under review

கண்மணி குணசேகரன்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected typo errors;)
No edit summary
 
Line 78: Line 78:
*[https://tamilhindu.com/2009/03/vesa-column-heads-2/ வெங்கட் சாமிநாதன் கட்டுரை]
*[https://tamilhindu.com/2009/03/vesa-column-heads-2/ வெங்கட் சாமிநாதன் கட்டுரை]
*[https://youtu.be/o5ucXOO0c1Q பொற்கிழி விருது காணொளி]
*[https://youtu.be/o5ucXOO0c1Q பொற்கிழி விருது காணொளி]


{{Finalised}}
{{Finalised}}


{{Fndt|15-Nov-2022, 13:31:19 IST}}
{{Fndt|15-Nov-2022, 13:31:19 IST}}


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 15:28, 12 October 2026

கண்மணி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கண்மணி (பெயர் பட்டியல்)
குணசேகரன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: குணசேகரன் (பெயர் பட்டியல்)

To read the article in English: Kanmani Gunasekaran. ‎

நன்றி: தி தமிழ் இந்து
கண்மணி
கண்மணி குணசேகரன்
கண்மணி குணசேகரன்- கி,ரா விருது

கண்மணி குணசேகரன் (மே 19, 1971) தமிழ் எழுத்தாளர். நடுநாடு எனப்படும் விழுப்புரம், கடலூர் பகுதியை சேர்ந்த அடித்தளமக்களின் கதைகளையும், போராட்டங்களையும் சொல்லும் எழுத்தாளர். கவிஞராக படைப்புலகில் அறிமுகமாகி சிறுகதைகள், நாவல் என தன் படைப்புக்களத்தை விரிவாக்கியவர்.

பிறப்பு, இளமை

கண்மணி குணசேகரன் கடலூர் மாவட்டதிலுள்ள மணக்கொல்லைஎன்ற கிராமத்தில் மே 19, 1971 அன்று ஒரு விவசாயக்குடும்பத்தில் அய்யாத்துரை, சின்னம்மாள் இணையருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். இயற்பெயர் ஏ.குணசேகர். பள்ளிப்படிப்பை ஐந்தாம் வகுப்பு வரை இருளக்குறிச்சியிலும், பத்தாம் வகுப்புவரை உளுந்தூர்பேட்டை ஆலடி அரசுப்பள்ளியிலும் முடித்தார். பின்னர் உளுந்தூர்பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற்படிப்பை முடித்தார்.

தனி வாழ்க்கை

பெரியார் போக்குவரத்துக்கழகம் செஞ்சிக்கிளையில் தொழிற்பழகுனராய் வேலை செய்தார். 1999-லிருந்து தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக் கழகம் விருத்தாச்சலம் கிளையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். தன் நிலத்தில் விவசாயமும் செய்து வருகிறார். கண்மணி குணசேகரனின் மனைவியின் பெயர் காசிமணி. மூன்று மகன்கள் - தமிழ்மதி, அறிவுமதி, இளமதி.

இலக்கிய பங்களிப்பு

தொடக்கம்

1991-ல் கண்மணி என்னும் புனைபெயரில் கவிதைகள் எழுதினார்.கண்மணி குணசேகரன் பின் பேராசிரியர் த. பழமலய் படைப்புக்களின் பாதிப்பில் கதைகளை எழுதத்தொடங்கினார். கண்மணி குணசேகரன் என்னும் பெயரை சூட்டிக்கொண்டார்.

கவிதைகள்

1994-ல் வெளியான 'தலைமுறைக்கோபம்' என்ற முதல் கவிதைத் தொகுப்பு பரவலான பாராட்டுக்களை பெற்றது.

சிறுகதைகள்

கண்மணி குணசேகரனின் சிறுகதைகள் இயல்புவாத அழகியலுடன் வாழ்க்கையைச் சித்தரிப்பவை. உயிர்த்தண்ணீர் 1997-ல் வெளிவந்த முதல் சிறுகதைத் தொகுதி.

அகராதி

தமிழில் அழிந்து வரும் வட்டார வழக்குகளில் புழங்கும் பழமையான சொற்களை விளக்கும், நடுநாட்டுச் சொல்லகராதி' என்னும் நூலை 2007 முதல் 2017 வரை பத்து வருடங்களாக தொகுத்து எழுதினார். இந்நூல் தமிழக அரசின் விருது பெற்றது.

நாவல்கள்

கண்மணி குணசேகரனின் 'அஞ்சலை' நாவல் பெண்களையும் அவர்களை சுரண்டிப் பிழைப்பவர்களையும் நுட்பமான கதாபாத்திரங்கள் மூலம் சித்தரித்தது. போக்குவரத்துத் துறையை களமாகக் கொண்ட 'நெடுஞ்சாலை' நாவல், அரசு வளர்ச்சித் திட்டங்களால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் மக்களை காட்டும் 'வந்தாரங்குடி' நாவல் ஆகியவையும் நுட்பமான இயல்புச் சித்திரிப்பாலேயே பரவலான வாசிப்பை அடைந்தன. . இவரது அஞ்சலை நாவல் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது.

விருதுகள்

  • சுந்தரராமசாமி நினைவாக வழங்கப்படும் நெய்தல் விருது (2007)
  • 'நடுநாட்டுச் சொல்லகராதி' தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான விருதை பெற்றுள்ளது.
  • கலைஞர் பொற்கிழி விருது 2019
  • கி.ரா விருது 2020

விவாதங்கள்

கண்மணி குணசேகரன் வன்னியர் சாதிச் சங்கத்திலும் அச்சாதியின் அரசியலமைப்பான பாட்டாளி மக்கள் கட்சியிலும் நேரடியாக ஈடுபடுபவர். நவீன இலக்கியவாதி இவ்வாறு நேரடியாகச் சாதி அடையாள அரசியலில் ஈடுபடலாமா என்னும் விவாதம் தொடர்ந்து பல முறை நடந்தது. 2021-லும் அவ்விவாதம் எழுந்தது.

இலக்கிய இடம்

கண்மணி குணசேகரனின் எழுத்துக்கள் விரிவான நுண்தரவுகளுடன் வேளாண்மைசார்ந்த வாழ்க்கையை இயல்புவாத அழகியலுடன் உருவாக்குகின்றன. நாட்டார்க்கூறுகளையும் பயன்படுத்திக்கொள்கின்றன. 'தான் கண்ட பழகிய மனிதர்களை உலகை எவ்வித சித்தாந்தப் பூச்சும் இன்றி நம் முன் வைத்துள்ளார் கண்மணி குணசேகரன். ஒரு வித்தியாசமான படைப்பாளி. இன்னமும் ஒரு கிராமத்து விவசாயியின் பிரக்ஞையிலேயே வாழ்பவர்' என வெங்கட் சாமிநாதன் மதிப்பிடுகிறார்.

படைப்புகள்

கவிதைகள்
  • தலைமுறைக்கோபம் (1994)
  • காற்றின் பாடல் கவிதைகள் (2001)
  • காலடியில் குவியும் நிழல்வேளை (2007)
  • சிற்றகலில் தொற்றிய தீத்துளி (2016)
  • கண்மணி குணசேகரனின் கவிதைகள்
  • மூன்றாம் நாள் பெண் (2020)
  • உத்திமாக்குளம் (2021)
  • காலிறங்கி பெய்யுமொரு கனமழை
  • மிளிர்கொன்றை
சிறுகதைகள்
  • உயிர்த்தண்ணீர் (1997)
  • ஆதண்டார் கோயில் குதிரை (2000)
  • வெள்ளெருக்கு (2004)
  • பூரணிபொற்கலை (2012)
  • கிக்குலிஞ்சான்
  • சமாதானக் கறி
  • புள்ளிப் போட்டை
  • வாடாமல்லி
  • சிற்றகலில் தொற்றிய தீத்துளி
  • மணக்கொல்லை
  • மூன்றாம்நாள் பெண்
நாவல்கள்
  • அஞ்சலை (1999)
  • கோரை (2000)
  • நெடுஞ்சாலை (2009)
  • வந்தாரங்குடி (2014)
அகராதி
  • நடுநாட்டுச் சொல்லகராதி (2017)

உசாத்துணை

‎


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:31:19 IST