under review

திராவிட இயக்க வரலாறு: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 98: Line 98:
* திராவிட இயக்க வரலாறு: ஆர்.முத்துகுமார்: பாகம் 1&2: கிழக்கு பதிப்பகம்
* திராவிட இயக்க வரலாறு: ஆர்.முத்துகுமார்: பாகம் 1&2: கிழக்கு பதிப்பகம்


{{First review completed}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 08:28, 18 November 2023

திராவிட இயக்கம் (பொ.யு. 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல்) தமிழக வரலாற்றில் உருவான அரசியல், சமூக முக்கியத்துவம் வாய்ந்த இயக்கம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டு

1835-ல் மெக்காலேவின் கல்வித்திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்தியர்களில் முதல் தலைமுறை ஆங்கிலக்கல்வி கற்றவர்கள் உருவாயினர். 1885-ல் படித்தவர்கள் தங்கள் கோரிக்கைகளை ஆங்கில அரசிடம் தெரிவிக்க இந்திய தேசிய காங்கிரஸ் உருவானது. அனைத்து மாநிலங்களிலும் தேசிய பிரச்சனைகள் சார்ந்த விவாதத்தளமாகவும், தேர்தலில் போட்டியிட்டு பிரதிநிதிகளாக ஆங்கிலேய அரசில் செயலாற்றவும் காங்கிரஸ் கட்சி அடித்தளமாக அமைந்தது. இக்காலகட்டத்தில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியில் பிராமணர்களின் ஆதிக்கம் அதிகம் இருந்தது. பிராமணர் அல்லாதோர் தாங்கள் அரசமைப்பில் ஈடுபடவும், தங்கள் பிரச்சனைகளை முன்வைக்கவும் ஒரு இயக்கம் தேவை என்பதை உணர்ந்தனர். 1892-ல் அயோத்திதாசர் ஆதி திராவிடர்களின் நலனுக்காகத் தொடங்கிய திராவிட மகாஜன சபை திராவிடக் கழகங்களின் தோற்றத்திற்கு தொடக்கப் புள்ளியாக அமைந்தது. 1909-ல் பிராமணர் அல்லாதோர் சங்கம், நீதிக்கட்சி மூலம் திராவிட இயக்கம் முன்னெடுத்துச் செல்லப்பட்டது.

காலக்கோடு

ஆண்டு இயக்கம் தலைவர்கள்
1891 திராவிட மகாஜன சபை அயோத்திதாச பண்டிதர்
1893 ஆதிதிராவிட மகாஜன சபை ரெட்டைமலை சீனிவாசன்
1909 சென்னை பிராமணர் அல்லாதோர் சங்கம் பி. சுப்பிரமணியம், எம். புருஷோத்தம நாயுடு
1912 சென்னை ஐக்கியக் கழகம் (சென்னை திராவிடர் சங்கம்) சி. நடேச முதலியார்
1916 நீதிக்கட்சி(தென்னிந்திய நலஉரிமைச் சங்கம்) சி.நடேச முதலியார், டி.எம்.நாயர், பி.டி. தியாகராய செட்டியார்
1917 சென்னை மாகாணச் சங்கம் ஈ.வெ.ராமசாமி, கல்யாணசுந்தரம் முதலியார், பெ.வரதராஜுலு நாயுடு, கூட்டி கேசவ பிள்ளை
1926 சுயமரியாதை இயக்கம் ஈ.வெ. ராமசாமி
1928 அனைத்து இந்திய தாழ்த்தப்பட்டோர் சங்கம் எம்.சி.ராஜா
1932 சுயமரியாதை சமதர்மக் கட்சி ஈ.வெ. ராமசாமி
1939 சென்னை மாகாண தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பு அம்பேத்கர் இரட்டைமலை சீனிவாசன்
1944 திராவிடர் கழகம் தென்னிந்திய நலஉரிமைச்சங்கம் திராவிடர் கழகமாக ஆனது
1949 திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணாத்துரை
1949 தமிழ் தேசியக் கட்சி ஈ.வெ.கி. சம்பத்
1972 அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எம்.ஜி. ராமச்சந்திரன்
1993 மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வை. கோபாலசாமி

வரலாறு

திராவிட மகாஜன சபை

அயோத்திதாசர் பொ.யு 1886-ல் இந்துக்களில் தீண்டத்தகாதவர்கள் எனப்பட்டவர்கள் இந்துக்கள் அல்லாதவர்கள், அவர்கள் யாவரும் சாதியற்ற திராவிடர்கள் என்னும் கருத்தை முன்வைத்தார். இதனால் திராவிட கருத்தியலின் முன்னோடி என அறியப்பட்டார். தமிழர்கள் ஆதிதிராவிடர்கள், சாதி திராவிடர்கள் என பிரிந்து இருப்பதை உணர்ந்து சாதிபேதமற்ற திராவிட மகாஜன சபை என்ற அமைப்பை 1891-ல் உருவாக்கினார். கிராமம்தோறும் திராவிட மகாஜன சபை தோற்றுவிக்கப்பட்டது. அயோத்திதாசர் 1885 ஆண்டிலேயே 'திராவிட பாண்டியன்' என்னும் இதழைத் தொடங்கி தன் கருத்துக்களை அதில் பதிவு செய்தார். 1907-1914 வரை ஏழு ஆண்டுகள் 'தமிழன்' என்ற வார இதழைத் தொடங்கி நடத்தினார். அதை தமிழ்நாடு, இந்தியா, பர்மா, சிங்கப்பூர், மலேசியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் வெளியிட்டார்.

ஆதிதிராவிட மகாஜன சபை

இரட்டைமலை சீனிவாசன் 1891-ல் 'பறையர் மகாஜன சபை' என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். 1893-ல் இது ஆதிதிராவிட மகாஜன சபையாக ஆனது. இதே ஆண்டு 'பறையர்' என்ற பத்திரிக்கையைத் தொடங்கினார். 'ஆதிதிராவிடர் கூட்டமைப்பு' ”சென்னை மாகாண தாழ்த்தப்பட்டவர் கூட்டமைப்பு” ஆகியவற்றின் தலைவராக இருந்தார். அம்பேத்கரின் நெருங்கிய நண்பராக இருந்தார். முதல் இரண்டு வட்டமேசை மாநாடுகளில் கலந்து கொண்டார். 1932-ல் பூனா ஒப்பந்தத்தில் மையெழுத்திட்டார். 1916-ல் பிராமணரல்லாதோர் இயக்கம் தங்களை 'திராவிடர்கள்' என்று குறிப்பிடத் தொடங்கிய பின் தலித்துகள் தங்களை 'ஆதி திராவிடர்' என்று அழைத்துக் கொண்டனர். 1916-ல் எம்.சி. ராஜா ஆதிதிராவிட மகாஜன சபையின் தலைவரானார். 1922-ல் பறையர்', 'பஞ்சமர்' என்ற வார்த்தைகளுக்குப் பதில் 'ஆதி திராவிடர்' என்ற வார்த்தை அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

சென்னை பிராமணர் அல்லாதோர் சங்கம்

ஆங்கிலக் கல்வி கற்றிருந்தமையால் ஆட்சித்துறை, அரசியலில் பிராமணர்களின் ஆதிக்கம் இருந்தது. ஆனால் படித்த, பணம் படைத்த பிராமணர் அல்லாதோருக்கும் அதிகாரம் மறுக்கப்பட்டது. இதனால் பிரமணர் அல்லாதோர் தங்கள் நலனுக்காக சிறு கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 1909-ல் பி. சுப்பிரமணியம், எம். புருஷோத்தம நாயுடு என்ற இரு வழக்கறிஞர்களால் 'சென்னை பிராமணர் அல்லாதோர் சங்கம்' தொடங்கப்பட்டது. தொடர்ந்து செயல்படமுடியாமல் ஓரிரு ஆண்டுகளில் அது முடங்கிப் போனது. 1912-ல் சி. நடேச முதலியார் தலைமையில் பிராமணர் அல்லாதோரின் நலனுக்காக ”சென்னை திராவிடச் சங்கம்” உருவானது.

நீதிக்கட்சி

1916-ல் சி.நடேச முதலியார், டி.எம்.நாயர், பிட்டி.தியாகராய செட்டியார் ஆகியோர் இணைந்து 'தென்னிந்திய நல உரிமைச்சங்கம்' என்ற அமைப்பை ஆரம்பித்தனர். இது திராவிடன் என்ற தமிழ்ப் பத்திரிக்கையை நடத்தியது. இதையே ஆங்கிலத்தில் 'ஜஸ்டிஸ்' என்றும், தெலுங்கில் 'ஆந்திர பிரகாசிகா' என்றும் வெளியிட்டனர். 1917-ல் இவ்வமைப்பு நீதிக்கட்சி எனப் பெயர் மாற்றம் பெற்றது. 1920-ல் நீதிக்கட்சி ஆட்சியைப் பிடித்தது. சென்னை மாகாணத்தில் முதலமைச்சராக சுப்பராயலு ரெட்டியார் பதவியேற்றார். 1923-ல் நடந்த தேர்தலிலும் வெற்றி பெற்றது. 1926 தேர்தலில் தோல்வி அடைந்தது. ஆட்சியில் இருந்த காலத்தில் அனைத்து சாதியினரையும் ஆட்சியில் பங்கேற்க 'வகுப்பு வாத ஆணை' வெளியிட்டது; 1921-ல் பிராமணர் அல்லாதோரும் கோயிலில் அர்ச்சகராகும் அறநிலையச் சட்டம் இயற்றப்பட்டது; 1921-ல் பெண்களுக்கான வாக்குரிமைச் சட்டத்தை இயற்றியது; அரசாங்கப்பணியாளர்களை பாரபட்சமின்றி தேர்ந்தெடுக்க 1924-ல் தேர்தல் ஆணையக்குழுவை நியமித்தது; 1929-ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், ஆந்திர பல்கலைக்கழகத்தை ஏற்படுத்தியது.

1930-ல் சி. முனுசாமி நாயுடுவும், 1932-ல் நீதிக்கட்சி சார்பில் பொப்பிலி ராஜாவும் முதலமைச்சர் ஆனார்கள். 1935-ல் நீதிக்கட்சி சார்பில் விடுதலை பத்திரிக்கை வெளியானது. 1926-ல் சுயராஜ்ஜியக் கட்சி வெற்றிபெற்று பி. சுப்பராயன் தலைமையில் ஆட்சி அமைந்தது. நீதிக்கட்சி பின்னடைவு ஏற்பட்டது. ஈ.வெ. ராமசாமி காங்கிரஸிலிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். 1933-ல் 'புரட்சி' என்ற பெயரில் பத்திரிக்கை தொடங்கினார். நீதிக்கட்சிக்கு பத்து அம்ச வேலைத்திட்டத்தை ஈ.வெ.ரா அனுப்பினார். அதை நீதிக்கட்சி ஏற்றது. 1938-ல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. ஈ.வெரா. நீதிக்கட்சியில் இணைந்து அதன் தலைவர் ஆனார். 1939-ல் அண்ணாத்துரை விடுதலை இதழின் ஆசிரியர் ஆனார். 1939-ல் இந்தி எதிப்பில் நடராசன் - தாலமுத்து கொல்லப்பட்டனர். 1940-ல் திராவிட நாடு பிரிவினை மாநாடு நடந்தது. 1942-ல் அண்ணாத்துரை 'திராவிட ஏடு' இதழைத் தொடங்கினார்.

சென்னை மாகாண சங்கம்

சென்னை மாகாண சங்கம் (Madras Presidency Association) என்பது செப்டம்பர் 20, 1917-ல் சென்னை மாகாணத்தில் செயல்பட்ட இந்திய தேசிய காங்கிரசின் ஒரு பிரிவு. சென்னை மாகாணத்தில் பிராமணரல்லாத சாதியினரின் ஆதரவைப் பெற நீதிக்கட்சியுடன் போட்டியிட இவ்வமைப்பு உருவாக்கப்பட்டது. ஈ.வெ. ராமசாமி, கல்யாணசுந்தரம் முதலியார், பெ. வரதராஜுலு நாயுடு, கூட்டி கேசவ பிள்ளை ஆகியோர் இச்சங்கத்தின் முக்கிய தலைவர்கள். கேசவ பிள்ளை இதன் தலைவராக இருந்தார்; ஈ.வெ. ராமசாமி இதன் துணைத் தலைவர்களுள் ஒருவர். இச்சங்கத்துக்கு காங்கிரசின் பிராமணர்கள் மற்றும் 'தி இந்து' இதழின் ஆதரவு இருந்தது. ஈ.வெ.ரா -வின் 'இந்தியன் பேட்ரியாட்' என்ற ஆங்கில இதழையும் ”தேச பக்தன்” என்ற தமிழ் இதழையும் சில காலம் இச்சங்கம் வெளியிட்டது. பின்னால் சென்னை மாகாண சங்கம் மெல்ல அழிந்தது. அதன் கோரிக்கைகளை காங்கிரசின் பிராமண தலைவர்கள் கடுமையாக எதிர்த்ததும் இதற்குக் காரணம். அதன் தலைவர் கேசவ பிள்ளை காங்கிரசிலிருந்து விலகி நீதிக்கட்சியில் சேர்ந்தார். ஈ.வெ.ரா நீதிக்கட்சியில் இணைந்தார்.

திராவிடர் கழகம்

தென்னிந்திய நலச்சங்கம் என ஆரம்பித்து நீதிக்கட்சியென ஆகி, ஈ.வெ.ரா இணைந்தபின் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டு திராவிட நாடு சிந்தனை உருவான பின் நீதிக்கட்சி ஆகஸ்ட் 27, 1944-ல் 'திராவிடர் கழகம்' என பெயர் மாற்றப்பட்டது. தேர்தலிலிருந்து இக்கட்சி விலகி இருந்தது. 1947-ல் துக்க தினமாக சுந்திர தினம் அனுசரிக்கப்பட வேண்டும் என ஈ.வெ.ரா சொன்ன போது அதற்கு மாற்றாக அண்ணாத்துரை இன்ப நாளாகக் கொண்டாட வேண்டும் என்றபோதே பிளவு ஆரம்பித்தது. 1949-ல் ஈ.வெ.ரா-மணியம்மை திருமணம் நடந்தபோது அண்ணாத்துரை திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறினார். 1973-ல் ஈ.வெ.ரா மரணம் அடைந்தார். மணியம்மை அதன் தலைவரானார்.

திராவிட முன்னேற்றக் கழகம்

1949-ல் அண்ணாத்துரை திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தார். 1957-ல் தி.மு.க. தேர்தலில் போட்டியிட்டது. பதினைந்து சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். காமராஜர் தலைமையில் ஆட்சி ஆமைந்தது. 1959-ல் சென்னை மாநகராட்சியை தி.மு.க கைப்பற்றியது. 1961-ல் ஈ.வெ.கி. சம்பத் தி.மு.க -விலிருந்து விலகி 'தமிழ் தேசியக் கட்சி' யைத் தொடங்கினார். 1962 தேர்தலில் தி.மு.க -விற்கு ஐம்பது தொகுதிகள் கிடைத்தது. காமராஜர் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்தது. 1964-ல் 'காமராஜர் திட்டத்தின்படி காமராஜர் பதவியிலிருந்து விலகி இளைஞரான பக்தவத்சலத்தை முதலமைச்சர் ஆக்கினார். 1965-ல் இந்தியை இந்தியாவின் ஆட்சி மொழியாக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து போராட்டம் ஆரம்பித்தது. சின்னச்சாமி, சிவலிங்கம், அரங்கநாதன் போன்றோர்களின் தீக்குளிப்பு நிகழ்ந்தது. 1967-ல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தீவிரமாகப் போராடிய தி.மு.க ஆட்சியைக் கைப்பற்றியது. அண்ணாத்துரை முதலமைச்சரானார்.

1969-ல் அண்ணாத்துரை மரணம் அடைந்தார். மு. கருணாநிதி முதலமைச்சரானார். தி.மு.க -வின் தலைவராக மு. கருணாநிதியும், பொதுச் செயலாளராக இரா. நெடுஞ்செழியனும், பொருளாளராக எம்.ஜி.ஆரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1970-ல் “மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி” முழக்கத்தை தி.மு.க முன்வைத்தது. 1971-ல் மு. கருணாநிதி மீண்டும் முதலமைச்சரானார். 1974-ல் மாநில சுய ஆட்சி கோரும் தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது, கச்சத்தீவு இலங்கைக்கு அளிக்கப்பட்டது. 1975-ல் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது. 1976-ல் தி.மு.க அரசு கலைக்கப்பட்டது. 1980-ல் நாடாளுமன்றத்தில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. 1989-ல் மு. கருணாநிதி முதலமைச்சர் ஆனார். 1993-ல் தி.மு.க -விலிருந்து விலக்கப்பட்ட வை.கோ 'மறுமலர்ச்சி தி.மு.க' என்ற கட்சியைத் தொடங்கினார். 2006-ல் மு. கருணாநிதி முதலமைச்சர் ஆனார். 2018-ல் மு. கருணாநிதி காலமானார். அவரின் மகன் மு.க. ஸ்டாலின் கழகத் தலைவர் ஆனார். 2021-ல் மு.க. ஸ்டாலின் முதலமைச்சர் ஆனார்.

அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம்

மு. கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் 1972-ல் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தை எம்.ஜி. ராமச்சந்திரன் தொடங்கினார். திண்டுக்கல் இடைத்தேர்தலில்(1973) அ.தி.மு.க வேட்பாளர் வெற்றி பெற்றார். 1976-ல் 'அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1977 சட்டமன்றத்தேர்தலில் வெற்றி பெற்று எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆனார். 1980-ல் இரண்டாவது முறையாக எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆனார். 1984-ல் மூன்றாவது முறையாக எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆனார். 1987-ல் எம்.ஜி.ஆர் காலமானார். அவரின் மனைவி ஜானகி முதலமைச்சர் ஆனார். அ.இ.அ.தி.மு.க ஜெயலலிதா, ஜானகி தலைமையில் இரண்டாகப் பிளவுபட்டது. 1991-ல் ஜெயலலிதா முதலமைச்சர் ஆனார். 2011, 2016-ல் ஜெயலலிதா முதலமைச்சர் ஆனார். 2016-ல் காலமானார்.

உசாத்துணை

  • திராவிட இயக்க வரலாறு: ஆர்.முத்துகுமார்: பாகம் 1&2: கிழக்கு பதிப்பகம்


✅Finalised Page