under review

வஞ்சப் புகழ்ச்சி அணி

From Tamil Wiki

புகழ்வது போலப் பழித்தும், பழிப்பது போலப் புகழ்ந்தும் கூறுவது வஞ்சப் புகழ்ச்சி அணி. இது இலேச அணியின் ஒரு வகையாகவும் அறியப்படுகிறது.

விளக்கம்

ஒருவரைப் புகழ்வது போலப் பழித்தலும், பழிப்பது போலப் புகழ்தலும் வஞ்சப் புகழ்ச்சி. இலேச அணியின் ஒரு வகையாகக் கொள்ளப்படுகிறது. இவ்விரண்டையும் ஒரே அணியாகக் கொண்டு அதற்கு வஞ்சப் புகழ்ச்சி அணி என்று பெயரிட்டுக் கூறுவதும் உண்டு.

புகழ்வது போலப் பழித்திறம் புனைதலும்
பழிப்பது போலப் புகழ்புலப் படுத்தலும்
அவையும் அன்னதென்(று ) அறைகுநர் உளரே.

எடுத்துக்காட்டுகள்

இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டி,
கண்திரள் நோன்காழ் திருத்தி, நெய்அணிந்து,
கடியுடை வியன்நகர் அவ்வே; அவ்வே,
பகைவர்க் குத்தி, கோடுநுதி சிதைந்து,
கொல்துறைக் குற்றில மாதோ .... ....
அண்ணல் எம்கோமான் வைந்நுதி வேலே
(புறநானூறு, 95)

பொருள்

அதியமான் போரால் ஏற்படும் உயிர் இழப்புக் கண்டு மனம் வருந்திப் போரில் விருப்பம் இல்லாதிருந்தான். இந்நிலையில் தொண்டைமான் என்பவன் அதியமான் மீது போர் தொடுத்தான். ஒளவையார் போரைத் தடுத்து நிறுத்த வேண்டி அதியமான் பொருட்டு, தொண்டைமானிடம் தூது சென்றார். ஒளவையாரை வரவேற்ற தொண்டைமான் தனது படைக் கொட்டிலை அழைத்துச் சென்று காட்டினான். அதைக் கண்ணுற்ற ஒளவையார் அதனைப் புகழ்வது போலவும், அதே நேரத்தில் அதியமான் படைக்கலங்கள் இருக்கும் கொட்டிலை இகழ்வது போலவும் பின்வருமாறு பாடுகிறார்.

'தொண்டைமானே! இப்படைக் கலங்கள் மயில் பீலி அணிந்து, மாலை சூட்டி, திரண்ட வலிய காம்புகள் திருத்தி, நெய் பூசப்பட்டுக் காவலை உடைய உன் அரண்மனையிலே உள்ளன. ஆனால் எம் அரசனாகிய அதியமானின் வேல்கேளா (படைக் கருவிகேளா) பகைவர்களைக் குத்தியமையால் நுனி முறிந்து கொல்லனுடைய உலைக்களத்தில் அன்றோ கிடக்கின்றன.
அணிப்பொருத்தம்

இப்பாடலில், ஒளவையார் தொண்டைமானுடைய படைக்கலங்களைப் புகழ்வதுபோல, அவன் போர்ச்செயல் செய்யாதவன் என மறைமுகமாக இகழ்கிறார். அதே நேரத்தில் அதியமானது படைக் கருவிகள் எல்லாம் கோடும் நுனியும் முறிந்து கொல்லனது உலைக்களத்திலே உள்ளன என்பதன் வாயிலாக, போர்கள் பலவற்றைச் செய்து வெற்றி கண்ட அவனுடைய வீரத்தை மறைமுகமாகப் புகழ்கின்றார். இவ்வாறு தொண்டைமானைப் புகழ்வது போலப் பழித்தும், அதியமானின் பழிப்பது போலப் புகழ்ந்தும் பாடியுள்ளதால் இப்பாடல் வஞ்சப் புகழ்ச்சி அணி ஆயிற்று.

பழிப்பது போலப் புகழ்தல்

பாரி பாரி என்றுபல ஏத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்;
பாரி ஒருவனும் அல்லன் ;
மாரியும் உண்டுஈண்டு உலகுபுரப் பதுவே (புறநானூறு ,107)

பொருள்

பாரி பாரி என்று புலவர்கள் பெரிதாக எல்லோரும் பேசுகின்றீர்களே அவன் ஒருவன் மட்டும் தான் எந்த பயனையும் எதிர்பார்க்காமல் வழங்க கூடிய மனம் படைத்தவனா? இல்லையே மழை கூட உண்டே ? என்று மழையைப் புகழ்வது போல பாரியைப் புகழ்ந்துரைப்பார்.

அணிப்பொருத்தம்

பாரி ஒருவன் தான் பலன் கருதாது வழங்குபவனா என்று பழிப்பது போல் கூறி மழையும் உண்டு என்பதன்மூலம் மழை மட்டுமே அவனது ஈகைக்கு ஒப்பானது எனப் புகழப்படுகிறான்.

புகழ்வது போலப் பழித்தல்

மேய கலவி விளைபொழுது, நம் மெல்லென்
சாயல் தளராமல் தாங்குமால் - சேயிழாய்!
போர்வேட்ட மேன்மைப் புகழாளன், யாம் விரும்பும்
தார்வேட்ட தோள்விடலை தான்

பொருள்

தோழி! கேட்பாயாக! எப்பொழுதும் போர்த் தொழிலை விரும்பிய மேம்பட்ட புகழினை உடையவனும், யாம் விரும்பிக் காதலித்து மாலையிட்ட தோள்களை உடையவனும் ஆகிய தலைவன், எம்மொடு பொருந்திப் புணர்ச்சியினை நிகழ்த்தும் பொழுது, நம்முடைய மென்மைத் தன்மை குன்றாதவாறு நடந்து கொள்கிறான்' என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள்.

அணிப்பொருத்தம்

தலைவி, புணர்ச்சியின்போது தன்னுடைய மென்மைத் தன்மை கெடாதவாறு தலைவன் நடந்து கொள்கிறான் என்று கூறுவது புகழ்வது போலத் தோன்றினாலும், புணர்ச்சிக் காலத்தில் உணர்ச்சி மேலிட்டு அறிவு அழியாமல் இருக்கிறான்; போரில் உள்ள அளவு விருப்பம் காதலில் அவனுக்கு இல்லை எனத் தலைவனைத் தலைவி மறைமுகமாகப் பழிக்கிறாள். இது புகழ்வது போலப் பழித்தல்.

உசாத்துணை

இலேச அணி, தமிழ் இணைய கல்விக் கழகம்

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Aug-2026, 21:38:56 IST