under review

சு. சமுத்திரம்: Difference between revisions

From Tamil Wiki
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(Added First published date)
 
Line 94: Line 94:
*[https://jayarajsir.blogspot.com/2016/05/blog-post_14.html ஒரு கோட்டுக்கு வெளியே சு. சமுத்திரம்]  
*[https://jayarajsir.blogspot.com/2016/05/blog-post_14.html ஒரு கோட்டுக்கு வெளியே சு. சமுத்திரம்]  
*[https://bookday.in/su-samuthiram-interview/ சு. சமுத்திரம் பேட்டி]  
*[https://bookday.in/su-samuthiram-interview/ சு. சமுத்திரம் பேட்டி]  
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|18-Aug-2023, 09:48:47 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:எழுத்தாளர்கள்]]
[[Category:எழுத்தாளர்கள்]]

Latest revision as of 12:00, 13 June 2024

சு. சமுத்திரம்
சு சமுத்திரம்
சமுத்திரம்
சமுத்திரம் வாழ்க்கை வரலாறு

சு. சமுத்திரம் ( 1941 – ஏப்ரல் 1, 2003) தமிழ் எழுத்தாளர். இடதுசாரிப் பார்வை கொண்டவர். பொதுவாசகர்களுக்கான கதைகளை வார இதழ்களில் எழுதினார். சமூகசீர்திருத்தக் கருத்துக்களை கொண்ட நேரடியான படைப்புகளின் ஆசிரியர். அரசு செய்தித்தொடர்புத்துறை அதிகாரியாக பணியாற்றினார்

பிறப்பு, கல்வி

சு. சமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம், திப்பனம்பட்டியில் 1941-ம் ஆண்டு பிறந்தார். இள வயதிலேயே தந்தையை இழந்தார். கடையத்தில் ஆரம்பக்கல்வியை முடித்து பாளையங்கோட்டையில் கல்லூரிப் படிப்பை முடித்தார்.

தனி வாழ்க்கை

சு. சமுத்திரம் செங்கல்பட்டு அருகிலுள்ள காட்டுக்கரணை என்ற கிராமத்தில் ஆரம்பப் பள்ளி ஆசிரியராக அலுவலக வாழ்க்கையைத் தொடங்கினார். தமிழக அரசில் கூட்டுறவுத் துறை ஆய்வாளர், ஊராட்சி வளர்ச்சி அதிகாரி ஆகிய பதவிகளை ஏற்றுப் பணியாற்றினார். ஸ்ரீபெரும்புதூரில் பணியாற்றுகையில் அதிகாரிகளுடன் முரண்பாடு ஏற்படவே பணியைத் துறந்து மத்திய அரசின் அகில இந்திய வானொலியின் தமிழ் சேவைப் பிரிவில் பணியில் சேர்ந்தார். பின் மத்திய அரசின் செய்தி- விளம்பரத் துறையில் பணிபுரிந்தார்.சென்னை தொலைக்காட்சியில் செய்தி ஆசிரியர், வானொலியில் செய்தி ஆசிரியர், களவிளம்பரத் துறை இணை இயக்குநர் அகிய பதவிகளில் இருந்தார்.

சு, சமுத்திரத்தின் மனைவி பெயர் கோகிலா.

இதழியல்

சு. சமுத்திரம், தன் நண்பர்களுடன் இணைந்து 'தேசிய முழக்கம்' என்கிற நாளிதழை வெளியிட்டார்.

அமைப்புப்பணிகள்

சு. சமுத்திரம் அகில இந்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக பணியாற்றினார்

பதிப்பகம்

சு,.சமுத்திரம் 'ஏகலைவன்' பதிப்பகத்தை தொடங்கி தம் படைப்புகளை வெளியிட்டார்.

இலக்கிய வாழ்க்கை

சு. சமுத்திரம் கே.சி.எஸ். அருணாசலம் கே.முத்தையா சிகரம் செந்தில்நாதன் ஆகியோரின் தொடர்பால் இடதுசாரிச் சிந்தனைகளால் கவரப்பட்டார்.

1973-ல் தில்லியில் இருந்த போது அவரது அங்கே கல்யாணம், இங்கே கலாட்டா’, ‘கலெக்டர் வருகிறார்’ ஆகிய இரு கதைகளும் 'கடல்மணி' என்ற பேரில் குமுதம் , ஆனந்த விகடன் இதழ்களி வெளிவந்தன. தன் அரசுப்பணி அனுபவங்களை கருவாக்கி ‘சத்திய ஆவேசம்’ என்ற முதல் நாவலை எழுதினார். அது செம்மலர் இதழில் தொடராக வெளி வந்ததுது. இவரது 'வாடாமல்லி' நாவல் திருநங்கையரின் வாழ்வைப் பற்றிப் பேசிய முதல் தமிழ் நாவல்.

கிறிஸ்தவ இலக்கிய சங்கத்தின் கருத்தரங்குகளில் அவரது 'ஊருக்குள் புரட்சி', 'சோத்துப் பட்டாளம்' ஆகிய நாவல்கள் வெளியிடப்பட்டன. சு.சமுத்திரம் , லியோ டால்ஸ்டாயின் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக எழுதி மேடை ஏற்றினார்.

சு. சமுத்திரம், 14 புதினங்கள், 4 குறுநாவல்கள், 2 கட்டுரைத் தொகுப்புகள், ஒரு நாடகம், 300-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். அவரது சிறுகதைகள் 22 தொகுப்புகளாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளன அவரது பல படைப்புகள் தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. 1990-ல் சு. சமுத்திரம் எழுதிய 'நாவலுக்கு 1990- ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது.

விருதுகள்

  • சாகித்திய அகாதமி விருது -1990. (வேரில் பழுத்த பலா)
  • தமிழ் அன்னை பரிசு - தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகம்
  • இலக்கியச் சிந்தனை - சிறுகதைப் பரிசு.
  • கலைஞர் விருது - முரசொலி அறக்கட்டளை (மறைவுக்குப்பின்)

மறைவு

சு. சமுத்திரம் ஏப்ரல் 3, 2003-ல்சென்னையில் ஒருசாலை விபத்தில் உயிரிழந்தார்.

சு. சமுத்திரத்தின் இலக்கியப் பணிகளை அங்கீகரிக்கும் வகையில் அவர் எழுதிய 'பாலைப் புறா' நாவலை தமிழ்நாடு அரசின் சுகாதார துறை 5 ஆயிரம் பிரதிகளை விலை கொடுத்து வாங்கியதோடு, அந்த நாவலை ஆங்கிலத்தில் மொழியாக்கமும் செய்தது.

இந்திய இலக்கிய சிற்பிகள் நூல்கள் வரிசையில், இரா. காமராசு எழுதிய சு. சமுத்திரம் பற்றிய நூல் வெளியிடப்பட்டுள்ளது.

இலக்கிய இடம்

சு.சமுத்திரம் தமிழகத்தின் இடதுசாரி எழுத்தாளர்களில் ஒருவர். முற்போக்கு அழகியல் கொண்டவை அவருடைய கதைகள். ஆனால் தமிழக முற்போக்கு இலக்கியத்தில் இருந்த யதார்த்தவாதம் இயல்புவாதம் ஆகியவற்றுக்கு மாற்றாக அவை உணர்ச்சிகரமான பிரச்சாரத்தன்மை கொண்டிருந்தன. சு.சமுத்திரம் முற்போக்கு அணியிலிருந்த பொதுவாசிப்புக்குரிய எழுத்தாளர் என்று வரையறை செய்யலாம் .நேரடியாக மக்களின் வாழ்க்கையைச் சித்தரித்தமையாலும் மெய்யான சமூகப்பிரச்சினைகளைப் பேசியமையாலும் அவை பரவலாக வாசிக்கப்பட்டன. ஆனால் உரத்த மிகைக்குரல் கொண்டவை, வடிவநுட்பமோ மொழியழகோ அற்றவை என அழகியல்நோக்கில் விமர்சிக்கப்பட்டன.

சு.சமுத்திரத்தின் எழுத்துக்கள், ஏழை எளியவர்களைப் பற்றி, அடக்கி ஒடுக்கப்பட்டவர்களைப் பற்றி, அவர்கள் அனுபவிக்கும் துன்பங்களைப் பற்றி எழுதப்பட்டவை. "மனித மனத்தின் சிறுமையை, நம் அமைப்புகளின் ஈவிரக்கமற்ற தன்மையைப் பிடித்து நிறுத்திக் கன்னத்திலறைவதுபோன்ற நடையில் எள்ளலும் எரிச்சலுமாக எழுதியவர் அவர். வாசக ஊகத்துக்கோ கற்பனைக்கோ ஒரு துளிகூட மிச்சம் வைப்பதில்லை. பல கதைகள் ரத்தம் கொதிக்கச்செய்பவை. ஊமை ஜனங்கள், கைவிடப்பட்ட மக்கள் – அவருடைய மொழியில் சொல்லப்போனால் 'சோற்றுப்பட்டாளம்'- தான் அவருடைய கதைமனிதர்கள். ஒவ்வொரு கதையும் அந்த மனிதர்களுக்காக நரம்பு புடைக்க தொண்டை தெறிக்கக் குரலெழுப்புகிறது. சு.சமுத்திரம், கடைசிவரை அவர்களில் ஒருவராகவே இருந்தார்" என எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிட்டுள்ளார்.

நூல்கள்

தமிழக அரசால் 2008-ல் சு. சமுத்திரம் எழுதிய கீழ்காணும் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டன.

  • ஆகாயமும் பூமியுமாய்....
  • இல்லந்தோறும் இதயங்கள்
  • இன்னொரு உரிமை
  • ஈச்சம்பாய்
  • ஊருக்குள் ஒரு புரட்சி
  • என் பார்வையில் கலைஞர்
  • எனது கதைகளின் கதைகள்
  • ஒத்தைவீடு
  • ஒரு கோட்டுக்கு வெளியே
  • ஒரு சத்தியத்தின் அழுகை
  • ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்
  • கடித உறவுகள்
  • காகித உறவு
  • குற்றம் பார்க்கில்
  • சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்
  • சத்திய ஆவேசம்
  • சமுத்திரக் கதைகள்
  • சமுத்திரம் கட்டுரைகள்
  • சாமியாடிகள்
  • சிக்கிமுக்கிக் கற்கள்
  • சோற்றுப்பட்டாளம்
  • தாய்மைக்கு வறட்சி இல்லை
  • தராசு
  • தலைப்பாகை
  • தாழம்பூநிழல் முகங்கள்
  • நெருப்பு தடயங்கள்
  • பாலைப்புறா
  • புதிய திரிபுரங்கள்
  • பூ நாகம்
  • மண்சுமை
  • மூட்டம்
  • லியோ டால்ஸ்டாய் (நாடகம்)
  • வளர்ப்பு மகள்
  • வாடாமல்லி
  • வெளிச்சத்தை நோக்கி
  • வேரில் பழுத்த பலா

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 18-Aug-2023, 09:48:47 IST