under review

வேனில் மாலை

From Tamil Wiki

வேனில் மாலை அல்லது வேனின்மாலை தமிழ்ச் சிற்றிலக்கியங்களில் ஒன்று. சிற்றிலகியங்களின் சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். இளவேனில் காலத்தையும், முதிர்வேனில் காலத்தையும், சிறப்பித்துப் பாடுவது வேனில் மாலை [1][2][3][4][5]

பேசுபொருள்

ஆண்டின் பருவங்கள் ஆறு:

  • கார்: ஆவணி, புரட்டாசி
  • கூதிர் (குளிர்): ஐப்பசி, கார்த்திகை
  • முன்பனி: மார்கழி, தை
  • பின்பனி: மாசி, பங்குனி
  • இளவேனில்: சித்திரை, வைகாசி
  • முதுவேனில்: ஆனி, ஆடி

வேனிற் காலம் (கோடைகாலம்) வறட்சி மிக்கது. மலையும் மலையைச் சார்ந்த இடமுமாகிய குறிஞ்சி நிலமும், காடும் காட்டைச் சார்ந்த நிலமும் ஆகிய முல்லை நிலமும் வேனிற் காலத்தில் தம்தம் இயல்பில் திரிந்து வெயிலின் கொடுமையால் பாலைவனம் போல் தோன்றும். எனவே வேனிற் காலம் பாலைத்திணைக்கு உரியது.

வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன்
தானலந் திருகத் தன்மையிற் குன்றி
முல்லையுங் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப்
பாலை யென்பதோர் படிவங் கொள்ளும் - (சிலப்பதிகாரம் காடுகாண்காதை)

பாலைக்குரிய ஒழுக்கம் பிரிவு. தலைவனும் தலைவியும் ஏதோ ஒரு காரணம் கருதி பிரிவுற்று துயருற்றுத் தன்னெழில் கெட்டு நிற்கும் திறத்தைக் கோடைகால இயற்கைச் சிதைவுகளோடு ஒப்புமைப்படுத்திப் பாடுவது வேனில் மாலை என்னும் சிற்றிலக்கிய வகையாகும்.

பார்க்க சிற்றிலக்கியங்கள்

அடிக்குறிப்புகள்

  1. இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 22
  2. வேனிலொடு முதிர் வேனிலும் புனைந்து
    விளம்புதல் வேனில்மாலை ஆகும்

    - முத்துவீரியம் 1062

  3. அருவேனின் முதுவேனி லைச்சிறப்பித்
    தோதலாகுமே வேனின் மாலை

    - பிரபந்த தீபிகை 13
  4. வேனில் மாலை இரு வேனிலைப் பாடலே

    - பிரபந்த தீபம் 36
  5. நடுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
    முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே.

    தொல்காப்பியம் - பொருளதிகாரம் - 11

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page