கே.வி.ஷைலஜா: Difference between revisions
(Added links to Disambiguation page) |
(Corrected Category:எழுத்தாளர்கள் to Category:எழுத்தாளர்Corrected Category:மொழிபெயர்ப்பாளர்கள் to Category:மொழிபெயர்ப்பாளர்) |
||
(One intermediate revision by the same user not shown) | |||
Line 1: | Line 1: | ||
{{OtherUses-ta|ஷைலஜா|[[ஷைலஜா (பெயர் பட்டியல்)]]}} | {{OtherUses-ta|TitleSection=ஷைலஜா|DisambPageTitle=[[ஷைலஜா (பெயர் பட்டியல்)]]}} | ||
{{Read English|Name of target article=K.V. Shailaja|Title of target article=K.V. Shailaja}} | {{Read English|Name of target article=K.V. Shailaja|Title of target article=K.V. Shailaja}} | ||
[[File:Shailaja.jpg|thumb|jeyamohan.in]] | [[File:Shailaja.jpg|thumb|jeyamohan.in]] | ||
Line 90: | Line 90: | ||
[[Category: | [[Category:எழுத்தாளர்]] | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category: | [[Category:மொழிபெயர்ப்பாளர்]] |
Latest revision as of 12:17, 17 November 2024
- ஷைலஜா என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ஷைலஜா (பெயர் பட்டியல்)
To read the article in English: K.V. Shailaja.
கே.வி.ஷைலஜா (1969) மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர். சிறந்த மலையாளப் படைப்புகளைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்தவர். சிதம்பர நினைவுகள்,சுமித்ரா போன்ற புகழ்பெற்ற மொழியாக்கங்களைச் செய்தவர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் தொடர்பு கொண்டவர். கணவர் பவா செல்லதுரையுடன் இணைந்து வம்சி பதிப்பகம் நடத்தி வருகிறார்.
பிறப்பு, கல்வி
கே.வி.ஷைலஜா திருவண்ணாமலையில் நவம்பர் 7, 1969 அன்று கே.ஏ.வாசுதேவன்-பி.எம்.மாதவி இணையருக்கு பிறந்தார். கேரளாவில் உள்ள பாலக்காட்டை பூர்வீகமாகக் கொண்ட குடும்பம், ஷைலஜா பிறப்பதற்கு முன்பே தந்தையின் தொழில் நிமித்தமாகத் திருவண்ணாமலைக்கு குடிபெயர்ந்தது. ஐந்து மாதக் குழந்தையாக இருக்கும் போதே தந்தையை இழந்து தாய்மாமாவின் அரவணைப்பில் வளர்ந்தார். இரு மூத்த சகோதரிகள் - கே.வி.ஜெயஶ்ரீ, சுஜாதா. கே.வி.ஜெயஶ்ரீ சாகித்ய அகாடமி பரிசு பெற்ற எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்.
திருவண்ணாமலை கன்னிகா பரமேஸ்வரி பள்ளியில் தொடக்கக் கல்வியும் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் உயர்நிலைகல்வியும் கற்றார். திருவண்ணாமலை அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரியில் இளம் வணிகவியல் பட்டமும் , அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், ஆய்வியல் நிறைஞர் (எம்.ஃபில்) பட்டமும் பெற்றார். தன் அம்மாவின் தீவிர வாசிப்பும், சித்தி வீட்டு நூலகமும் தன்னை வாசிப்பின் பக்கம் நகர்த்தியதாகக் குறிப்பிடுகிறார்.
தனி வாழ்க்கை
முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநாட்டில் கிடைத்த எழுத்தாளர் பவா செல்லதுரையின் அறிமுகம் காதலாக மலர்ந்தது. 1994-ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். மகன் வம்சி , மகள் மானசி. இருவரும் குறும்படங்கள் இயக்குவதில் ஆர்வம் கொண்டவர்கள்.மானசி எட்டாம் வகுப்பு படிக்கும்போதே இரா.நடராஜனின் ஆயிஷாவை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
கல்விப் பணிகள்
- மகரிஷி வித்யா மந்திர், திருவண்ணாமலை (ஆசிரியை)
- ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருவண்ணாமலை (முதல்வர்)
- அருணைப் பொறியியல் கல்லூரி, திருவண்ணாமலை (விரிவுரையாளர்)
- டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளி, திருவண்ணாமலை (ஆசிரியர்)
- கம்பன் மகளிர் கலை அறிவியல் கல்லூரி, திருவண்ணாமலை(விரிவுரையாளர்)
இலக்கிய வாழ்க்கை
படைப்புச்செயல்பாடுகள்
கே.வி.ஷைலஜா முத்தியம்மா என்ற கட்டுரைத் தொகுப்பில் குழந்தைப் பருவ நினைவுகளில் தொடங்கி தனது வாழ்க்கை அனுபவங்களை, எழுத்தாளர்கள், கலைஞர்களுடனான சந்திப்புகளை எழுதியிருக்கிறார். கே.வி.ஷைலஜாவின் உருவமற்ற என் முதல் ஆண் என்ற தலைப்பிட்ட கட்டுரைத் தொகுப்பு, வாழ்வின் துக்கங்களையும், துன்பங்களையும் சொல்கையில், கூடவே வாழத்தகு நம்பிக்கையூட்டும் மனிதமும், சுவையும் நிரம்பியது அது என்கிறது. சஹிதா – நிபந்தனையற்ற அன்பின் குரல் என்ற நாவலை 2021-ல் எழுதினார். இந்நாவல் தான் இளவயதில் கண்டு வளர்ந்த இஸ்லாமியக் குடும்பத்தின் பின்னணியில் எழுதப்பட்டது.[1]
மொழிபெயர்ப்புப் பணி
- ஆரண்யம் இலக்கியச் சிற்றிதழில் கேரளத்தின் புகழ் பெற்ற கவிஞர் பாலசந்திரன் சுள்ளிக்காட்டின் நேர்காணலைப் படித்து, அவரைச் சந்திக்கும் ஆர்வம் ஏற்பட்டது. எழுத்தாளர் திலகவதி மூலம் தங்கள் 'முற்றம்' இலக்கிய நிகழ்ச்சியில் பேச பவா செல்லதுரையும், ஷைலஜாவும் அவரை அழைத்தனர். அவர் பரிசாகத் தந்த 'சிதம்பர ஸ்மரண' நூலைப் படிப்பதற்காக சகோதரி மகள் சுகானாவிடம் மலையாளம் படிக்கக் கற்றுக் கொண்டார். நூலைப் படித்து முடித்த பின் ஒரு வருடம் உழைத்து 'சிதம்பர நினைவுகள்' என்ற பெயரில் கே.வி.ஷைலஜா தமிழில் மொழி பெயர்த்தார்.
- நடிகர் மம்மூட்டியின் காழ்ச்சப்பாடு என்னும் நூலை மூன்றாம் பிறை என்ற பெயரில் தமிழில் மொழியாக்கம் செய்து வம்சி பதிப்பகம் மூலம் வெளியிட்டுள்ளார்.
- கேரளத்தின் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியும், இலக்கியவாதியுமான என்.எஸ்.மாதவனின் பத்து சிறுகதைகளை தமிழில் மொழிபெயர்த்து 'சர்மிஷ்டா' என்ற பெயரில் வெளியிட்டுள்ளார்.
- மலையாள எழுத்தாளர் கே.ஆர். மீராவின் கதைகளை சூர்ப்பனகை என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.
- கல்பற்றா நாராயணனின் முதல் நாவல் 'இத்ர மாத்ரம்' கே.வி.ஷைலஜாவால் சுமித்ரா' என்ற பெயரில் மொழியாக்கம் செய்யப்பட்டது.
- மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன், ஆணின் மரணத்தை முன் வைத்து எழுதிய 'இறுதி யாத்திரை'யும்,பெண்ணின் மரணத்தை முன் வைத்து கல்பற்றா நாராயணன் எழுதிய 'சுமித்ரா' வும் கே.வி.ஷைலஜா அடுத்தடுத்து மொழிபெயர்த்த நாவல்கள்.
- சிஹாபுத்தீன் பொய்த்தும்கடவு என்ற கேரள எழுத்தாளரின் ''ஆர்க்கும் வேண்டாத கண்ணுஎன்ற சிறுகதைத் தொகுப்பை 'யாருக்கும் வேண்டாத க'ண்' என்ற பெயரில் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்.
- கே.வி.ஷைலஜா வின் 'பச்சை இருளனின் சகா பொந்தன் மாடன்' ஏழு மலையாளக் கதைகளும், ஏழு தமிழ்க் கதைகளும் கொண்ட தொகுப்பு. பச்சை இருளன், பொந்தன் மாடன் இருவரும் முறையே பவா செல்லதுரை மற்றும் மலையாள எழுத்தாளர் பி.ஸி.ஶ்ரீராமனின் கதைகளில் வரும் பாத்திரங்கள்.
- கேரளத்தில் மருத்துவ சேவையாற்றி வரும் Shanthi Medical Informations நிறுவனர் உமா ப்ரேமனின்[2] [3]வாழ்வை மையமாக்கி சாபு கிளித்தட்டில் எழுதிய 'நிலாச்சோறு' என்ற நூலை கதை கேட்கும் சுவர்கள் என்ற பெயரில் கே.வி.ஷைலஜா மொழியாக்கம் செய்துள்ளார்.
- மலையாள சினிமாவில் பின்னணிக் குரல் கலைஞரான பாக்யலக்ஷ்மியின் தன் வரலாற்று நூலை 'ஸ்வரபேதங்கள்' என்ற பெயரில் கே.வி.ஷைலஜா தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்.
பதிப்புப் பணி
எழுத்தாளர் திலகவதி, சி.மோகன் ஆகியோரின் தூண்டுதலால் பவா செல்லதுரையுடன் இணைந்து 2001-ல் திருவண்னாமலையில் 'வம்சி' பதிப்பகத்தைத் தொடங்கினார். மொழிபெயர்ப்புகள், உள்நாட்டு இலக்கியங்கள், மனித மேன்மைக்கான எழுத்துக்கள், காலம் கடந்து நிற்கும் இலக்கியங்கள் என நானூற்றிற்கும் அதிகமான புத்தகங்களை பதிப்பித்திருக்கிறார். இதற்காக தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை விருதினை ஐந்து முறை பெற்றிருக்கிறார். 'பூவுலகின் நண்பர்கள்' என்ற அமைப்பினருடன் சேர்ந்து எட்டு புத்தகங்களையும் பதிப்பித்திருக்கிறார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தில் உறுப்பினராகப் பல நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வருகிறார்.
அமைப்புப்பணிகள்
தமிழ் இலக்கியத்தைக் கேரள மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் நோக்கத்தில் கேரள சாகித்ய அகாடமி மூலம் தமிழ், மலையாள எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து, தமிழ்ப் படைப்புகளை மலையாளத்தில் மொழியாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பவா செல்லதுரையுடன் இணைந்து 'முற்றம்', 'வம்சி கூடல்', 'நிலம்' ,'கலை இரவு' போன்ற இலக்கிய நிகழ்வுகளையும் நடத்தி வருகிறார்.
விருதுகள்
- எம்.டி.வாசுதேவன் நாயரின் இறுதி யாத்திரை மொழிபெயர்ப்பிற்காக 'கலை இலக்கியப் பெருமன்ற' விருதைப் பெற்றார்.
- சிஹாபுத்தீன் பொய்த்தும்கடவு எழுதிய யாருக்கும் வேண்டாத கண் நூலின் மொழியாக்கம் 2014-ல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான கனடா இலக்கியத் தோட்ட விருதை அவருக்குப் பெற்றுத் தந்தது.
- பாக்யலக்ஷ்மியின் ஸ்வரபேதங்கள் நூலின் மொழியாக்கத்திற்காக சக்தி விருது பெற்றார்
- ஷைலஜா ஐந்து முறை தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி துறையின் சிறந்த பதிப்பாளருக்கான விருது பெற்றிருக்கிறார்
இலக்கிய இடம்
மலையாள இலக்கியத்தை தமிழர்களுக்கு அறிமுகம் செய்ததில் ஷைலஜாவின் பங்கு குறிப்பிடத்தக்கது. "ஒவ்வொரு மொழிபெயர்ப்பும் என்னுள் ஆழமாய் இறங்கித்தான் மேலேறுகிறது" என்று குறிப்பிடும் ஷைலஜா சிதம்பர நினைவுகள் மொழியாக்கத்திலேயே அவருக்கான அடையாளத்தை அடைந்தார். நூலை உள்வாங்கித் தமிழில் நேரடியாக எழுதப்பட்டது போன்ற நேர்த்தியான மொழியாக்கம் தமிழில் இந்நூல் தமிழில் பரவலாக வாசிக்கப்படுவதற்குக் காரணமாகியது.
"ஷைலஜாவின் மொழிபெயர்ப்பு, அனுபவங்களின் அடிநாதமான உணர்வுகளை சேதாரமில்லாமல் அதே ஆழ்மன வலியுடனும், கனத்துடனும் வாசகனுக்குக் கடத்துகிறது" என்று ஜெ.பாஸ்கரன் குறிப்பிடுகிறார்.
"ஷைலஜாவின் மொழிபெயர்ப்பு மிகச் சரளமாக, மூலத்தின் கவித்துவத்திற்கு நிகராக, அதே சமயம் மலையாள எழுத்திற்கேயுரிய தனிச்சொற்கள், பிரயோகங்களுடன் வந்துள்ளது. தேர்ந்த வாசிப்பும், இலக்கிய ரசனையும் கொண்டவர் ஷைலஜா" என்று அவரைப் பற்றிக் குறிப்பிடுகிறார் எஸ். ராமகிருஷ்ணன்
"கல்பற்றா நாராயணன் தமிழராக இருந்து இந்த நாவலை எழுதி இருந்தால் எத்தகைய மொழியாளுமையைப் பயன்படுத்தி இருப்பார் என உத்தேசிப்போமோ, மொழி பெயர்ப்பாளராக அதை சாத்தியப்படுத்தும் மாயத்தை , வெற்றிகரமாக செய்திருக்கிறார் , கே .வி .ஷைலஜா . தமிழறிந்த எவரும் தவற விடக் கூடாத அனுபவம்" என்று கடலூர் சீனு சுமித்ரா பற்றிக் குறிப்பிடுகிறார்[4]
நூல்கள்
- உருவமற்ற என் முதல் ஆண்
- முத்தியம்மா
- சஹிதா – நிபந்தனையற்ற அன்பின் குரல்
மொழிபெயர்ப்பு நூல்கள் (மலையாளத்திலிருந்து தமிழில்)
கட்டுரைகள்
- சிதம்பர நினைவுகள்- பாலசந்திரன் சுள்ளிக்காடு.
- மூன்றாம் பிறை - மம்முட்டி( வாழ்வனுபவங்கள்).
சிறுகதைகள்
- சர்மிஷ்டா-என்.எஸ்.மாதவன்.
- சூர்ப்பனகை-கெ.ஆர்.மீரா.
- யாருக்கும் வேண்டாத கண்- சிஹாபுதின் பொய்த்தும்கடவு.
நாவல்கள்
- சுமித்ரா-கல்பற்றா நாராயணன்.
- இறுதியாத்திரை-எம்.டி.வாசாதேவநாயர்.
- ஸ்வரபேதங்கள்-பாக்யலஷ்மி.
- கதை கேட்கும் சுவர்கள்-ஷாபு கிளித்தட்டில்.
தொகுப்பு நூல்கள்
- பச்சை இருளனின் சகா பொந்தன் மாடன் (தமிழ்-மலையாளச் சிறுகதைகளின் தொகுப்பு)
- தென்னிந்திய சிறுகதைகள்- (தமிழ்-மலையாள-கன்னட-தெலுங்கு சிறுகதைகளின் தொகுப்பு)
உசாத்துணை
- கே.வி.ஷைலஜா 'வனம்' இதழ் நேர்காணல்
- வாசகசாலை-கே.வி.ஷைலஜாவின் முத்தியம்மா
- சிஹாபுதினின் கதைகள்-எஸ்.ராமகிருஷ்ணன்
- எம்.டி.வி யின் இறுதி யாத்திரை பற்றி -அபிலாஷ் சந்திரன்
- தென்றல்-கே.வி.ஷைலஜா
- 'கனலி' எம்.முகுந்தனின் அக முகங்கள் தமிழாக்கம் ஷைலஜா
- பவா செல்லதுரையின் பெருங்கதையாடல் 'சுமித்ரா'-காணொளி
அடிக்குறிப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:32:52 IST