under review

ஆ. சிங்காரவேலு முதலியார்: Difference between revisions

From Tamil Wiki
(Reset to Stage 1)
No edit summary
Line 1: Line 1:
[[File:ஆ. சிங்காரவேலு.jpg|thumb|ஆ. சிங்காரவேலு முதலியார்]]
[[File:ஆ. சிங்காரவேலு.jpg|thumb|ஆ. சிங்காரவேலு முதலியார்]]
ஆ. சிங்காரவேலு முதலியார் (1855 - நவம்பர் 1931) அகராதியியல் அறிஞர், கல்வியாளர், [[அபிதான சிந்தாமணி]] என்னும் தமிழின் தொடக்ககாலக் கலைக்களஞ்சியத்தை உருவாக்கியவர்.  
ஆ. சிங்காரவேலு முதலியார் (1855 - நவம்பர் 1931) அகராதியியல் அறிஞர், கல்வியாளர், [[அபிதான சிந்தாமணி]] என்னும் தமிழின் தொடக்ககாலக் கலைக்களஞ்சியத்தை உருவாக்கியவர்.  
Line 41: Line 40:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* தமிழ் வளர்த்த பெருமக்கள், என். ஸ்ரீனிவாசன், அல்லயன்ஸ் நூற்றாண்டு வெளியீடு
* தமிழ் வளர்த்த பெருமக்கள், என். ஸ்ரீனிவாசன், அல்லயன்ஸ் நூற்றாண்டு வெளியீடு
* [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZIdlJxy அபிதான சிந்தாமணி, தமிழ் மின் நூலகம்]
* [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZIdlJxy அபிதான சிந்தாமணி, தமிழ் மின் நூலகம்]
* [https://www.jeyamohan.in/731/ அபிதான சிந்தாமணி, கடல் நிறைந்த கமண்டலம், எழுத்தாளர் ஜெயமோகன்]


* [https://www.jeyamohan.in/731/ அபிதான சிந்தாமணி, கடல் நிறைந்த கமண்டலம், எழுத்தாளர் ஜெயமோகன்]
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
{{Being created}}
{{Finalised}}
[[Category:Spc]]
[[Category:Spc]]

Revision as of 21:37, 12 December 2022

ஆ. சிங்காரவேலு முதலியார்

ஆ. சிங்காரவேலு முதலியார் (1855 - நவம்பர் 1931) அகராதியியல் அறிஞர், கல்வியாளர், அபிதான சிந்தாமணி என்னும் தமிழின் தொடக்ககாலக் கலைக்களஞ்சியத்தை உருவாக்கியவர்.  

பிறப்பு, கல்வி

ஆ. சிங்காரவேலு முதலியார் செங்கல்பட்டு மாவட்டம், பொன் விளைந்த களத்தூருக்கு அருகில் உள்ள ஆலூரில் வரதப்ப முதலியார் - பொன்னம்மாள் இணையருக்கு 1855-ஆம் ஆண்டு பிறந்தார்.

ஆ. சிங்காரவேலு முதலியார் தமிழ் இலக்கண இலக்கியங்களை சென்னை மாநிலக் கல்லூரி தமிழ் பேராசிரியர் கோமளபுரம் இராசகோபாலப் பிள்ளையிடம் பயின்றார்.

தனிவாழ்க்கை

ஆ. சிங்காரவேலு முதலியார், சென்னையில் உள்ள பச்சையப்பன் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர், சென்னைப் பல்கலைக் கழக தமிழ் லெக்சிகன் சைவ சித்தாந்தப் பிரிவில் பணி புரிந்தார். சைவப் பற்று மிகுந்த ஆ. சிங்காரவேலு முதலியார் பல முறை சைவ சித்தாந்த மாநாடுகளுக்கு தலைமை வகித்தார். பட்டினத்தார் பாடல்களுக்கு விளக்கவுரை எழுதியுள்ளார்.

கலைக்களஞ்சியப் பணி

உருவாக்கம்

ஆ. சிங்காரவேலு முதலியார் தமிழின் தொடக்ககாலக் கலைக்களஞ்சியமான அபிதான சிந்தாமணி என்னும் பெருநூலை உருவாக்கினார். 1890-ல் அவருடைய நண்பரும் சென்னை பச்சையப்ப முதலியார் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியருமான சி.கோபாலராயர் சிங்காரவேலு முதலியாரிடம் எனமண்டாரம் வெங்கடராமய்யர் சம்ஸ்கிருதத்தில் எழுதிய புராணநாம சந்திரிகை என்ற நூலை அளித்து அதைப்போல ஒன்றைச் செய்ய வேண்டினார். அதை முதல் நூலாகக் கொண்டு சிங்காரவேலு முதலியார் அதற்கு "புராணநாமாவலி" என்று பெயரிட்டு 1890-ல் உருவாக்க  ஆரம்பித்தார்.

அபிதான சிந்தாமணி.jpg

ஆனால் விரைவிலேயே' புராணநாம சந்திரிகை' போதாமைகள் மிக்க சிறிய நூலே என்று கண்டு கொண்ட ஆ. சிங்காரவேலு முதலியார், மேலும் மேலும் நூல்களை வாசிக்க ஆரம்பித்தார். நூல்கள் மிகவும் குறைவென உடனேயே உணர்ந்து ஊர் ஊராகச் சென்று சிறு பிரசுரங்களையும் ஏடுகளையும் சேகரிக்க ஆரம்பித்தார். செவிவழிக்கதைகளை திரட்டினார். ஸ்தலபுராணங்களை ஓதுவார்களிடமிருந்து கேட்டு எழுதிக்கொண்டார். நாடோடிகளான கதைசொல்லிகள், ஹரிகதைப் பிரசங்கிகள், சோதிடர்கள், மாந்திரீகர்கள், நாட்டு வைத்தியர்கள், பைராகிகள் போன்ற பலதரப்பட்ட மக்களை சந்தித்து தகவல்களை திரட்டினார். திரட்டியவற்றை பல்லாயிரம் பக்கங்கள் கைப்பிரதியாக எழுதிச் சேர்த்தார்.  தனித்தனிக் குறிப்புகளாக எழுதியவற்றை கட்டுரைகளாக ஆக்கி அவற்றை மீண்டும் அகராதிமொழிக்கு சுருக்கி எழுதினார் சிங்காரவேலு முதலியார். அகரவரிசைப்படி இவற்றைக் கோர்ப்பதற்கே சிங்காரவேலு முதலியாருக்கு சில மாதங்கள் ஆகின.

சிங்காரவேலு முதலியார் உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியராக வேலை பார்த்துக்கொண்டு தன் அன்றாட அலுவல்களுக்கு மேல் நேரம் தேடி இந்தப்பெரும்பணியை செய்து முடித்தார்.

அச்சு முயற்சி

ஆ.சிங்காரவேலு முதலியார் பழைய அச்சுக்கோப்பு முறையில் சொற்களுக்கு நடுவே போடும் கட்டை இல்லாமல் நெருக்கி ஏறத்தாழ 1050 பக்கங்கள் அச்சுக்கோர்த்து ஒரு சில நகல்கள் எடுத்துக்கொண்டார். அவற்றுடன் சென்னையில் அன்றிருந்த செல்வந்தர்கள், கல்விமான்களை அணுகி அச்சிடுவதற்கு உதவி கோரினார். அவர்கள் இது அவசியப்பணி என்று சொன்னார்களே அல்லாமல் உதவ முன்வரவில்லை.

சென்னையில் இருந்தவர்களிடம் நம்பிக்கை இழந்த சிங்காரவேலு முதலியார் யாழ்ப்பாணம் சென்றார். யாழ்ப்பாணம் வழக்கறிஞர் கனகசபைப்பிள்ளை இதன் ஒரு பகுதியைப் பார்வையிட்டு பாராட்டி பொருளுதவி செய்ததுடன் சென்னை வழக்கறிஞர்களுக்கு இந்நூலை அச்சிட உதவவேண்டும் என்று ஒரு சான்றிதழும் எழுதியளித்தார். அந்தச் சான்றிதழை சிங்காரவேலு முதலியார் பேராசிரியர் சேஷகிரி ராவ் என்பவரிடம் காட்டியபோது 'நானும் இதேபோல ஒன்று எழுதிக்கொண்டிருக்கிறேன்’ என்று சொல்லி விட்டு பேசாமல் இருந்துவிட்டார். சென்னை கியுரேட்டரும் பச்சையப்பன் கல்லூரி அறங்காவலருமான வ. கிருஷ்ணமாச்சாரியிடம் சென்று உதவி வேண்டியும் கிடைக்கவில்லை.

இதற்கிடையே சிங்காரவேலு முதலியார் மீது பச்சையப்பா பள்ளி நிர்வாகம் அவர் ஆசிரியப்பணியை செய்யவில்லை என்று குற்றம்சாட்டி, உயர்கல்வித்தகுதி இருந்தும் பச்சையப்பா அறக்கட்டளையைச் சேர்ந்த பி.டிசெங்கல்வராய நாயக்கர் ஆரம்பப்பள்ளி, கோவிந்த நாயக்கர் ஆரம்பப்பள்ளி ஆகியவற்றில் கற்பிக்கும்படி நியமித்தது. ஆரம்பப்பளி ஆசிரியருக்கான மிகக்குறைவான வருமானத்தில் சென்னையில் வாழவே முடியாத நிலை ஏற்பட்டது.

ஆ. சிங்காரவேலு முதலியார்.jpg

மனம் சோர்ந்த சிங்காரவேலு முதலியார் தன் நூலை வெளியிடுவதற்கு நிதி கோரி  இதழ்களில் ஓர் கைச்சாத்து அறிக்கையை வெளியிட எண்ணி பலரிடம் கையெழுத்து கோரினார். அக்கால வழக்கப்படி ஒரு நூலை அச்சிடும் முன் அதன் முதல் அச்சு நகலைப் பார்வையிட்டு, பிரசுரமாகும்போது அதைப் பணம் கொடுத்து வாங்கிக் கொள்கிறோம் என்று கையெழுத்திட்டு கொடுக்கும் வழக்கம் இருந்தது. பெரிய நூல்கள் அவ்வாறுதான் அச்சில் வந்தன. ஆனால் பெரும்பாலானவர்கள் இது தேவையற்ற ஆடம்பர முயற்சி என்று சொல்லி ஒதுங்கினர். சிலரே கையெழுத்திட்டனர்.  இரண்டு அறிக்கைகளை பிரசுரித்துப் பார்த்தார். அம்முயற்சியும் வீணாயிற்று.

இக்காலகட்டத்தில் பல பழையமுறை கலைக்களஞ்சியங்கள் (கோஸங்கள்) அரைகுறையாக எழுதப்பட்டு அவசரமாக வெளியிடப்பட்டன. அவற்றில் ஆ.முத்துத்தம்பிப் பிள்ளை எழுதிய அபிதான கோசம் மட்டுமே ஓரளவேனும் முக்கியமானது. 

மதுரை நான்காம் தமிழ்ச்சங்கத்தின் நிறுவுனரும் பாலவநத்தம் ஜமீந்தாருமான பாண்டித்துரைத் தேவர் சிங்காரவேலு முதலியாரின் இரண்டாவது அறிக்கையைப் பார்த்து மதுரையில் இருந்து தேடிவந்து சிங்காரவேலு முதலியாரைப் பார்த்தார். அபிதான சிந்தாமணி கைப்பிரதியைப் பார்த்த பாண்டித்துரைத் தேவர் மதுரைத் தமிழ்ச்சங்கம் சார்பில் அச்சிட்டு வெளியிட முன்வந்தார். கைப்பிரதியை மதுரைக்குக் கொண்டுசென்று மீண்டும் செம்மையாக்கி எழுதுவித்தார்.

வெளியீடு

மதுரைத் தமிழ்ச்சங்கத்துக்கு அச்சகம் இருந்தும் கூட  சிங்காரவேலு முதலியாரின் வசதிக்காக அந்நூல் சென்னையிலேயே அச்சாகியது. சிங்காரவேலு முதலியார் அதன் முதல் பதிப்புக்கு மெய்ப்பு பார்த்தார். அக்கால வழக்கப்படி தினமும் அச்சகம் சென்று பிழைதிருத்தம் செய்ய வேண்டும். பத்துமுறைக்குமேல் பிழை நோக்கப்பட்ட 'அபிதான சிந்தாமணி' என்னும் மாபெரும் நூல் அச்சுப்பிழை இல்லாதவாறு உருவானது.

அபிதான சிந்தாமணி நூலில் பழந்தமிழ் நூல்களை பதிப்பித்த உ.வே.சாமிநாதய்யர், சமணமதம் சார்ந்த தகவல்களைச் சொல்லித்தந்த அப்பாசாமி நயினார் இருவருக்கும் தனியாக நன்றி கூறினார் சிங்காரவேலு முதலியார். 1910-ல் அபிதான சிந்தாமணியின் முதல் பதிப்பு வெளிவந்தது.

மறுபதிப்பு

சிங்காரவேலு முதலியார், 1890 முதல் கிட்டத்தட்ட நாற்பத்து இரண்டு வருடங்கள், ஒரு முழு வாழ்க்கையையே அபிதான சிந்தாமணி நூலுக்காக செலவிட்டிருக்கிறார். இரண்டாம் பதிப்புக்காக மெய்ப்பு நோக்கிக் கொண்டிருந்தபோது மறைந்தார். சிங்காரவேலு முதலியார் மரணமடைந்தபின் அவரது மைந்தர் ஆ.சிவப்பிரகாச முதலியார் அபிதான சிந்தாமணியின் இரண்டாம் பதிப்பை 1934-ஆம் ஆண்டு வெளியிட்டார்.

மறைவு

அபிதான சிந்தாமணியின் முதல் பதிப்பு வெளிவந்தபின், அதில் விடுபட்டுபோன விஷயங்களை குறித்துக்கொண்டே வந்த சிங்காரவேலு முதலியார் இரண்டாம் பதிப்பை தயாரித்துக் கொண்டிருக்கும்போதே நவம்பர் 5,1931 அன்று மரணமடைந்தார்.

இலக்கிய இடம்

அபிதான சிந்தாமணி தமிழின் தொடக்ககாலக் கலைக்களஞ்சியங்களில் முழுமையானது. பழையமுறையில் சொல்லமைப்பு அமைந்திருந்தாலும் நவீன கலைக்களஞ்சியங்களுக்கு நிகராகச் செய்திகளும், தலைப்பு வரிசையும் அடங்கியது. புராணங்கள், சாதிகள், ஆசாரங்கள் போன்றவற்றை அடக்கிய பழந்தமிழ் நூல்கள் ஏடுகளில் இருந்து அச்சில் வராமல் அழிந்துகொண்டிருந்த காலகட்டத்தில் அபிதான சிந்தாமணி அவற்றை அகரவரிசையில் தொகுத்து ஒற்றை நூலாக்கியது. அவ்வகையில் அந்நூல் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களின் அச்சுப்பதிப்பு என்று கொள்ளத்தக்கது.

அபிதானசிந்தாமணி வெளிவந்த பின் ஏறத்தாழ ஐம்பதாண்டுகளுக்குப் பின்னரே பெரியசாமித் தூரன் தொகுத்த முதல் நவீன தமிழ் கலைக்களஞ்சியம் (1948 -1968 ) வெளிவந்தது. அது வெளிவந்தபின்னரும்கூட அபிதான சிந்தாமணி தனக்கான தனித்தன்மையுடன் நீடிக்கிறது. ஏனென்றால் கலைக்களஞ்சியத்தில் அறிவியல், பண்பாடு, வரலாறு சார்ந்த செய்திகளுக்கே இடமளிக்கப்பட்டது. அபிதான சிந்தாமணியில்தான் ஆசாரங்கள், நம்பிக்கைகள், வாழ்க்கைமுறைகள், புராணங்கள் சார்ந்த ஏராளமான பழையகாலச் செய்திகள் உள்ளன. இன்று அபிதான சிந்தாமணி பழங்காலச் செய்திகளுக்கான கலைக்களஞ்சியம் என்னும் கோணத்தில் மதிக்கப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page