ஆரல்வாய்மொழி மீனாட்சி அம்மன் கோயில்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 18: Line 18:


== விழாக்கள் ==
== விழாக்கள் ==
இந்தக் கோவிலில் பங்குனி மாதம் 10 நாட்கள் திருவிழாவும், சித்திரை மாதம் 4 நாட்கள் திருக்கல்யாண விழாவும் நடைபெறுகிறது. பங்குனி உத்தரத்தை ஒட்டி நிகழும் விழாவில் தம்புரான் விளையாட்டு என்னும் சப்பரம் தூக்கும் நிகழ்ச்சி நிகழ்கிறது. அதில் சாஸ்தா குதிரைமேல் ஒரு சப்பரத்தில் ஏற்றப்படுவார். அக்குதிரையும் சப்பரமும் கீழிருந்து சுழற்றப்படும். சப்பரத்தை ஐம்பதுபேர் சேர்ந்து தூக்கி சுழன்று சுழன்று ஆடுவார்கள். ஒருமணிநேரம் நிகழும் இந்த நிகழ்ச்சி சாஸ்தா எதிரிகளை வேட்டையாடி அழிப்பது என கொள்ளப்படுகிறது. பத்துநாட்களும் மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரருடன் வீதி எழுந்தருளும் நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன   
இந்தக் கோவிலில் பங்குனி மாதம் 10 நாட்கள் திருவிழாவும், சித்திரை மாதம் 4 நாட்கள் திருக்கல்யாண விழாவும் நடைபெறுகிறது. பங்குனி உத்தரத்தை ஒட்டி நிகழும் விழாவில் [[தம்புரான் விளையாட்டு]] என்னும் சப்பரம் தூக்கும் நிகழ்ச்சி நிகழ்கிறது. அதில் சாஸ்தா குதிரைமேல் ஒரு சப்பரத்தில் ஏற்றப்படுவார். அக்குதிரையும் சப்பரமும் கீழிருந்து சுழற்றப்படும். சப்பரத்தை ஐம்பதுபேர் சேர்ந்து தூக்கி சுழன்று சுழன்று ஆடுவார்கள். ஒருமணிநேரம் நிகழும் இந்த நிகழ்ச்சி சாஸ்தா எதிரிகளை வேட்டையாடி அழிப்பது என கொள்ளப்படுகிறது. பத்துநாட்களும் மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரருடன் வீதி எழுந்தருளும் நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன   


== திருவாவடுதுறை ஆதீனம் ==
== திருவாவடுதுறை ஆதீனம் ==

Revision as of 16:08, 21 March 2022

ஆரல்வாய்மொழி மீனாட்சியம்மன் ஆலயம்
ஆரல்வாய்மொழி மீனாட்சியம்மன்

ஆரல்வாய்மொழி மீனாட்சி அம்மன் கோவில் தமிழ்நாட்டில் கன்யாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆலயம். மதுரை மீனாட்சி அம்மனுக்கு இருக்கும் இரண்டாவது ஆலயம் இது. இந்த ஆலயத்தின் முதன்மைத்தெய்வம் பரகோடி கண்டன் சாஸ்தா. பின்னர் மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் நிறுவப்பட்டனர்.

அமைவிடம்

நாகர்கோயில் திருநெல்வேலி சாலையில் ஆரல்வாய்மொழி ஊரில் வடக்கூர் என்னும் துணைப்பகுதியில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

வரலாறு, தொன்மம்

இந்த ஆலயத்தின் மூலவர் பரகோடி கண்டன் சாஸ்தா. இவர் சுயம்புவாக உருவானவர் என தொன்மம் கூறுகிறது. இங்கே வாழ்ந்த தொண்டைமான் பரவர் என்னும் சமூகத்தினரின் வழிபடுதெய்வமாக இருந்தவர் பரகோடி கண்டன் சாஸ்தா. கண்டன் எனும் தெய்வம் பின்னர் சாஸ்தாவாக ஆகியது என்று ஆய்வாளர் கூறுவதுண்டு. உள்ளூர் கதைகளின்படி வேட்டைக்குச் சென்ற பரவர்கள் முயலை ஈட்டியால் குத்தியபோது ஒரு பாறையில் இருந்து ரத்தம் வந்தது. அந்தப் பாறையில் அவர்கள் கண்டன் சாஸ்தாவை நிறுவி வழிபட்டனர்.

மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் இங்கே நிறுவப்பட்டமைக்கு தொன்மக்கதைகள் இல்லை. வரலாற்றின்படி பொயு 1311ல் டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் காபூரின் படையெடுப்பின்போது மதுரையில் இருந்து மீனாட்சியம்மனையும் சுந்தரேசரையும் பூசகர்கள் ரகசியமாக அன்றைய வேணாட்டுக்கு கொண்டுவந்து பரகோடி கண்டன் சாஸ்தா ஆலயத்தில் மறைத்து வைத்தனர் எஎன்றும் 1368 வரை மீனாட்சியம்மன் ஆரல்வாய்மொழியில் இருந்தாள் என்றும் பிற்காலத் திருவிதாங்கூர் வரலாற்றுக்குறிப்புகள் சில கூறுகின்றன. விஜயநகரப் பேரரசர் குமாரகம்பண நாயக்கர் தன் மனைவி கங்கம்மா தேவியின் கனவில் மதுரை மீனாட்சி வந்து விடுத்த ஆணையின்படி மதுரைமீது படையெடுத்து மதுரையை ஆட்சி செய்த சிக்கந்தர் ஷாவை வென்று மதுரை ஆலயத்தை மீட்டு கட்டியபோது மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் மதுரைக்கு மீண்டும் கொண்டுசெல்லப்பட்டனர். அந்நிகழ்வை கங்கம்மா தேவி எழுதிய மதுராவிஜயம் என்னும் நூல் குறிப்பிடுகிறது. ஆனால் மதுரை மீனாட்சி ஆரல்வாய்மொழியில் இருந்தமைக்கு அக்காலம் முதல் இருந்துவரும் நிறுவப்பட்ட நூல்களோ, கல்வெட்டுச்சான்றுகளோ இல்லை என்பதனால் இதையும் ஒரு செவிவழிச் செய்தியாகவே கொள்ளவேண்டும்

ஆலய அமைப்பு

இந்த ஆலயத்தின் மூலவராக பரகோடி கண்டன் சாஸ்தா உள்ளார். மீனாட்சியம்மனுக்கும் சுந்தரேஸ்வரருக்கும் தனித்தனியான கருவறைகள் உள்ளன. பிள்ளையார், பெருமாள், முருகன், காலபைரவன் ஆகியோருக்கும் தனி சன்னிதிகள் உள்ளன.

பூசைகள்

கோயிலில் காலை 5.00 மணிக்கு நடை திறப்பு, 6.30 மணிக்கு உஷ பூஜை, 9.05 மணிக்கு காலசுத்தி பூஜை, 10.30 மணிக்கு உச்சகால பூஜை. 11.00 மணிக்கு நடை சாத்துதல், மாலை 5.00 மணிக்கு நடை திறப்பு, 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, 7.45 மணிக்கு அர்த்தசாம பூஜை, 8.00 மணிக்கு அத்தாழ பூஜை, 8.30 கோயில் நடை சாத்துதல் என்ற நிலையில் தினமும் நடைபெறுகிறது.

விழாக்கள்

இந்தக் கோவிலில் பங்குனி மாதம் 10 நாட்கள் திருவிழாவும், சித்திரை மாதம் 4 நாட்கள் திருக்கல்யாண விழாவும் நடைபெறுகிறது. பங்குனி உத்தரத்தை ஒட்டி நிகழும் விழாவில் தம்புரான் விளையாட்டு என்னும் சப்பரம் தூக்கும் நிகழ்ச்சி நிகழ்கிறது. அதில் சாஸ்தா குதிரைமேல் ஒரு சப்பரத்தில் ஏற்றப்படுவார். அக்குதிரையும் சப்பரமும் கீழிருந்து சுழற்றப்படும். சப்பரத்தை ஐம்பதுபேர் சேர்ந்து தூக்கி சுழன்று சுழன்று ஆடுவார்கள். ஒருமணிநேரம் நிகழும் இந்த நிகழ்ச்சி சாஸ்தா எதிரிகளை வேட்டையாடி அழிப்பது என கொள்ளப்படுகிறது. பத்துநாட்களும் மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரருடன் வீதி எழுந்தருளும் நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன

திருவாவடுதுறை ஆதீனம்

இந்த ஆலயத்திற்குப் பொறுப்பான திருவாவடுதுறை துணைமடம் சற்று விலகி ஏரிக்கரையில் உள்ளது. இங்கே அகலிகை ஊற்று எனப்படும் தெப்பக்குளமும் அதைச்சுற்றி படிக்கட்டும் சுற்றுமண்டபமும் உள்ளது. சித்தர் சமாதி, அகத்தியர் ஆலயம், காலபைரவர் ஆலயம், முருகன் ஆலயம் ஆகியவையும் சுற்றுமண்டபத்தில் உள்ளன. அகஸ்தியலிங்கம் பிள்ளை என்பவர் 1956ல் இந்த பகுதியை எடுத்துகட்டி ஓர் அலுவலகமும் அமைத்தார். ஆனால் பின்னர் அங்கே நிரந்தரமாக தங்கு பொறுப்பாளர் எவருமில்லை.

குமரித்துறைவி

மதுரை மீனாட்சி அம்மனும் சுந்தரேஸ்வரரும் இவ்வாலயத்தில் வைக்கப்பட்டிருந்தார்கள் என்னும் குறிப்பை ஒட்டி எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய குமரித்துறைவி என்னும் நாவல் 2021 ல் வெளியாகியுள்ளது.

மேற்கோள்கள்

குமரித்துறைவி நாவல்