under review

ஆதி நந்தவனப் பிரளயம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Added First published date)
 
Line 27: Line 27:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
கிறிஸ்தவத் தமிழ் இலக்கியம்: ஓர் அறிமுகம், பொதுப்பதிப்பாசிரியர்: டாக்டர் ஜி. ஜான் சாமுவேல்; பதிப்பாசிரியர்கள்: டாக்டர்‌ அருள்திரு. தி. தயானந்தன்‌ பிரான்சிஸ், டாக்டர்‌ யோ. ஞான சந்திர ஜாண்சன்‌, ஆசியவியல் நிறுவனம், சென்னை. முதல் பதிப்பு: 2008  
கிறிஸ்தவத் தமிழ் இலக்கியம்: ஓர் அறிமுகம், பொதுப்பதிப்பாசிரியர்: டாக்டர் ஜி. ஜான் சாமுவேல்; பதிப்பாசிரியர்கள்: டாக்டர்‌ அருள்திரு. தி. தயானந்தன்‌ பிரான்சிஸ், டாக்டர்‌ யோ. ஞான சந்திர ஜாண்சன்‌, ஆசியவியல் நிறுவனம், சென்னை. முதல் பதிப்பு: 2008  


{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|10-May-2024, 20:21:37 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 16:01, 13 June 2024

ஆதி நந்தவனப் பிரளயம் (1862) கிறித்தவக் கீர்த்தனை நாடக நூல்களுள் ஒன்று. கவிஞர் அ. வேதக்கண் இந்நூலை இயற்றினார்.

பிரசுரம், வெளியீடு

வேதக்கண்‌, ஜான்‌ மில்டனின் ‘Paradise Lost'‌ நூலை ஆதாரமாகக் கொண்டு, ஆதி நந்தவனப் பிரளயம் நூலை இயற்றினார். மே, 1862-ல் இந்நூலை வெளியிட்டார். மார்ச், 1897-ல் விக்டோரியா அச்சியத்திந்திர சாலை மூலம் இரண்டாம் பதிப்பு வெளிவந்தது. இதன் மூன்றாம் பதிப்பு, 1998-ல், கிறிஸ்தவ இலக்கியச்‌ சங்கம்‌ மூலம் வெளியானது.

ஆசிரியர் குறிப்பு

ஆதி நந்தவனப் பிரளயம் நூலை இயற்றியவர் கவிஞர். அ. வேதக்கண். இவர், இன்றைய குமரி மாவட்டத்தில்‌ (அன்றைய தென்‌ திருவிதாங்கூர்‌) மண்டைக்காடு அருகிலுள்ள கோவிலான்‌ விளையில் பிறந்தார். குழந்தைப் பருவத்தில் அம்மை நோயால்‌ பாதிக்கப்பட்டு பார்வையை இழந்தார். ரெவரண்ட் சார்லஸ்‌ மீட்‌டின் பிரார்த்தனையால் நலம் பெற்றார். நெய்யூர்‌ போர்டிங்‌ பள்ளியில்‌ கல்விகற்றார். நாகர்கோவில்‌ செமினரியில்‌ ஆசிரியராகப் பணியாற்றினார். மனைவி: அன்னம்மாள். வேதக்கண் இலங்கையில் உள்ள 'தூய தோமா வேதாகமக்‌ கல்லூரி'யில்‌ பயின்று போதகர் ஆனார். வேதக்கண், ஏப்ரல்‌ 19, 1898-ல் காலமானார். வேதக்கண் இயற்றிய பிற நூல்களில் சில: வேதமொழி நூற்றிருபது, நல்லுரை நாற்பது, அதிசயக்‌ கும்மி, நவநீதம்‌ இருநூற்றறுபது, சின்னத்தங்கம்‌, சங்கீத பூரணி, தத்துவ போதினி, ஆதி நந்தவன மீட்சி ஆகியன.

நோக்கம்

'ஆதி நந்தவனப் பிரளயம்' நூலின் நோக்கம் குறித்து வேதக்கண், பாயிரப் பகுதியில், “கிறிஸ்தவப்‌ பொதுவான ஜனங்கள்‌ கல்யாண முதலிய சந்துஷ்டி காலங்களில்‌ அஞ்ஞான பாப்பிய கட்டுகளான பல நாடகப்‌ பாடல்களைப்‌ படித்துப்‌ பொழுதுபோக்கி வருகிறார்கள்‌. நாடகச்சீர்‌ எவரும்‌ எளிதில்‌ பழகத்தக்கதும்‌ எவர்‌ மனதையும்‌ கவரத்தக்கதுமாய்‌ இருப்பதால் தற்காலத்தில்‌ இவ்வித நூல்களும்‌ அவசியமாகவே இருக்கின்றன.’ என்று குறிப்பிட்டார். மேலும் நூலின் அவையடக்கத்தில்,

“கான மயிலாடக்‌ கண்டிருந்த வான்கோழி
தானுமொரு வாறு சமைவதுபோல்‌ - நானும்‌
கவிக்கிறைவன்‌ மில்ற்றன்‌ கதைக்குத்‌ தமிழ்‌.பாட
சபைக்குள்‌ வற்தேன்‌ ஏசு சரண்‌”

- என்று குறிப்பிட்டார்.

நூல் அமைப்பு

'மில்டனின்‌ பெரிய காவியத்தைத்‌ தமிழின்‌ சில நாடகச்‌ சீரில்‌ பாட முயற்சிக்கிறேன்‌' என்று குறிப்பிட்டிருக்கும் வேதக்கண், தமிழ் மரபுக்கேற்ப பல மாற்றங்களைக் கையாண்டார். நூலின் தொடக்கத்தில் பிதா வணக்கம், குமரன் வணக்கம், ஆவி வணக்கம், அவையடக்கம், நூற்பெயர் ஆகியன இடம்பெற்றுள்ளன. ஆறு சருக்கங்களைக் கொண்ட இந்நூலின் இறுதியில் வாழ்த்துப்பாடல் இடம்பெற்றுள்ளது. நாடகத்தில் ஆங்காங்கே உரைநடைக்‌ குறிப்புகளும்‌ இடம்பெற்றன. இரண்டு விருத்தப் பாடல்களுக்கு ராகம் குறிக்கப்பட்டுள்ளது. 29 இராக வகைகளும் 9 தாள வகைகளும் குறிக்கப்பட்டுள்ளன. 65 கீர்த்தனைகள் இடம் பெற்றுள்ளன.

உள்ளடக்கம்

ஆதி நந்தவனப் பிரளயம், ஆங்கிலக் கவிஞன் மில்டன் இயற்றிய ‘விண்ணுலக இழப்பு’ (Paradise Lost) என்னும் நூலின் பொருளைக் கருவாகக் கொண்டு இயற்றப்பட்ட கீர்த்தனை நாடக நூல். விருத்தம், கீர்த்தனை, கொச்சகம், கண்ணிகள், வெண்பா, கலித்துறை, தாழிசை, கும்மி, வண்ணம், அகவல் முதலிய பா வகைகளுடன் உரைநடை வசனமும் இடம் பெற்றுள்ளது. ஆதாம் ஏவாளின் வீழ்ச்சியைத் தேவன் இயேசுவுக்கு முன்னறிவிக்க, அவ்வாறே, ஆதாமும் ஏவாளும் செய்த தவறினால் உலகில் பாவம் தோன்றுகிறது. ஆதாம், ஏவாள் செய்கைக்கு இயேசு பாவ மன்னிப்பு அளிக்கிறார். தேவன் காபிரியேல் தூதன் மூலம் ஆதாம், ஏவாள் இருவரையும் ஏதேன் தோட்டத்தினை விட்டு வெளியேற்றுகிறார்.

ஆதாம், ஏவாள் வழி உலகில் பாவம் தோன்றியதை இந்நாடகம் விளக்குகிறது.

உசாத்துணை

கிறிஸ்தவத் தமிழ் இலக்கியம்: ஓர் அறிமுகம், பொதுப்பதிப்பாசிரியர்: டாக்டர் ஜி. ஜான் சாமுவேல்; பதிப்பாசிரியர்கள்: டாக்டர்‌ அருள்திரு. தி. தயானந்தன்‌ பிரான்சிஸ், டாக்டர்‌ யோ. ஞான சந்திர ஜாண்சன்‌, ஆசியவியல் நிறுவனம், சென்னை. முதல் பதிப்பு: 2008



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 10-May-2024, 20:21:37 IST