under review

ரெ. கார்த்திகேசு

From Tamil Wiki
ரெ. கார்த்திகேசு
கார்த்திகேசு
ரெ கார்த்திகேசு

ரெ. கார்த்திகேசு (ஆகஸ்டு 24, 1940 - அக்டோபர் 26, 2016) மலேசியத் தமிழ் எழுத்தாளர். 1973-ல் மாற்று இலக்கிய இதழான 'இலக்கிய வட்டம்' உருவாக முதன்மைக் காரணியாக இருந்தவர். மலேசியாவின் ரசனை விமர்சன மரபு உருவாவதற்கான தொடக்கககட்ட பங்களிப்பினைச் செய்தவர்.

பிறப்பு, கல்வி

ரெ. கார்த்திகேசு ஆகஸ்டு 24, 1940-ல் கெடா மாநிலத்தில் உள்ள பீடோங் நகரில் ரெங்கசாமி-சிந்தாமணி இணையருக்குப்பிறந்தார். 1920-ல் மலாயாக்குப் புலம் பெயர்ந்த இவரது தகப்பனார் ரெங்கசாமி திருச்சியைச் சேர்ந்தவர். இவர் தாயார் மலாயாவைச் சேர்ந்தவர். சைனீஸ் தோட்டத் தமிழ்ப் பள்ளியில் தொடக்கக்கல்வி கற்ற ரெ.கார்த்திகேசு ஆர்வார்ட் தோட்டத் தமிழ்ப் பள்ளியிலும் சுங்கைப் பட்டாணி சரஸ்வதி பள்ளியிலும் தமது கல்வியைத் தொடர்ந்தார். ஆங்கில இடைநிலைக்கல்வி கற்று, 1964-ல் மலாயா பல்கலைக்கழகத்தின் இந்திய பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1977-ல் கொலம்பியாவில் இதழியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1991-ல் இங்கிலாந்தில் தகவல் சாதனத் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்

தனிவாழ்க்கை

ரெ. கார்த்திகேசு 1968-ல் புவனேஸ்வரியைத் திருமணம் செய்துக்கொண்டார்.

1962 முதல் 1974 வரை ரெ.கார்த்திகேசு மலேசிய வானொலியில் ஒலிபரப்பாளராகவும், நிர்வாகியாகவும் பணியாற்றியுள்ளார். பின்னர் 1975 முதல் 1991 வரை மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் 1991 முதல் 1993 வரை மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராகவும், அதே பல்கலைக்கழகத்தில் 1994-ல் பேராசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

1952-ம் ஆண்டு தமிழ் முரசு மாணவர் மணிமன்ற மலரில் ரெ. கார்த்திகேசுவின் முதல் சிறுகதை வெளிவந்தது. அது அவரைத் தொடர்ந்து எழுத ஊக்குவித்தது. அவரது முதல் சிறுகதை தொகுப்பு சென்னை தமிழ் புத்தகாலத்தின் வழி 1974-ல் 'புதிய தொடக்கங்கள்' எனும் தலைப்பில் வெளியீடு கண்டது. தமிழகத்திலிருந்து மலாயா பல்கலைக்கழகத்திற்கு நவீன இலக்கியம் போதிக்க வந்த முனைவர் இரா. தண்டாயுதம் அவர்களின் தொடர்பால் 1973-ல் 'இலக்கிய வட்டம்' எனும் சிற்றிதழ் முயற்சியைத் தொடங்கினார். அன்றை இளம் எழுத்தாளர்களான எம். குமாரன், அரு. சு. ஜீவானந்தன், மை தீ சுல்தான் போன்றவர்களின் மாற்று இலக்கிய முயற்சிக்கு அவ்விதழ் சிறந்த களமாக அமைந்தது. இவரின் ஆக்கங்கள் மலேசிய தேசியப் பத்திரிகைகளிலும் இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. 'ஃபாஜார் பக்தி' என்ற மலாய் பதிப்பகம் இவரது குழந்தைகளுக்கான கதைகளை 1977-ல் நூலாக வெளியிட்டுள்ளது. அத்துடன், தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் இலக்கிய ஏடுகளான 'தீபம்', 'கணையாழி', 'கல்கி' போன்றவற்றிலும் 'இந்தியா டுடே' இதழ்களிலும் இவர் படைப்புகள் வெளிவந்துள்ளன. இணையப் பயன்பாட்டு பழக்கமும் ஆங்கில அறிவும் இவருக்கு வெளிநாடுகளில் அறிமுகங்களை ஏற்படுத்தியது. இதன் வழி உலகிற்கு மலேசியத் தமிழ் இலக்கியம் குறித்த அறிமுகங்களைச் செய்வதில் பங்காற்றினார். மலேசியாவில் வெளிவரும் பெரும்பாலான புனைவுகள் குறித்த உரையாடலைத் தன் ரசனை விமர்சனத்தால் உருவாக்கியவர் ரெ. கார்த்திகேசு. ஐந்து சிறு­கதைத் தொகுப்­பு­கள், ஐந்து நாவல்­கள், இரண்டு விமர்­ச­னக் கட்டுரை நூல்கள் ஆகிய 12 தமிழ் நூல்களை அவர் எழு­தி­னார். மலாய் மொழியில் இரு நூல்கள் வெளிவந்துள்ளன. ரெ.கார்த்திகேசு மொழிபெயர்த்த ப. சிங்காரத்தின் 'கடலுக்கு அப்பால்' என்ற நாவல் Beyond The Sea எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் வெளிவந்தது.

சமூகச் செயல்பாடுகள்

1979-ல் சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின் மலேசியப் பிரிவின் நிர்வாக உறுப்பினராகப் பணியாற்றினார் ரெ. கார்த்திகேசு. அதே சமயம் பினாங்கில் ராம சுப்பையா மாணவர்களுக்கான உதவித்தொகை நிதியின் கிளைக் குழு உறுப்பினராகவும் இருந்து செயல்பட்டார். பல்கலைக்கழக பேராசிரியராக பல சர்வதேச மாநாடுகளில் ஆய்வுக்கட்டுரைகளைப் படைத்ததோடு கருத்தரங்குகளையும் ஒருங்கிணைத்துள்ளார். மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் துணைத் தலைவராகவும் நீண்ட காலம் பொறுப்பு வகித்தார்.

இலக்கிய இடம்

ரெ. கார்த்திகேசு தன்னை வணிக எழுத்தாளராகவே நிறுவிக்கொண்டவர். நேர்காணல்களிலும் தனக்கு விருப்பமான படைப்புகள் என வணிக இலக்கியங்களையே முன்வைத்தவர். ஆனால் அவர் விரிவான வாசிப்பை உடையவராக இருந்தார். எனவே மாற்று முயற்சிகள் கொண்ட படைப்புகளுக்கான களம் வேண்டும் என்பதில் அக்கறையாகச் செயல்பட்டார். 'இலக்கிய வட்டம்' இதழ் தொடங்கி 'வல்லினம்' அச்சு இதழ் வரை அவரது பங்களிப்பு தொடர்ந்துள்ளது. குறிப்பிடத்தக்க சில சிறுகதைகளையும் எழுதியுள்ளார். ப. சிங்காரத்தின் 'கடலுக்கு அப்பால்' என்ற நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

இறப்பு

அக்டோபர் 26, 2016-ல் ரெ. கார்த்திகேசு மரணமடைந்தார்.

பரிசுகளும் விருதுகளும்

  • தமிழவேள் கோ. சாரங்கபாணி பதக்கம் - 1987
  • பேரரசரிடமிருந்து KMN விருது - 1996
  • தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் விருது - அந்திம காலம் (1998)
  • கணையாழி இதழ் வழங்கும் சம்பா நரேந்திரர் பரிசு (1999)
  • கல்கி வைரவிழா சிறுகதை போட்டி - முதல் பரிசு (2002)
  • தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் விருது - ஊசி இலை மரம் (2003)
  • திண்ணை மரத்தடி அறிவியல் புனைக்கதை போட்டி - இரண்டாம் பரிசு (2005)
  • 'Beyond The Sea என்ற மொழிப்பெயர்ப்பு பணிக்கு கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருது (2019)

நூல்கள்

நாவல்
  • வானத்து வேலிகள் - 1980
  • தேடியிருக்கும் தருணங்கள் - 1993
  • அந்திம காலம் - 1998
  • காதலினால் அல்ல - 1999
  • சூதாட்டம் ஆடும் காலம் - 2005
சிறுகதை
  • புதிய தொடக்கங்கள் - 1974
  • மனசுக்குள் - 1995
  • இன்னொரு தடவை 2001
  • ஊசி இலை மரம் - 2003
  • நீர் மேல் எழுத்து - 2011
ஆய்வு நூல்
  • 'மலேசியத் தொலைக்காட்சியின் வரலாறு' (மலாய் மொழி) 1994
விமர்சன நூல்
  • விமர்சன முகம் - 2004
  • விமர்சன முகம் 2 - 2011
மொழிப்பெயர்ப்பு
  • Beyond The sea (தமிழில் கடலுக்கு அப்பால்) - 2018

உசாத்துணை

  • மலேசிய தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம்
  • ரெ. கார்த்திகேசு நேர்காணல் - வல்லினம் 2006

இணைய இணைப்பு


✅Finalised Page