under review

பிலிப் ஃபைசன்

From Tamil Wiki
ஃபைசன்
Rhododendron arboreum ஃபைசன் வரைந்தது

பிலிப் ஃபைசன் (1877–டிசம்பர் 24, 1947) (Philip Furley Fyson) பிலிப் பைசன். தமிழகத்தின் தொடக்க காலத்துத் தாவரவியலாளர்களில் ஒருவர். புகழ்பெற்ற இயற்கையியலாளரான மா.கிருஷ்ணன் இவருடைய மாணவர். தென்னக காடுகளைப் பற்றிய சித்திரங்களுடன் கூடிய முதல் நூலின் ஆசிரியர். சென்னை மாநிலக்கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றிய பிலிப் ஃபைசன் நினைவாக ஃபைசன் நினைவு விருது உருவாக்கப்பட்டுள்ளது.

பிறப்பு, கல்வி

ஃபைசன் ஜப்பானில் கிறிஸ்தவ மதப்பணி புரிந்த பெற்றோருக்கு 1877-ல் பிறந்தார், ஸ்காட்லாந்தில் தொடக்கக் கல்வி பெற்றார். கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் (Natural Science Tripos at Cambridge ) 1904-ல் இயற்கையியலில் பட்டம் பெற்றபின் சென்னைக்கு வந்தார். சென்னை மாநிலக்கல்லூரியில் (Presidency College) தாவரவியல் ஆசிரியராகப் பணியாற்றினார்.

தனிவாழ்க்கை

ஃபைசன் 1920 முதல் 1925 வரை விசாகப்பட்டினம் அருகே கஞ்சம் என்னும் ஊரில் பள்ளிக்கல்வி மேற்பார்வையாளராகப் பணியாற்றினார். 1925-ல் சென்னை திரும்பி மாநிலக்கல்லூரியில் 1932 வரை பணியாற்றினார்.

ஃபைசனின் மனைவி பெயர் டயானா ரூத் (Diana Ruth Fyson). தாவரவியலில் ஈடுபாடு கொண்டவர். ஓவியர். ரூத் மகாபலிபுரம் சிற்பங்களை வரைபடங்களாக ஆவணப்படுத்தியவர்.

ஆசிரிய வாழ்க்கை

ஃபைசன் சென்னை மாநிலக்கல்லூரியில் 1904 முதல் 1920 வரை, அதன் பின் 1925 முதல் 1932 வரை தாவரவியல் ஆசிரியராகப் பணியாற்றினார். ஃபைசனின் மாணவர்களில் முதன்மையானவர் மா. கிருஷ்ணன். சென்னை இயற்கையியலாளர் சங்கம் (Madras Naturalist Society) அமைப்பின் பல தாவரவியலாளர்கள் ஃபைசனிடம் பயின்றவர்கள். மா.கிருஷ்ணன் நீர்வண்ண ஓவியம் வரையும் பயிற்சியை டயானா ரூத் ஃபைசனிடமிருந்து பெற்றதாகப் பதிவுசெய்கிறார்

தாவரவியல் ஆய்வுகள்

1912-ல் ஃபைசன் தாவரவியல் மாணவர்களுக்காக பாடநூல் ஒன்றை எழுதினார். சென்னை வட்டாரத்து பூக்களைப் பற்றி 100 வண்ணச் சித்திரங்களுடன் கூடிய நூல் ஒன்றை எழுதி, வரைந்து வெளியிட்டார். தென்னிந்திய மலைக்காடுகளின் தாவரங்களைப் பற்றிய முதல் நூலை ஃபைசன் உருவாக்கினார். Eriocaulon தாவரம் பற்றிய ஒருநூலையும் எழுதினார்.

அமைப்புப்பணிகள்

ஃபைசன் 1919-ல் இந்திய தாவரவியல் கழகம் (Indian Botanical Society) என்னும் அமைப்பை உருவாக்கவும் நடத்தவும் உதவினார். அந்த அமைப்பு சார்ந்து இந்திய தாவரவியல் இதழ் (Journal of the Indian Botanical Society) வெளியிடுவதிலும் முன்முயற்சி எடுத்தார்.

ஃபைசன் 1906 முதல் இந்திய தாவரங்களில் தீவிர ஈடுபாடுகொண்டு கொடைக்கானலில் உள்ள செண்பகனூர் தூய இருதய கல்லூரி Sacred Heart College வளாகத்தில் சென்று தங்கி அங்குள்ள தாவரங்களை பதிவுசெய்து வந்தார். ஃபாதர் இ.கோம்பெர்ட் (Fr.E.Gombert) உள்ளூர் தாவரங்களை அடையாளம் காண அவருக்கு உதவினார். 1910-ல் ஃபைசன் தன்னிடம் பயின்ற இளம்தாவரவியல் மாணவர்கள் முப்பதுபேருடன் கொடைக்கானல், ஊட்டி, கோத்தகிரி பகுதியில் தங்கி தாவரங்களை அட்டவணையிட்டார். புகழ்பெற்ற இந்திய தாவரவியலாள்ரான ஆல்பர்ட் பௌர்ன் (Alfred Gibbs Bourne ) மற்றும் திருமதி பௌர்ன் (எமிலி டிரீ கிளேஷேர்) இருவரும் அவருக்கு உதவினார்கள்.

மாநிலக்கல்லூரியில் விடுப்பு எடுத்துக்கொண்டு மலைத்தாவரங்கள் பற்றிய ஆய்வை முடித்த ஃபைசன் 286 நீர்வண்ண ஓவியங்களுடன் நீலகிரி மற்றும் பழனி மலைமுகடுகளின் தாவரங்கள் The Flora of the Nilgiri and Pulney Hill-tops என்னும் நூலை 1915ல் வெளியிட்டார். 1921-ல் சேர்வராயன் மலை தாவரங்களை சேர்த்துக்கொண்டு அதன் விரிவாக்க இணைப்பையும் வெளியிட்டார். 1932-ல் மேலும் தாவரங்களை இணைத்து 877 படங்களுடன் தென்னிந்திய மலைப்பகுதிகளின் தாவரங்கள் (The Flora of the South Indian Hill Station) என்னும் நூலாக வெளியிட்டார்.

மறைவு

ஃபைசன் ஓய்வுபெற்றபின் 1932-ல் இங்கிலாந்துக்கு திரும்பினார். ருஷ்விக் Rushwick, Worcester என்னும் இடத்தில் வாழ்ந்தார். டிசம்பர் 24, 1947 அன்று ஒரு சாலை விபத்தில் மறைந்தார். டயானா ரூத் 1969-ல் ஹெக்ஸ்ஹாமில் (Hexham, Northumberland) மறைந்தார்.

தாவரவியல் பங்களிப்பு

நவீன தாவரவியல் ஆய்வாளர்கள் ஃபைசனின் ஆவணங்களை முறையான அறிவியல் தன்மை கொண்டவை என கருத்தில் கொள்ளவில்லை. ஆனால் தமிழகத்துத் தாவரவியல் முன்னோடியாகவும், .தாவரவியலாளர்களின் ஒரு மரபை உருவாக்கியவர் என்னும் வகையிலும் ஃபைசன் முக்கியமானவர்

உசாத்துணை


✅Finalised Page