இலேச அணி
மனத்தின் எண்ணங்களை வெளிப்படுத்திக் காட்டும் மெய்ப்பாடுகளை அவை வேறு காரணங்களால் நிகழ்ந்தன என மறைத்துச் சொல்லுவது இலேச அணி. ஒரு நிகழ்வுக்கு எதிர்வினையாக மனதில் தோன்றும் உணர்வினால் உடலில் ஏற்படும் மாறுதல்களை மறைக்க வேண்டி மற்றொரு காரணத்தைக் கூறுதல் இலேசம்.
புகழ்வது போலப் பழித்தலும், பழிப்பது போலப் புகழ்வதும் இலேச அணியின் வகைகளாகவும் கருதப்படுகின்றன.
விளக்கம்
அணியிலக்கணத்தில் ஓர் கருத்தை அல்லது நிகழ்வைக் குறிப்பாக உணர்த்தும் அணிகள் உள்ளன. இலேச அணியும் குறிப்புணர்த்தும் அணியே. மனத்தில் தோன்றும் ஓர் உணர்வைச் சொல்லாமல் மறைத்தாலும் உடலில் (கண், முகம்) தோன்றும் மெய்ப்பாடுகள் நாம் மறைத்த உணர்வை வெளிப்படுத்திக் காட்டிக் கொடுத்து விடுகின்றன. உள்ளக் கருத்தை மறைப்பதற்காக, அம்மெய்ப்பாடுகளுக்கு வேறு காரணம் கற்பித்துக் கூறுவதே இலேச அணி. மறைக்க முயன்றாலும் மனக்குறிப்பு தெரிந்துவிடுதலே இந்த அணியின் சிறப்பு. துயரத்தால் கண்கலங்குபவர் கண்ணில் தூசி விழுந்ததாகக் காரணம் காட்டுவது போன்ற நிகழ்வுகள் இலேச அணிக்கு உதாரணம்.
குறிப்பு வெளிப்படுக்கும் சத்துவம் பிறிதின்
மறைத்து உரையாடல் இலேசம் ஆகும்
(தண்டி, 65)
மனம் கருதியதைப் புறத்தே வெளிப்படுத்திக் காட்டும் குணங்கள் : சொல் தளர்வு, மெய்வியர்ப்பு, கண்ணீர் அரும்பல், மெய்விதிர்ப்பு (உடம்பு நடுக்கம்), மெய் வெதும்பல், மெய்ம்மயிர் சிலிர்த்தல் முதலியன.
ஒருவரைப் புகழ்வது போலப் பழித்தலும், பழிப்பது போலப் புகழ்தலும் இலேச அணியின் ஒரு வகையாகக் கொள்ளப்படுகிறது. இவ்விரண்டையும் ஒரே அணியாகக் கொண்டு அதற்கு வஞ்சப் புகழ்ச்சி அணி என்று பெயரிட்டுக் கூறுவதும் உண்டு.
புகழ்வது போலப் பழித்திறம் புனைதலும்
பழிப்பது போலப் புகழ்புலப் படுத்தலும்
அவையும் அன்னதென்(று ) அறைகுநர் உளரே.
எடுத்துக்காட்டுகள்
கல் உயர்தோள் கிள்ளி பரிதொழுது, கண்பனிசோர்
மெல்லியலார் தோழியர்முன் வேறு ஒன்று -
சொல்லுவரால்,
பொங்கும் படைபரப்ப, மீது எழுந்த பூந்துகள் சேர்ந்து,
எம்கண் கலுழ்ந்தனவால் என்று
பொருள்
மலை போன்ற உயர்ந்த தோள்களை உடைய சோழன் ஏறி வந்த குதிரையைத் தொழுது, (அதாவது அவன் மீது காதல் கொண்டு) அக்காதலால் கண்களில் நீர் தளும்ப நின்ற மெல்லியல் மகளிர் தம்முடைய தோழியரிடம், அவ்வுண்மையை மறைத்தனர்; 'சினத்தை உடைய படைகள் விரைந்து வந்ததால் எழுந்த தூசி உள்ளே புகுந்தமையால், எம்முடைய கண்கள் நீர் சொரிந்தன' என்று நிகழ்ந்ததை மறைத்து வேறு ஒன்றைச் சொல்கின்றனர்.
அணிப்பொருத்தம்
இப்பாடலில், குதிரையின் மேல் ஏறிச் சோழன் உலா வருகிறான். அவன் பின்னால் அவனுடைய பெரும்படை அணி வகுத்து வருகிறது. அப்போது சோழனைக் கண்ட நங்கையர் அவன் மீது மிக்க காதல் கொள்கின்றனர். அந்தக் காதல் முதிர்ச்சியால் அவர்கள் கண்களில் நீர்த்துளிகள் துளிர்க்கின்றன. அதைத் தோழியர் பார்த்துவிட்டால் என்ன செய்வது? என்று நாணத்தால், அவர்களிடம், 'இந்தப் படைகள் பரந்து வருதலால் எழுந்த புழுதி கண்ணினுள் புகுந்துவிட்டது; அதனால் கண்கள் நீர் சொரிகின்றன' என்று கூறுகின்றனர். சோழன் மேல் கொண்ட காதலைப் புறத்தே 'கண்ணீர் அரும்பல்' என்ற சத்துவக் குணம் காட்டிவிடுகிறது, அதை நங்கையர் மறைத்து, அது வேறு ஒன்றால் அதாவது புழுதி படிந்தமையால் நிகழ்ந்தது என்று கூறியமையால் இப்பாடல் இலேச அணி ஆயிற்று.
பழிப்பது போலப் புகழ்தல்
கண்ண னிடுங்கறியுங் காட்டுசிறுத் தொண்டரன்பிற்
பண்ணுசிறு வன்கறியும் பற்றாதோ -தண்ணோடு
மட்டியையும் சோலை மருதீச ரேபன்றிக்
குட்டியையேன் தீத்தீர் குறித்து .(122)
-காளமேகம் தனிப்பாடல் திரட்டு
பொருள்
தன் கண்களைப் பறித்து இறைவனுக்களித்த கண்ணப்பர் அளித்த மாமிசமும், சிறுத்தொண்டர் தன் மகனையே கொன்று சமைத்த கறியும் பற்றாமல் அர்ஜுனன் கொன்ற பன்றிக்காகவும் அவனுடன் சண்டையிட்டீரே!
அணிப்பொருத்தம்
சிவன் மேலுள்ள பெரும் பக்தியால் கண்ணப்பர் தன் கண்களையே பிழிந்து சிவனுக்கு அளித்தார். சிறுத்தொண்டர் ஒரு படி மேலே சென்று தன் மகனையே பிள்ளைக்கறி சமைத்து அளித்தார். அர்ஜுனனை ஆட்கொண்டு பாசுபதம் அளிப்பதற்கு முன் பன்றிக்காகச் சண்டையிட்டதும் பக்தனுக்கு அருள் புரியவே. இகழ்வதுபோல் சிவனின் மேல் பக்தர்கள் கொண்ட பேரன்பும், சிவனின் அருளும் தன்மையும் கூறப்படுகின்றன.
புகழ்வது போலப் பழித்தல்
மேய கலவி விளைபொழுது, நம் மெல்லென்
சாயல் தளராமல் தாங்குமால் - சேயிழாய்!
போர்வேட்ட மேன்மைப் புகழாளன், யாம் விரும்பும்
தார்வேட்ட தோள்விடலை தான்
பொருள்
தோழி! கேட்பாயாக! எப்பொழுதும் போர்த் தொழிலை விரும்பிய மேம்பட்ட புகழினை உடையவனும், யாம் விரும்பிக் காதலித்து மாலையிட்ட தோள்களை உடையவனும் ஆகிய தலைவன், எம்மொடு பொருந்திப் புணர்ச்சியினை நிகழ்த்தும் பொழுது, நம்முடைய மென்மைத் தன்மை குன்றாதவாறு நடந்து கொள்கிறான்' என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள்.
அணிப்பொருத்தம்
தலைவி, புணர்ச்சியின்போது தன்னுடைய மென்மைத் தன்மை கெடாதவாறு தலைவன் நடந்து கொள்கிறான் என்று கூறுவது புகழ்வது போலத் தோன்றினாலும், புணர்ச்சிக் காலத்தில் உணர்ச்சி மேலிட்டு அறிவு அழியாமல் இருக்கிறான்; போரில் உள்ள அளவு விருப்பம் காதலில் அவனுக்கு இல்லை எனத் தலைவனைத் தலைவி மறைமுகமாகப் பழிக்கிறாள். இது புகழ்வது போலப் பழித்தல்.
உசாத்துணை
இலேச அணி, தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 25-Jul-2024, 20:08:22 IST