under review

வஞ்சினக் காஞ்சி

From Tamil Wiki

வஞ்சினக் காஞ்சி காஞ்சித் திணையின் துறைகளில் ஒன்று. காஞ்சி மன்னன் பகைவரை வெல்வேன் என வஞ்சினம் உரைப்பதைப் பேசுவது.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

இன்னது பிழைப்பின் இன்னவாறு ஆகக் கடவேன்' என்பது வஞ்சின மொழி.புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் "காஞ்சி வேந்தன் கொடிய சினத்தினன்.அவன் சினந்து, தனக்கு வேற்றவராகிய (பகைவராகிய) வஞ்சியாரை அடிபணியச் செய்வதாகச் சூளுரை கூறிய வகையை மொழிந்தது வஞ்சினக் காஞ்சி என்னும் துறை" என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

வெம்சின வேந்தன் வேற்றவர்ப் பணிப்ப
வஞ்சினம் கூறிய வகைமொழிந் தன்று (4.9)

வெண்பா

இன்று பகலோன் இறவாமுன் ஒன்னாரை
வென்று களம் கொள்ளாது வேலுயர்ப்பின் - என்றும்
அரண் அழியப் பாயும் அடையார் முன் நிற்போன்
முரண் அழிய முன்முன் நின்று 69

பொருள்: பகைவராகிய வஞ்சி மறவரை இன்று பகலவன் மறைவதற்கு முன்னதாகவே எனது வேற்படை கொண்டு வெல்வேன்; வென்று போர்க்களத்தைக் கைப்பற்றுவேன். கூறிய கால எல்லைக்குள் வென்று, களத்தைக் கைப்பற்றாது, எனது வேலினை உயர்த்திப் பிடிப்பேனாயின், மாற்றாரது அரண் அழியும்படி தாக்கும் வஞ்சியார் முன்பு எனது முரண் (பகைமை) அவிய எல்லாக் காலமும் பணிமொழி கூறி, தாழ்ந்து நிற்கும் இழிநிலையைப் பெறுபவனாக நான் ஆவேன் எனக் காஞ்சியான் வஞ்சினம் உரைக்கிறான்.

இன்றுக்குள் பகைவரை வெல்வேன். அவ்வாறு செய்யாவிட்டால் இழிநிலை அடைவேன்என்று வஞ்சினம் உரைத்ததால் இது வஞ்சினக் காஞ்சி ஆகிறது.

எடுத்துக்காட்டு

புறநானூறு 71
  • திணை: காஞ்சி துறை: வஞ்சினக் காஞ்சி
  • பாடியவர்: ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்

மடங்கலின் சினைஇ, மடங்கா உள்ளத்து,
அடங்காத் தானை வேந்தர் உடங்கு இயைந்து,
என்னொடு பொருதும் என்ப; அவரை
ஆர் அமர் அலறத் தாக்கி, தேரொடு
அவர்ப் புறங்காணேன் ஆயின் சிறந்த 5
பேர் அமர் உண்கண் இவளினும் பிரிக;
அறன் நிலை திரியா அன்பின் அவையத்து,
திறன் இல் ஒருவனை நாட்டி, முறை திரிந்து
மெலிகோல் செய்தேன் ஆகுக; மலி புகழ்
வையை சூழ்ந்த வளம் கெழு வைப்பின் 10
பொய்யா யாணர் மையல் கோமான்
மாவனும், மன் எயில் ஆந்தையும், உரை சால்
அந்துவஞ் சாத்தனும், ஆதன் அழிசியும்,
வெஞ் சின இயக்கனும், உளப்படப் பிறரும்,
கண் போல் நண்பின் கேளிரொடு கலந்த 15
இன் களி மகிழ் நகை இழுக்கி யான் ஒன்றோ,
மன்பதை காக்கும் நீள் குடிச் சிறந்த
தென் புலம் காவலின் ஒரீஇ, பிறர்
வன் புலம் காவலின் மாறி யான் பிறக்கே!

வேந்தர் (சேரன், சோழன்) இருவரும் என்னோடு போரிடுவேன் என்கின்றனர்,சிங்கம் போல் சீறுகின்றனர். மடியாத ஊக்கமும் அடங்காத படையும் கொண்டுள்ளனர்.அவர்கள் அலறும்படி அவர்களைத் தாக்கி புறமுதுகிட்டு ஓடச்செய்வேன்.அப்படிச் செய்யாவிட்டால்,விரும்பிப் பார்க்கும் இவளை (என் மனைவியை)ப் பிரிவேன். அறநிலை திரியாத என் அவையில் திறமில்லாத ஒருவனை நடுவராக அமர்த்தி வலிமை இல்லாத ஆட்சி புரிபவன் ஆவேன். ஐம்பெருங்குழு, மற்றும் நட்புகளுடன் வையை சூழ்ந்த நாட்டை ஆளும் மகிழ்ச்சியை இழப்பேன். உலக உயிரினங்களையெல்லாம் (மன்பதை) காக்கும் தென்புலங் காவல் பாண்டியன் குடியில் பிறக்காமல் மேட்டுத்தரிசு நிலங்களைக் காக்கும் அற்பக் குடியில் பிறப்பேன்- என்று வஞ்சினம் கூறுவதால் இது வஞ்சினக் காஞ்சி.

புறநானூறு 72
  • திணை: காஞ்சி துறை: வஞ்சினக் காஞ்சி
  • பாடியவர்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன்

நகுதக்கனரே, நாடு மீக்கூறுநர்;
இளையன் இவன்' என உளையக் கூறி,
'படு மணி இரட்டும் பா அடிப் பணைத் தாள்
நெடு நல் யானையும், தேரும், மாவும்,
படை அமை மறவரும், உடையம் யாம்' என்று 5
உறு துப்பு அஞ்சாது, உடல் சினம் செருக்கி,
சிறு சொல் சொல்லிய சினம் கெழு வேந்தரை
அருஞ் சமம் சிதையத் தாக்கி, முரசமொடு
ஒருங்கு அகப்படேஎன் ஆயின் பொருந்திய
என் நிழல் வாழ்நர் செல் நிழல் காணாது, 10
'கொடியன் எம் இறை' எனக் கண்ணீர் பரப்பி,
குடி பழி தூற்றும் கோலேன் ஆகுக;
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவன் ஆக,
உலகமொடு நிலைஇய பலர் புகழ் சிறப்பின் 15
புலவர் பாடாது வரைக, என் நிலவரை;
புரப்போர் புன்கண் கூர,
இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே.

எம்மிடம் யானை, குதிரை, தேர், காலாள் படைகள் உள்ளன. எம்மை எதிர்க்கும் இவன் இளையன்" என்று சிறுசொல் சொல்லி சினந்து என் நாட்டின்மீது படையெடுக்கும் வேந்தர் நகைப்புக்கு இடமானவர்கள். அந்த வேந்தரை அகப்படுத்தி என் ஆட்சிக்குக் கீழ் நான் கொண்டுவராவிட்டால், என் குடிமக்கள் நல்லாட்சி நிழல் காணாமல் 'என் இறைவன் (அரசன்) கொடியன்' எனப் பழி தூற்றும் நிலையினேன் ஆவேன் ஆகுக.மாங்குடி மருதனைத் தலைவனாகக் கொண்ட புலவர்-அவை என்னைப் பாடாமல் போகட்டும். என்னிடம் வந்து இரப்போருக்கு ஈயப் பொருள் இல்லாமல் நான் வறுமையில் வாடுவேன் ஆகுக.

பகைவரி வெல்லாவிடின் பழிக்கும், இழிவுக்கும் ஆளாவேன் என்று வஞ்சினம் உரைப்பதால் இது வஞ்சினக் காஞ்சி.

புறநானூறு 73
  • திணை: காஞ்சி துறை: வஞ்சினக் காஞ்சி
  • பாடியவர்: சோழன் நலங்கிள்ளி; 'நல்லுருத்திரன் பாட்டு' எனவும் பாடம்.

மெல்ல வந்து, என் நல்லடி பொருந்தி,
ஈயென இரக்குவர் ஆயின், சீருடை
முரசுகெழு தாயத்து அரசோ தஞ்சம்;
இன்னுயிர்ஆயினும்கொடுக்குவென், இந்நிலத்து
ஆற்றல் உடையோர் ஆற்றல் போற்றாது, என் 5
உள்ளம் எள்ளிய மடவோன், தெள்ளிதின்
துஞ்சு புலி இடறிய சிதடன் போல,
உய்ந்தனன் பெயர்தலோ அரிதே; மைந்துடைக்
கழைதின் யானைக் கால் அகப் பட்ட
வன்றிணி நீண்முளை போலச், சென்று அவண் 10
வருந்தப் பொரேஎன் ஆயின், பொருந்திய
தீது இல் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப்
பல்லிருங் கூந்தல் மகளிர்
ஒல்லா முயக்கிடைக் குழைக, என் தாரே!

சோழன் நலங்கிள்ளி "என் நாட்டை விரும்புபவர் மெதுவாக என்னிடம் வந்து, என் கால்களைப் பிடித்து, உன் நாட்டைக் கொடு என்று பிச்சையாகக் கேட்டால் முரசு முழங்கும் என் ஆட்சியையும், வேண்டுமானால் என் உயிரையும் அவருக்கு உரிமை ஆக்குவேன். இந்த நிலத்தில் என் ஆற்றலைப் போற்றாமல், என் உள்ள உரத்தை எள்ளி நகையாடிய மடவோன் தூங்கும் புலிமேல் கால் தடுக்கிய குருடன் போல தப்பிச் செல்லமாட்டான். மூங்கிலைத் தின்னும் வலிமை மிக்க யானையின் காலடியில் பட்ட மூங்கில் முளைக்குருத்து போல அவனைப் போரிட்டு நசுக்குவேன். அப்படி நசுக்காவிட்டால், என் மாலை நெஞ்சில் காதல் இல்லாமல் ஒப்புக்குத் தழுவும் கூந்தல் பகட்டுக்காரியின் தழுவுதலில் குழைவதாகுக" என்று சூளுரைப்பதால் இது வஞ்சினக் காஞ்சி.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-Mar-2025, 19:05:36 IST