண்டும் என்பதை வலியுறுத்தினார். தன் மகன் பாலச்சந்திர ஆர்யாவை மூஞ்சே நிறுவிய ராணுவப் பள்ளியில் சேர்த்தார்.1941-ல் பகல்பூரில் தடையுத்தரவை மீறியதற்காகக் கைது செய்யப்பட்டார். தமிழக இந்துமகாசபையின் தலைவராக ஐந்தாண்டுகள் பொறுப்பேற்றார்.

பெ. வரதராஜுலு நாயுடு

பொறுப்புகள்

  • 1924-ல் காந்தி காங்கிரசின் தலைவரானபோது மாறுதலை விரும்புவோர்(சட்டசபை பிரவேசத்தை ஆதரித்தோர்) சார்பில் பெ. வரதராஜுலு நாயுடுவை காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராக்கினார்.
  • 1925-ல் தமிழ்நாடு மாகாண காங்கிரஸ் கமிட்டியில் தலைவராக பணியாற்றினார். இது தவிர மாநில, மாவட்ட, தாலுகா மாநாடுகள் பலவற்றில் பலவற்றில் தலைமை வகித்தார்.
  • 1942-44 வரை அகில இந்திய இந்துமகா சபையின் துணைத்தலைவராக இருந்தார்.
  • 1951-ல் சென்னை மாநிலச் சட்டமன்ற மேலவை உறுப்பினராக சேலத்தில் இருந்து காங்கிரஸ் சார்பில் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1952-ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில், சேலம் நகரத்தில் போட்டியிட்டு கம்யூனிஸ்ட் வேட்பாளரான மோகன் குமாரமங்கலத்தைத் தோற்கடித்து சட்டமன்ற உறுப்பினரானார்.

இதழியல்

1916-ல் மங்கலம் ஷண்முக முதலியார் உரிமையாளராகவும், சுப்பிரமணிய சிவா ஆசிரியராகவும் இருந்து நடத்திய 'பிரபஞ்சமித்திரன்' இதழ் மிகுந்த பொருள் இழப்பில் தத்தளித்தபோது பெ. வரதராஜுலு நாயுடு அந்த இதழை வாங்கினார். அதன் ஆசிரியரானார். இரண்டாண்டுகள் தொடர்ந்து இதழை வெளியிட்டார். 1918-ல் நாயுடு சிறைப்பட்டபொழுது ஆயிரம் ரூபாய் ஈடு அரசால் கேட்கப்பட்டு பத்திரிகை முடக்கப்பட்டது.

1920-ல் சேலத்தில் 'தமிழ்நாடு' என்ற பெயரில் வார இதழைத் தொடங்கினார். இதில் டி.எஸ். சொக்கலிங்கம் துணை ஆசிரியராக ஏழு ஆண்டுகள் பணியாற்றினார். 1925-லிருந்து 'தமிழ்நாடு' வாரப்பதிப்பாக சென்னையிலிருந்து வெளிவந்தது. 1926-ல் "தமிழ்நாடு" நாளேடாக வெளியானது. சுதேசமித்திரனுக்கு போட்டியாக இருந்தது. இவ்விதழில் வரதராஜுலு நாயுடு பிரிட்டிஷ் அரசின் ஆதிக்கப் போக்கையும், தொழிலாளர் நலனுக்கு எதிரான போக்கையும் கடுமையாகச் சாடி எழுதினார். இவர் எழுதிய இரு கட்டுரைகள் ('இந்தியா விடுதலை பெற ஆயுதமேந்த வேண்டும்; 'சுதந்திரப் போராட்டம்') அரசுத்துரோகமானவை என்று குற்றம் சாட்டப்பட்டு நாயுடுவுக்கு ஒன்பது மாதக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. பாரதியார் பாடல்களை சித்திர விளக்கங்களுடன் வெளியிட்ட முதல் இதழ் 'தமிழ்நாடு'. 1931-ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கிலப் பத்திரிகையின் சென்னைப் பதிப்பை துவக்கினார். பிற்காலத்தில் நிதி நெருக்கடியால் 'தமிழ்நாடு' இதழை விற்க வேண்டி வந்தது. வரதராஜுலு நாயுடு 'நியூ இந்தியா' போன்ற பிற பத்திரிக்கைகளிலும் எழுதினார்.

இலக்கிய வாழ்க்கை

வரதராஜுலு நாயுடு புரட்சி இலக்கியங்கள் மக்களிடையே பரவ வேண்டும் என விரும்பினார். 1857 சிப்பாய் கலகத்தை முதல் சுதந்திரப்போர் என அறிவித்து விநாய தாமோதர் சர்வார்க்கர் மராட்டிய மொழியில் எழுதியதை தமிழாக்கம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தபோது அது ரகசியமாக வெளிவர நிதியுதவி செய்தார். 1934-ல் வ.உ. சிதம்பரனார் 'தேசிய சங்கநாதம்' எனும் தலைப்பில் 32 பக்கங்களில் பி.வரதராஜுலு நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார்.

மறைவு

பெ. வரதராஜுலு நாயுடு ஜூலை 23, 1957-ல் காலமானார். மயிலாப்பூர் மயானத்தில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

நினைவேந்தல்

ஆகஸ்ட் 9, 1988-ல் சென்னை கலைவாணர் அரங்கில் பெ. வரதராஜுலு நாயுடுவின் நூற்றாண்டுவிழாக் கொண்டாட்டம் நடைபெற்றது.

வாழ்க்கை வரலாறு

  • தேசிய சங்கநாதம் - வ.உ.சி (பெ. வரதராஜுலு நாயுடுவின் வரலாற்றுச் சுருக்க நூல்)

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Nov-2023, 21:39:14 IST