under review

இரும்பிடர்தலையார்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 47: Line 47:
* [https://www.tamilvu.org/courses/degree/d011/d0114/html/d01143fr.htm D01143 புறநானூறு - 3: tamilvu]
* [https://www.tamilvu.org/courses/degree/d011/d0114/html/d01143fr.htm D01143 புறநானூறு - 3: tamilvu]


{{Second review completed}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 20:53, 2 June 2024

இரும்பிடர்தலையார் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று சங்கத்தொகை நூலான புறநானூற்றில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

இரும்பிடர்தலையார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடலில் வரும் 'இரும்பிடர்த் தலையிருந்து' என்ற தொடரைக் கொண்டு இப்பெயரை தமிழறிஞர்கள் இட்டனர்.

இலக்கிய வாழ்க்கை

இரும்பிடர்தலையார் பாடிய பாடல் சங்கநூல் தொகுப்பான புறநானூற்றில் 3-வது பாடலாக உள்ளது. பாண்டியன் கருங்கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதியைப் பற்றிய செய்திகளும், அவருக்குச் சொல்லும் அறிவுரையாகவும் இப்பாடல் உள்ளது.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • பாண்டிய அரசன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி: கவுரியர் மரபில் வந்தவன், கற்புக்கரசியின் கணவன். எப்போதும் தன் வலிமை மிக்க கையில் வாள் வைத்திருப்பவன். மருந்தில் கூற்றம் என்னும் நிலப்பகுதியை வென்றவன். பொன்னாலான வீரக்கழலைக் காலில் அணிந்தவன். ஈரச் சந்தனம் புலர்ந்த மார்பை உடையவன். பொன்னாலான ஓடைக் கவசத்தை நெற்றியில் கொண்ட, கயிற்றில் கட்டிய மணி கொண்ட, வலிமை மிக்க, மதம் பொழியும் யானையின் தலையில் இருந்துகொண்டு அதை உதைத்துக் கொண்டே போரிட்டு வென்றவன். இவன் மரபினர் வெண்கொற்றக் குடைநிழல் இருந்துகொண்டு நாடாண்டு மண்ணிலுள்ள அனைத்து மக்களுக்கும் நிழல் தந்தவர்கள், முரசு முழக்கத்துடன் ஆட்சிச் சக்கரத்தை உருட்டியவர்கள், நெஞ்சில் நேயம் கொண்டு இல்லை என்று சொல்லாமல் கொடை வழங்கியவர்கள்.
  • அறிவுரை: நிலமே மாறினாலும் சொன்ன சொல் தவறாமல் வாழவேண்டும். நீண்ட வழியைக் கடந்து வருபவர்களும், வன்கண் ஆடவர் பதுங்கியிருந்து அம்பு விட வீழ்ந்தவர்களை உண்ணும் பருந்து உன்னமரத்தில் காத்திருக்கும் வழியில் வருவர்களுமான இரவலர்களின் வறுமையைப் போக்குவதே உன் வலிமை என புலவர் அறிவுரை கூறுகிறார்.
  • உவமை: முழுமதி போல் உருவம் கொண்ட வெண்கொற்றக் குடைநிழல்

பாடல் நடை

  • புறநானூறு: 3 (திணை: பாடாண்; துறை: செவியறிவுறூஉ)

உவவு மதி உருவின் ஓங்கல் வெண் குடை
நிலவுக் கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற,
ஏம முரசம் இழுமென முழங்க,
நேமி உய்த்த நேஎ நெஞ்சின்,
தவிரா ஈகை, கவுரியர் மருக!
செயிர் தீர் கற்பின் சேயிழை கணவ!
பொன் ஓடைப் புகர் அணி நுதல்,
துன் அருந் திறல், கமழ் கடாஅத்து,
எயிறு படையாக எயிற் கதவு இடாஅ,
கயிறு பிணிக்கொண்ட கவிழ் மணி மருங்கின்,
பெருங் கை, யானை இரும் பிடர்த் தலை இருந்து,
மருந்து இல் கூற்றத்து அருந் தொழில் சாயாக்
கருங் கை ஒள் வாட் பெரும்பெயர் வழுதி!
நிலம் பெயரினும், நின் சொல் பெயரல்;
பொலங் கழற் கால், புலர் சாந்தின்
விலங்கு அகன்ற வியல் மார்ப!
ஊர் இல்ல, உயவு அரிய,
நீர் இல்ல, நீள் இடைய,
பார்வல் இருக்கை, கவி கண் நோக்கின்,
செந் தொடை பிழையா வன்கண் ஆடவர்
அம்பு விட, வீழ்ந்தோர் வம்பப் பதுக்கை,
திருந்து சிறை வளை வாய்ப் பருந்து இருந்து உயவும்
உன்ன மரத்த துன் அருங் கவலை,
நின் நசை வேட்கையின் இரவலர் வருவர் அது
முன்னம் முகத்தின் உணர்ந்து, அவர்
இன்மை தீர்த்தல் வன்மையானே.

உசாத்துணை


✅Finalised Page