under review

கீழடி

From Tamil Wiki
கீழடி தொல்லியல் அகழாய்வு செய்த இடம் (நன்றி: தி இந்து)

கீழடி தமிழ்நாட்டிலுள்ள ஓர் தொல்லியல் களம். சங்க கால நாகரிகத்தைப் பிரதிபலிக்கும் நகரக் குடியிருப்பும், தொழிற் பகுதியும் கொண்டது. கீழடி அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்களைக் கொண்டு இதன் காலம் பொ,.மு 6 -2-ம் நூற்றாண்டு எனக் கணிக்கப்படுகிறது. கீழடி மதுரையிலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் வைகை நதிக்கரையை ஒட்டி அமைந்துள்ளது.

அமைவிடம்

Keezhadi 1.jpg

கீழடி தற்போதைய சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் வட்டத்தில் அமைந்துள்ள ஊர். கீழடி வைகையாற்றங்கரையில் மதுரையிலிருந்து தென்கிழக்காக பதிமூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கீழடியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட பகுதி 110 ஏக்கர் பரப்பளவு கொண்டது.[1] 90 51' 40” வடக்கு அட்ச ரேகைக்கும், 780 11’70’’ கிழக்கு தீர்க்க ரேகைக்கும் இடையே அமைந்த தொடக்க வரலாற்றுக் கால நகர குடியிருப்பு மற்றும் தொழிற்கூடப் பகுதி.

கீழடியின் அகழ்வு பகுதியிலிருந்து வைகையாறு இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கீழடிக்கு கிழக்கு பகுதியில் மணலூர் கிராமமும் அதன் வடக்கில் கண்மாய் ஒன்றும் உள்ளது. தெற்கில் அகரம் என்னும் சிற்றூரும், மேற்கில் கொந்தகை என்ற ஊரும் உள்ளன.

அகழாய்வு மேற்கொண்ட ஆண்டு

கீழடியில் கிடைத்த முதுமக்கள் தாழி

கீழடியில் 2014-15, 2015-16, 2016-17 ஆகிய ஆண்டுகளில் மத்திய தொல்லியல் துறை அகழாய்வுப் பிரிவின் கீழுள்ள பெங்களூரு பிரிவு அகழாய்வு மேற்கொண்டது. கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வை பொ.யு. 2017-18 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மேற்கொண்டது. அதை தொடர்ந்து இறுதியாக பொ.யு. 2018-19 ஆண்டுகளில் ஐந்தாம் கட்ட முறையான தொல்லியல் அகழாய்வு நிகழ்ந்து நிறைவு பெற்றுள்ளது.

அகழாய்வு

முதல் கட்ட அகழாய்வு

சுடுமண்ணால் ஆன கிணறு

கீழடியில் முதல் கட்ட அகழாய்வு பொ.யு.2015 ஜூன் மாதம் ஆய்வாளர் கே. அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் தொடங்கப்பட்டது. இது மத்திய தொல்லியல் துறையின் கீழுள்ள பெங்களூர் தொல்லியல் துறையால் தொடங்கப்பட்டது.

இரண்டாம் கட்ட அகழாய்வு

இரண்டாம் கட்ட அகழாய்வு ஜனவரி 2, 2016 அன்று தொடங்கப்பட்டது. இதில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள், பானை ஓடுகள், அணிகலன்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் அகழ்ந்தெடுக்கப்பட்ட பொருட்களில் ரேடியோ கார்பன்டேட்டிங் (Radio Carbon Dating) முறையில் காலக் கணிப்பு மேற்கொள்ளப்பட்ட போது அவை 2200 ஆண்டுகள் பழமையானவை ((பொ.மு - 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை ) எனக் கண்டுபிடிக்கப்பட்டது.

மூன்றாம் கட்ட அகழாய்வு

2017-ம் ஆண்டு ரமணன் தலைமையில் தொடங்கப்பட்ட மூன்றாம் கட்ட அகழாய்வில் பதினாறு இடங்களைத் தேர்வு செய்து அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இது செப்டம்பர் 2017-ல் முடிவுக்கு வந்தது.

நான்காம் கட்ட அகழாய்வு[2]

செங்கல்லால் ஆன தண்ணீர் தொட்டி

நான்காம் கட்ட அகழாய்வு தமிழகத் தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டது. 2017-2018 ஆண்டுக்காலத்தில் முதல் பருவத்தில் அகழாய்வுப் பணியினை செய்ய 10*10 மீட்டர் அளவில் 15 குழிகள் நில அளவு வரையறை செய்யப்பட்டு இதில் 8 அகழாய்வுக் குழிகள் ஓரிடத்திலும் 7 அகழாய்வுக் குழிகள் மற்றொரு இடத்திலும் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு அகழாய்வு பகுதிகளுக்கு இடையிலும் ஒரு மீட்டர் அகலம் கொண்ட பாதை அமைக்கப்பட்டது. அதேபோல் ஒவ்வொரு அகழாய்வு பகுதியின் நடுவில் குறுக்காக அரை மீட்டர் அகலம் நடைபாதை விடப்பட்டு நான்கு பக்கங்களாக பிரிக்கப்பட்டது.

முதலாவது இட அமைவில் அமைக்கப்பட்ட அகழாய்வுப் பகுதிகள் X - அச்சின் A1, A2, A3, A4, A5, A6, A7 என்று எண்ணிடப்பட்டன. இரண்டாவது இட அமைவில் Y - அச்சின் கிழக்கே B1, ZB5, YP6, YP7, YP8, YP9, YP10 என எண்ணிடப்பட்டன. X - அச்சின் தென்மேற்குப் பகுதியின் இறுதியில் உள்ள அகழாய்வில் XA7 என எண்ணிடப்பட்டன.

இந்த அகழாய்வினை முனைவர் இரா. சிவானந்தம் தலைமையில் அகழாய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள் குழு தொடங்கியது. இதில் அகழ்ந்தெடுக்கப்பட்ட 5820 பொருட்களில் இருந்து ஆறு கரிமங்களை (கார்பன்) எடுத்து மியாமி நகரத்தில் அமைந்த பீட்டா பகுப்பாய்வு சோதனை ஆய்வகத்தில் காலக்கணிப்பு செய்யப்பட்டதில் இப்பொருட்களின் காலம் பொ.மு-6-ம் நூற்றாண்டிலிருந்து பொ.மு.1 -ம் நூற்றாண்டு வரை எனக் கண்டுபிடிக்கப்பட்டது.

ஐந்தாம் கட்ட அகழாய்வு

பானை ஓடுகளின் துண்டுகள்

ஜூன் 2019-ல் ஆர். சிவானந்தம் தலைமையில் இந்த ஆய்வு தொடங்கப்பட்டது. இந்த அகழாய்வில் மேலும் சில செங்கற் கட்டுமானங்களும், பிற பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பிற்கால அகழாய்வுகள்

ஆறு, ஏழு, எட்டாம் கட்ட அகழாய்வுகள் கீழடியை சுற்றியுள்ள ஊர்களான கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய ஊர்களில் பொ.யு. 2020 -ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. இதில் கொந்தகை பகுதி புதைமேடு[3] எனத் தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.

கண்டுபிடிப்புகள்

நான்காம் கட்ட அகழாய்வு
Keezhadi 7.jpg

கீழடியில் பொ.யு 2017-18 ஆண்டுக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நான்காம் கட்ட அகழாய்வில் 5820 தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. செங்கற் கட்டுமானம், சுடுமண் உறைக் கிணறுகள், மழை நீர் வடியும் வகையில் அமைந்த கூரை ஓடுகளும் கண்டறியப்பட்டுள்ளன.

தங்க அணிகலன் பகுதிகள், செம்பு பொருட்கள், இரும்புக் கருவி பாகங்கள், சுடுமண் சொக்கட்டான் காய்கள், வட்டச்சில்லுகள், சுடுமண் காதணிகள், மணிக்கற்கள்[4] ஆகியவை கிடைத்துள்ளன. அக்கால மட்பாண்ட ஓடுகள்[5], ரௌலட்டட் மட்பாண்டங்கள், அரட்டைன் ஓடுகள் வெளிக்கொணரப்பட்டன. மட்பாண்டங்கள் பலவற்றில் சுடுவதற்கு முன்பு பொறிக்கப்பட்ட கீறல்கள், குறியீடுகள், வடிவங்கள் காணகிடைக்கின்றன.

அகழாய்வில் ஐம்பதற்கும் மேற்பட்ட தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மட்கல துண்டுகள் கிடைத்துள்ளன.

கீழடியின் காலம்

கருப்பு-சிவப்பு பானை

கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து பொருள்களுக்கும் அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரத்தில் அமைந்த பீட்டா பகுப்பாய்வு சோதனை ஆய்வகத்தில் (Beta Analytic Testing Laboratory) ரேடியோ கார்பன்டேட்டிங் முறையில் கால கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. அதில் ஆறு கரிம மாதிரிகளின் காலம் பொ.மு. 6-ம் நூற்றாண்டிற்கும், பொ.யு.மு. 3-ம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலமாக கண்டுபிடிக்கப்பட்டது. இப்பொருட்கள் நிலத்திலிருந்து 353 செ.மீ. ஆழத்தில் கிடைக்கப்பெற்றவை. 200 செ.மீ. ஆழத்தில் கண்டெடுக்கப்பட்ட கரிமப் பொருட்களின் காலம் பொ.யு.மு. 3-ம் நூற்றாண்டிற்கு முன் பகுதி என ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.

இக்காலம் கணிக்கப்பட்ட அடுக்கிற்கு மேலும் கீழும் மண்ணடுக்குகள் காணப்படுவதால் கீழடி பண்பாட்டின் காலம் பொ.மு 6-ம் நூற்றாண்டிற்கும், பொ.மு. 1-2-ம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டது என ஆய்வாளர்களால் நிறுவப்பட்டுள்ளது.

கீழடியின் ஆய்வு முடிவுகளை கவனமாக ஆய்வு செய்த தொல்லியல் அறிஞர் பேராசிரியர் கா. ராஜன், “பழந்தமிழரின் தொன்மை தொடர்பாக இதுவரை நிலவி வந்த சில கேள்விகள் மற்றும் கருதுகோள்களுக்கு உறுதியான விடைகள்/சான்றுகள் தற்போது கிடைத்துள்ளன” என தன் ஆய்வறிக்கையில் குறிப்பிடுகிறார். பொதுவாக தமிழ்நாட்டில் தொடக்க வரலாற்று காலம் பொ.மு. 3-ம் நூற்றாண்டில் தான் தொடங்கியது என்றும், தமிழ்நாட்டில் இரண்டாவது நகரமயமாதல் நிகழவில்லை என்றும் நிலவி வந்த கருத்துகள் கீழடி ஆய்வு முடிவுகள் மூலம் மறுபரீசிலனை செய்யப்படுகின்றன.

தமிழ் பிராமி கல்வெட்டு

அழகன்குளம், கொடுமணல், பொருந்தல் அகழாய்வுகளின் காலக்கணிப்புப் படி தமிழ்-பிராமி எழுத்து வடிவத்தின் காலம் பொ.மு 5-ம் நூற்றாண்டு என கருதப்பட்டது. கீழடி அகழாய்வுக்கு பின் தமிழ் பிராமி எழுத்து மேலும் நூற்றாண்டுகள் பழமையானது (பொ.மு 6-ம் நூற்றாண்டு) என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வேளாண் சமூகம்

Keezhadi 11.jpg

கீழடி அகழாய்வில் 70 எலும்புத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றின் தன்மைக்கேற்ப வகைப்படுத்தபட்டதில் திமிலுள்ள காளை, எருமை, வெள்ளாடு, கலைமான், காட்டுப்பன்றி, மயில் ஆகிய விலங்குகளின் எலும்புகள் எனக் கண்டறியப்பட்டன. இதில் காளை, பசு, எருமை, வெள்ளாடு ஆகிய விலங்குகள் 53 சதவீதமும், கலைமான் 6.66 சதவீதமும், காட்டுப்பன்றியின் எலும்பு 1.33 சதவீதமும் உள்ளதால் அவை வளர்ப்பு பிராணிகளாக இருந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மேலும் மாதிரிகளில் காணப்படும் வெட்டுத் தழும்புகளால் இவற்றை மனிதர்கள் உணவிற்காகவும் பயன்படுத்தியுள்ளனர் என அறிய முடிகிறது. இதனால் சங்க கால நாகரிகம் வேளாண் தொழிலுடன், கால்நடை வளர்ப்பையும் மேற்கொண்டிருந்தது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

கட்டுமானப் பொருட்கள்

Keezhadi 12.jpg

கீழடி அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட செங்கற்கள், சுண்ணாம்புச் சாந்து, கூரை ஓடுகள், சுடுமண்ணாலான உறைகிணற்றின் பூச்சு ஆகியவற்றின் மாதிரிகள் வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் பகுப்பாய்வு செய்யப்பட்டன. அதன் முடிவில் இவற்றில் சிலிக்கா மண், சுண்ணாம்பு, இரும்பு, அலுமினியம், மெக்னீசியம் போன்ற பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றின் கலவை, தன்மை குறித்த விவரங்களும் ஆய்வு முடிவில் கிடைத்துள்ளன. செங்கல், கூரை ஓடுகளில் 80 சதவீதம் சிலிக்காவும், 7 சதவீதம் சுண்ணாம்பும் கலக்கப்பட்டுள்ளது. சுண்ணாம்பு சாந்து 97 சதவீதம் சுண்ணாம்பைக் கொண்டுள்ளது.

கட்டடத் தொழில்நுட்பம்

Keezhadi 14.jpg.jpg

கீழடியில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாம் கட்ட அகழாய்வில் சிறிய அளவிலான செங்கல் கட்டுமானங்கள் கிடைத்துள்ளன. 13 மீட்டர் நீளமுள்ள மூன்று வரிசை சுவர் ஒன்று கிடைத்துள்ளது. இதில் 38*23*6 அளவு கொண்ட இரண்டு வித செங்கல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை தமிழகத்தில் சங்க காலத்தை சேர்ந்த பிற தொல்லியல் இடங்களில் காணப்படும் செங்கற்களைப் போல் 1:4:6 என்ற விகித அளவிலேயே காணப்படுகின்றன. சில பகுதிகளில் தரைத்தளமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சன்னமான களிமண்ணைக் கொண்டு தரைத்தளமும், செங்கற்களைக் கொண்டு பக்கச்சுவர்களும் அமைக்கப்பெற்றிருக்கின்றன.

தூண்கள் மரத்தால் செய்யப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் ஊகிக்கின்றனர். அதற்கான சான்றுகள் அகழாய்வில் கிடைக்கவில்லை. ஆனால் இரும்பு ஆணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அகழாய்வின் ஒரு பகுதியில் ஏராளமான கூரை ஓடுகள் சரிந்து விழுந்த நிலையில் கிடைத்துள்ளன. கூரை ஓடுகளின் தலைப்பகுதியில் இரண்டு துளைகள் காணப்படுகின்றன. மரச்சட்டங்களைக் கொண்டு அமைக்கப்பட்ட மேற்கூரையில் கீழிலிருந்து மேலாக சுடுமண்ணாலான கூரை ஓடுகள் வேயப்பட்டிருக்கின்றன, அவை கீழே விழாமல் இருக்க துளைகளில் நார்/கயிறு கொண்டு கட்டப்பட்டிருக்க வாய்ப்புள்ளது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மழை நாட்களில் மேற்கூரை மேல் விழும் நீர் எளிதில் கீழே வரும் வகையில் ஓடுகளில் விரல்களால் அழுத்தி உருவாக்கப்பட்ட நீர் வடியும் பள்ளங்கள் காணப்படுகின்றன. இதே போல் கூரை ஓடுகள் அரிக்கமேடு, பூம்புகார் பகுதி அகழாய்விலும் கிடைத்தன.

எழுத்துரு

கீறல்கள்/குறியீடுகள்

கீறல்/குறியீடு எழுத்துரு கொண்ட பானை ஓடு

சந்துவெளி வரிவடிவங்கள் இந்தியாவில் கிடைக்கப்பெற்ற காலத்தால் பழமையான வரிவடிவங்கள். அவை 4,500 ஆண்டுகள் பழமையானவை என ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். சிந்துவெளிப் பண்பாடு மறைந்த பின்னர், தமிழ் பிராமி எழுத்துகள் தோன்றுவதற்கு முன் ஒரு வரிவடிவம் இருந்துள்ளது என்றும் அவை குறியீடுகள் அல்லது கீறல்கள் என்றும் ஆய்வாளர்கள் அழைக்கின்றனர். இவை கருப்பு-சிவப்பு பானை ஓடுகளில் எழுதப்பட்டுள்ளன. கீழடியில் 1001 கீறல்கள் பொறித்த பானை ஓடுகள் கிடைத்துள்ளன. சிந்துவெளி எழுத்துக்கள் போல் இவற்றை படித்தறியும் பணி முழுமை பெறவில்லை.

தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், கொற்கை, அழகன்குளம், கொடுமணல், கரூர், தேரிருவேலி, உறையூர், மாங்குளம், பேரூர் போன்ற தொடக்க வரலாற்று கால தொல்லியல் இடங்களில் இத்தகைய பானை ஓடுகள் கிடைத்துள்ளன. செம்புக்கால பண்பாட்டிலும், பெருங்கற்கால பண்பாட்டிலும் இக்குறியீடுகள் கிடைக்கின்றன. இரும்புக் காலத்தில் பெருங்கற்கால ஈமச்சின்னங்களிலும் அதோடு தொடர்புடைய குடியிருப்புப் பகுதிகளிலும் காணப்படுகின்றன.

தமிழகம் அல்லாது இலங்கையில் திசமஹரம, கந்தரோடை, மாந்தை, ரிதியகாமா போன்ற ஊர்களில் இக்குறியீடுகள் கிடைத்துள்ளன. இந்தியா முழுவதும் இத்தகைய குறியீடுகள் கிடைக்கின்றன. தென்னிந்தியாவில் கிடைத்து குறியீடுகளில் 75 சதவீதம் தமிழகத்திலிருந்து கிடைத்தவை.

தமிழ்-பிராமி

Keezhadi 15.jpg.jpg

தமிழகத்தில் குறியீடுகளுக்கு அடுத்து கிடைக்கின்ற வரிவடிவம் தமிழ்-பிராமி எழுத்து. இதனை தமிழி அல்லது பண்டைத் தமிழ் எழுத்து என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். தமிழகத்தில் தொடக்க வரலாற்று காலத்து தமிழி பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், மோதிரங்கள் கிடைத்துள்ளன. மேலும் 32 இடங்களில் சங்க காலத்தைச் சேர்ந்த தமிழ் பிராமி குகைக் கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. இவை அனைத்தும் ஆய்வாளர் ஐராவதம் மகாதேவனால் படித்து நூலாக்கப்பட்டுள்ளன[6].

கீழடியில் தமிழக தொல்லியல் துறை மேற்கொண்ட ஆய்வில் மட்டும் 56 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் குவிரன் ஆத(ன்), ஆதன்[7] போன்ற பெயர்களும், முழுமை பெறாத எழுத்துக்கள் கொண்ட பானை ஓடுகளும் கிடைத்துள்ளன.

தொழில்கள்

கைவினைத் தொழில்கள்

பகடைக்காயின் ஆறு பக்கங்கள்

கீழடி அகழாய்வில் கிடைத்த 17 பானை ஓடுகளில் உள்ள தனிமங்களைக் கண்டறிய இத்தாலியிலுள்ள பைசா பல்கலைக்கழகத்தின் புவிஅறிவியல் துறைக்கு அனுப்பப்பட்டது. அவ்வாய்வின் முடிவில் கீழடியில் கிடைக்கப்பெற்ற சமையல்/தண்ணீர் சேமிப்பு பானைகள் தனித்த பானை வனைவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளூரிலேயே செய்யப்பட்டவை என உள்ளூர் மண் மாதிரியை ஒப்பீட்டாய்வு செய்து உறுதிப்படுத்தியுள்ளனர்.

கீழடியில் கிடைத்த கருப்பு-சிவப்பு நிறப் பானை ஓடுகளின் (Black and Red ware) மாதிரிகள் நிறமாலையியல் பகுப்பாய்வு (Spectroscopic Analysis) சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் சிவப்பு நிறத்திற்கு இரும்பின் தாதுப் பொருளான ஹேமடைட்டும், கருப்பு நிறத்திற்கு கரிமப் பொருளான கரியையும் பயன்படுத்தியுள்ளனர். என அறிய முடிகிறது. இந்த கருப்பு-சிவப்பு நிற பானைகள் 1100o C வெப்பநிலையில் சுட்டு உருவாக்கப்பட்டன.

கீழடியில் கிடைத்த மட்பாண்டங்கள், தொழில்நுட்பம், தனிமங்களின் கலவை, களிமண்ணின் தன்மை எல்லாம் பொ.மு. - 6-ம் நூற்றாண்டிலிருந்து பொ.மு. 2-ம் நூற்றாண்டு வரை ஒரே மாதிரியாக இருந்துள்ளது.

நெசவுத் தொழில்

Keezhadi 17.jpg.jpg

கீழடி அகழாய்வில் நூல்களை நூற்கப் பயன்படும் 180-க்கும் மேற்பட்ட தக்களிகள், 20 துணிகளில் உருவ வடிவமைப்புகளை வரைவதற்கு பயன்படும் எலும்பினாலான கூரிய முனை தூரிகை, தறியில் தொங்கவிடும் கருங்கல்/சுடுமண்ணால் செய்யப்பட்ட குண்டு செம்பினாலான ஊசி, சுடுமண்பாத்திரம் போன்ற பொருட்கள் மூலம் செவுத் தொழிலின் நூல்நூற்றல், பாவு அமைத்தல், தறியிலமைத்தல், நெசவிற்கு பின் சாயமிடல் ஆகிய நிலைகள் இருந்துள்ளதை உறுதி செய்கின்றன.

வணிகம்

Keezhadi 13.jpg

கீழடி அகழாய்வுப் பகுதியில் வடமேற்கு இந்தியாவின் மகாராஷ்டிரா, குஜராத் பகுதிகளில் காணப்படும் அகேட் (agate), சூதுபவளம் (கார்னீலியன்) போன்ற மணிகள் கிடைத்துள்ளன.

கீழடியில் ரௌலட்டட் பானை ஓடுகளும், அரிட்டைன் பானை ஓடு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ரௌலட்டட் பானை ஓடுகள் ரோம நாட்டுப் பானைகள் எனக் கருதப்பட்டு வந்தன. ஆனால் அவை ரோம தொழில்நுட்பத்தில் உள்ளூரில் தயாரிக்கப்பட்டவை என சமீபத்திய ஆய்வுகள் உறுதிபடுத்துகின்றன அழகன்குளம் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட ரௌலட்டட் பானைகள் ரோம நாட்டில் தயாரிக்கப்பட்டவை. அரிட்டைன் பானை ஓடுகள் பொ.மு. 2 -ம் நூற்றாண்டில் ரோமில் புழக்கத்தில் இருந்தவை. எனவே ரோம நாட்டு வணிகர்கள் கீழடியில் வணிகம் செய்திருக்கலாம் அல்லது அழகன்குளத்தில் வாழ்ந்த ரோம வணிகர்கள் கீழடிக்கு வந்திருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அணிகலன்கள்

கீழடியில் தங்கத்தாலான ஏழு ஆபரணத் துண்டுகள், செம்பு அணிகலன்கள், மதிப்புமிக்க மணிகள், 4000க்கும் மேற்பட்ட கல்மணிகள், கண்ணாடி மணிகள், சுடு மண்ணாலான மணிகள், சங்கு வளையல்கள், தந்த வளையல் துண்டுகள், சீப்பு ஆகியன கிடைத்துள்ளன.

சுடுமண் உருவங்கள்

சுடுமண் உருவங்கள்

கீழடி அகழாய்வில் சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், 600-க்கும் மேற்பட்ட விளையாட்டுப் பொருட்கள், 28 காதணிகள் கிடைத்துள்ளன. தங்கம், செம்பு உலோகங்களால் ஆன அணிகலன்களும் கிடைத்துள்ளன. வழிபாடு தொடர்பான தொல்பொருட்கள் எவையும் கிடைக்கவில்லை.

விளையாட்டு/பொழுது போக்குகள்

விளையாட்டுப் பொருட்கள்

கீழடி அகழாய்வில் 601 வட்டச்சில்லுகள் கிடைத்துள்ளன[8]. தாய விளையாட்டிற்கான பகடைக்காய்களும், சிறுவர்கள் வண்டி இழுத்து விளையாடும் வண்டிச் சக்கரங்களும் கிடைத்துள்ளன. மேலும் பெரியவர்கள் விளையாடும் விளையாட்டிற்குப் பயன்படும் 80 ஆட்டக்காய்கள் கிடைத்துள்ளன.

அகழாய்வு முடிவுகள்

  • Keezhadi 18.jpg.jpg
    ’சங்க காலம்’ பொ.மு-3-ம் நூற்றாண்டு முதல் பொ.யு. 3 -ம் நூற்றாண்டு வரை என்று கருதப்பட்டு வந்தது. கீழடியில் கிடைத்த காலக்கணிப்புகள் தமிழகத்தின் எழுத்து வடிவங்களை பொ.மு 6 -ம் நூற்றாண்டிற்கு எடுத்துச் செல்வதால் சங்ககாலத்தின் காலவரையறை மீளாய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
  • கொடுமணல், பொருந்தல் ஆகிய இடத்தில் கிடைத்த தமிழ்-பிராமி எழுத்து கொண்ட பானை ஓடுகள் பொ.மு. 5 -ம் நூற்றாண்டை சேர்ந்தவை. கீழடியில் கிடைத்த தமிழ்-பிராமி எழுத்து பானை ஓடுகள் பொ.மு. 6 -ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்திய பின் தமிழகத்தின் தொடக்க வரலாற்று காலம் பொ.மு. 6 -ம் நூற்றாண்டிலிருந்து தொடங்குவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
  • மேற்கூறியவற்றிலிருந்து இந்தியாவில் கங்கைச் சமவெளி பகுதியில் பொ.மு. 6 -ம் நூற்றாண்டளவில் தொடங்கிய இரண்டாம் நகரமயமாக்கம் தமிழகத்தில் காணப்படவில்லை என்ற கருத்து கீழடி அகழாய்வின் மூலம் மறுக்கப்பட்டிருக்கிறது.
  • வரலாற்று தொடக்க காலத்தில் வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, கைவினைத் தொழில், நெசவுத் தொழில் போன்றவை வளர்ந்த நாகரீகம் தோன்றியது என்பதற்கு கீழடி அகழாய்விலிருந்து சான்றுகள் கிடைத்துள்ளன.
  • பானை ஓடுகளில் கிடைத்த கீறல்கள்/குறியீடுகள், தமிழி எழுத்துரு மூலம் சாதாரண மக்களும் கல்வி அறிவு பெற்றிருந்தனர் என அறிய முடிகிறது.
  • மேலும் கீழடியில் கிடைத்த அணிகலன்கள், வணிக பொருட்கள் கொண்டு கீழடி இந்தியாவின் பிறபகுதிகளுடனும், வெளிநாடுகளுடனும் வணிகத் தொடர்பிலிருந்ததையும் அறிய முடிகிறது.
  • இச்சான்றுகள் மூலம் தமிழகத்தில் நிலவிய சங்ககாலப் பண்பாட்டு வரலாற்றாய்வில் கீழடி அகழாய்வு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

உசாத்துணை

  • கீழடி - வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம், தொல்லியல் துறை, தமிழ்நாடு அரசு - 2020
  • Keezhadi, telibrary.com
  • Keezhadi – Unearthing a civilisation, Pragyata (புகைப்படங்களுக்கு நன்றி)

வெளி இணைப்புகள்

அடிக்குறிப்புகள்

  1. அவை சிதைவில்லாமல் தென்னந்தோப்புகளால் பாதுகாக்கப்பட்டிருந்தது.
  2. தமிழக தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்ட முதல் ஆய்வு (பொ.யு. 2017-2018)
  3. இறந்தவர்களை புதைக்கும் இடம்
  4. கண்ணாடி, அகேட், சூதுபவளம், ஸ்படிகம் போன்ற விலை உயர்ந்த பொருட்களால் ஆனது
  5. கருப்பு சிவப்பு, கருப்பு, சிவப்பு பூச்சு மட்கலப் பகுதிகள்
  6. Corpus of Tamil-Brahmi inscriptions (1966), ஐராவதம் மகாதேவன்
  7. இதில் ஆதன் என்ற பெயர் ‘அதன்’ என பொறிக்கப்பட்டுள்ளது. தமிழ் பிராமி எழுத்தில் உயிர்குறில் எழுத்தை உயிர்நெடில் எழுத்திலிருந்து பிரித்துக் காட்ட ஒலிக்குறியீடு இடும் வழக்கம் இல்லை என்பதை கா. ராஜன் தனது ‘Early Historic Writing System: A Journey from Graffiti to Brahmi’ என்ற நூலில் தெளிவுபடுத்தியுள்ளார்.
  8. இவ்விளையாட்டு(‘பாண்டி’) தற்போது மதுரை மற்றும் பிறபகுதிகளில் விளையாடப்பட்டு வருகிறது.


✅Finalised Page