under review

பேய்ச்சி (நாவல்)

From Tamil Wiki
PEICHI.jpg

பேய்ச்சி எழுத்தாளர் ம.நவீன் எழுதிய முதல் நாவல். இந்நாவல் டிசம்பர், 2019-ம் ஆண்டு வெளியீடு கண்டது. 1981-ல் லூனாஸ் எனும் சிறுநகரில் நடந்த விஷச் சாராய சாவுகளின் பின்னணியில் இந்நாவல் புனையப்பட்டுள்ளது.

டிசம்பர் 18, 2020-ல் கெட்டவார்த்தைகள் மற்றும் ஆபாசமான வர்ணனைகளைக் கொண்டுள்ளது என்ற காரணத்தின் அடிப்படையில் இந்நாவல் மலேசிய அரசால் தடைசெய்யப்பட்டது. மலேசியாவில் தடை செய்யப்பட்ட முதல் தமிழ் நாவல் இதுவே.

பதிப்பு

ம. நவீன் இந்நாவலை மே, 2019-ல் எழுதினார். இந்நாவலின் கதையோட்டத்தை முழுமையாக உருவாக்கி முடிக்க அவருக்கு இரண்டு வாரங்கள் தேவைப்பட்டன. இந்நாவலை வல்லினம் - யாவரும் பதிப்பகங்கள் இணைந்து பதிப்பித்தன.

கதை சுருக்கம்

ஓலம்மா எனும் எளிய பெண்ணின் சீண்டப்படும் பேரன்பு, பேய்க்குணமாக பரிணாமம் எடுத்து அழிவுகளை உருவாக்குவதை இந்நாவல் சித்தரிக்கிறது. புலம்பெயர்ந்த நாட்டுக்கு எடுத்துச் செல்லப்படும் நாட்டார் வழிபாட்டிற்கு ஒரு கொலைக்கல் குறியீடாக மாறுவதையும் அது மெல்ல தனக்கான சடங்குகளை உருவாக்கிக்கொள்ளும் பரிணாமத்தையும் இந்நாவல் விரிவாகப் பேசுகிறது. தோட்டத் துண்டாடல்கள், ரப்பரிலிருந்து செம்பனைக்கு மாறும் தோட்டங்களின் நிலை, சீனர்கள் தங்கள் வணிகத்துக்காகத் தோட்ட மக்களைப் பலியாக்கும் அரசியல், கள்ளைத் தடைச் செய்துவிட்டு சீனர்களின் மலிவான சம்சுவைத் தமிழர்களுக்குப் பழக்கப்படுத்தும் சூழ்ச்சி என இந்நாவல் வலுவான கதைப்பின்னலைக் கொண்டது. பேய்ச்சி எனும் நாட்டார் தெய்வம் ஒரு குறியீடாக இந்நாவல் முழுவதும் விரவி தாய்மையின் வெவ்வேறு பரிமாணங்களை ஆராய்கிறது.

கதை மாந்தர்கள்

  • அப்போய் - ஓலம்மாவின் பேரன், நிஜப்பெயர் குமரன்
  • கருப்பன் – ஓலம்மா வளர்த்த நாய்க்குட்டி
  • ஓலம்மா - அப்போயின் பாட்டி முதன்மை பாத்திரம்
  • மணியம் – ஓலம்மாவின் கணவன்
  • குமரன் – ஓலம்மாவின் ஊனமுற்ற மகன்
  • முனியம்மா – ஓலம்மாவின் மகள், அப்போயின் அம்மா
  • ராமசாமி - நாட்டு வைத்தியர், பெண் தன்மை உடையவர்
  • கொப்பேரன் - ராமசாமியின் அப்பா – தமிழகத்தில் இருந்து மலேசியா வருபவர்.
  • காத்தாயி - ராமசாமியின் அம்மா தமிழகத்தில் உள்ள பாத்திரம்
  • சின்னி - சாராயம் விற்கும் சீனப் பெண்

பின்புலம்

'பேய்ச்சி' நாவல் கெடா மாநிலத்தில் அமைந்துள்ள லுனாஸ் என்ற சிறுநகரையே முதன்மைக் களமாகக் கொண்டுள்ளது. லுனாஸில் விஷச் சாராயம் குடித்து இறந்தவர்களின் கருப்பு வரலாற்றையே இந்நாவல் பின்புலமாக கொண்டு நகர்கிறது. இந்த வரலாற்றை விரிவாக பேசிய முதல் நாவல் இது. கெடா மாநிலத்தை முதன்மைக் களமாகக் கொண்டிருந்தாலும் நாட்டாரியல் தெய்வம் சார்ந்த பின்கதை தமிழகத்திலிருந்தே சொல்லப்பட்டுள்ளது. எனவே, தமிழகச் சூழலும் கதையின் வலுவான களமாகவே அமைந்துள்ளது. மலேசியத் தமிழர்கள் வரலாற்றில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய தோட்டதுண்டாடலும் கதையில் நுட்பமான காட்சிகளாக இடம்பெற்றுள்ளது.

இலக்கிய இடம்

"அடிப்படையில் இது மூன்று தலைமுறைப் பெண்களின் கதை, அவர்களுக்குள் ஓடும் 'பேய்ச்சி’ என்னும் உளநிலை பரிணாமம். அது ஒரு தொன்மம் அல்ல. தற்காத்து தற்கொண்டார் பேணி ஆன்ற சொற்காத்து நிற்பதற்கான ஆற்றலை மரபிலிருந்து அவர்கள் கண்டடையும் ஊற்று. ஒரு மக்களின் புலம் பெயர்ந்த புதிய மண்ணில் நிலைகொள்வதைப் பற்றிய வரலாற்றுச் சித்திரம் என்று புறவயமான கட்டமைப்பைக் கொண்டு பேய்ச்சி நாவலை வகுத்துவிடலாம். ஆனால், அதை ஒரு ஆன்மீகமான பரிணாமாகவும் ஆசிரியரால் வகுத்துவிட முடிகிறது என்பதனால்தான் இந்நாவலை முதன்மையாகக் கருதுகிறேன்." என எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.

சர்ச்சை

'பேய்ச்சி' மலேசியாவில் வெளிவந்த தமிழ் நாவல்களில் அதிகம் பேசப்பட்ட நாவல். மலேசியாவில் தடை செய்யப்பட்ட பிறகு பல ஊடகங்களில் இந்நாவல் பேசுபொருளானது. மலேசியாவில் சர்ச்சைக்குள்ளாகி ஓராண்டுக்குப் பிறகே தடை செய்யப்பட்டதால் அதற்குமுன்பே பரவலான வாசகர்களையும் சென்று சேர்ந்தது. இந்நாவல் தடை செய்யப்பட்டதும் ம.நவீன் மலாய் இலக்கிய உலகத்தில் பரவலாக அறியப்பட ஒரு காரணமானது. ம நவீனின் படைப்புகள் வெவ்வேறு மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்டு பரந்த வாசிப்புக்கு உள்ளாகின.

உசாத்துணை


✅Finalised Page