குத்தூசி குருசாமி: Difference between revisions
(Corrected text format issues) |
(Corrected text format issues) |
||
| Line 78: | Line 78: | ||
* [https://kuthoosiguruswami.wordpress.com/ குத்தூசி குருசாமி கட்டுரைகள்] | * [https://kuthoosiguruswami.wordpress.com/ குத்தூசி குருசாமி கட்டுரைகள்] | ||
* [https://www.tamildigitallibrary.in/tva-search?tag=%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF குத்தூசி இதழ்கள்: தமிழ் இணைய மின்னூலகம்] | * [https://www.tamildigitallibrary.in/tva-search?tag=%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF குத்தூசி இதழ்கள்: தமிழ் இணைய மின்னூலகம்] | ||
== | == அடிக்குறிப்புகள் == | ||
<references /> | <references /> | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
Revision as of 19:03, 5 July 2023
குத்தூசி குருசாமி (சா. குருசாமி; சாமிநாதன் குருசாமி) (ஏப்ரல் 23, 1906 - அக்டோபர் 11, 1965) எழுத்தாளர், இதழாளர், மொழிபெயர்ப்பாளர். திராவிட இயக்கம் சார்ந்து இயங்கினார். ஈ.வெ. ராமசாமிப் பெரியார் நடத்தி வந்த ‘ரிவோல்ட்’ மற்றும் ‘விடுதலை’ இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றினார். மத்திய திராவிடர் கழகத் தலைவராகப் பணிபுரிந்தார். பெரியார் சுயமரியாதை இயக்கப் பிரச்சார நிறுவன அறங்காவலராகச் செயல்பட்டார்.
பிறப்பு, கல்வி
சா. குருசாமி என்னும் இயற்பெயரை உடைய குத்தூசி குருசாமி, ஏப்ரல் 23, 1906 அன்று, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள குருவிக்கரம்பையில், கு. சாமிநாத முதலியார்-குப்பு அம்மாள் இணையருக்குப் பிறந்தார். உள்ளூர் பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றார். திருவாரூரில் இடைநிலைக் கல்வி கற்றார். பெற்றோர் காலமானதால் அத்தையின் ஆதரவில் வளர்ந்தார். மேற்கல்வியை திருச்சியில் படித்தார். திருச்சி தேசியக் கல்லூரியில் இண்டர்மீடியட் பயின்றார். இளங்கலை (பி.ஏ.) பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
குருசாமி, சென்னை செம்பியம் சார்பதிவாளர் அலுவலகத்தில் அரசு எழுத்தராகப் பணிபுரிந்தார். சில ஆண்டுகள் காவல் துறை அலுவலகத்திலும், ஆய்வாளர் அலுவலகத்திலும் பணியாற்றினார். 1935-ல், உதவி பஞ்சாயத்து அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றார். 16 ஆண்டுகள் அரசுப் பணியாற்றிய இவர் விடுதலை இதழில் ஆசிரியர் பொறுப்பு ஏற்கும் பொருட்டுப் பணியிலிருந்து விலகினார். இசை வேளாளர் குடும்பத்தைச் சார்ந்த குஞ்சிதத்தை, ஈ.வெ.ரா. பெரியார் முன்னிலையில் மணம் செய்து கொண்டார். தமிழகத்தில் நிகழ்ந்த முதல் கலப்புத் திருமணமாக இந்நிகழ்வு கருதப்படுகிறது. மகள்: கு.கு. ரஷ்யா. மகன்: கு.கு. கௌதமன்.
இதழியல்
ஈ.வெ.ரா.வின் சுயமரியாதைக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட குருசாமி, ஈ.வெ.ரா.வைச் சந்தித்து தன்னை அவ்வியக்கத்தில் இணைத்துக் கொண்டார். அரசுப் பணியாற்றிக் கொண்டே இதழாளராகச் செயல்பட்டார்.
குடி அரசு
குருசாமி, ‘குடியரசு’ இதழில் சுயமரியாதைச் சிந்தனைகளையும், சீர்திருத்தக் கருத்துகளையும், பகுத்தறிவையும் முன்னிறுத்தும் பல கட்டுரைகளை எழுதினார்.
Revolt (ரிவோல்ட்)
ஈ.வெ.ராமசாமி, சுயமரியாதைக் கொள்கைகளைப் பரப்புவதற்காக ஆங்கிலத்தில் Revolt என்ற பெயரில் இதழ் ஒன்றைத் தொடங்கினார் ஈ.வெ.ரா.வும், எஸ். ராமநாதனும் அதற்கு ஆசிரியராக இருந்தனர். குருசாமி, துணை ஆசிரியராகச் செயல்பட்டார் என்றாலும், இதழின் முழுப் பொறுப்பையும் குருசாமியே கவனித்தார். ஆங்கிலத்தில் காத்திரமான கருத்துக்களைக் கொண்ட பல கட்டுரைகளை எழுதினார்.
புதுவை முரசு
ரிவோல்ட் இதழ் நின்று போனதால், குருசாமி, ‘புதுவை முரசு’ இதழில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். அதில் புனை பெயர்களில் பல கட்டுரைகளை எழுதினார். பல தலையங்கங்களை எழுதினார். பாரதிதாசனை புதுவை முரசில் தொடர்ந்து எழுத வைத்தார். புதுவை முரசில் சில சிறுகதைகளையும், கட்டுரைகளையும் பாரதிதாசன் எழுதினார்.
விடுதலை
குருசாமி, 1946 ஆம் ஆண்டு அரசுப் பணியிலிருந்து விலகி ஈ.வெ.ரா. பெரியாரின் வேண்டுகோளுக்கிணங்க விடுதலை இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். ‘பலசரக்கு மூட்டை’ என்ற தலைப்பில், ‘குத்தூசி’ என்ற புனை பெயரில் இதழ்தோறும் சமூகச் சீர்த்திருத்தம் மற்றும் தீவிர அரசிய கருத்துக்கள் கொண்ட பல கட்டுரைகளை எழுதினார். அதனால் ‘குத்தூசி குருசாமி’ என்று அழைக்கப்பட்டார். பெரியார் அறிக்கைகள், தலையங்கங்கள் ஆகியவற்றோடு நான்காயிரத்துக்கும் மேற்பட்ட தலையங்கக் கட்டுரைகளையும், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ‘குத்தூசி’க் கட்டுரைகளையும் எழுதினார். ‘குத்தூசி’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, 1948-ல் நூலாக வெளிவந்தன. தான் பணியாற்றிய இதழ்களில் குத்தூசி , சி.ஐ டி, கிறுக்கன், மவுண்ட்ரோடு, குகு, சம்மட்டி, சிவப்பழம், தமிழ்மகன், தராசு, கிறுக்கன், பென்சில், மதுரைவீரன், விடாக்கண்டன், ஸ்பெக்டேட்டர், ப்ளெய்ன் ஸ்பீக்கர், எஸ்ஜி போன்ற பல புனை பெயர்களில் எழுதினார். விடுதலை இதழில் 16 ஆண்டுகள் பணிபுரிந்த நிலையில், குருசாமி எழுதிய தலையங்கம், நிர்வாகிகளில் ஒருவரால் நிறுத்தப்பட்டது. பெரியாருக்கு அது குறித்துத் தெரிவித்தும் அவர் நடவடிக்கை ஏதும் எடுக்காததால், குருசாமி, விடுதலையின் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகினார்.
குத்தூசி
குருசாமி, 1962 ஆம் ஆண்டு அக்டோபரில் ‘குத்தூசி’ என்ற மாத இதழைத் தொடங்கி நடத்தினார். சுயமரியாதைக் கொள்கை சார்ந்த கட்டுரைகளை அவ்விதழில் எழுதினார். பலரை எழுதச் செய்தார். அரசியல், சமூக சீர்த்திருத்தக் கட்டுரைகளோடு வரலாறு, இலக்கியம், மொழி ஆய்வு, மருத்துவம் தொடர்பான கட்டுரைகளும் குத்தூசி இதழில் இடம்பெற்றன.
அறிவுப்பாதை
‘குத்தூசி’ மாத இதழாக இருந்த காரணத்தால் புதிதாகத் தொடங்கப்பட்ட சுயமரியாதை இயக்கக் கொள்கைகளை விளக்கி மக்களிடம் கொண்டு சேர்க்க, குருசாமி, ‘அறிவுப்பாதை’ என்கிற புதிய வார இதழை 1964 மே தினத்தன்று தொடங்கினார்.
இலக்கிய வாழ்க்கை
குத்தூசி குருசாமி ‘புதுவை முரசு’, குத்தூசி’ போன்ற இதழ்களில் சிறுகதைகள் எழுதினார். அவை தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்தன.
நாடகம்
‘இரண்யன் அல்லது இணையற்ற வீரன்' என்ற பாரதிதாசன் எழுதிய நாடகத்தில், குருசாமி, இரண்யனாக நடித்தார். சென்னை உள்படப் பல இடங்களில் அதனை மேடையேற்றினார்.
அரசியல்
குருசாமி, சைவக் குடும்பத்தைச் சார்ந்தவராக இருந்தார். ஆரம்பத்தில் காங்கிரஸ் பேரியக்கத்தில் ஈடுபாடு கொண்டு செயல்பட்டார். பின் சுயமரியாதைக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அந்த இயக்கத்தில் இணைந்தார். 1929 ஆம் ஆண்டு மே 25-ல், பட்டுக்கோட்டையில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க மாநாட்டைத் தலைமையேற்று நடத்தினார். அம்மாநாட்டில் சிறப்புச் சொற்பொழிவாற்றினார். தீண்டாமை எதிர்ப்பு மாநாடுகளில் பங்கேற்றார். ஆலய நுழைவுப் போராட்டங்களில் கலந்துகொண்டு அதனை முன்னெடுத்தார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார். ராஜாஜியால் கொண்டு வரபட்ட புதிய கல்வித் திட்டத்தைக் கண்டித்து இதழ்களில் எழுதினார். 1952 முதல் 1960 வரை திராவிடர் கழகம் மேற்கொண்ட பல போராட்டங்களில் குருசாமி கலந்து கொண்டார். 13 முறைகள் சிறைத் தண்டனை பெற்றார். குருசாமி நாளடைவில் ஈ.வெ.ரா.வுடன் கருத்து முரண்பட்டார். அவ்வாறு முரண்பட்டவர்கள், 1963 மே 19 அன்று தி.பொ. வேதாசலனார் தலைமையில் ‘சுயமரியாதை இயக்கம்’ என்ற பெயரில் புதிய இயக்கம் ஒன்றைத் தொடங்கினர். அதன் செயலாளராக குருசாமி செயல்பட்டார். சீர்திருத்த கருத்துகளை வலியுறுத்துவதற்காக 1965 ஆம் ஆண்டு ஜூலை 11 அன்று கும்பகோணத்தில் சுயமரியாதை இயக்கத்தின் ஆறாவது மாநில மாநாட்டைப் பொறுப்பேற்று நடத்தினார். குழந்தைகளின் பெயருக்கு முன்னால் தன் தந்தையின் முதல் எழுத்தைச் (initial) சூட்டுவதை எதிர்த்து, தாயின் முதல் எழுத்தையும் உடன் போடவேண்டும் என்று வலியுறுத்தி, தனது பிள்ளைகளின் பெயர்களில் - கு.கு. ரஷ்யா (குஞ்சிதம் குருசாமி ரஷ்யா), கு.கு. கௌதமன் (குஞ்சிதம் குருசாமி கௌதமன்) - என்று அதனைச் செயல்படுத்தினார்.
அமைப்புப் பணிகள்
குத்தூசி குருசாமி, 1935-ல், தான் பணியாற்றிய இதழ்களில் எழுத்துச் சீர்திருத்தத்தைச் செயல்படுத்தினார். (குருசாமியின் மறைவுக்குப் பின் 1978-ல் எம்.ஜி. ராமச்சந்திரன் தலைமையிலான அரசு அதனை நடைமுறைப்படுத்தியது) பாரதிதாசனால் எழுதப்பட்ட பல்வேறு இதழ்களில் இடம் பெற்றிருந்த கவிதைகளைத் தொகுத்து 1938-ல், பாரதிதாசனின் முதல் கவிதைத் தொகுதியை வெளியிட்டார். ஈ.வெ.ரா. பெரியார் பற்றிய குறிப்புகளை ஒன்று திரட்டி சாமி சிதம்பரனாரைக் கொண்டு நூலாக்கம் செய்கின்ற பணியில் குத்தூசி குருசாமி ஈடுபட்டார். சாமி சிதம்பரனார் நூலின் பணி முழுமையாக நிறைவு செய்யப்படுவதற்கு முன்னரே வேறு பணிக்குச் சென்றுவிட்டதால், அந்த நூலை முடிக்கும் பொறுப்பையும், அதனை வெளியிடும் பொறுப்பையும் குத்தூசி குருசாமி ஏற்றுக் கொண்டார். அதன்படி ‘தமிழர் தலைவர்’ என்னும் நூல் வெளிவந்தது.
பொறுப்புகள்
- மத்திய திராவிடர்கழகத் தலைவர்
- பெரியார் சுயமரியாதை இயக்கப் பிரச்சார நிறுவன அறங்காவலர்
- சுயமரியாதை இயக்கச் செயலாளர்
பதிப்பு
குருசாமி, தன் நூல்களை வெளியிடுவதற்காக தமிழ் நூல் நிலையம் என்ற பதிப்பகத்தை ஆரம்பித்துத் தன் நூல்கள் சிலவற்றை வெளியிட்டார்.
மறைவு
சா. குருசாமி, அக்டோபர் 11, 1965 அன்று மாரடைப்பால் காலமானார். தன் இறப்பிற்கு முன்னால் மரணசாசனம் [1] ஒன்றை எழுதினார்.
நினைவு நூல்கள்
குத்துசாமி குருசாமியின் வாழ்க்கையை, குருவிக்கரம்பை வேலு ‘குத்துசாமி குருசாமி' என்ற தலைப்பில் ஆவணப்படுத்தினார். தமிழ் இணைய மின்னூலகத்தில் அந்த நூல் சேகரிக்கப்பட்டுள்ளது. ’குத்தூசி குருசாமியை மறந்தது ஏன்?' என்ற தலைப்பில் கழஞ்சூர் செல்வராசு கட்டுரை நூல் ஒன்றை எழுதினார்.
வரலாற்று இடம்
சா. குருசாமி சாதி மறுப்பு, கடவுள் மறுப்பு, சுயமரியாதை, பொதுவுடைமை, ஆணாதிக்க எதிர்ப்பு, திராவிடம் என பல்வேறு சித்தாந்தங்களுக்காகப் பணியாற்றினார். சுயமரியாதை இயக்கச் சிந்தனைகளோடு பொதுவுடைமைக் கொள்கைகளிலும் ஈடுபாட்டோடு இருந்தார். பிற்காலத்தில் சோஷலிசக் கொள்கைகளையும் ஆதரித்து இதழ்களில் எழுதினார். தான் கொண்ட கொள்கைகளுக்காக வாழ்நாள் இறுதிவரை சமரசம் செய்துகொள்ளாமல் வாழ்ந்தார். மரண சாசனம் எழுதிய குருசாமி, அது நாள் வரையிலான தன் வாழ்க்கையை அதில் மதிப்பிட்டிருந்தார். குருசாமி பற்றி, நெ.து. சுந்தரவடிவேலு, "தமது பொதுத் தொண்டையோ, செல்வாக்கையோ, உறவையோ தனக்கோ தன் குடும்பத்திற்கோ முதலாக்கிக் கொள்ளாத அப்பாவி மனிதர்” என்று குறிப்பிட்டுள்ளார். “தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கத்தைப் பரவச் செய்து வளர்க்கக் காரணமாக இருந்தவர்களுள் முன்னோடி இவரே” என்கிறார் மயிலை சீனி. வேங்கடசாமி.
நூல்கள்
சிறுகதைத் தொகுப்பு
- பிச்சைக்காரி
நாடகம்
- பன்னீர்செல்வம்
கட்டுரை நூல்
- குத்தூசி கட்டுரைகள்
- கட்டுரைக் கொத்து
தொகுப்பு நூல்
- குத்தூசி இதழ் தொகுப்பு
மொழிபெயர்ப்பு
- நான் ஏன் கிறித்தவன் அல்லன் (மூலம்: பெர்ட்ரண்டு ரசல்)
- மரண சாசனம் (மூலம்: ஜீன் மெஸ்லியர்)
உசாத்துணை
- குத்தூசி குருசாமி: குருவிக்கரமை வேலு: தமிழ் இணைய மின்னூலகம்
- குருசாமி குத்தூசி குருசாமியான கதை
- குத்தூசி குருசாமி: இந்து தமிழ் திசை கட்டுரை
- கொள்கைவேள்: நாத்திகச் செம்மல் தோழர் குத்தூசி குருசாமி: கீற்று இதழ் கட்டுரை
- குத்தூசி குருசாமியின் புதுவை முரசு
- குத்தூசி குருசாமி கட்டுரைகள்: ஆர்கைவ் தளம்
- குத்தூசி குருசாமி கட்டுரைகள்
- குத்தூசி இதழ்கள்: தமிழ் இணைய மின்னூலகம்
அடிக்குறிப்புகள்
✅Finalised Page