under review

மலாக்கா மன்னர்கள் வரலாறு

From Tamil Wiki
மலாக்கா 01.jpg

மலாக்கா மன்னர்கள் வரலாறு (1968) மலாய் மன்னர்களின் வரலாறு. முனைவர் இராம சுப்பையாவினால் மொழிப்பெயர்ப்பக்கப்பட்ட நூல். மலாய் மொழியில் எழுதப்பட்ட 'செஜாரா மலாயு' அல்லது 'சுலசத்துஸ் சலதின்' என்ற மூல நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பைச் சார்ந்து இந்த மொழியாக்கத்தை அவர் செய்துள்ளார். இந்நூல் மலாய் மொழி மரபு இலக்கிய அறிமுகத்தையும் மலாக்கா சுல்தான்களின் ஆட்சி காலம் பற்றிய வரலாற்றையும் இதிகாச கதைகளாக அறிமுகப்படுத்துகின்றது. பண்டைய மலாய் மொழியின் செல்வாக்கையும் அதன் இலக்கிய அழகியல் கூறுகளையும் இந்நூலை உறுதிபடுத்துகின்றது.

மூல நூல் குறித்த தகவல்கள்

Malay-annals1.jpg

மலாய் மரபு இலக்கியத்தின் மிகப் புகழ்பெற்ற நூல் 'செஜாரா மலாயு'. 'சுலசத்துஸ் சலதின்' (Sulalatus Salatin) அல்லது 'செஜாரா மலாயு' (Sejarah Melayu) என்பது மலாக்கா மன்னர்களின் பரம்பரை வரலாற்றையும் அவர்களின் சாதனைகளையும் வீழ்ச்சியையும் பதிவு செய்துள்ள மலாய் ஆவணமாகும். இந்நூல் எழுதப்பட்ட ஆண்டு, எழுதியவர் எழுதிய இடம் போன்ற பல்வேறு விபரங்களும் ஆய்வாளர்களின் விவாதத்திற்குரியனவாகவே உள்ளன.

15-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒராங் காயா சோகோ என்பவரே இந்நூலின் மூல ஆசிரியர் என்ற வாதங்கள் உள்ளன. அதேப்போல் ‘ஹிகாயட் மெலாயு’ எனும் மூல நூலை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டதே 'செஜாரா மலாயு' என்ற கருத்தும் ஆய்வாளர்களிடம் உள்ளது. எனினும் துன் ஶ்ரீ லானங் எனும் ஜொகூர் மாநில முதலமைச்சர் 1612-ம் ஆண்டு செம்மையாக்கம் செய்து வெளியிட்ட பதிப்பே பிரபலமானதாக உள்ளது. இந்நூலில் முன்னுரையாக துன் ஶ்ரீ லானாங் எழுதியுள்ள முகாஹ்திமா(mukadimah) இந்நூலின் மூலம் பற்றி சில தகவல்களைத் தருகின்றது. ஆகவே துன்ஶ்ரீ லானாங்கே 'செஜாரா மலாயு' வின் நூலாசிரியர் என்ற கருத்தை தென்கிழக்காசிய ஆய்வாளர்கள் சிலர் முன்வைக்கின்றனர்.

இந்நூலின் முதல் வடிவம் பதினான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். அதேப் போல் இந்நூல் மூல வடிவம் (ஹிக்காயட் மெலாயு) ‘கோவா’ எனும் நகரிலிருந்து (அக்காலகட்டத்தில் இந்தியா, சுலாவெசி தீவு, பஹாங், போன்ற பல இடங்களில் கோவா என்ற பெயரில் நகரங்கள் இருந்துள்ளன) கொண்டுவரப்பட்டு துன் ஶ்ரீ லானாங்கால் முழுமை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் பலரிடம் உள்ளது. காகிதத்தில் ஜாவி மொழியில் காவிய நடையில் எழுதப்பட்ட இந்நூல் பல்வேறு நபர்களால் பிற்காலத்தில் எழுதப்பட்டும் செம்மைபடுத்தப்பட்டும் பதிப்பிக்கப்பட்டுமுள்ளது. இந்நூலில் குறைந்தது 29 முதல் 32 வகை கையெழுத்துப் படிகளும் 4 பதிப்புகளும் உள்ளன. முன்ஷி அப்துல்லா (1796-1854) என்கிற புகழ் பெற்ற நவீன மலாய் மொழி பண்டிதரும் ஒரு பதிப்பை வெளியிட்டுள்ளார். ஆகவே இந்நூல் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு நபர்களால் தொகுக்கப்பட்டவை. அவற்றிக்கிடையே பல இடங்களில் பாடபேதங்கள் காணப்படுகின்றன. எனினும் மைய கதையாடல் ஒன்றுக்கொண்டு ஒத்து போகின்றது.

மலாய் மொழி மூல நூலிலிருந்து டச்சு, போர்த்துகீசிய, ஆங்கில மொழிகளிலும் இந்நூல் 18-ம் நூற்றாண்டுகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. ராபிள்ஸின் கையெழுத்துப் படி எண் 18 ( Raffles Manuscript No 18) என்பது மிகப்பழமையான ஆங்கில மொழியாக்கம் என்பது ஆய்வாளர் முடிவு. இந்நூல் ஆங்கிலத்தில் Malay Annals என்று குறிப்பிடப்படுகின்றது.

உள்ளடக்கம்

Sejarah melayu 2(1).jpg

இந்நூல் மலாக்கா மன்னர்களின் வரலாற்றை கதையாக கூறுகின்றது. ரோமானிய நாட்டை சேர்ந்த ராஜா இஸ்காந்தர் என்பவன் கிழக்கு நாடுகளை காண படையோடு வந்தபோது ஹிந்தி நாட்டை கீடா ஹிந்தி என்ற மன்னன் ஆண்டுவந்தான். ராஜா இஸ்காந்தருக்கும் கீடா ஹிந்திக்கும் நடந்த போரில் கீடா ஹிந்தி தோல்வி கண்டு இஸ்லாத்தை ஏற்றதோடு தன் மகள் ஷாருல் பாரியா என்ற அழகியை ராஜா இஸ்காந்தருக்கு மணமுடித்து வைத்தான். அவர்களது வாரிசுகளின் நீண்ட பரம்பரையில் இருந்து பல தலைமுறைகள் கடந்து மலாக்கா மன்னர்களின் வரலாறு தொடங்குவதாக செஜாரா மலாயு சித்தரிக்கிறது. ஆயினும் பிறகால மலாக்கா சுல்தான்கள் பற்றிய தகவல்களே இந்நூலில் அதிகம் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக மலாக்கா அரசின் கடைசி சுல்தான் முகமது ஷா (Sultan Mahmud Shah) பற்றிய தகவல்கள் பதிநான்கு பகுதிகளில் இடம்பெற்றுள்ளது.

நூலின் சிறப்பு

இந்நூல், அக்கால கட்ட மலாய் சமூகத்தின் வாழ்வியலையும் பிற சிற்றரசுகள் பற்றிய பதிவுகளையும் கொண்டுள்ளதால், பதினைந்தாம் நூற்றாண்டு கால வரலாற்றையும் மலாய் சமூகத்தின் இனவரைவு நூல் என்கிற தகுதியையும் பெறுகின்றது. மலாக்கா, பஹாங் ஜொகூர், பாசாய் போன்ற பல நாட்டு சுல்தான்களின் ஆட்சி காலத்தில் நடந்த பல்வேறு சம்பவங்களை சுவையான கதைகளாக இந்நூல் பதிவுசெய்துள்ளது.

மறுகண்டுப்பிடிப்பு

பொது வாசிப்பிலிருந்து சில நூற்றாண்டுகள் மறைந்திருந்த செஜாரா மலாயு நூல், 1709- ஆம் ஆண்டு பெத்ரூஸ் வான் டி வொர்ம் எழுதிய ஒரு ஆங்கில நூலின் மேற்கோளின் வழி மறு கண்டுபிடிப்பு செய்யப்பட்டது. 1821- ஆம் ஆண்டில் ஜோன் லெய்டன் என்பவர் இந்நூலை ஆங்கில மொழியாக்கம் செய்த பின்னர் விரிவான மேற்கத்திய வாசிப்புக்கும் ஆய்வுக்கும் உட்பட்டது. .

இராம சுப்பையாவின் தமிழாக்கம்

இராம சுப்பையா

இந்நூலை தமிழாக்கம் செய்த முனைவர் இராம சுப்பையா மலாயா பல்கலைக்கழக இந்தியத்துறை முன்னால் தலைவர். மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை வெளியிட்ட இந்நூலுக்கு மலாயா நாட்டுக் கோட்டை செட்டியார்கள் சங்கம் நிதி வழங்கியுள்ளது.

செஜாரா மலாயு என்ற சொற்றொடரில் உள்ள ‘மலாயு’ என்ற சொல் மலாய் மக்கள், மொழி, இலக்கியம், வரலாறு என அனைத்தையுமே குறிப்பிடுகிறது. எனவே செஜாரா மலாயு (செஜாரா என்பது வரலாறு) 'மலாய் வரலாறு' என்று பொருள்படும். ஆயினும் இராமா சுப்பையா, இந்நூல் மலாக்கா மன்னர்கள் பற்றியே பெரிதும் கூறிச் செல்வதால் இந்நூலுக்கு தமிழில் ‘மலாக்கா மன்னர்கள் வரலாறு’ என்ற பெயரே பொருத்தமானது என்று முடிவு செய்துள்ளார்.

இராமா சுப்பையா, செஜாரா மலாயுவின் ஆங்கில மொழியாக்கம், ராபிள்ஸின் கையெழுத்துப் படி எண் 18 ( Raffles Manuscript No 18) என்ற பழமையான ஆங்கில மொழியாக்கத்தின் அடிப்படையில் தமிழ் மொழியாக்கத்தைச் செய்துள்ளார். எளிய தமிழ் உரைநடையில் எழுதப்பட்ட இந்நூல் முப்பத்தோரு பகுதிகளைக் (236 பக்கம்) கொண்டுள்ளது. மலாய் மொழியில் மிகச் சிக்கலான பல பகுதிகளை மிக எளிமையாகவும் சுவை குன்றாமலும் இராமா சுப்பையா தமிழாக்கம் செய்துள்ளார். அவ்வகையில் இராமா சுப்பையாவின் முதன்மை பங்களிப்புகளில் ஒன்றாக ‘மலாக்கா மன்னர் வரலாறு’ நூல் திகழ்கிறது.

உசாத்துணை


✅Finalised Page