under review

வளையாபதி அகவல்

From Tamil Wiki

வளையாபதி அகவல் சுத்தானந்த பாரதி ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான வளையாபதியின் கதையைத் தழுவி அகவற்பாக்களால் எழுதிய நூல்.

பதிப்பு, வெளியீடு

வளையாபதி காவியம் நூலின் முதல் பதிப்பு திருச்சி மாவட்டம், இராமச்சந்திரபுரம் அன்பு நிலயம் பதிப்பகத்தால் ஆகஸ்ட். 1943-ல் வெளியிடப்பட்டது. இரண்டாம் பதிப்பு: அக்டோபர், 1945-ல் வெளிவந்தது.

ஆசிரியர்

வளையாபதி அகவலை எழுதியவர் யோகி சுத்தானந்த பாரதி.

தோற்றம்

வளையாபதி தமிழின் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று. சமணசமய நூல். இதனை இயற்றியவர் யார், எந்த ஆண்டைச் சேர்ந்த நூல் என்பது பற்றிய விவரங்கள் முழுமையாகக் கிடைக்கவில்லை. இக்காப்பியத்தின் சில செய்யுள்கள் மட்டுமே கிடைத்துள்ளன. அவற்றைக் கொண்டு நீண்ட ஆய்வுக்குப்பின் வளையாபதியின் கதைச் சுருக்கத்தை அகவற்பாக்களால் எழுதியதாக சுத்தானந்த பாரதி குறிப்பிடுகிறார்.

"சிலப்பதிகாரவுரை, தொல்காப்பியம் இளம்பூரணம், யாப்பருங்கல விருத்தி, புறத் திரட்டு முதலிய பெரிய நூல்களில் எடுத்தாளப்படுவதால், 'இது புலவர்போற்றிய மாகாவியம்' என்பது புலனாகிறது. ஆனால், இதன் ஆசிரியர் பெயர்கூட நமக்குத் தெரியவில்லை! வெள்ளம் போகிற போக்கிலே, தமிழ் உலகில் அடையவேண்டிய நிலைமையை எண்ணி, உள்ளதைக் காப்பாற்றி, 'நம் தமிழறிஞரின் பழம்பெருமையை எல்லாரும் அறியவேண்டும்' என்ற ஆர்வத்துடனேதான் இந்நூலைத் திருவருளால் ஒருவாறு பாடி முடித் தேன். வளையாபதி என்ற பெயரைத் தமிழர், இனி மறக்க முடியாது. அதில் அடங்கிய கதையையும் நீண்ட ஆராய்ச்சியால் கோவைசெய்து, காலத்திற்கேற்றபடி நிகழ்ச்சிகளை வைத்து எழுதினேன். வளையா + பதி என்றால், 'இணங்காத (எளிதில் இரங் காத)+கணவன்' என்பது பொருளாம்"- சுத்தானந்த பாரதியின் முன்னுரையிலிருந்து.

நூல் அமைப்பு

"துக்கந் துடைக்குந் துகளறு காட்சிய, நிகந்த வேடத் திருடி கணங்களை" என்று வளையாபதியில் மேற்கோள் காண்பதால் வளையாபதி சமண நூலாகவே கொள்ளப்படுகிறது.

ஆனால் சுத்தானந்த பாரதியின் வளையாபதி அகவலில் பத்தினிக்கு அடைக்கலமளிக்கும் ஒளவை, சைவத்துறவி, சமண நூற் பயிற்சியும் பெற்றவள். இந்த வேறுபாடு கவனத்தில் கொள்ளத்தக்கது. "ஆதலின், இந்நூலை, சமணம் சைவம் இரண்டிற்கும் பொது என்னக் கொள்க" என்று சுத்தானந்த பாரதி குறிப்பிடுகிறார்.

வளையாபதி அகவல் 180 அடிகளைக் கொண்டது. 10 அல்லது அதற்கும் பேற்பட்ட எண்னிக்கையில் அடிகளைக் கொண்ட அகவற்பாக்களால் ஆனது.

வளையாபதி அகவல் பின்வரும் பகுதிகளைக் கொண்டது

  • பதிப்புரை
  • ஆசிரியர் முன்னுரை
  • கடவுள் வாழ்த்து
  • சக்தி வணக்கம்
  • காவிரிப்பூம் பட்டினம்
  • பட்டினக் காட்சிகள்
  • வயிர வாணிகன்
  • அந்தரி
  • பத்தினி
  • கடன் முறை
  • உலகியல்பு
  • மூத்தாள் மூட்டிய தீ!
  • பத்தினி துயரம்
  • அந்தரி தந்திரம்
  • அழகன்
  • காளி கோயில்
  • நல்ல காலை
  • கருணைக் கிழவி
  • ஒளவை பொன்மொழி
  • உத்தமன்
  • அந்தோ செல்வம்!
  • வேசையின் மோசம்
  • உத்தமன் வீர உரை
  • அந்தரி மனமாற்றம்
  • அபயம்
  • வெற்றி!
  • பத்தினி வாழ்த்துரை.

கதைச்சுருக்கம்

காவிரிப்பூம் பட்டினத்தில் வயிர வாணிகன் என்ற பெருஞ்செல்வனுக்கு இரண்டு மனைவிகள்; மூத்தவள் அந்தரி பொறாமைக்காரி, வஞ்சகி. இளையவள் பத்தினி நற்குணம் வாய்ந்தவள். சிவசக்தி உபாசகி. இளையவள் கருத்தரித்தாள் மூத்தவள் பொறாமை கொண்டு, தன் தமையன் சாத்தனைக்கொண்டு கலகம் செய்து, "பிறசாதிப் பெண்ணுடன் வாழக்கூடாது; அவளை ஒதுக்கிவைக்க வேண்டும்" என சூழ்ச்சி செய்ய, வாணிகன் இளைய பத்தினியை விரட்டியடித்துவிட்டுக் கப்பலேறித் தொலதூரம் சென்றான். சாத்தன், தன் காதலிக்குப் பிறந்த குழந்தையை அந்தரிக்குப் பிறந்ததாக பொய்யுரைத்தான். பத்தினி ஊரைவிட்டுக் கிளம்பிக் காளிக்குடிக்குச் சென்றி சிவசக்தியான காளியின் கோயிலில்அம்பிகை சந்நிதிமுன் தன் துயர்களைச் சொல்லி அழுதாள். அம்பிகை கனவில் வந்து அபயமளித்தாள். திருவருளால் அங்கே ஒளவை என்னும் யோகினி தோன்றி பத்தினியின் நிலைமையைப் பார்த்து இரங்கி, தன்னுடன் அழைத்துச்சென்று காத்தாள். பத்தினிக்கு தினம் ஞானோபதேசமும், யோகமும், சைவ சமண சன்மார்க்க நெறியும் பயிற்றுவித்தாள். பத்தினி சன்மார்க்கத் தவம் புரிந்தாள். உரியகாலத்தில் அவளுக்கு மகன் பிறந்தான். ஒளவை, அவனுக்கு உத்தமன் எனப் பெயரிட்டாள். உத்தமன், கல்வி கேள்விகளில் முதிர்ந்து வளர்ந்தான்.

ஒருநாள் தாயின்மூலம் உத்தமன், தன் தந்தை இன்னாரென அறிந்து, பூம்புகார் சென்று, வயிர வாணிகனைக்கண்டு, "நான் உம் மகன்" என்று விபரம் சொன்னான். 'நீ யாருக்குப் பிறந்தாயோ" என்று வாணிகன் மறுத்தான். உத்தமன் பஞ்சாயத்தாரைக் கூட்டி, தாயையும் ஒளவையையும் அழைத்துத் தன் நியாயத்தைக் கூறினான். ஒளவை, மகாசக்தியின் ஆவேசம் பெற்றுப் பத்தினியின் கற்பையும் சீலத்தையும் கூறி , உத்தமன் வயிர வாணிகன் மகனே என்பதை விளக்கினாள். அவள் பேச்சை அனைவரும் ஆமோதிக்க, வாணிகன், பத்தினியை ஏற்றுக் கொண்டான்.

மூத்தவள் அந்தரி தனக்குப் பிள்ளை யில்லையாதலால் உத்தமனை ஏற்றாள். வாணிகன், உத்தமனுக்குத் தன் செல்வத்தை அளித்து, பத்தினியத் தன்னுடன் வாழ அழைத்தான். உத்தமன் நல்ல நிலைக்கு வந்ததைப் பார்த்தபின் தாய் பத்தினி, துறவு பூண்டு, ஒளவையுடனே கூடி ஒரு மடம் நிறுவி, அதில் பெண்களுக்குச் சன்மார்க்கம் கற்பித்து, தவத்திலேயே காலம் கழித்து இறைவனடி சேர்ந்தாள். முதலில் வளையாத முரட்டுக் கணவனும் வளைந்து, பத்தினியை மிகவும் உயர்வாகக் கொண்டாடி, தானும் சன்மார்க்க வாழ்வு பெற்றதால் இது 'வளையாபதி' எனப் பெயர் பெற்றது.

பாடல் நடை

பத்தினியின் இல்லறம்

அறிந்து படித்தபின், அகவிவ காரம்
பேசிக் குடும்பப் பிழைகளைத் திருத்திப்
போக்குவ போக்கி, ஊக்குவ ஊக்கி,
வீட்டுக் கடமை நாட்டிய பின்னர்,
அமைதியாய் மீண்டும் அருளை வணங்கி
உள்ளங் களிக்கப் பள்ளிகொள் வாரே!
இந்த முறையே இல்லற வாழ்வின்
இன்ப மெல்லாம் அன்பா லெய்தி,
நிறைமுறை யான நேயம் பேணி
வாழ்ந்தார் பத்தினி வயிரவா ணிகரே! 320

ஔவையின் சாட்சி

தாசி யெங்கே? சாத்தன் எங்கே?
காலச் சுழலிற் கலங்கி யொழிந்தார்!
ஒழிந்த தொழிக... உண்மையை அறிவோம்:
காரிருள் இரவில் கருக்கொண் டிருந்த
பத்தினி நடந்தெம் பதியி லிருந்த
காளி கோயிலைக் கதியென வடைந்தாள்.
கண்டேன் இந்தக் கற்புக் கனலை!
என்மகள் போலே என்மனை வைத்தே
எனக்குறு ஞானம் இயம்பிக் கவலையை
மாற்றினேன் ; அவளும் மகவை யீன்றதும், 1290

சிவகதி சேரத் தவவினை தொடர்ந்தாள்.
உத்தமன் உரைத்த உண்மை உண்மையே...
சத்திய மாகச் சாற்றினேன், பெரியீர் !"
தவத்துறை தேர்ந்த சத்தியக் கிழவி
சொன்னது கேட்டதும், 'அன்னதே உண்மை.
வயிர வாணிகன் மகனை, மனைவியை
ஏற்று நன்று போற்றுதல் வேண்டும்.
சொத்துக் குரியவன் உத்தமன் ; அவனே
செட்டி யாரின் செல்வச் சந்ததி "
என்றே பெரியோர் இரண்டறச் சொன்னார். 1300

பத்தினி வாழ்த்துரை

வளையா பதியும் வளைந்ததைக் கண்டேன்.
செல்வத் தந்தை செல்வனை ஏற்றார்.
உள்ளும் புறமும் உலகைப் பார்த்தேன்;
மாந்தர் இயல்பை மனமுறக் கண்டேன்.
இல்லறங் கண்டேன்... இல்லிற் பழுத்தே
துறவறம் பூண்டேன். அறம்வளர் ஒளவை
எனையாட் கொண்டாள்; இனியென் வாழ்வை
அவளுக் காக்கிச் சிவபதஞ் சேர்வேன்!
ஆதலாற் கணவரே, அன்பு மகனையே :
பிரியமாய்ப் பேணி உரியநன் மரபை 1330

வாழையடி வாழையாய் வாழச் செய்வீர்!
இந்தச் சொற்களால் என்னை நினைப்பீர்:
உலகிற் பிறந்த உயிர்க்குலம் அனைத்தும்,
உயிர்க்குயி ரான ஒருவன் மயமாம்;
பிறந்தவ ரெல்லாம் சிறந்தவர் தாமே!
ஒருமொழி யாளர் ஒருதாய் மக்கள் ;
தமிழர் அனைவரும் தமிழ்க்குல மாவார்.
சாதி வாதம் பேதமை யாகும்.
அன்புள் காதலர் அறவழி யில்லறந்
தாங்கி இன்பம் ஓங்கி வாழ்கவே! 1340

உசாத்துணை

வளையாபதி அகவல், மதுரைத் திட்டம்

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Aug-2026, 21:34:32 IST