under review

ஒக்கூர்மாசாத்தியார்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 119: Line 119:




{{First review completed}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 09:40, 27 November 2022

ஒக்கூர் மாசாத்தியார் நினைவிடம் (நன்றி தினத்தந்தி)

ஒக்கூர்மாசாத்தியார் சங்ககாலப் பெண்பாற் புலவர். இவர் பாடிய எட்டுப் பாடல்கள் சங்கத்தொகை நூலில் உள்ளன. புறநானூற்றில் தமிழ்ப்பண்பாட்டில் வீரத்தைச் சொல்லும் இவர் பாடிய 279-ஆவது பாடலுக்காக நினைவுகூரப்படுகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

மாசாத்தியார் ஒக்கூரில் பிறந்தார். ஒக்கூர் சிவகங்கை மாவட்டம் திருக்கோட்டியூர் அருகே உள்ளது. இயற்பெயர் சாத்தியார்.

இலக்கிய வாழ்க்கை

ஒக்கூர்மாசாத்தியார் பாடிய எட்டுப் பாடல்கள் சங்கத்தொகை நூலில் காணப்படுகின்றன. இவற்றில் ஒன்று புறத்துறைப்பாடலாகவும், பிற ஏழும் அகத்துறைப்பாடலாகவும் அமைந்துள்ளன. புறநானூற்றில் 279-ஆவது பாடலும், அகநானூற்றில் 324, 384-ஆவது பாடல்களும், குறுந்தொகையில் 126, 139, 186, 220 மற்றும் 275-ஆவது பாடல்களும் பாடியுள்ளார்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

செருமுகம் நோக்கிச் செல்க! (நன்றி: entamilpayanam blog)
புறநானூறு 279
  • வாகைத்திணைப்பாடல், மூதின் முல்லை துறையைச் சார்ந்த பாடல்.
  • போர்ப்பறை ஒலிக்கக் கேட்ட பெண் ஏற்கனவே நிகழந்த போரில் முன் வரிசையில் நின்று யானைப்படையை எதிர்த்து போரிட்டு அண்ணனையும், கணவனையும் பறிகொடுத்திருந்ததால் இந்த முறை போருக்கு அனுப்ப தன் வீட்டில் ஆண்மகன் இல்லையே என வருத்தமுறுகிறாள். பின் சென்று தெருவில் விளையாடிக் கொண்டிருந்த தன் இள மகனுக்கு எண்ணெய் நீவி "போருக்குச் செல்க" என்று சொல்வதாக பாடல் அமைந்துள்ளது.
  • தமிழகத்தில் தொடர்ந்து போர் நிகழ்ந்து அமைதியின்மை இருந்ததை அறிய முடிகிறது.
  • மகளிரின் வீரம், மனத்திடம் புலப்பபடும் பாடலாகவும் அமைந்துள்ளது.
அகநானூறு
  • முல்லை நிலக்காட்சி: பசுந்தளிர் நிறம் கொண்ட கிளி மரப் பொந்தில் வளர்க்கும் கிளிப்பிள்ளையின் தூவிச்சிறகு போலச் சுனையில் பாசி படர்ந்த நீர் நிறைந்திருக்கிறது. முழக்கும் பறையின் கண் போன்ற சுனையில் மழைத்துளி படும்போது நீர்க்குமிழிகள் துள்ளுகின்றன. காற்று பூக்களை உதிர்க்கிறது. நிலம் மணக்கப் பூக்கள் காற்றில் பறந்தோடுகின்றன. மரம்கொத்திப் பறவையின் சிறகு போல் தோன்றி பறந்தோடுகின்றன. அறல் அறலாகப் படிந்திருக்கும் மணலில் பறந்தோடுகின்றன. தேன் உண்ணும் வண்டுகள் காற்றால் உதிர்ந்த பூக்களிலும் மொய்க்கின்றன.
  • தன்னை விரைவாக தேரில் தலைவியிடம் சேர்த்தமைக்காக தலைவன் பாங்கனைத் தழுவிக் கொள்கிறான்
குறுந்தொகை
கார்கால முல்லை
  • முல்லைத்திணை: பொருள்வயின் பிரிந்து கார்காலத்தில் திரும்பி வருவதாகச் சொல்லிச் சென்ற தலைவன் குறித்த காலத்தில் வராததால் கார்காலத்தில் இதழ் பூத்து மலர்ந்திருக்கும் முல்லை மலர் தன்னைப் பார்த்து ஏளனமாக சிரிக்குமென தலைவி வருத்தம் கொள்கிறாள்.
  • மருதத்திணை: மாலைக் காலத்தில் வேலிக்கு அருகில் உள்ள காட்டுப் பூனையின் கூட்டம் வந்ததால், வீட்டிலிருக்கும் குறுகிய காலையுடைய பெட்டைக்கோழி அதைக் கண்டு அஞ்சிப் பாதுகாப்பாகப் புகுதற்குரிய இடத்தை அறியாமல், சேர்ந்து ஒருங்கே கூடும் பொருட்டு, துன்புறுகின்ற தன் குஞ்சுகளை அழைத்துக் கூவினாற் போல.(பரத்தையிடம் சென்று வந்த தலைவனை தோழி வாயில் மறுத்தல்.)
  • முல்லைத்திணை: பேரொலி எழுப்பும் இடியுடன் முழங்கிப் பெய்த மழைநீரோடு கலந்த முல்லை நிலத்திலுள்ள, மெல்லிய முல்லைக் கொடிகள், பற்களைப் போல அரும்பும் நாடு.
  • முல்லைத்திணை - மாலைக் காலம்: பழைய மழையினால் தழைத்த, கொல்லையில் உள்ள புதிய வரகின் கதிர்கள் அறுவடை செய்யப்பட்டன. கதிர் அரியப்பட்ட வரகின் தாள்களில் எஞ்சியிருந்த இலைகளை ஆண்மான் மேய்ந்ததால், அவை குறைந்த தலையையுடைனவாக உள்ளன. அவற்றின் பக்கத்தில் உள்ள முல்லைக் கொடியில், காட்டுப் பூனை சிரித்ததைப் போன்ற தோற்றத்தையுடைய, மெல்லிய இதழ்கள் மூடிய புதிய பூவின் சிறிய அரும்புகள் மலர்ந்து, மணம் வீசுகின்ற முல்லை நிலத்தில், வண்டுகள் அம் மலர்களில் உள்ள தேனை உண்ணுவதற்காக சுற்றுகின்றன.
  • முல்லைத்திணை - மாலை நேரத்தில் ஊரை வந்து அடையும், காளைகளுடன் கூடிய பசுக்களின் கூட்டத்தில் உள்ள, புல்லை உண்ட நல்ல பசுக்கள் கழுத்தில் அணிந்துள்ள மணி ஓசை ஒலிக்கும். தன்னுடைய வேலையை முழுமையாகச் செய்து முடித்த நிறைவான உள்ளத்தோடு, வலிய வில்லை உடைய இளைய வீரர்கள் தன் அருகிலிருந்து பாதுகாக்க, ஈரமான மணலை உடைய காட்டு வழியிலே வரும், தலைவரின் தேரில் பூட்டிய மணி ஓசை ஒலிக்கும் மாலை நேரம். முல்லைக்கொடி படர்ந்த குன்றுகள் உடைய நாடு.

பாடல் நடை

  • புறநானூறு 279

கெடுக சிந்தை; கடிதுஇவள் துணிவே;
மூதின் மகளிர் ஆதல் தகுமே;
மேல்நாள் உற்ற செருவிற்கு இவள்தன்னை,
யானை எறிந்து, களத்துஒழிந் தன்னே;
நெருநல் உற்ற செருவிற்கு இவள்கொழுநன், 5
பெருநிரை விலக்கி, ஆண்டுப்பட் டனனே;
இன்றும் செருப்பறை கேட்டு, விருப்புற்று மயங்கி,
வேல்கைக் கொடுத்து, வெளிதுவிரித்து உடீஇப்,
பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி,
ஒருமகன் அல்லது இல்லோள், 10
செருமுக நோக்கிச் செல்க என விடுமே!

அகநானூறு 324

தண் நில மருங்கில் போழ்ந்த வழியுள்,
நிரை செல் பாம்பின் விரைபு நீர் முடுக,
செல்லும், நெடுந்தகை தேரே
முல்லை மாலை நகர் புகல் ஆய்ந்தே!

அகநானூறு 384

"...பெருந் தேர் யானும்
ஏறியது அறிந்தன்று அல்லது, வந்த
ஆறு நனி அறிந்தன்றோஇலெனே; "தாஅய்,
முயற் பறழ் உகளும் முல்லை அம் புறவில், 5
கவைக் கதிர் வரகின் சீறூர் ஆங்கண்,
மெல் இயல் அரிவை இல்வயின் நிறீஇ,
இழிமின்" என்ற நின் மொழி மருண்டிசினே;
வான் வழங்கு இயற்கை வளி பூட்டினையோ?
மான் உரு ஆக நின் மனம் பூட்டினையோ? 10
உரைமதி வாழியோ, வலவ!"

குறுந்தொகை 126

இளமை பாரார் வளநசைஇச் சென்றோர்
இவணும் வாரார் எவண ரோவெனப்
பெயல்புறந் தந்த பூங்கொடி முல்லைத்
தொகுமுகை இலங்கெயி றாக
நகுமே தோழி நறுந்தண் காரே.

குறுந்தொகை 139

மனையுறை கோழிக் குறுங்காற் பேடை
வேலி வெருகின மாலை யுற்றெனப்
புகுமிட னறியாது தொகுபுடன் குழீஇய
பைதற் பிள்ளைக் கிளைபயிர்ந் தாஅங்
கின்னா திசைக்கும் அம்பலொடு
வாரல் வாழிய ரையவெந் தெருவே.

குறுந்தொகை 186

ஆர்கலி ஏற்றொடு கார்தலை மணந்த
கொல்லைப் புனத்த முல்லை மென்கொடி
எயிறுஎன முகைக்கும் நாடற்குத்
துயில்துறந் தனவால் தோழிஎன் கண்ணே.

குறுந்தொகை 220

பழமழைக் கலித்த புதுப்புன வரகின்
இரலை மேய்ந்த குறைத்தலைப் பாவை
இருவிசேர் மருங்கிற் பூத்த முல்லை
வெருகுசிரித் தன்ன பசுவீ மென்பிணி
குறுமுகை அவிழ்ந்த நறுமலர்ப் புறவின்
வண்டுசூழ் மாலையும் வாரார்
கண்டிசிற் றோழி பொருட்பிரிந் தோரே.

குறுந்தொகை 275

முல்லை யூர்ந்த கல்லுய ரேறிக்
கண்டனம் வருகஞ் சென்மோ தோழி
எல்லூர்ச் சேர்தரும் ஏறுடை யினத்துப்
புல்லார் நல்லான் பூண்மணி கொல்லோ
செய்வினை முடித்த செம்ம லுள்ளமொடு
வல்வில் இளையர் பக்கம் போற்ற
ஈர்மணற் காட்டாறு வரூஉம்
தேர்மணி கொல்லாண் டியம்பிய வுளவே.

இணைப்புகள்

உசாத்துணை



✅Finalised Page