under review

வாயிலார் நாயனார்

From Tamil Wiki
மயிலை கபாலீஸ்வரர் கோவில், வாயிலார் நாயன்மார்

வாயிலார் நாயனார் சைவ அடியார்களாகிய அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். இறைவனை மௌனமாக மானசீகமாக வழிபட்டவர் என்று பெரிய புராணம் குறிப்பிடுகிறது.

வாழ்க்கைக் குறிப்பு

வாயிலார் நாயனார் சென்னையில் உள்ள மயிலாப்பூரில் வேளாளர் குலத்தில் பிறந்தார். இவர் வாழ்ந்த காலம் தெளிவாக அறியவரவில்லை. பொ.யு. 8-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டத் தொகையில் "தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்" என்று கூறியிருப்பதால், இவர் 8-ம் நூற்றாண்டுக்கும் முன்னர் வாழ்ந்தவர் என்று அறியலாம். பெரிய புராணத்தில்

மன்னு சீர்மயி லைத்திரு மாநகர்த்
தொன்மை நீடிய சூத்திரத் தொல்குல
நன்மைசான்ற நலம்பெறத் தோன்றினார்;
தன்மை வாயிலார் என்னும் தபோதனர்

என்ற பாடல் மூலம் மௌனமாக

'வாயிலார்' (வாய்+இலார்) என்பதன் மூலம் மௌனமாய் வழிபாடு செய்தவர் எனக் கருதப்படுகிறது. இவரது வரலாறு 10 பாடல்களில் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது.

பாடல்கள்

வாயிலார் நாயனாரின் ஆன்மபூஜை

மறவாமை யால்அமைத்த மனக்கோயில் உள்ளிருத்தி
உறவாதி தனையுணரும் ஒளிவிளக்குச் சுடரேற்றி
இறவாத ஆனந்தம் எனுந்திருமஞ் சனமாட்டி
அறவாணர்க் கன்பென்னும் அமுதமைத்துஅர்ச் சனைசெய்வார்.

(இறைவரை, மறவாமை எனும் கருவினால் அமைத்த மனமான கோயிலுள் எழுந்தருளச் செய்து, நிலை பெறுமாறு இருத்தி, அவ்விடத்திலேயே பொருந்துமாறு அப்பெருமானை உணரும் ஞானம் என்கின்ற ஒளிவீசும் சுடர் விளக்கை ஏற்றி, அழிவற்ற பேரானந்தமான நீரினால் திருமஞ்சன செய்து, அறவாணனக்கு அன்பு என்னும் அமுதை அமைத்து வழிபட்டார்)

குருபூஜை

வாயிலார் நாயன்மாருக்கு திருமையிலை கபாலீசுவரர்-கற்பகாம்பாள் கோயிலில் முருகன் சன்னிதிக்கருகில் அருகில் தனி சன்னதி உள்ளது. மார்கழி ரேவதி நாள்மீன் கூடும் நாளில் குருபூசை நடக்கிறது.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 22-Sep-2023, 11:39:02 IST