விஸ்வநாத தாஸ்
- தாஸ் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: தாஸ் (பெயர் பட்டியல்)
விஸ்வநாத தாஸ் (தாசரிதாஸ், எஸ். எஸ். விஸ்வநாத தாஸ்) (ஜூன் 16, 1886 - டிசம்பர் 13, 1940) நாடகக் கலைஞர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர். நாடகங்களில் தனது எழுச்சி மிக்க பாடல்களின் மூலம் நாட்டுபற்றை வளர்த்தார்.
பிறப்பு, கல்வி
விஸ்வநாததாஸ் ஜூன் 16, 1886 அன்று அன்றைய ராமநாதபுரம் மாவட்டம் சிவகாசியில் சுப்ரமணிய பண்டிதர், ஞானாம்பாள் இணையருக்குப் பிறந்தார். அவரது முன்னோர்கள் மருத்துவர்(நாவிதர்) தொழிலில் ஈடுபட்டிருந்தனர். பெற்றோர் வைத்த பெயர் தாசரிதாஸ். நல்ல குரல் வளம் பெற்றிருந்தார். இளம் வயதிலேயே இசையிலும், நாடகத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். சங்கரதாஸ் சுவாமிகள் அவரை நாடக உலகுக்கு அறிமுகப்படுத்தி தன் நாடகங்களில் நடிக்க வைத்தார்.
தனி வாழ்க்கை
விஸ்வநாத தாஸின் மனைவி சண்முகத்தாய். மகன் சுப்ரமண்ய தாஸ். சுப்ரமண்ய தாஸ் நாடகக் கலைஞர். தந்தையைப்போலவே மேடையில் எழுச்சிமிக்க பாடல்களைப் பாடினார்.
நாடகம்
விஸ்வநாத தாஸ் சண்முகானந்தம் குரூப் என்ற நாடக கம்பெனியை நிறுவி சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளுக்கும் சென்று நாடகம் போட்டார். அவரது நாடகங்களில் 'வள்ளி திருமணம்; முக்கியமானது. அதில் அவர் பாடிய 'கொக்கு பறக்குறது பாப்பா' பாடல் மிக பிரபலமானது.
விஸ்வநாத தாஸ் நாவிதர் வகுப்பைச் சேர்ந்தவர் என்ற காரணத்தால் பல நடிகையர் அவருடன் இணைந்து நடிக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. சுப்ரமணியர் வேடத்தோடு மயில்வாகனத்தில் அமரக் கூடாது என்றுகூடச் சில ஊர்களில் உயர்வகுப்பினர் கலவரம் செய்ததாக 'தமிழ் நாடக வரலாறு' நூல் கூறுகிறது. கே.பி. ஜானகி அம்மாள் அவருடன் வள்ளித் திருமணம் உள்ளிட்ட பல நாடகங்களில் நடித்தார்.
விஸ்வநாத தாஸ் புராண நாடகங்களிலும் எழுச்சி மிக்க தேசபக்தி பாடல்களைப் பாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
விடுதலைப் போராட்டம்
தூத்துக்குடிக்கு காந்தி வந்திருந்தபோது மேடையில் பாடிய விஸ்வநாத தாஸின் இசையைப் பாராட்டி, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடும்படி அறிவுரை கூறினார். இதையடுத்து விஸ்வநாத தாஸ் தன் வாழ்நாள் முழுவதும் நாட்டுபற்றைத் தன் இசை நாடகங்கள்மூலம் வளர்த்தார். சத்தியமூர்த்தி, வ.உ. சிதம்பரம் பிள்ளை, காமராஜர் போன்றோரிடம் நட்பு கொண்டிருந்தார். தனது ரசிகர்கள் குழுவை முறைப்படுத்தி, 'ஸ்ரீசுபாஷ் பாபு வாலிபர் சங்கம்' என்ற சங்கத்தைத் தொடங்கினார்.
விஸ்வநாத தாஸ் திருமங்கலம் வட்ட காங்கிரஸ் கமிட்டியிலும், மதுரை காங்கிரஸ் ஜில்லா போர்டிலும், உறுப்பினராக இருந்தார். நாடகத்தில் வேடம் தரிப்பதற்கான உடைகளையும், கதர்த் துணியிலேயே தயாரித்து அணிந்தார். அவரது பாடல்கள், காங்கிரஸ் கட்சியின் விடுதலைப் போராட்டங்களில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. ஜாலியன் வாலாபாக் சம்பவத்தையடுத்து அவர் எழுதிய, 'பஞ்சாப் படுகொலை பாரில் கொடியது' என்ற பாடல் விடுதலைப் போராட்டத்தில் முக்கிய இடம் பிடித்தது.
விஸ்வநாத தாஸ் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டு சிறைவாசம் சென்றார். வள்ளித் திருமணம் நாடகத்தில் அவர் பாடிய 'கொக்கு பறக்குதடி பாப்பா' ஆங்கில அரசை வெளிப்படையாகச் சாடியதால் அவர் விடுதலை பற்றிய பாடல்களைப் பாடக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டது. அதற்கு அஞ்சாமல் அடுத்த நாடகத்தில் 'போலீஸ் புலி கூட்டம் நம்மேல் போட்டு வருகிறது கண்ணோட்டம்' என்ற பாடலைப் பாடினார். இவரின் நாடகங்களுக்கு அரசு விதித்த தடையை மீறிப் பல முறை சிறை சென்றார். தன் வாழ்நாளில் 29 முறை கைது செய்யப்பட்டார். தனது உடைமைகளை இழந்து வறுமையில் வாடினார். அவர் வாழ்ந்த வீடும் கடனில் மூழ்கியது. வ.உ. சிதம்பரனார் அவரது வழக்கறிஞராகச் சிலமுறை வாதாடினார்.
விஸ்வநாத தாஸ் சிறையிலிருந்தபோது அவரது மகன் சுப்ரமண்ய தாஸ் மேடையில் தேசபக்திப் பாடல்களைப் பாடியதால் கைது செய்யப்பட்டார்.
இறப்பு
டிசம்பர் 31, 1940 அன்று நடந்த 'வள்ளி திருமணம்' நாடகத்தில் மயில் மேல் சிலையாக அமரும் முருகனாக நடித்துக்கொண்டிருக்கும்போது நாடக மேடையிலேயே விஸ்வநாத தாஸ் மரணம் அடைந்தார். மறுநாள் அதே முருகன் வேடத்தில் மயில் வாகனத்தில் அவர் இறுதி ஊர்வலம் சென்ற போது கே.பி. சுந்தராம்பாள், கே. எஸ். அனந்தநாராயண ஐயர் போன்ற பல நடிக நடிகயைர்களும், சத்திய மூர்த்தி போன்ற தலைவர்களும் கலந்துகொண்டனர்.
நினைவேந்தல்
விஸ்வநாத தாஸ் வாழ்ந்த மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள அவரது இல்லத்தை தியாகி விஸ்வநாததாஸ் நினைவில்லமாக மாற்றியது தமிழக அரசு. அந்த இல்லத்தில் நூலகமும், அவரது மார்பளவு சிலையும் அமைக்கப்பட்டுள்ளன.
உசாத்துணை
- Freedom 75-Unsung hero Viswanatha Das
- தமிழ் நாடக வரலாறு-கு.சா. கிருஷ்ணமூர்த்தி, தமிழ் இணைய கல்விக் கழகம்
- தியாகி விஸ்வநாத தாஸ்-தினமணி ஜூன் 2020
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 27-Jul-2024, 09:14:26 IST