நாகம்மாள்: Difference between revisions
(Added First published date) |
(Corrected Category:நாவல்கள் to Category:நாவல்) |
||
Line 33: | Line 33: | ||
[[Category: | [[Category:நாவல்]] | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Latest revision as of 13:55, 17 November 2024
நாகம்மாள் தமிழ் எழுத்தாளரான ஆர். சண்முகசுந்தரம் (ஆர்.ஷண்முகசுந்தரம்) எழுதிய சிறிய நாவல். தமிழ் யதார்த்தவாத அழகியலின் முன்னோடி ஆக்கமாகவும், இயல்புவாத அழகியல் கொண்ட படைப்பாகவும் இது மதிப்பிடப்படுகிறது. க.நா.சுப்ரமணியம், சுந்தர ராமசாமி ஆகியோர் இந்நாவலை தமிழின் ஒரு சாதனைப் படைப்பு என மதிப்பிட்டிருக்கிறார்கள்
உருவாக்கம் - பதிப்பு
1939-ல் 'பாரத ஜோதி’ என்ற பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணியாற்றிய கு.ப. ராஜகோபாலன் அளித்த ஊக்கத்தால் நாகம்மாளை எழுதியதாகவும் 1942-ல்தான் நாவல் வெளிவந்தது என்றும் ஆர். சண்முகசுந்தரம் குறிப்பிடுகிறார். நாவலை ஒரு மாதத்தில் எழுதி முடித்ததாக ஆர்.சண்முகசுந்தரம் கூறுகிறார். கு.ப.ராஜகோபாலன் முன்னுரையுடன் இந்நாவல் வெளிவந்தது.
கதைச்சுருக்கம்
கோவை மாவட்டத்தில் [கொங்கு நிலத்தில்] வெங்கமேடு எனும் சிற்றூரில் ஒரு சந்தைக்கு வரும் நாகம்மாள் என்னும் விதவையைச் சித்தரித்தபடி கதை தொடங்குகிறது. வெங்கமேட்டிலிருந்து மேற்கில் மூன்றாவது மைலில் இருக்கும் சிவியார் பாளையம் நாகம்மாளின் கிராமம். அது நீர்வசதி கொண்ட ஊர். நாகம்மாள் எவருக்கும் அடங்கும் வழக்கம் இல்லாதவள். துணிச்சலும் சுதந்திர எண்ணமும் கொண்டவள். அவளுடைய கணவன் இறந்து சில ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. கணவனின் தம்பி சின்னைய்யன் மற்றும் அவனது மனைவி ராமாயியுடன் நாகம்மாள் தங்கியிருக்கிறாள். சின்னையன் - ராமாயி இருவரிடமும் நாகம்மாள் சொத்துச்சண்டையால் மனத்தாங்கல் கொண்டிருக்கிறாள். ஆனால் சின்னையனும், ராமாயியும் நாகம்மாளின் குழந்தை முத்தாயாவை மிகவும் விரும்புகிறார்கள்.
ஊரில் வம்புவழக்குகளுக்கு துணிந்தவனாகிய கெட்டியப்பனுக்கும் நாகம்மாளுக்கும் ரகசிய உறவு இருக்கிறது. கெட்டியப்பனை பயன்படுத்தி சொத்துக்களை பிரித்துப்பெற்றுக்கொள்ள நாகம்மாள் ஆசைப்படுகிறாள். ராமாயிக்கும் சொத்துக்களை விற்றுவிட்டு அவள் ஊருக்கே சென்றுவிடும் எண்ணம் உள்ளது. அது நாகம்மாளை அச்சுறுத்துகிறது. ராமாயியின் மாமியாரும் வந்து அவர்களுடன் தங்கும்போது நாகம்மாள் தன் சொத்து பறிபோகிறது என ஐயம்கொண்டு கெட்டியப்பனிடம் சொல்கிறாள். கெட்டியப்பனும் அவனது கூட்டாளி செங்காளியும் இரவு முழுவதும் குடித்துவிட்டு சின்னையனின் வயலுக்குச் செல்கிறார்கள். சின்னையன் வயலில் ஏரோட்டும்போது நாகம்மாள் அதை தடுக்கிறாள். சண்டை நடக்கிறது. கெட்டியப்பனால் சின்னையன் கொல்லப்படுகிறான்.
கதைமாந்தர்
- நாகம்மாள் - துணிச்சலான கதைநாயகி
- கெட்டியப்பன் - நாகம்மாளின் காதலன், வம்புச்சண்டைக்காரன்.
- சின்னையன் - நாகம்மாளின் கணவனின் தம்பி
- ராமாயி - சின்னையனின் மனைவி
- முத்தாயா - நாகம்மாளின் குழந்தை
இலக்கிய இடம்
நாகம்மாள் அதன் முடிவினால் முக்கியமான இலக்கியப்படைப்பாக நீடிக்கும் புனைவு என மதிப்பிடப்பட்டுள்ளது. நாகம்மாளை ஆட்டுவிப்பது ஐயம். ஆகவே அவள் நிலத்துக்காகப் பூசலிடுகிறாள். அது கொலையில் முடிகிறது. சுந்தர ராமசாமி நாகம்மாள் பற்றிய கட்டுரையில் நாகம்மாளே ஆர்.சண்முகசுந்தரத்திடம் 'ஏனுங்க இப்டியெல்லாம் ஆச்சு?’ என்று கேட்டிருந்தால் அவர் 'தெரியலீங்க’ என்றே சொல்லியிருப்பார் என கூறுகிறார் [நாகம்மாள்- சுந்தர ராமசாமி] சின்னையனும், ராமாயியும் நாகம்மாளின் குழந்தையுடன் மிகுந்த பிரியத்துடன் இருக்கிறார்கள். அந்தக் கொலைக்குப்பின்னால் அவ்வுறவுகள் என்னாகும் என்னும் வினாவை வாசகனின் உள்ளத்தில் உருவாக்குகிறது இந்நாவல்.
நாகம்மாள் கொங்குவட்டார நிலத்தின் சித்திரத்தை நுணுக்கமாக அளிக்கிறது. இட்டேரிகள் என்னும் சிறிய மண்பாதைகள், சிறிய வீடுகள், சந்தைகள் ஆகியவை விவரிக்கப்படுகின்றன. கொங்கு வட்டாரத்தின் பேச்சுமொழி இந்நாவலில் கூர்மையாக எழுதப்பட்டுள்ளது. கு.ப.ராஜகோபாலன் ஆர்.சண்முகசுந்தரத்தின் வெங்கமேடு என்னும் சிற்றூரை தாமஸ் ஹார்டி எழுதிய The Return of the Native நாவலில் வரும் Egdon Heath என்னும் சிற்றூருடன் ஒப்பிட்டு விவாதிக்கிறார்.
ஆகவேதான் க.நா.சுப்ரமணியம் இந்நாவல் கிராமியச்சூழலில் எழுதப்பட்ட தமிழ் நாவல்களில் முழுமையான கலைத்தன்மை கொண்டது என்று மதிப்பிட்டார். "தமிழ் நாவல்களில் மட்டுமல்ல இந்திய நாவல்களிலும் நாகம்மாளுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. கிராமியச் சூழ்நிலைகளை முழுவதும் உபயோகித்து பிராந்திய நாவல் என்னும் துறையை முதன்முதலாக இந்தியாவில் உருவாக்கியவர் ஆர்.ஷண்முகசுந்தரம் என்று சொல்லலாம்" என்கிறார் க.நா.சுப்ரமணியம்.
உசாத்துணை
- நாகம்மாள் -காலச்சுவடு பதிப்பகம்
- செங்குந்தர் வரலாறு மீட்பு குழு-ஆர்.சண்முகசுந்தரம்
- ஆர் சண்முகசுந்தரம்- தினமணி
- ஓலைச்சுவடி கட்டுரை
- ஆர்.சண்முகசுந்தரம்- வாழ்க்கை வரலாறு
- Web Blog - Dr.v.j.premalatha: ஆர்.சண்முகசுந்தரம் புதினங்களில் பெண் நட்பு
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:35:44 IST