பொருந்தில் இளங்கீரனார்
பொருந்தில் இளங்கீரனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல்கள் மூன்று. புறநானூறில் ஒன்றும் அகநானூறில் இரண்டு பாடல்களும் இடம்பெற்றுள்ளன.
வாழ்க்கை குறிப்பு
பொருந்தில் இளங்கீரனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். பொருந்தில் என்னும் ஊரினை சேர்ந்தவர். இளங்கீரன் என்னும் இயற்பெயர் கொண்டவர்.
இலக்கிய வாழ்க்கை
பொருந்தில் இளங்கீரனார் பாடிய பாடல்கள் புறநானூறில் 53-வது பாடலாகவும், அகநானூறில் 19, 351-வது பாடல்களாகவும் இடம்பெற்றுள்ளன. புறநானூறு 53-ம் பாடலில் சேரன் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் படை சிறப்பையும் வெற்றியையும் சிறப்பித்து வாகைத் திணையில் அரச வாகைத் துறையில் பாடியுள்ளார். இப்பாடலில் கபிலர் குறித்து சிறப்பித்து கூறப்பட்டுள்ளது. அகநானூறு பாடல்கள் 19, 351 இரண்டும் பாலைத் திணையில் அமைந்தவை. இருபாடல்களும் முறையே பொருளீட்டும் பொருட்டு பிரிந்து செல்லும் தலைவன், தலைவியை நினைத்து வருந்துவது மற்றும் பொருளீட்டிக் கொண்டு திரும்பி வரும் தலைவன், தலைவியை நினைத்துக் கொள்வதும் என்று தற்கூற்றாக அமைந்துள்ளன.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
புறநானூறு - 53
- சேரன் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் படை வெற்றியை சிறப்பித்து பாடுகிறது. சேரனின் நகரில் உள்ள வீட்டு மாடங்களில் பதிக்கப்பட்டுள்ள மணிகள் முத்து சிப்பியில் உள்ள முத்தினை போல ஒளிவீசுவதாக கூறுவதன் வாயிலாக சேரனின் நாட்டு வளத்தை கூறியுள்ளார்.
- செல்வக்குடியில் பிறந்த மகளிர் கையில் வளையல் அணிந்து வீட்டு முற்றத்தில் மணல் பரப்பி கழஞ்சு காய்கள் விளையாடுவது வளத்தின் அடையாளமாக இருந்துள்ளது.
- சேரன் மாந்தரஞ்சேரல் இரும்பொறை யானைப்படையும் குதிரைப்படையும் காலாட்படையும் கொண்டு போரிட்டு புகழடைந்தான். அவனது புகழ் விரித்துரைத்தால் முடிவிலாது விரியக்கூடிய தன்மை கொண்டதும் சுருக்கினால் சுருக்க முடியாத அளவுக்கு பெருமை மிக்கதும் என்று உயர்வு நவிற்சியாக கூறப்பட்டுள்ளது.
- புலவர் கபிலர் பொருள் மிக்க செய்யுளை இயற்றவல்லவரும் பரந்த அறிவும் புகழும் கொண்டவர் என்று பாராட்டப் பெற்றுள்ளார். கபிலர் போன்று அறிவுமிக்க புலவரால் பாராட்ட பெறுதலை சிறப்புத்தகுதியாக மன்னர்கள் கருதியிருக்கிறார்கள்.
- தன்னை போற்ற கபிலர் இல்லையே என்று வருந்தும் சேரன் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் மனக்குறையை தீர்க்க தன்னை போன்ற புலவர்கள் பாடுகிறோம் என்கிறார்.
- புகழ் மிக்க நல்லோரை பாடுவது புலவர்களின் கடமையாக கொள்ளப்பட்டுள்ளது.
அகநானூறு - 19,351
- ஆடவர் பொருளீட்ட செல்லும் பாதையானது மரங்கள் இலைகளை உதிர்த்து வறண்டு அனல் வீசுவதாக இருக்கும். அப்பாதையின் ஓரம் அமைந்துள்ள தங்குமிடமாக இருக்கும் குன்றுகளில் பருந்துகளும் ஆந்தைகளும் வசிக்கும்.
- வறண்ட காட்டு பாலைவனத்தில் வழியிலேயே இறந்து விடுபவர்களின் பிணங்களை பருந்து, ஆந்தை முதலான பறவைகள் கொத்தி தின்னும்.
- பொருளீட்ட செல்லும் ஆடவர் செல்லும் கடும்பயணத்தை எண்ணி, அவர்தம் மனைவியர் சென்றவர்கள் மீண்டு வருவார்களா என்று கவலையில் ஆழ்ந்து நோய்வாய்ப்படுவர்.
- கணவரை பிரிந்த மகளிரின் உடல் மெலிந்து பொலிவிழந்து காணப்படும். அவர்கள் உடல் நலனை பராமரிக்காமல் விட்டுவிடுவதால் தலைமுடி சிக்காகி பரட்டை தலையுடன் காணப்படுவர். சிலர் மாலை நேரத்தில் ஏற்றி வைக்கும் விளக்கின் அடி நிழலை நோக்கி வெறித்திருப்பர். சிலர் நாட்களை குறிப்பதற்கா சுவற்றில் வட்டங்களை வரைந்து வைத்து பார்த்து எண்ணி ஏங்கி அழுது சோர்ந்து படுக்கையில் வீழ்வர். படுக்கையில் படுத்து கொண்டு பல்லியின் குரலை கேட்டு கொண்டிருப்பர். சிலர் கணவர் சென்ற காட்டுவழியில் பார்த்து நின்று ஏங்குவர். அவர்கள் வீடும் கண்ணீர் மார்பில் தொங்கும் பொன்னலான நகைகளில் பட்டு தெறிக்கும்.
- தமது மனைவியரை பிரிந்த கணவர்கள் செல்லும் வழியின் கடுமையை உணர்ந்து பயணத்திற்கு இடையிலேயும் பொருளீட்டி முடித்த பின்னும் மனைவியரை எண்ணி வருந்துவர்.
பாடல் நடை
புறநானூறு - 53
- திணை: வாகை
- துறை: அரச வாகை
முதிர் வார் இப்பி முத்த வார் மணல்,
கதிர் விடு மணியின் கண் பொரு மாடத்து,
இலங்கு வளை மகளிர் தெற்றி ஆடும்
விளங்கு சீர் விளங்கில் விழுமம் கொன்ற
களம் கொள் யானை, கடு மான், பொறைய!
விரிப்பின் அகலும்; தொகுப்பின் எஞ்சும்;
மம்மர் நெஞ்சத்து எம்மனோர்க்கு ஒருதலை
கைம்முற்றல, நின் புகழே, என்றும்;
ஒளியோர் பிறந்த இம் மலர் தலை உலகத்து
வாழேம் என்றலும் அரிதே 'தாழாது
செறுத்த செய்யுள் செய் செந் நாவின்,
வெறுத்த கேள்வி, விளங்கு புகழ்க் கபிலன்
இன்று உளன் ஆயின், நன்றுமன்' என்ற நின்
ஆடு கொள் வரிசைக்கு ஒப்ப,
பாடுவல் மன்னால், பகைவரைக் கடப்பே.
அகநானூறு - 351
- திணை: பாலை
- கூற்று: பொருள் முற்றி மறுத்தராநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
வேற்று நாட்டு உறையுள் விருப்புறப் பேணி,
பெறல் அருங் கேளிர் பின் வந்து விடுப்ப,
பொருள் அகப்படுத்த புகல் மலி நெஞ்சமொடு
குறை வினை முடித்த நிறைவு இன் இயக்கம்
அறிவுறூஉம்கொல்லோ தானே கதிர் தெற,
கழல் இலை உகுத்த கால் பொரு தாழ் சினை,
அழல் அகைந்தன்ன அம் குழைப் பொதும்பில்,
புழல் வீ இருப்பைப் புன் காட்டு அத்தம்,
மறுதரல் உள்ளமொடு குறுக, தோற்றிய
செய் குறி ஆழி வைகல்தோறு எண்ணி,
எழுது சுவர் நினைந்த அழுது வார் மழைக் கண்
விலங்கு வீழ் அரிப் பனி பொலங் குழைத் தெறிப்ப,
திருந்துஇழை முன்கை அணல் அசைத்து ஊன்றி,
இருந்து அணை மீது, பொருந்துழிக் கிடக்கை,
வருந்து தோள் பூசல் களையும் மருந்து என
உள்ளுதொறு படூஉம் பல்லி,
புள்ளுத் தொழுது உறைவி செவிமுதலானே?
உசாத்துணை
- சங்க இலக்கிய பொருட்களஞ்சியம் - 5:தமிழ் பல்கலைகழகம்
- புறநானூறு - 53:Tamilvu
- அகநானூறு - 19:Tamilvu
- அகநானூறு - 351:Tamilvu
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-Dec-2025, 09:47:06 IST