under review

வெ. வேதாசலம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 88: Line 88:
== அடிக்குறிப்புகள் ==
== அடிக்குறிப்புகள் ==
<references />
<references />
{{First review completed}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 08:00, 14 November 2023

Veedhachalam.jpg

முனைவர் வெ. வேதாசலம் (பிறப்பு: டிசம்பர் 20, 1950) தொல்லியல் ஆய்வாளர், கல்வெட்டு ஆய்வாளர், அருங்காட்சியகக் காப்பாட்சியர். கீழடி முதல் கட்ட அகழாய்வில் பங்கேற்றவர். தமிழகக் கல்வெட்டு, தொல்லியல் இடங்களை சேகரித்து பதிப்பிப்பதில் முக்கியப் பங்காற்றி வருகிறார். மதுரையைச் சுற்றியுள்ள சமண குன்றுகளை ஆய்வு செய்து எண்பெருங்குன்றம் நூலை எழுதினார். தமிழக தொல்லியல் துறையின் முதுநிலைக் கல்வெட்டாய்வாளர், அகழாய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

பிறப்பு, கல்வி

வேதாசலம்.jpg

வெ. வேதாசலம் டிசம்பர் 20, 1950 அன்று மதுரை மாவட்டம் மதிச்சியத்தில் வெள்ளைச்சாமி, வேலம்மாள் தம்பதியருக்குப் பிறந்தார். முனைவர் வெ. வேதாசலத்துடன் பிறந்தவர்கள் பதிமூன்று பேர். மதுரை செனாய் நகர் அரசு பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி வரை பயின்றார். பொ.யு. 1969 - 70-ல் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.யூ.சி பட்டம் பெற்றார். மதுரை தியாகராஜர் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

சென்னையிலுள்ள தமிழக தொல்லியல் துறையில் ஒரு வருடம் தொல்லியல் பயின்று பொ.யு. 1975-ல் தமிழக தொல்லியல் துறையில் கல்வெட்டு ஆய்வாளராக பணியில் சேர்ந்தார். டில்லி நேஷனல் மியூசியத்தில் அருங்காட்சியியல் (மியூசியாலஜி) பயின்றுள்ளார். 'பாண்டிய நாட்டு சமுதாயமும் பண்பாடும்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து மதுரை காமராஜர் கல்லூரியில் முனைவர் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

வேதாசலம்-1.jpg

வெ. வேதாசலம் 1985-ஆம் ஆண்டு கலாவதியை திருமணம் செய்துக் கொண்டார். வேதாசலம் - கலாவதி தம்பதியருக்கு திருநம்பி, திருநங்கை என இரண்டு குழந்தைகள். தற்போது குடும்பத்துடன் மதுரையில் வசித்து வருகிறார்.

ஆய்வு பணி

வெ. வேதாசலம் பொ.யு. 1975-ஆம் ஆண்டு தமிழக தொல்லியல் துறையில் பணியில் இணைந்த பின் சென்னையில் கல்வெட்டுகளைப் படியெடுத்து பதிபிக்கும் பணியையும், அருங்காட்சிய அமைப்பு பணியும் மேற்கொண்டார். விருப்பத்தின் பெயரில் தொல்லியல் ஆய்வுகளிலும் பங்கெடுத்தார். ஓய்வுக்கு பின்னும் தனிப்பட்ட ஆர்வத்தால் தொல்லியல், கல்வெட்டு ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். 25-க்கு மேற்பட்ட புத்தகங்களும், நூற்றுக்கு மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார்.

தொல்லியல் ஆய்வு

வேதாசலம் கரூர், மதுரை கோவலன் பொட்டல், தொண்டி, அழகன்குளம், திருத்தங்கல், மாங்குடி பகுதிகளில் நிகழ்ந்த தொல்லியல் ஆய்யுகளில் பங்கெடுத்துள்ளார். மதுரை கீழடியில் மத்திய தொல்லியல் துறையின் கீழ் நிகழ்ந்த முதற்கட்ட தொல்லியல் துறை அகழாய்வில் அமர்நாத் ராமகிருஷ்ணனுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

ஓய்வுக்கு பின் சிந்து சமவெளிக்குச் சென்று தன்னார்வத்தால் அங்கே ஆய்வுகள் மேற்கொண்டார். இந்தியாவிலுள்ள வரலாற்று இடங்களுக்கு நேரடியாகச் சென்று அவற்றை பதிவு செய்து வருகிறார். கிழக்கு ஆசிய நாடுகளுக்கும், மேலை நாட்டு வரலாற்று இடங்களுக்கும் பயணங்கள் மேற்கொண்டு வருகிறார்.

கல்வெட்டு பதிப்பு பணி

வேதாசலம் பழைய தமிழ் பிராமி, வட்டெழுத்து, தமிழ், கிரந்த எழுத்துகளில் கிடைத்த கல்வெட்டுகள், செப்பு தகடுகளை தமிழகத்தின் வெவ்வேறு இடங்களில் படித்து பதிவேற்றியுள்ளார்.

1976-ஆம் ஆண்டு வெ. வேதாசலம் மாணவராக இருந்த போது திருவெள்ளறை கல்வெட்டுகள் பற்றி ஆய்வு செய்து நூலாக வெளியிட்டார். இதுவே வெ. வேதாசலத்தின் முதல் நூல். பின் தமிழக தொல்லியல் துறையில் கல்வெட்டு ஆய்வாளராக பணியாற்றிய போது மாவட்ட வாரியாக கல்வெட்டு பற்றிய தகவல்கள் சேகரித்து தொகுதிகளாக வெளியிட்டுள்ளார். தன் பணிக் காலத்தில் திருவாரூர், திண்டுக்கல், மதுரை மாவட்ட தொல்லியல் கையேட்டை உருவாக்கினார். விருதுநகர் மாவட்டம் பற்றி ஆங்கிலத்தில் தனியாக நூல் ஒன்றும் எழுதியுள்ளார்.

வரலாற்று ஆய்வு

வேதாசலம்-2.jpg

வெ. வேதாசலம் மதுரையையும் அதனை சுற்றியுள்ள பகுதியையும் தன் முதன்மை ஆய்வுக் களமாக கொண்டவர். பாண்டியர் காலத்தில் மதுரையின் சமூக நிலவியல், பாண்டிய நாட்டு ஊர்களின் வரலாறு, அதன் சமுதாயமும், பண்பாடும் போன்றவற்றை ஆய்வு செய்து நூலாக்கியுள்ளார். 2000-க்கு முன் இவர் எழுதிய ’பராக்கிரம பாண்டியபுரம்’ என்னும் நூல் தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசு பெற்றது. மதுரையிலுள்ள திருமலை நாயக்கர் அரண்மனை, ராமநாதபுரம் அரண்மனை பற்றிய தகவல்களை தொல்லியல் துறையின் நூலாக வெளியிட்டுள்ளார்.

எண்பெருங்குன்றம்

வெ. வேதாசலம் பாண்டிய நாட்டில் சமண சமயம் பற்றி களஆய்வு மேற்கொண்டு ‘பாண்டிய நாட்டில் சமண சமயம்’ என்னும் நூலை எழுதியுள்ளார். மதுரையைச் சுற்றியுள்ள சமணப் பள்ளிகளுக்கு நேரில் சென்று அங்கே சமணர்கள் வாழ்ந்த படுகைகள், சமணச் சிற்பங்கள், தமிழ் பிராமி கல்வெட்டுகளை ஆய்வு செய்து அவற்றை பற்றிய குறிப்புகளை எண்பெருங்குன்றம் என்னும் நூலாக்கியுள்ளார். தென்னிந்தியாவிலேயே சமணர்கள் பற்றிக் கிடைக்கும் பழைமையான கல்வெட்டுகள் மதுரை பகுதியில் வெ. வேதாசலத்தால் கண்டுபிடிக்கப்பட்டவை. வெ. வேதாசலம் சங்க கால மலைப்பள்ளிகள் முதல் சமகாலத்தில் எஞ்சியிருக்கும் சமணப்பள்ளிகள் வரை தொல்லியல், கல்வெட்டு, இலக்கிய ஆதாரங்களுடன் கள ஆய்வு செய்து தகவல்களைத் தொகுத்தார்.

பொது பணி

பயிற்சி வகுப்பு

  • இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணை களம் சார்பாக இலங்கையில் எட்டு ஆண்டுகளுக்கு மேலாக தொல்லியல் கல்வெட்டு பயிற்சி வகுப்புகள் நிகழ்த்தியுள்ளார்.

இதழியல் பணி

  • தமிழக தொல்லியல் துறை வெளியிடும் ’ஆவணம்’ என்னும் ஆண்டு இதழின் ஆசிரியராக ஆறு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

பாரம்பரிய நடைப்பயணம்

  • தியான அறக்கட்டளை சார்பாக கிராமங்களுக்குச் சென்று கல்வெட்டு, தொல்லியல் சார்ந்த பயிற்சி கூட்டங்களை கடந்த பதிமூன்று ஆண்டுகளாக நிகழ்த்தி வருகிறார். ராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை மாவட்டங்களில் 300-க்கும் மேற்பட்ட கூட்டங்கள் இதுவரை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

ஆய்வு இடம்

வெ. வேதாசலம் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளைத் தன் முதன்மை ஆய்வுக் களமாக கொண்டு மேற்கொண்ட சமணபள்ளிகள் பற்றி கள ஆய்வுகள் முதன்மையானவை. தென்னிந்தியாவில் சமணம் சார்ந்து கிடைக்கும் பழமையான கல்வெட்டுகள் வெ. வேதாசலத்தால் கண்டுபிடிக்கப்பட்டவை.[1] மதுரையில் தற்போது எஞ்சியுள்ள சமணக் குன்றுகளுக்கு நேரடியாக சென்று கல்வெட்டு ஆய்வுகள் மேற்கொண்டு அவற்றை ஆவணப்படுத்தி தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் அவற்றை கொண்டு வந்தவர்.

வெ. வேதாசலம் பாண்டியர் ஆட்சி கால மதுரை நாகரீகம் பற்றி முழுமையாக ஆய்வு மேற்கொண்டவர். பாண்டியர் ஆட்சியில் மதுரையின் சமூக நிலவியல், ஊர்களின் வரலாறு, சமுதாயம், பண்பாடு ஆகியவற்றை ஆய்வு செய்து தொகுத்தவர்.

விருதுகள்

  • தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருது ’பராக்கிரமபாண்டியபுரம்’, ‘
  • தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருது பாண்டிய நாட்டு ஊர்களின் வரலாறு’

நூல்கள்

  • பாண்டிய நாட்டு வரலாற்றுமுறை சமூக நிலவியல்
  • பாண்டியன் நின்றசீர் நெடுமாறன்
  • பாண்டிய நாட்டு ஊர்களின் வரலாறு
  • பாண்டிய நாட்டு சமுதாயமும், பண்பாடும்
  • பாண்டிய நாட்டில் சமண சமயம்
  • பாண்டிய மண்டலத்தில் வாணதிராயர்கள்
  • பராக்கிரம பாண்டியபுரம்
  • எண்பெருங்குன்றம்
  • கழுகுமலைச் சமணப்பள்ளி
  • இந்தியக் கலைவரலாற்றில் அறுவகைத் தெய்வ வழிபாடு
பதிப்பாசிரியர்
  • தொல்லியல் சுவடுகள், ச. டெக்லா, வெ. வேதாசலம், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்

வெளி இணைப்புகள்

காணொளிகள்

அடிக்குறிப்புகள்

  1. பொ.யு.மு. 2, 1 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள் மதுரை எண்பெருங்குன்றத்தில் கிடைத்துள்ளன. பார்க்க: எண்பெருங்குன்றம்


✅Finalised Page