under review

பூலோக விநோதக் கதைகள்

From Tamil Wiki
பூலோக விநோதக் கதைகள்: முதல் தொகுதி (இரண்டாம் பதிப்பு)

பூலோக விநோதக் கதைகள் (1897) பா.அ.அ. இராஜேந்திரம் பிள்ளை எழுதிய நூல். 1897 தொடங்கி 1922 வரை, ஐந்து தொகுதிகளாக, ஒவ்வொறு தொகுதியும் பல நூற்றுக்கணக்கான பக்கங்களில் வெளிவந்தது.

பூலோக விநோதக் கதைகளில் இடம் பெற்ற ஓவியம்

பிரசுரம், வெளியீடு

பா.அ.அ. இராஜேந்திரம் பிள்ளை, மஹா விகட தூதன் என்ற இதழை 1886-ல் தொடங்கினார். அதில் பல்வேறு கதை, கட்டுரைகளை, வேடிக்கை, விநோதத் துணுக்குகளை எழுதி வந்தார். அவற்றுள் பூலோக விநோதக் கதைகளின் சில பகுதிகளும் அடக்கம்.

பா.அ.அ. ராஜேந்திரம் பிள்ளை, பூலோக விநோதக் கதைகளை நூல்களாகத் தொகுத்து வெளியிட்டார். முதல் இரு தொகுதிகள் 1897-லும், மூன்றாம் தொகுதி 1898-லும், நான்காம் தொகுதி 1899-லும், ஐந்தாம் தொகுதி 1922-லும் வெளிவந்தது. முதல் தொகுதி விக்டர் அச்சகத்திலும், இரண்டாவது தொகுதி மெர்க்குரி அச்சகத்திலும் அச்சிடப்பட்டு வெளியானது. ஆயிரக்கணக்கான பிரதிகள் விற்றன. படங்களுடன் வெளிவந்த நூலான இது, வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

நூல் பற்றிய குறிப்பு

பூலோக விநோதக் கதைகள் குறித்து அயோத்திதாச பண்டிதரின் தமிழன் இதழில் வெளியான விளம்பரக் குறிப்பு: “5-வது வால்யம் தயாராய்விட்டது பூலோக வினோதக் கதைகள். நான்காம் வால்யம், மூன்றாம் வால்யம், இரண்டாம் வால்யம், முதல் வால்யம். அநுபவ ஞானநூல் – படங்களுடன். ஆழ்ந்த இரகசியங்களையும், அனுபவ ஞானங்களையும் திரட்டி, சென்னை மஹாவிகடதூதன் பத்திராதிபரால் இயற்றப்பட்ட ‘பூலோக வினோதக் கதை’யின் ஐந்து வால்யம்கள் இப்போது விற்பனைக்குத் தயாராயிருக்கிறது. இது தற்காலம் பயன்தரத்தக்க தமிழ் நூல்களில் ஒன்றென்பதற்குச் சந்தேகமில்லை. இதில் மானிடர்க்கு அவசியமான சகல கற்பனைகளும் பக்திப் போதனைகளும் கதைப்போக்காய் தெள்ளிய அலங்கார கிரந்த தமிழ் நடையில் எழுதப்பட்டுள்ளன. முன்னைய நான்கு வால்யம்களை வாசித்தவர்கள் இதன் அருமையைத் தெரிவிப்பார்கள். புஸ்தகம் உயர்ந்த கிளேஸ் காகிதத்தில் 8 பேஜ் ஸைசில் அச்சிட்டு அழகாக பயிண்டு செய்திருக்கிறது. விலை ரூபா 1.0.0. வி.பி. போஸ்டில், முதல் வால்யம் ரூபாய் 1 - 4 – 0. இரண்டாம் வால்யம் 1 - 4 – 0. மூன்றாவது வால்யம் 1 - 4 – 0. நான்காவது வால்யம் 1 - 4 – 0. ஐந்தாவது வால்யம் 1 - 4 - 0 மஹாவிகடதூதன் ஆபீஸ், சென்னை.”

பூலோக விநோதக் கதைகள் : தொகுதி - 3

உள்ளடக்கம்

பூலோக விநோதக் கதைகள் நூலின் முகப்பில், ’கடவுள் துணை’ என்பதன் கீழ் ‘பூலோக விநோதக் கதைகள்’ என்ற தலைப்பும், (அனுபவ ஞான நூல்) என்ற குறிப்பும் இடம் பெற்றன. அதன் கீழ் ஆங்கிலத்தில், THE MYSTERIES OF THE WORLD என்ற வாசகம் இடம் பெற்றது. அதன் கீழ் ஆசிரியரின் பெயர், B.A.A. RAJAINDRAM PILLAY, Editor "Maha Vigadathoothan" என ஆங்கிலத்தில் இடம் பெற்றது.

முதல் தொகுதியின் முகவுரையில் பா.அ.அ. இராஜேந்திரம் பிள்ளை, நூல் உருவாக்கம் குறித்து, “உபகாரங்களில் சாஸ்திர நூல்களை ஏற்படுத்திவைத்திருக்கும் உபகாரத்தின்மிக்கது மற்றொன்றில்லை யெனலாம். இவ்விதமான ஒரு உபகாரம் நாமும் செய்துவைக்க வேண்டுமென்பது எமதெண்ணத்தில் தற்காலம் உதித்தது. ஆனால் ஏற்கனவே பெரியோர்களால் அநேகமான சாஸ்திர நூல்கள் இயற்றித் தீர்ந்துவிட்டிருக்கிறபடியினால், அதினின்றும் வேறாக ஒரு நூதன பிரபந்தத்தை இயற்றுவதற்கு, அந்தரத்திலிருந்துதான் ஆதாரங் கிடைக்கவேண்டுமேயொழிய பிரிதொரு வழி ஏதுவுமில்லை. ‘புராதனக் கவிஞனுக்குப் பிரபஞ்சவிலாசம், நூதனக் கவிஞனுக்குச் செய்யுளலங்காரம்’ என்று ஒரு சாஸ்திரி சொன்னதுபோல, காணப்படுகிறதும் பிரவர்த்திக்கிறதுமான எல்லா நூல்களும் முதனூலின் வழிநூல், சார்பு நூல்களாகவேயிருக்கின்றன. ஆகவே, நாமும் இதேவழி செல்லாமல் இப்பிரபஞ்சத்தில் ஒவ்வொருவரிடத்திலும் நிகழப்படாநின்ற அனுபவ விஷயங்களையே திரட்டி இக்கிரந்தத்தைக் கதாரூபமாக எழுதித்தந்தால் இதுதான் ஒரு சாஸ்திரமா யிருக்கலாமென்று துணிபுற்றோம்.

அனுபவத்திற்கு மிஞ்சிய ஞானமும், அதினும் மேம்பாடான படிப்பினையும் வேறெதுவுமில்லை. அனுபவமே குரு. அனுபவமே அரசன். அனுபவமே சாஸ்திரம். அனுபவமே சாக்ஷி. அனுபவமே உத்தம சிநேகன். இவ்வாறே மற்ற எல்லாவற்றிற்கும் எல்லாமுமாயிருப்பது அனுபவமே. அல்லாமலும், உலகமே, அனுபவ திருஷ்டாந்தமா யிருக்கின்றதுடன். அவ்வனுபவமே ஒவ்வொரு வினோதமாகவும் காணப்படுகிறதால், இக்கிரந்தத்திற்கு ‘பூலோக விநோதக் கதைகள்’ என்று பேர் கொடுத்திருக்கிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

கதைகள் பற்றிய குறிப்பு

முதல் தொகுதியில் கீழ்காணும் கதைகள் இடம் பெற்றன.

  • வித்யாதரன் கதை
  • ஜோதிநாத் கதை
  • சுகுமாரன் கதை
  • மேனியென்பவள் கதை
  • மன்னுகுப்தன் கதை
  • லில்லி புத்தானா கதை
  • அருணந்தி முனிவன் கதை
  • காந்திமதியின் கதை
  • தேவரசி கதை
  • கன்னிகைப் பெண் புனிதவதி கதை
  • புஷ்பாவதி கதை
  • பிரதாபன் கதை மற்றும் பல

அடுத்தடுத்த தொகுதிகளில் ஞானப் பெண் தயாநிதி கதை, வேதாந்தி கதை, ஏழு சந்யாசினிகளின் கதை எனப் பல்வேறு கதைகள் இடம் பெற்றன.

மதிப்பீடு

பூலோக விநோதக் கதைகள் நூல் படங்களுடன் வெளிவந்தது. ஒவ்வொரு தொகுதியின் தொடக்கத்திலும் வாசகர்களின் பாராட்டுரைகள், கருத்துக்கள், கடிதங்கள் இடம் பெற்றன. ஒவ்வொரு தொகுதியிலும் பல வேடிக்கைக் கதைகள் இடம் பெற்றன. ஒவ்வொரு கதையின் தொடக்கத்திலும் விகடகவிப் பாடல்கள் வெளியாகின. தமிழ் வாசகர்களை வாசிப்பு நோக்கி ஈர்த்த நூல்களுள், பூலோக விநோதக் கதைகளுக்கு மிக முக்கிய இடமுண்டு.

பூலோக விநோதக் கதைகள் நூல் குறித்து எஸ்.ஜி. ராமாநுஜலு நாயுடு, அமிர்த குணபோதினி இதழில் எழுதிய “சென்று போன நாட்கள்’ கட்டுரையில், “அவர் வெளியிட்ட பூலோக விநோதக் கதைகள் ஐந்து வால்யங்களும் தமிழ் மொழியில் அரியதோர் அனுபவ ஞான நூலாகும். அதற்குச் சமமாக வேறு எதனையும் சொல்ல வொண்ணாது. மூன்றாம் வால்யத்தில் வேதாந்திக் கதையில் வேதாந்த சாரங்களை மிகு விநோதமாகவும், அதி சுலபமும் தெளிவுமாகவும் விளக்கியிருக்கும் அருமையை வியவாதார் யாரே? நான்காம் வால்யத்தில் ஏழு சந்யாசிகளின் கதையும், இரண்டாம் வால்யத்தில் வரும் ஞானப்பெண் தயாநிதி கதையும், அதன் மற்றைய தொடர்ச்சியும் ஆஹா! அருமையிலும் அருமையாகும். அவரது வாக்குக்கே ஒரு தனி அழகும் கம்பீரமும் அர்த்த புஷ்டியுமுண்டு. நடையும் மிகு இனிமை“ என்று குறிப்பிட்டுள்ளார்.

உசாத்துணை


✅Finalised Page