யோகம் (தரிசனம்): Difference between revisions

From Tamil Wiki
Line 108: Line 108:


==== அஷ்டாங்கம் ====
==== அஷ்டாங்கம் ====
யோகம் மிக விரிவான பயிற்சி முறைகளை முன்வைக்கிறது.
யோகம் மிக விரிவான பயிற்சி முறைகளை முன்வைக்கிறது. ஒருவர் தூய புருஷநிலையை நோக்கிச் செல்வதற்கு பல தடைகள் உள்ளன. அவற்றை வென்று செல்ல எட்டு நிலைப் பயிற்சியை முன்வைக்கிறது. அவை
 
* யமம் (புற ஒழுக்கம்)
* நியமம் (அக ஒழுக்கம்)
* ஆசனம் (உடலை பயிற்றல்)
* பிராணயாமம் (மூச்சைப்பயிற்றல்)
* பிரத்யாகாரம் (உள்ளத்தை உள்ளிழுத்தல்)
* தாரணை (நிலைகொள்ளுதல்)
* தியானம் (ஆழ்தல்)
 
* சமாதி (அமைதல்)
 
யோகத்தின் நடைமுறை வடிவம் யோகப்பயிற்சிகளாக பலநிலைகளில் விரிவடைந்தது. யோகத்திலுள்ள யமம் பலவகையான ஆசாரங்களாகவும். நியமம் மதநம்பிக்க்கையாகவும் வளர்ந்தது. ஆசனம் என்னும் மூன்றாம் நிலையில் ஹடயோகத்தில் இருந்து பலவகையான பயிற்சிகள் வந்திணைந்தன. பிராணயாகமும் வாசி யோகம் என்னும் சுவாசம் சார்ந்த தாந்திரீகப் பயிற்சியில் இருந்து பல வழிகளைப் பெற்றுக்கொண்டது. இன்றைய யோகப் பயிற்சிகள் பதஞ்சலிக்குப் பின்னரும் பல்வேறுவழிகளி வளர்ச்சி அடைந்தவை. ( பார்க்க [[யோகம்]] மற்றும் [[யோகம் (பயிற்சிகள்]]) )
 
== உசாத்துணை ==
 
* [https://archive.org/details/in.ernet.dli.2015.100018 The Philosophy Of Ancient India by Garbe, Richard]
* [https://archive.org/details/Philosophy.of.India.by.Heinrich.Zimmer/page/n1/mode/2up Philosophy of India by Heinrich Zimmer]
* மோனியர் விலியம்ஸ் சம்ஸ்கிருத அகராதி
* [https://archive.org/details/hathayogaitscont0000burl HatĐha-Yoga : its context, theory, and practice by Burley, Mikel, 1972]
* [https://assets.press.princeton.edu/chapters/i9565.pdf Yoga, Brief History of an Idea David Gordon White][https://archive.org/details/IndianThoughtKDamodaran Indian Thought K Damodaran by K Damodaran]
*[https://archive.org/details/in.ernet.dli.2015.506393 Essentials Of Indian Philosophy by Hiriyanna, M.]
*[https://archive.org/details/in.gov.ignca.8897 History of Indian philosophy vol.1 by Dasgupta, Surendranath]]
*இந்திய சிந்தனையில் நிலைத்திருப்பவையும் அழிந்தவையும்- தேபிப்பிரசாத் சட்டோபாத்யாய
*இந்திய தத்துவம் - ஹிரியண்ணா
*[https://archive.org/details/in.ernet.dli.2015.99012 Materialism by Roy,m.n.]

Revision as of 08:45, 13 June 2024

பதஞ்சலி, மேலக்கடம்பூர் ஆலயச்சுவர்

யோகம் (தரிசனம்) (யோக தர்ஸனம்) இந்திய ஞானமரபின் ஆறு தரிசனங்களில் ஒன்று. சாங்கிய தரிசனத்தின் துணைத் தரிசனம். சாங்கியம் முன்வைக்கும் பிரகிருதி புருஷ ஞானம் என்னும் உயர்நிலையை அடைவதற்கான பயிற்சிகளை முன்வைக்கும் மரபு. சாங்கியத்தில் இருந்து பிரிந்து தனி தரிசனமாக பின்னாளில் வளர்ந்தது. இந்து மதப்பிரிவுகள், பௌத்தம், சமணம் ஆகிய மதங்களிலும் ஏற்படைந்தது, நவீன யோகப்பயிற்சி முறையாக மறுமலர்ச்சி அடைந்து உலகமெங்கும் பரவியுள்ளது

( பார்க்க யோகம்)

பிரகிருதி புருஷன்

தோற்றுவாய்

யோக தரிசனம் இந்தியாவின் பண்பாட்டின் தொடக்க காலம் முதலே இருந்துவந்துள்ளது என ஆய்வாளர் கூறுகின்றனர். மொகஞ்சதாரோ ஹரப்பா சுடுமண் இலச்சினைகளில் யோகத்திலமர்ந்த ஒரு சிலை கிடைக்கிறது. அது யோகம் என்னும் கருத்து இருந்திருப்பதற்கான சான்றாகும். சாங்கியம் போலவே யோகமும் வேதமரபு அல்லாத மரபில் இருந்து வந்தது என்பதற்கு இது சான்று.

தரிசனம்

யோகம் இந்திய ஞானமரபின் ஆறு தரிசனங்களில் ஒன்று. சாங்கிய தரிசனத்தின் துணைத் தரிசனமாக அது சொல்லப்படுகிறது. பலநூல்களில் சாங்கியயோகம் என்றே குறிப்பிடப்படுகிறது. சாங்கிய தரிசனம் வேதமரபுக்கு புறம்பானதாக இருந்தாலும் யோகப்பயிற்சிகளைப் பற்றி ஸ்வேதாஸ்வேதர உபநிடதம் விரிவாகப் பேசுகிறது (ஸ்வேதாஸ்வேதரம் பகுதி 2- பாடல் 10)

தனக்கென ஒரு பிரபஞ்சப்பார்வை கொண்டிருந்த சாங்கியம் யோக முறையை தன்னுடைய பயிற்சியாக விரிவாக்கம் செய்துகொண்டது. யோகம் தனக்கான தத்துவத்தை சாங்கியத்திலிருந்து பெற்றுக்கொண்டது. யோகம் சாங்கியத்தில் இருந்து உருவாகவில்லை.

ஆசிரியர்கள்

முதலாசிரியர்

யோகதரிசனத்தின் முதன்மையாசிரியர் பதஞ்சலி . இவருடைய காலகட்டம் பொமு 4 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் என பொதுவாக ஊகிக்கப்படுகிறது. பதஞ்சலி இயற்றிய யோக சூத்திரம் என்னும் நூலே யோகத்தின் முதன்மைநூலாகும். இந்நூல் இன்றும் ஒரு முதன்மையான நூலாக பயிலப்படுகிறது. ஏராளமான உரைகளும் விளக்கங்களும் இந்நுலுக்கு உள்ளன.

பதஞ்சலி யோகத்தை உருவாக்கியவர் அல்ல, அவர் அதுவரையிலான யோக மரபின் பல்வேறு கருத்துக்களை ஒருங்கிணைத்தவர். பதஞ்சலி அன்றிருந்த வெவ்வேறு யோகமரபுகளை ஒருங்கிணைத்தவர் என்றும், யோகத்தின் தரிசனத்தை சாங்கிய தரிசனத்துடன் இணைத்து தத்துவரீதியாக வலுவான அடித்தளம் அமைத்தவர் என்றும் எஸ்.என். தாஸ்குப்தா கருதுகிறார்.

உரையாசிரியர்கள்

பதஞ்சலி யோகத்திற்கு பிற்கால உரையாசிரியர்கள் எழுதிய விளக்கங்களே மேலதிக நூல்களாக கிடைக்கின்றன. அவற்றில் முக்கியமானவை

  • யோகபாஷ்யம் -வியாசர் (இந்நூல் வேதவியாசரால் எழுதப்பட்டது என தொன்மம். ஆனால் பொயு 4 ஆம் நூற்றாண்டில், பதஞ்சலி யோகசூத்திரம் எழுதப்பட்டு எண்ணூறாண்டுகளுக்கு பின்னர் இந்நூல் எழுதப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர் கூறுகிறார்கள்.
  • தத்வ வைசாரதி - யோக பாஷ்யம் : வாசஸ்பதி மிஸ்ரர் பதஞ்சலி யோகசூத்திரத்திற்குப்பின் யோகமரபின் முக்கியமான நூல் இது என கருதப்படுகிறது. அதுவரையிலான எல்லா யோகவிவாதங்களையும் தொகுத்துக்கொண்டு, விரிவான சொல்லாய்வுடன் எழுதப்பட்ட கலைக்களஞ்சியத்தன்மை கொண்ட நூல் இது
  • ராஜமார்த்தாண்ட யோக பாஷ்யம் : போஜராஜன் யோகசூத்திரங்களுக்கு எழுதிய விரிவுரை
  • யோகசார சம்கிரக :விக்ஞானபிக்ஷு. யோகமரபின் முதன்மையான விளக்கங்களிலொன்று
  • யோகசிந்தாமணி - ராமனந்த சரஸ்வதி .யோகத்தின் நாதபந்தி மரபை முன்னெடுத்த உரையாக இது கருதப்படுகிறது

தத்துவம்

யோகத்தின் தரிசனம், அதன் தத்துவ விளக்கம் இரண்டுமே ஏறத்தாழ சாங்கியத்திற்குரியவை. பதஞ்சலி சாங்கிய மரபின் பிரகிருதி, புருஷன் என்னும் இரண்டு அடிப்படைக் கருதுகோள்களையும் அப்படியே ஏற்றுக்கொள்கிறார். பிரகிருதி தன்னுணர்வு அற்ற பருப்பொருள். புருஷன் அதில் உறையும் அறியும்தன்னிலை. இரண்டுமே முதல்முடிவற்றவை. பிரகிருதி சத்வம், தமஸ், ரஜஸ் என்னும் மூன்று குணங்கள் கொண்டது. புருஷன் அக்குணங்களை உணர்வதனால் அதன் சமநிலைகுலைந்து செயல்நிலை உருவாகியது. முடிவிலாத இணைவுகள் மற்றும் பிரிவுகளால் பிரபஞ்சம் உருவாகியது. உயிர்கள் உருவாயின. புருஷன் பன்மையாகி உயிர்களிலுறையும் முடிவிலாக்கோடி தன்னிலைகளாக ஆனான்.

பிரகிருதி பிரபஞ்சமாக ஆவதன் படிநிலைகளையும் யோகம் அப்படியே சாங்கியத்திலிருந்து எடுத்துக்கொள்கிறது. பிரகிருதியில் இருந்து மஹத் பிறந்து அதிலிருந்து அகங்காரம் உருவாகி அது ஐந்து தன்மாத்திரைகள், பத்து புலன்கள், ஐந்து பருப்பொருட்கள், மனம் என இருபத்துநான்கு தத்துவங்களாகியது. இருபத்துநான்கு தத்துவங்களை அறிவதன் வழியாக பிரகிருதி புருஷ உறவை அறியலாம், அதுவே சாங்கிய ஞானம். அந்த அறிதலை அடையும் ஒருவன் அதை தன் உடலால், உணர்வால், அறிவால், உள்ளுணர்வால் தனதாக ஆக்கிக்கொள்வதற்கான பயிற்சிகளே யோகம் முன்வைப்பவை.

இருபத்து நான்கு தத்துவ வரையறை

கண், காது, மூக்கு, நாக்கு, தோல் என ஐந்து ஞான இந்திரியங்கள்(அறிபுலன்கள்), கைகள், கால்கள், உண்ணும் உறுப்பு, கழிவுறுப்புகள், பாலுறுப்புகள், என ஐந்து கர்ம இந்திரியங்கள் (செயற்புலன்கள்), ஒளி, ஓசை, மணம்,சுவை, தொடுதல் என்னும் ஐந்து தன்மாத்திரைகள் (நுண்ணறிதல்கள்) மனம் ஆகிய பதினாறும் ஷோடஸ கணம் என சாங்கியத்தால் அழைக்கப்படுகின்றன. இவற்றுடன் தீ, வானம், நிலம், நீர், காற்று என்னும் ஐந்து பூதங்கள் (பருப்பொருட்கள்) அகங்காரம், மகத் ஆகியவற்றுடன் பிரகிருதியையும் இணைத்தால் 24 தத்துவங்கள் உள்ளன என்று சாங்கியம் வரையறை செய்கிறது.

இந்த 24 தத்துவங்களையும் பதஞ்சலி விசேஷம், அவிசேஷம், லிங்கமாத்ரம், அலிங்கம் என நான்காகப் பிரிக்கிறார்.

  • விசேஷம்: ஐந்து பருப்பொருட்கள், ஐந்து அறிபுலன்கள், ஐந்து செயற்புலன்கள், உள்ளம். இவை சத்வம், தமஸ், ரஜஸ் ஆகிய குணங்களின் தனித்தன்மைகள் (விசேஷங்கள்) உணரப்படுகின்றன.
  • அவிசேஷம் : ஒளி, ஓசை, மணம்,சுவை, தொடுதல் என்னும் ஐந்து தன்மாத்திரைகள் மற்றும் அகங்காரம் ஆகியவை அவிசேஷம் எனப்படுகின்றன.
  • லிங்கமாத்ரம்: பிரகிருதி முதன்முதலாக அறியப்படுவதாக ஆவது, அடையாளங்களை கொள்ளத்தொடங்குவது மகத் வழியாக. ஆகவே அது லிங்கமாத்ரம்
  • அலிங்கம்: பிரகிருதி முக்குணங்களில்லாத நிலையில் அறியப்பட முடியாதது. ஆகவே அது அலிங்கம். அடையாளங்களற்றது

புருஷ பிரகிருதி உறவு

புருஷனுக்கும் பிரகிருதிக்குமான உறவே யோக தரிசனத்தின் அடிப்படை. நாம் காணும் இயர்கையானது ஒளி, செயல், இருப்புநிலை ஆகிய மூன்று இயல்புகள் கொண்டதும், புலன்களால் அறியப்படும் பருப்பொருள்தன்மை கொண்டதும், புருஷனுக்கு நுகர்வனுபவமும் அதன் வழியாக வீடுபேறும் அளிக்கும் பயன்பாடு கொண்டதுமாகும் என்று பதஞ்சலியோகம் சொல்கிறது (பதஞ்சலி யோகசூத்திரங்கள் II-18) பிரகிருதியின் இருப்பே புருஷனுக்காகத்தான். (யோகசூத்திரம் II-21)

பிரகிருதி இருப்பதனால்தான் புருஷன் அதை அறிபவனாக இருக்கிறான், பிரகிருதி இல்லையேல் அவன் இல்லை, பிரகிருதிக்கு வெளியே அவனுக்கு இருப்பில்லை. புருஷன் இப்பிரபஞ்சத்தில் பலவாக இருக்கிறான். ஆகவேதான் புருஷர்கள் கைவல்யமடைந்து இல்லாமலானாலும் பிரகிருதி நீடிக்கிறது (யோகசூத்திரம்II -22)

புருஷனுக்கும் பிரகிருதிக்கும் இடையேயான உறவுக்குக் காரணம் அவித்யை (அறியாமை). அவித்யை இல்லாமலானால் புருஷனுக்கும் பிரகிருதிக்குமான தொடர்பு இல்லாமலாகும். புருஷன் என்னும் அந்த அறிநிலை மறைகிறது. பிரகிருதி எஞ்சுகிறது. இந்த நிலைக்கு கைவல்யம் (வெறும்நிலை, தூயநிலை) என்று பெயர். கைவல்யமே யோகத்தின் இலக்கு. ஆனால் அந்த வீடுபேறை அடையவேண்டும் என்றால் ஓர் உயிரில் திகழும் புருஷன் தான் இயற்கையில் இருந்து விடுபட்டவன் என்னும் தன்னுணர்வை அடையவேண்டும். இயற்கை அவனுக்களிக்கும் அடையாளங்களைக் கடந்து அவன் தன் தூயநிலையை உணரவேண்டும் (யோகசூத்திரம் II 23-26).

இறைத்தரிசனம்

யோகத்தின் இறைவன் குறித்த உருவகம் இருதளங்கள் கொண்டது. யோகம் இறைவழிபாடு, பக்தி ஆகியவற்றை முன்வைப்பதோ; இறைவனை அடைவதை மீட்பாகச் சொல்வதோ அல்ல. ஆனால் தனக்கான ஓர் இறையுருவகம் யோகத்தில் உள்ளது

வழிபாடும் யோகமும்

பதஞ்சலி யோகசூத்திரத்தில் இறைவழிபாடு மனத்தைக் குவிக்கவும் ஒழுக்கத்தைப் பேணுவதற்கும் உகந்தது என்ற அளவிலேயே சொல்லப்பட்டுள்ளது. இறைவனை தியானிப்பதை மன ஒருமைக்கான அவசியத்தேவை என சாங்கியம் வலியுறுத்தவில்லை, உள்ளத்திற்கு உகந்த எதையும் தியானிக்கலாம் என்றே சொல்கிறது (யோகசூத்திரம் II-39).

பதஞ்சலி யோகசூத்திரம் சொல்லும் இறைவனைப் பற்றிய வரிகளெல்லாம் மேலோட்டமனவை என்றும், எந்தவகையிலும் அவை மதம் அல்லது ஆன்மிகவாதத்தை நிலைநாட்டவில்லை என்றும், அவற்றை நீக்கினாலும் பதஞ்சலி சொல்லும் யோகதரிசனம் எவ்வகையிலும் குறைவுபடவில்லை என்றும் ரிச்சர்ட் கார்பே சொல்கிறார். பதஞ்சலியே தன்காலகட்டத்தில் மேலோங்கிவந்த இறைத்தரிசனம் சார்ந்த சில கருத்துக்களை உள்ளிழுத்துக் கொண்டு யோகசாஸ்திரத்தை பொதுவானதாக ஆக்கியிருக்கலாம், அல்லது அவை பின்னர் சேர்க்கப்பட்டிருக்கலாம்.

பதஞ்சலி யோகம் சொல்லும் மீட்பு என்பது எவ்வகையிலும் கடவுளுடன் சம்பந்தப்பட்டது அல்ல. பிரம்மத்தை அறிவதோ, இணைவதோ என்று பதஞ்சலி சொல்வதில்லை. எந்த கடவுளின் அருளைப் பெறுவதைப்பற்றியும் யோகம் பேசவில்லை. ஒரு தனிமனிதர் தன் உள்ளத்தை பயிற்றுவித்து பிரகிருதி- புருஷ உறவை உணர்ந்து, தன்னை அந்த உண்மையில் அமைத்துக்கொள்வதே மீட்பு என அது சொல்கிறது என்று ஹரிதாஸ் பட்டாச்சாரியா சொல்கிறார். அதை சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணனும் ஒப்புக்கொள்கிறார்.

யோகத்தின் ஆன்மிகம்

அதேசமயம் யோகம் சாங்கியத்தின் அடிப்படைத் தத்துவக் கட்டமைப்பு போல பொருள்வய இயற்கைக்கு அப்பால் ஏதுமில்லை என்று சொல்லும் முற்றிலும் பொருள்முதல்வாத தரிசனமும் அல்ல. யோகம் தனக்கே உரிய இறைத்தரிசனம் கொண்டது.

யோகம் தொடக்ககாலத்தில் இறையிலா தரிசனமாக இருந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் இறையிலா (நிரீஸ்வர) சாங்கிய தரிசனத்தில் புருஷன் என்னும் கருத்துரு மேலோங்கி, அது பரமபுருஷன் அல்லது இறைவன் என ஆகி இறையுள்ள (சேஸ்வர) சாங்கியமாக ஆகும் தருவாயில்தான் யோகத்தின் முதல்நூலான பதஞ்சலி யோகசூத்திரம் இயற்றப்பட்டுள்ளது. அதில் புருஷதத்துவமே மையமான இடத்தை வகிக்கிறது. பதஞ்சலி இறையுள சாங்கிய தரிசனத்துக்கு அணுக்கமானவர். மேலும் அவர் ஸ்வேதாஸ்வேதரம் முதலிய உபநிடதங்களில் கூறப்படும் ஆன்மிக யோகப்பயிற்சிகளை தன் தரிசனத்துடன் இணைத்துக் கொள்கிறார். பிற்கால ஆய்வாளர்கள் பலர் யோகத்தையே சேஸ்வர சாங்கியம் என்பதுண்டு. பதஞ்சலி யோகம் உருவானபின்னர் உள்ள சாங்கியமே சேஸ்வர சாங்கியம் என்னும் கருத்தும் உண்டு.

புருஷவாதம்

யோகத்தின் இறைத்தரிசனம் அது புருஷதத்துவத்திற்கு அளிக்கும் முதன்மையிடத்தில் உள்ளது.யோகம் புருஷவாதம் என்றே சில நூல்களில் குறிப்பிடப்படுகிறது. யோகத்தின் புருஷக்கொள்கை கீழ்க்கண்ட தனித்தன்மைகள் கொண்டது

  • புருஷன் தன் இயல்பு நிலையில் பிரகிருதியில் இருந்து விடுபட்டவன்,
  • புருஷன் தன் உலகியல்நிலையில் பிரகிருதியுடன் இணைந்துள்ளான். ஆகவே சுகம், துக்கம், விழைவு என்னும் மூன்று வகை உணர்வுகளை அடைந்து ஆதிபௌதிகம், அத்யாத்மகம், ஆதிதைவிகம் என்னும் மூன்றுவகை துயர்களை அடைகிறான்.
  • புருஷனின் துயர்கள் அவன் பிரகிருதியுடன் இணைந்து அதிலிருந்து தன்னை உணர்வதனால் அமைவன. அவன் தன் தூயநிலைக்குச் செல்லுந்தோறும் பிரகிருதியை விட்டு விலகுகிறான். அவன் துயர்கள் மறைகின்றன.
  • முற்றிலும் பிரகிருதியுடனிருந்து விலகுகையில் புருஷனின் தன்னிலை மறைகிறது. அதுவே வீடுபேறு
  • பிரகிருதி செயல்படுவது புருஷனின் வீடுபேற்றுக்காகவே.

இந்நிலையில் புருஷன் என்னும் யோகத்தின் கருத்துரு பரமபுருஷன் என்னும் கருத்துருவுக்கு அணுக்கமானது. ஒருமைநிலைகொண்ட புருஷனில் இருந்து பன்மைநிலைகொண்ட புருஷநிலைகள் உருவாகின்றன. அப்பன்மைநிலை அழிகையில் ஒருமை.நிலை எஞ்சுகிறது. அதுவே வீடுபேறு. இந்த தரிசனமானது பின்னாளில் அத்வைதம் முதலிய சிந்தனைகளால் பிரம்மம் ஜீவாத்மாவாக ஆகிப்பெருகி மீண்டும் பிரம்மமாக ஆகும் நிலை என விளக்கமளிக்கப்பட்டது. அவ்வாறாக யோகம் வேதாந்தத்திற்கு அணுக்கமானதாக ஆகியது.

நடைமுறை

புருஷன் தான் இயற்கையிலிருந்து விடுபட்ட தூய இருப்பு என உணர்ந்து அதுவாக தன்னை ஆக்கிக்கொள்வதே வீடுபேறு என்னும் கைவல்யநிலை. ஆனால் அதற்கு அந்த உண்மையை அறிதல் மட்டும் போதாது அவ்வுண்மையாகவே தன் இருத்தலை ஆக்கிக்கொள்ளவேண்டும். அதற்காகவே பதஞ்சலி விரிவான செய்முறைப் பயிற்சிகளை அளிக்கிறார்.

சித்தவிருத்தி நிரோதம்

யோகம் கூறும் மீட்பு என்பது ஓர் உயிரில் இருந்து பிரகிருதி வழியாக தன்னை உணரும் புருஷன் தன்னை மீட்டுக்கொண்டு தன் விடுபட்ட தூயநிலை நோக்கிச் செல்வதேயாகும். அதற்கான வழியாக யோகம் கூறுவது ’அகச்செயல் நிறுத்தல்’ என்பது. பதஞ்சலி யோகசூத்திரத்தின் தொடக்கமே இந்த வரியுடன்தான். யோக சித்தவிருத்தி நிரோத: (யோகசூத்திரம் 1) சுருக்கமாகச் சொன்னால் யோகம் என்பது அகச்செயல் நிறுத்தலுக்கான வழிமுறைகளைச் சொல்லும் ஒரு தரிச்னாமாகும்.

ஒவ்வொரு உயிரிலும் திகழும் புருஷனுக்கு ஒவ்வொரு சித்தம் உள்ளது. அதிலும் மகத் உருவாகி அகங்காரம் பிறந்து மனம், தன்மாத்திரைகள் என அகமும் பத்து புலன்களாக உடலும் அவையறியும் ஐந்து பருப்பொருட்களாக புறவுலகமும் நிகழ்வு கொள்கின்றன. புத்தி, மனம் ஆகியவை புறவுலகை அறிந்து அடையும் அறிதல்களும் உணர்வுகளும்தான் சித்தவிருத்தி. புருஷனில் நிகழும் அகம் என்னும் ஓயாச்செயல்பாடு..

அகச்செயல் என்னும் சித்தவிருத்தி இரு வகை. தெளிவறிவு (க்ளிஷ்டம்) மயக்க அற்வு (அக்ளிஷ்டம்)

க்ளிஷ்டம்
  • புலனறிவு (பிரத்யட்சம்)
  • ஊகம் (அனுமானம்)
  • ஆகமம் அல்லது சுருதி (முன்னறிவு)

என மூன்று வகையான அறிவுகள் க்ளிஷ்டம் (தெளிவு) எனப்படுகின்றன. இவை திட்டவட்டமான அறிதலை நிகழ்த்துபவை

அக்ளிஷ்டம்

தெளிவான அறிதல் முறையான பயிற்சியால்தான் நிகழமுடியும். பெரும்பாலான அறிதல்கள் தங்கத்துடன் மாசு கலந்திருப்பதுபோல புரிதல்பிழைகளும் அறிவுமயக்கங்களும் கலந்தவையே. அவை

  • பொய்யறிவு (மித்யா ஞானம், விபர்யாயம்)
  • திரிபு .முன்னறிவுகளை மறுக்கும் நிலை(விகல்ப விருத்தி)
  • மயக்கநிலை. புலன்கள் பொருட்களை அறிவதிலுள்ள பல்வேறு குழப்பங்கள் (நித்ரா விருத்தி)
  • நினைவுப்பிழை. பழைய நினைவுகள் புதிய அனுபவங்களை மறைக்கவும் திரிக்கவும் செய்யும் நிலை (ஸ்மிருதி விருத்தி)

என நான்கு பிழையறிதல்கள் உள்ளன. (யோகசூத்திரம் 1/5-6)

யோகம் க்ளிஷ்டம் என்னும் சரியான அறிதலை பரிந்துரைக்கவில்லை. மாறாக க்ளிஷ்டம் ,க்ளிஷ்டம் என்னும் இந்த இருவகை சித்த விருத்திகளையும் அடக்கி, புருஷனை தன் தூயநிலைநோக்கிக் கொண்டுசெல்லுதலைப் பற்றியே அது பேசுகிறது. இயற்கையில் இருந்து புருஷன் அடையும் தனியிருப்பு என்னும் மாயநிலை அகன்று தன்னிலையை நோக்கி அவன் நகரவேண்டும். அதுவரை அறிபவன் (திருஷ்டா) அந்தந்த சித்தவிருத்திகளின் நிலையிலெயே இருத்தல்கொண்டிருப்பான் (யோகசூத்திரம் 1/ 3-4)

அஷ்டாங்கம்

யோகம் மிக விரிவான பயிற்சி முறைகளை முன்வைக்கிறது. ஒருவர் தூய புருஷநிலையை நோக்கிச் செல்வதற்கு பல தடைகள் உள்ளன. அவற்றை வென்று செல்ல எட்டு நிலைப் பயிற்சியை முன்வைக்கிறது. அவை

  • யமம் (புற ஒழுக்கம்)
  • நியமம் (அக ஒழுக்கம்)
  • ஆசனம் (உடலை பயிற்றல்)
  • பிராணயாமம் (மூச்சைப்பயிற்றல்)
  • பிரத்யாகாரம் (உள்ளத்தை உள்ளிழுத்தல்)
  • தாரணை (நிலைகொள்ளுதல்)
  • தியானம் (ஆழ்தல்)
  • சமாதி (அமைதல்)

யோகத்தின் நடைமுறை வடிவம் யோகப்பயிற்சிகளாக பலநிலைகளில் விரிவடைந்தது. யோகத்திலுள்ள யமம் பலவகையான ஆசாரங்களாகவும். நியமம் மதநம்பிக்க்கையாகவும் வளர்ந்தது. ஆசனம் என்னும் மூன்றாம் நிலையில் ஹடயோகத்தில் இருந்து பலவகையான பயிற்சிகள் வந்திணைந்தன. பிராணயாகமும் வாசி யோகம் என்னும் சுவாசம் சார்ந்த தாந்திரீகப் பயிற்சியில் இருந்து பல வழிகளைப் பெற்றுக்கொண்டது. இன்றைய யோகப் பயிற்சிகள் பதஞ்சலிக்குப் பின்னரும் பல்வேறுவழிகளி வளர்ச்சி அடைந்தவை. ( பார்க்க யோகம் மற்றும் யோகம் (பயிற்சிகள்) )

உசாத்துணை