under review

எம்.எம். தண்டபாணி தேசிகர்

From Tamil Wiki
Revision as of 21:05, 3 June 2024 by Logamadevi (talk | contribs)
நன்றி; தமிழ்ஹிந்து
Mmd.jpg

எம். எம். தண்டபாணி தேசிகர் (ஆகஸ்ட் 27, 1908 - ஜூன் 26, 1972) தமிழிசைக் கலைஞர், இசைப்பாடகர், நடிகர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் இசைத்துறைத் தலைவராக 15 ஆண்டுகள் பணியாற்றினார். தமிழிசையைப் பரப்புவதில் தீவிரமாக ஈடுபட்டார். அவர் பாடி, நடித்த 'நந்தனார்', 'பட்டினத்தார்' ஆகிய திரைப்படங்கள் பெரிய வெற்றி பெற்றன.

பிறப்பு,கல்வி

தண்டபாணி தேசிகர் நன்னிலத்துக்கு அருகில் உள்ள திருச்செங்காட்டங்குடியில் ஆலயங்களில் பரம்பரையாக திருமுறைகள் இசைக்கும் ஓதுவார் குடும்பத்தில் முத்தையா தேசிகருக்கு ஆகஸ்ட் 27, 1908-ல் பிறந்தார். மாணிக்க தேசிகர், கும்பகோணம் ராசமாணிக்கம் பிள்ளை ஆகியோரிடம் இசைப் பயிற்சி பெற்றார். கோயிலில் தன்னுடைய தந்தையார் தேவாரம், திருவாசகம் இசைப்பதைக் கேட்டு வளர்ந்த அவர் தன் தந்தையிடமே இசைப் பயிற்சி பெற்றார். சட்டையப்ப நாயனக்காரர், தன்னுடைய சிறிய தந்தை மாணிக்க தேசிகர், வயலின் வித்வான் கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை ஆகியோரிடம் தமிழிசை, கர்னாடக இசை பயின்றார்.

தண்டபாணி தேசிகருக்கு 14 வயதில் திருமருகல் கோயிலில் அரங்கேற்றம் நடைபெற்றது. அதன்பின் இசை நிகழ்ச்சிகளில் தொடர்ந்து வாசித்தார்.

தனி வாழ்க்கை

தண்டபாணி தேசிகர் மதுரை ஒக்கூர் லட்சுமணன் செட்டியார் தேவாரப் பாடசாலையில் இசை ஆசிரியராக 18 வயதில் பணியில் சேர்ந்தார். தமிழ்ப் பண்களுக்கும், கர்நாடக இசைக்கும் வேர்கள் ஒன்றே எனக் கண்டறிந்தார்.

தண்டபாணி தேசிகரின் மனைவி தேவசேனா. இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை.

இசை வாழ்க்கை

தண்டபாணி தேசிகர் மதுரையில் வாழ்ந்த காலத்தில், வடக்குச் சித்திர வீதியில் நடைபெறும் மீனாட்சியம்மை உற்சவத்தில், அம்பாள் குறித்து தமிழில் இயற்றிப் பாடிய 9 பாடல்கள் மக்களால் விரும்பப்பட்டு புகழ்பெற்றன. தேசிகரின் கச்சேரிகளும் இசைத் தட்டுகளும் பரவலான கவனத்தையும், புகழையும் பெற்றன.

தேசிகர் 1952-ல் தியாகராஜ ஆராதனையில் பாடுவதற்காக அழைக்கப்பட்டார். தமிழில் சில பாடல்களைப் பாடியதற்காக மூத்த கர்நாடக இசைக் கலைஞர்கள் கண்டனம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதற்குப்பின் எம்.எம். தண்டபாணி தேசிகர் தமிழிசையைப் பாடுவதிலும், பயிற்றுவிப்பதிலும், திரையிசைப் பரப்பில் பரப்புவதிலும் தீவிரமாகச் செயல்பட்டார். தன் இறுதிக் காலம் வரை தமிழிசை குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் தமிழிசைக் கல்லூரியின் முதல்வராகப் பதினைந்து ஆண்டுகாலம் பணியாற்றினார். பல மாணவர்களை உருவாக்கினார். அவர் நிகழ்த்திய சொற்பொழிவுகளும், எழுதிய கட்டுரைகளும் ‘தமிழ் இசைக் கட்டுரைகள்' என்கிற தலைப்பில் புத்தகமாகத் தொகுக்கப் பட்டுள்ளன.

தேசிகர் இசை தமிழ் பாமாலை” என்ற பெயரில், பாரதியாரின் பாடல்கள், தேவாரம், திவ்யப்பிரபந்தம், திருப்புகழ் ஆகியவற்றில் இருந்து சில பாடல்களைத் தொகுத்து வழங்கினார். தமிழ் இசைச் சங்கத்தின் மூலமாக பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

தண்டபாணி தேசிகர் சில திரைப்படங்களில் நடித்த போதிலும், முழு நேர இசைக் கலைஞராகவே வாழ்ந்தார். தமிழ்நாடு முழுவதும் கச்சேரிகள் நடத்தி வந்தார். இவருடைய கச்சேரிகளில் தமிழிசைப் பாடல்களே முதலிடம் பெற்றன.

தருமபுரம், திருவாவடுதுறை ஆதீனங்களின் ஆஸ்தான (முதன்மை) இசைக் கலைஞராக இருந்தார்.

திரைத்துறை

நந்தனாராக தேசிகர்
Mm.jpg

அந்தக் காலங்களில் திரைப்படங்களில் பின்னணி பாடும் வழக்கம் இல்ல. நடிகர்கள் இசையிலும் தேர்ந்தவர்களாக இருக்க வேண்டியிருந்தது. தண்டபாணி தேசிகர் வேல் பிக்சர்ஸ் நிறுவத்தின் அழைப்பின் பேரில் ‘பட்டினத்தார்’ படத்தில் பாடி நடித்தார். திரைப்படத்தில் இடம்பெற்ற 52 பாடல்களில் பெரும்பான்மையானவற்றை தேசிகரே பாடினார். படம் வெற்றி பெற்றது.

தேசிகர் அடுத்து 'வல்லாள மகாராஜா' படத்தில் நடித்தார். அது வெற்றி பெறவில்லை. இந்த திரைப்படத்தில் அவருடன் நடித்த தேவசேனாவை மணம் செய்துகொண்டார்.

'வல்லாள மகாராஜா’வைத் தொடர்ந்து, ‘தாயுமானவர்’ (1938), ‘மாணிக்கவாசகர்’ (1939) ஆகிய படங்களில் நடித்தார். இவை ஓரளவு வெற்றி பெற்றன. 'தாயுமானவர்' திரைப்படத்தில் பாபநாசம் சிவனின் இசையில் 20-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடினார்.

1942-ல் ஜெமினி நிறுவனத்தின் தயாரிப்பான ‘நந்தனார்’ படத்தில், நந்தனாராக தேசிகர் நடித்தார். திரைப்படம் தேசிகரின் பாடல்கள் மற்றும் நடிப்பின் காரணமாக பெருவெற்றி பெற்றது. தியாகராஜ பாகவதர், பி.யு. சின்னப்பா, எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்றவர்களின் படங்களுக்கு இணையான வெற்றியை 'நந்தனார்' பெற்றது. 'தேசிகர் 1948-ல் 'திருமழிசை ஆழ்வார்' திரைப்படத்தில் ஆழ்வாராக நடித்தார்.

தண்டபாணி தேசிகர் திரைப்படங்களில் பின்னணிப்பாடல்கள் பாடினார். பாடல்களுக்கு இசை அமைத்தார். அண்ணாத்துரையின் 'ஓர் இரவு' திரைப்படத்தில் பாரதிதாசனின் 'துன்பம் நேர்கையில்' பாடலுக்கு தேஷ் ராகத்தில் இசையமைத்தார்.

தண்டபாணி தேசிகர் பாடியவற்றில் குறிப்பிடத்தக்க சில பாடல்கள்: 'தாமரை பூத்த தடாகமடி', 'என்னப்பனல்லவா', 'பிறவா வரம் தாரும்', 'ஐயே மெத்தக் கடினம்', 'காண வேண்டாமோ'

மறைவு

தண்டபாணி தேசிகர் ஜூன் 26, 1972 அன்று காலமானார்.

விருதுகள்/சிறப்புகள்

  • தேவார மாமணி, சங்கீத சாகித்ய சிரோமணி, திருமுறைக் கலாநிதி, தாண்டக வேந்தர்-ஆகிய பட்டங்கள்
  • சங்கீத கலாசிகாமணி (Indian fine arts association)-1955
  • இசைப் பேரறிஞர்(தமிழிசை சங்கம்)-1957
  • சங்கீத நாடக் அகாதெமி விருது-1959
  • கலைமாமணி -தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்

மதிப்பீடு

சிதம்பரத்தில் நிகழ்ந்த தமிழிசை மகாநாட்டின்போது அண்ணாமலை பல்கலைக் கழக பட்டமளிப்பு மண்டபத்தில் நடந்த தண்டபாணி தேசிகரின் கச்சேரியைப் பற்றி கல்கி "தேசிகரின் தமிழிசையில் எனக்கு எப்போதும் மிகுந்த மதிப்பு உண்டு. ஸாகித்யத்தின் சிறப்பைப் பூரணமாக உணர்ந்து, இதய பாவத்துடன் பாடுவதில் தேசிகருக்கு நிகர் தேசிகர்தான் என்று சொல்லவேண்டும். அவர் ஸ்வரம் பாடுவதில்லை; ராக விஸ்தாரங்களில் புகுந்து ஜால வித்தைகள் செய்வதில்லை. நேரே நேடுகப் பாடிக்கொண்டே போகிறார். இன்பம் ததும்பும் செந்தமிழ்ப் பாடல்களையே பொறுக்கி எடுத்துப் பாடுகிறார். தமிழ்ப் பதங்களை சுத்தமாக வாய் நிறைய உச்சரித்துப் பாடுகிறார். ஒரு வார்த்தையாவது நம் காதில் விழாமல் தப்பிச் செல்வது கிடையாது.

ஒரு கீர்த்தனம், ஒரு விருத்தம் – இப்படியே மாற்றி மாற்றி இரண்டு மணி நேரம் அற்புதமாகப் பாடிவந்தார் தேசிகர். அவர் பாடிய அச்சுததாசர் கீர்த்தனங்கள் சாகித்யத்திலும் இசையிலும் வெகு உயர்தரமாக இருந்தன. கரகரப்ரியாவில் “காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி” என்ற தேவாரத்தைப் பாடியபோது, எல்லோருடைய உள்ளமும் கனிந்து கண்ணீர் பெருகியே விட்டது "என்று குறிப்பிட்டார்.

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page