under review

மகட்பால் இகல்

From Tamil Wiki

மகட்பால் இகல் உழிஞைத் திணையின் துறைகளில் ஒன்று. (பால் - பகுதி, பக்கம்) நொச்சி மன்னனின் மகள் (அவளை உழிஞை மன்னன் மணக்க ஆவல் கொண்டதால்) காரணமாக ஏற்படும் முரணைக் கூறுகிறது.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் மயில் போன்ற சாயலையுடைய நொச்சி மன்னனுடைய மகளை விரும்பிய உழிஞையானது நிலைமையைக் கூறுவது என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

மயில் சாயல் மகள் வேண்டிய
கயில் கழலோன் நிலை உரைத்தன்று(கொளு 6.29)

வெண்பா

அந்தழை அல்குலும் ஆடமை மென் தோளும்
பைந்தளிர் மேனியும் பாராட்டித் - தந்தை
புறமதில் வைகும் புலம்பே தருமே
மறமதில் மன்னன் மகள் (123)

பொருள் : நொச்சி மன்னனுடைய மகள் தன் மெல்லிய தோள், மாந்தளிர் நிறமுடைய மேனி ஆகியவற்றால், தன் தந்தையின் மதிலின் புறத்தே படையுடன் நிற்கும் உழிஞை வேந்தனுக்கு, தனிமை என்னும் ஏக்கத்தை உண்டாக்குவாள்.

உசாத்துணை

உழிஞைத்திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 25-Jul-2025, 21:07:18 IST